#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கொங்கராயகுறிச்சி

June 11, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கொங்கராயகுறிச்சி
134.#கொங்கராயக்குறிச்சி_சட்டநாதர்_கோயில்_வரலாறு
அருள்மிகு சட்டநாதர் கோவிலில் 08.06.23 மாலை 5 மணிக்கு ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக சிறப்பு அபிஷேகமும் சந்தன காப்பும் அதைனை தொடர்ந்து தீபாராதனையும் நடைபெறும்.
கோயில் திருநெல்வேலி- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் 20 கிலோமீட்டர் தொலைவில் கருங்குளம் உள்ளது. அங்கு இருந்து 2 கிலோமீட்டர் தூரம் சென்றால் கொங்கராயகுறிச்சி சட்டநாதர் ஆலயத்தை அடையலாம். ஆட்டோ வசதி உண்டு.
மூலவர் : ஸ்ரீவீரபாண்டீஸ்வரர், ஸ்ரீகாலபைரவர் சட்டநாதராக
அம்மன் : ஸ்ரீ பொன்னுறுதி அம்பாள்
தீர்த்தம் : தாமிரபரணி
புராண பெயர் : கொங்குராயகுறிச்சி
ஊர் : கொங்கராயகுறிச்சி
மாவட்டம் : தூத்துக்குடி
ஸ்தல வரலாறு :
11 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் ஆட்சியில் அவர்களுக்கு கீழ்பட்ட சிற்றரசர் பலர் இருந்தனர். கொங்குராயன் என்ற சிற்றரசன் ஸ்ரீவைகுண்டம் பகுதியை கண்காணித்து வந்ததாகத் தெரிகிறது. ஆகவே, கொங்குராயகுறிச்சி கொங்குராயர் பெயரை நினைவூட்டும் விதமாக உள்ளது.
குறிச்சி என்பது மலைவாழ் மக்கள் வசித்த பகுதியை குறிப்பிடுவதாக இருந்தது. குறிஞ்சி நிலத்தில் வசித்த மக்கள் என்பதால் குறிஞ்சி என்பதில் இருந்து குறிச்சி என மருவியுள்ளது. அருகில் உள்ள மணக்கரை சிவன் கோயிலிலும் கொங்குராயனின் பெயரில் கல்வெட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழிகள் கொண்ட ஊர் கொங்குராயகுறிச்சி என்பதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளது. இங்குள்ள வீரபாண்டீஸ்வரர் திருக்கோயிலின் மொத்த பரப்பளவு சுமார் 3 ஏக்கர் ஆகும். தென்பாண்டி நாட்டுக்குப் பெருந்தொண்டு செய்த பாண்டியன் ஸ்ரீவல்லபன் ஆவார். தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள மணப்படைவீடு அம்மன்னனுக்குரிய படைவீடுகளில் ஒன்றாக இருந்துள்ளது. ஜடாவர்மன் அல்லது சடையவர்மன் ஸ்ரீவல்லபன் கி.பி.1070-ல் கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழப் பேரரசனாக முடிசூடிக் கொண்ட முதலாம் குலோத்துங்க சோழனின் சமகாலத்தில் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த மன்னராவார்.
முதலாம் இராஜராஜ சோழன் (கி.பி. 985&1014) காலத்தில் பாண்டியநாடு சோழர்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. ஆத்து£ர் பகுதி ‘ராஜராஜ சோழ வளநாடு’ என்று சோமநாதர் கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது.” முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் மதுரை, திருநெல்வேலி பகுதியில் சோழ பாண்டிய வைசிராய்கள் நியமிக்கப்பட்டனர். பெருங்குளம் திருவழுதீஸ்வரர் கோயிலிலும் ராஜராஜ சோழனின் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளது.” இதே கோவிலில் சடையவர்மன் ஸ்ரீவல்லபனின் மெய்க்கீர்த்தியும் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த காலத்தில் தான் கொங்கராயகுறிச்சி ஸ்ரீவீரபாண்டீஸ்வரர் கோயில் எழுப்பப்பட்டு அதில் சடையவர்மன் ஸ்ரீவல்லபனின் மெய்க்கீர்த்தி கல்வெட்டாக உள்ளது. வீரபாண்டீஸ்வரர் கோயிலில் இரண்டு கல்வெட்டுக்கள் தெளிவாக காணப்படுகிறது. கருவறை நிலையின் மேற்பகுதியில் இரண்டு வரிகள் கொண்ட கல்வெட்டு ஒன்றும், கருவறையின் இடது நிலைப்பகுதியில் 16 வரிகள் கொண்ட ஸ்ரீவல்லப பாண்டிய மன்னனின் மெய்க்கீர்த்தியும் பொறிக்கப்பட்டுள்ளது. கருவறையின் வெளிப்புற பகுதியில் கல்வெட்டுகள் இருந்துள்ளது அவை வெள்ளப்பெருக்கினால் கருவறை முழுதும் மணலால் மூடி இருந்துள்ளது. ஆகவே எழுத்துக்கள் சிதைந்து விட்டது.
