கடிதம் – 30 – இறப்பும், பிறப்பும்

December 20, 2014 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

28 May 1999 உடல்நிலை சரியில்லை என்று என் தந்தை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றார். 29 May 1999  அதே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெறுகின்றது. 30 May 1999 காலை வழக்கம் போல் விடியல் விடிந்திருந்தது யாருக்கும் காத்திருக்காமல்.

எனக்கு அன்று என்ன காத்திருக்கின்றது என்று தெரியாமல் நானும் கண் விழித்து என் தந்தைக்கு அறுவை சிகிச்சை நடந்த இடத்தை சுத்தம் செய்வதற்காக அவரை வெந்நீர் நிறைந்த பெரிய பிளாஸ்டிக் டப்பாவில் உட்கார வைக்கின்றேன். உட்கார வைத்த சில நிமிடங்களில் என் தந்தைக்கு மூச்சு திணறல் ஏற்படுகின்றது. எனக்கும், அப்போது பணியில் இருந்த மருத்துவருக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கின்றோம். பணியிலிருந்த மருத்துவர் மட்டும் கொஞ்சம் சுதாரித்து கொண்டு அந்த மருத்துவமனையின் துணை தலைமை மருத்துவரை துணைக்கு அழைத்து வருகின்றார். என் தந்தையின் உடல்நிலையை அவரும் பரிசோதித்து விட்டு இவருக்கு உடனடியாக Ventilator உதவி தேவைப்படுகின்றது. எங்களிடம் Ventilator வசதி இல்லை என்பதால் பக்கத்தில் உள்ள விஜயா மருத்துவமனைக்கு உடனடியாக உங்கள் தந்தையை கொண்டு போகவும். நீங்கள் அங்கு போவதற்கு முன் நான் அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை மருத்துவரை  கூப்பிட்டு சொல்லி விடுகின்றேன் என்று கூறிவிட்டு என் தந்தையை மருத்துவமனைக்கு சொந்தமான மாருதி ஆம்னி Ambulance – ல் ஏற்றி அனுப்பியும் விடுகின்றார். நாங்கள் ஏறி சென்ற Ambulance – ல் உயிர் காக்க தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டரும் இல்லை. சுழல் விளக்கும் இல்லை. சைரனும் இல்லை. சைரன் இல்லாததால் எங்கள் வண்டிக்கு வழி விட கூட யாரும் தயாராக இல்லை – அவரவர் அவசரம் அவரவர்களுக்கு.

என் தந்தை சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கும் விஜயா மருத்துவமனைக்கும் இடையே உள்ள தூரத்தை சாதாரணமாக 5 நிமிடத்தில் சென்றடையலாம். ஆனால் எங்களுக்கு வடபழனி விஜயா மருத்துவமனையை அடைய 20 நிமிடம் ஆகி விட்டது. பழைய மருத்துவமனையில் இருந்து விஜயா மருத்துவமனைக்கு போய் சேர்வதற்குள் என் கண்கள் இரண்டும் சிவந்து போய் விட்டது – அழுது பழக்கமே இல்லாத நான் அழுததால்.

என் கைகளும் சிவந்து போய் விட்டது – வண்டியில் செல்லும் போது கைகளால் தட்டியவாறு ஓசை எழுப்பி சென்றதால். விஜயா மருத்துவமனைக்கு தகவல் சொல்லி விடுகின்றேன் என்று சொன்ன மருத்துவர் அப்படி எந்த தகவலும் சொல்லவில்லை என்று அங்கு போன போது தான் தெரிந்தது. இருந்தாலும் தரமான மருத்துவர்கள் ஒரு உயிரை காப்பாற்ற எந்தளவு மெனக்கிடுகிறார்கள் என்பதை அன்று தான் தெரிந்து கொண்டேன்.

a)   அவசர சிகிச்சை பிரிவில் அவசர அவசரமாக பிளாஸ்டிக் குழாய் வாங்கி வந்து என் தந்தை வாயில் வைக்கிறார்கள்.

b)   மின்சாரம் கொண்டு தூங்கி போனவரை எழுப்ப முயல்கிறார்கள்.

c)   விதவிதமான மருத்துவ உபகரணங்கள் கொண்டு என் தந்தைக்கு சிகிச்சை செய்கிறார்கள்.

d)   தமிழ் சினிமா படம் போல் என் தந்தையின் நெஞ்சில் குத்தினார்கள் 2 மருத்துவர்கள்…

அவசர கால சிகிச்சை அளித்த சிறப்பு மருத்துவர் என் தந்தைக்கு சிகிச்சை அளித்த போது, நான் மிகவும் அழுததை கண்டு என்னை வெளியே இருக்க சொல்லி விட்டார்கள். சிகிச்சை முடிந்த பின்பு சிரித்த முகத்துடன் செய்தி சொல்ல அவர் வருவார் என்றிருந்த என்னிடம் காலத்திற்கும் என்னால் சிரிக்கவே முடியாத அளவிற்கு ஒரு செய்தியை சொன்னார். அந்த செய்தி “தம்பி, உன் அப்பாவை எங்களால் காப்பாற்ற முடிய வில்லை மன்னிக்கவும்”. என் தந்தை அவர் வாழ்க்கையில் எப்போதுமே தன் முதுகில் குத்தியவர்களை மட்டும் தான் பார்த்திருக்கின்றார் உயிருடன் இருந்த வரை. துரதிருஷ்டமாக முதல் முறையாக நெஞ்சில் அவர் குத்தப்படும் போது அவர் உயிர் அவரை விட்டு பிரிந்து போய் இருந்தது. முதன் முறையாக நெஞ்சில் குத்து வாங்கிய சந்தோஷத்தில் கண்ணை மூடி இருப்பார் என நம்புகின்றேன்.

செய்தி கேட்ட உடனே அழுது கொண்டே சொன்னேன் அந்த அவசர சிகிச்சை மருத்துவரிடம் – “டாக்டர், என் அப்பா உடம்பில் இருந்து ஏதாவது பாகங்கள் மருத்துவ உலகிற்கு தேவை என்றால் எடுத்து கொள்ளுங்கள்”. அதிர்ந்து போனார் என்னிடம் பேசிய மருத்துவர் என்னுடைய உடனடி கோரிக்கையை கண்டு. அவரும் என் உறுதியை தயக்கத்துடன் ஏற்று கொண்டு சங்கர நேந்த்ராலாய மருத்துவமனைக்கு தகவல் சொல்லி என் தந்தையின் இரண்டு கண்களையும் எடுத்து போகச் செய்தார்.

அப்படி நான் என் தந்தையின் இரண்டு கண்களையும் தானமாக கொடுத்ததன் மூலம் ஒருவராக இறந்தவர் இருவராக அன்றே பிறந்தார் என்ற சிறிய சந்தோஷத்துடன் வீட்டில் இருந்து திறந்த கண்களுடன் சென்ற என் தந்தையை அதே வீட்டிற்கு மூடிய கண்களோடு எடுத்து போக எத்தனித்த போது நடந்த விஷயம் தான் என்னை முற்றிலுமாக புரட்டி போட்ட சம்பவம் என்று சொல்வேன்.

அந்த சம்பவம் பற்றி அடுத்த கடிதத்தில் கூறுகின்றேன்.

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =