கடிதம் – 37 – காரும், கனவும்

February 6, 2015 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

காணும் கனவையும், காண வேண்டிய கனவையும் எப்படி காண்பது என்று பார்ப்போமா?

Vastu dream

குறைந்த மாத சம்பளத்தில் இருந்து கொண்டு, பணத்திற்கு கஷ்டப்பட்ட காலம் எனக்கும் இருந்தது. மாத சம்பளத்திற்கு வேலை பார்த்த காலகட்டங்களில், வேலை முடிந்து அரசு பேருந்தில் தான் கூட்டத்துடன் பிரயாணப்படுவேன் நான் தங்கியிருந்த இடத்தை அடைய.

பேருந்தில் பிரயாணப்படும் போது ஒரு 2nd hand இரு சக்கர வாகனம் அல்லது குறைந்த பட்சம் TVS-50 ஆவது இருந்தால் நன்றாக இருக்குமே. கூட்ட பிரச்சினை இல்லாமல் நினைத்த இடத்திற்கு, நினைத்த நேரத்தில் போக முடியுமே என்று எண்ண ஆரம்பித்தேன்.

அதே எண்ணம் வலுப்பெற்றதால் தான் அந்த சுமாரான காலகட்டத்தில் கூட ரூபாய் 47,000 மதிப்புள்ள Suzuki Samurai என்ற இரு சக்கர வாகனத்தை புத்தம் புதியதாக வாங்க முடிந்தது.

இரு சக்கர வண்டி வாங்கிய இரண்டு வருடங்கள் கழித்து எனக்கு திருமணமும் நன்கு நடேந்தேறியது… திருமணத்திற்கு பிறகு காரில் சந்தோஷமாக பேசியபடி போகும் கணவன் / மனைவியை பார்க்கும் போதெல்லாம் நானும் மற்றவர்களை போல் என்னை நம்பி வந்த மனைவியை எப்பொழுது என் சொந்த காரில் கூட்டி செல்ல போக போகிறோமோ என்று நினைக்க ஆரம்பித்தேன்.

நினைவு வலுப்பெற்றது. முதன் முதலாக ரூபாய் .25,000/- க்கு வாங்கினேன் 3rd hand Fiat காரை. (வாங்கிய காரின் விலையானது நான் முதலில் வாங்கிய வாகனமான Suzuki Samurai பைக்கின் விலையை விட 1 மடங்கு குறைவு)

நான் வாங்கிய முதல் காரில் எந்தவித பிரச்சினையும் இன்றி 10,000 கிலோமீட்டர் ஒட்டிய பிறகு, திடீரென்று என்னுடைய அப்போதைய வாகன ஓட்டுனர் திரு.செல்வம் என்பவர் சார், எனக்கு ரொம்ப அசிங்கமாக இருக்கின்றது இந்த வண்டியை ஓட்ட. என் கூட இருக்கும் பசங்க எல்லாம் நல்ல புது மாடல் வண்டியை ஓட்டுகிறார்கள். எனவே வண்டியை மாத்துங்க சார் என்று நச்சரிக்க ஆரம்பித்தார். ஏறத்தாழ அதே நேரத்தில் தான் நானும் A/c உடன் கூடிய  புது கார் வாங்க வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தேன். இதற்கு காரணம் நான் Fiat காரில் போகும் போது சாலையில் ஓடும் A/c வைத்த புது மாடல் கார்களில் செல்லும் குழந்தைகள் அவர்களின் கார் கண்ணாடியை தடவி கொண்டும், முகத்தை  கார் கண்ணாடி மேல் முத்தமிட்டது போல் வைத்துக்கொண்டும், சில சமயம் சாலையில் போவோர்களுக்கு கை காண்பித்துகொண்டும் செல்வதை பார்ப்பதுண்டு. அப்படி பார்க்கும் போதெல்லாம் நாமும் A/c உடன் கூடிய  புது கார் வாங்கி, என் குழந்தைகளும் தங்களுடைய புத்தம் புது கார் கண்ணாடியில் முகம் புதைத்தபடி சாலையில் செல்பவர்களுக்கு கை காட்டி செல்ல வேண்டும் என்று எண்ண ஆரம்பித்தேன்.

எண்ணம் வலுப்பெற்றது. எனக்கு அன்றும், இன்றும், என்றும் பிடித்த மற்றும் என்னுடைய  அப்போதைய கனவு காரான Maruti Wagon R – ஐ கொடுத்து(ரூபாய் 3 லட்சம்) தவணையில் வாங்கினேன்.

காலம் உருள, பின் வீட்டுத் தேவைக்கு ஒரு கார்; என் தேவைக்கு ஒரு கார் இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ண ஆரம்பித்தேன்.

எண்ணம் வலுப்பெற்றது. ஒரு நிலை வந்தபோது இரண்டாவது புத்தம் புதிய Maruti Wagan R – காரை முழு பணத்தையும் கொடுத்து வாங்கினேன்.

பின்னாளில் நிறைய பெரிய ஆட்களை / மனிதர்களை Wagon – R காரில்  சென்று சந்திக்க நேரிட்ட போதெல்லாம் என்னுடைய சிறிய கார் என்னை அவர்கள் முன் எளியவனாக்கியது போல் ஒரு உணர்வு/எண்ணம்.

எண்ணமும், உணர்வும் வலுப்பெற்றது. வலிமையானவனாக என்னை மாற்றிக் கொள்வதற்கு ஏற்றவகையிலும் / மற்றவர்கள் மதிக்கும் வகையிலும் புத்தம் புதிய Maruti Swift காரை (ரூபாய் 7.5 லட்சம்) முழு பணத்தையும் கொடுத்து வாங்கினேன்.

காலம் சென்றது / ஓடியது. வளர்ச்சியை எந்தவித தளர்ச்சியும் இன்றி அடைந்தபின் பாதுகாப்பு காரணத்திற்காவும், குழந்தைகள் வளர்ந்து விட்டதாலும் சற்று பெரிய கார் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணத் தொடங்கினேன்.

எண்ணம் வலுப்பெற்றதால் ரூபாய் 17 லட்சம்  மதிப்புள்ள புதிய Toyota Innova காரையும் வாங்கினேன்.

ஏனோ இப்பொழுது எந்தக் பெரிய காரணம் இல்லை என்றாலும் கூட 90 லட்சம் மதிப்புள்ள Audi Q7 கார் வாங்க வேண்டும் என்கின்ற எண்ணம் தோன்றி விட்டது.

Vastu - Audi Q7

எண்ணமும் வலுப்பெற ஆரம்பித்துவிட்டது.

Audi Q7 –ஐ நான் வாங்குவேன்.

காரணம்

“I Believe in Miracles”

என்னைப் பொறுத்தவரை

நதி ஓடினால் தான் அழகு;

செடி வளர்ந்தால் தான் அழகு;

அதேபோல் மனிதனுக்கு வளர்ச்சி மட்டும் தான் அழகு:

மனிதனுக்கு வளர்ச்சி இல்லை என்றால் அதற்கு முக்கிய காரணமாக அவனுடைய அறியாமையையும் / அலட்சியதையும் தான் காரணமாக சொல்ல முடியும். நான் என் எண்ணங்களை எப்பொழுதும் அலட்சியப் படுத்தியதில்லை. நான் வெற்றி பெற பிறந்தவன் என்கின்ற சிந்தனை தான் என்னை நிறைய புது விஷயங்களை தினமும் கற்கவும் / கற்பிக்கவும் உந்துகிறது.

வெற்றி கோட்டை பிடிக்க தேவையான இந்த உந்துதல் ஒவ்வொருவருக்கும் உள் உள்ளது. நாம் அனைவரும் தட்டி எழுப்ப உருவ வழியாக விவேகானந்தரை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.

நாம் நம்மை எழுப்பிகொள்ள,நாம் நம்மை அனுதினமும் புதுப்பித்துக்கொள்ள தயவு செய்து கனவு காணுங்கள். கனவை திடமாக காணுங்கள். காரணம் உங்களுடைய கனவு தான் உங்களை தட்டி எழுப்ப வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்ட உங்களுடைய “விவேகானந்தர்”

நான் இப்படி தான் ஒவ்வொரு விஷயத்திற்கும் கனவு கண்டேன். பின் அதை நனவு ஆக்கினேன். உங்கள் எண்ணங்களுக்கும் ஈடேற நீங்களும் தயவு செய்து கனவு காணுங்கள்.

என்னுடைய பைக், கார் கனவு நனவாகிய விதத்தை, அதற்கு உபயோகபடுத்திய மந்திரத்தை, நான் செய்த மந்திரஜாலத்தை அடுத்த கடிதத்தில் பார்போமா?

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − two =