17-ஆம் நூற்றாண்டில் நாயக்கர்கள் மதுரையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர். நாயக்க மன்னர்கள் தென்பாண்டி நாட்டில் ஏராளமான கோயில்களில் திருப்பணிகள் செய்துள்ளதை கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. வீரபாண்டீஸ்வரர் கோயிலில் மகாமண்டபம் மற்றும் சுற்றுப்புற மண்டபங்களைக் கட்டி அதில் உள்ள தூண்களில் நாயக்க மன்னர்களின் உருவத்தை சிற்பமாக செதுக்கியுள்ளனர். இதனால் 17-ஆம் நூற்றாண்டில் இந்த கோயில் சிறப்பு பெற்று விளங்கியதை அறிய முடிகிறது. நாயக்க மன்னர்கள் இக்கோயிலுக்குத் தானங்களும் வழங்கியுள்ளனர்.
கொல்லம் ஆண்டு 872 (கி.பி.1696)ல் ஸ்ரீவீரபாண்டீஸ்வரர் கோயிலுக்கு நாயக்க மன்னர்கள் தானம் வழங்கிய செய்தி செப்பு பட்டயம் மூலம் அறிய முடிகிறது. 1810-ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் கொங்கராயகுறிச்சி வீரபாண்டீஸ்வரர் கோயிலுக்கு சுப்பிரமணிய பிள்ளை குமாரன் மாணிக்கம்பிள்ளை என்பவர் ஒரு வெண்கல மணியை உபயமாக வழங்கியுள்ளார்.
கொங்கராயகுறிச்சியின் பழமையான வரலாற்றுக்கு ஆதாரமாக உள்ள கோயில் வலம்புரி விநாயகர் கோயிலாகும். வீரபாண்டீஸ்வரர் கோயிலின் தென்கிழக்குப் பகுதியில் சுமார் 200 அடி துரத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலின் நுழைவாயில் நிலைப் பகுதியில் 9 ஆம் நூற்றாண்டு மற்றும் 11-ஆம் நூற்றாண்டை சார்ந்த இரண்டு வட்டெழுத்து கல்வெட்டுக்கள் காணப்படுகிறது. வீரபாண்டீசுவரர் கோயில் கட்டப்படுவதற்கு முன்பு வலம்புரி விநாயகர் கோயில்தான் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்த முதன்மை கோயிலாக இருந்து வந்துள்ளது.
9-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு மாறன் சடையன் என்ற பாண்டிய மன்னனின் வட்டெழுத்து கல்வெட்டு ஒன்று உள்ளது. மற்றொரு கல்வெட்டு 11-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு. இது இராஜராஜ சோழனின் காந்தளுர் சாலை போர் வெற்றியைக் குறிப்பிடுகிறது.” வலம்புரி விநாயகர் கோயிலின் கருவறையின் மீது விமானம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விமானம் பிற்காலத்தில் அமைக்கப்பட்டதாக காணப்படுகிறது. கருவறை மற்றும் அர்த்த மண்டபத்துடன் கூடிய சிறிய கோயிலாகக் காட்சியளிக்கிறது. சுமார் 20 அடி நீளமும். 9 அடி அகலமும் கொண்டதாக காணப்படுகிறது.
கோயில் சிறப்புகள் :
•சீர்காழியை போலவே இவ்வூரில் பைரவர் இருக்கும் காரணத்தினால், இவ்வூர் ‘தென் சீர்காழி’ என அழைக்கப்படுகிறது.
•இந்த ஆலயத்திற்குள் நாம் நுழையும் போது, சாலையில் இருந்து பூமிக்குள் இறங்கி தான் செல்ல வேண்டும்.
•கோயிலின் உள்ளே கிழக்கு நோக்கி வீரபாண்டீஸ்வரர் வீற்றிருக்கின்றார். தெற்கு நோக்கி பொன்னுருதி அம்மாளும் அருள்பாலிக்கின்றார்.
•ஒரே கல்லில் அமைக்கப்பட்ட சுப்ரமணியர் சிறப்பு.
•முதலில் கொடி மரம், நந்தியை தாண்டி கோவிலுக்குள் நுழைய வேண்டும். அங்கு வலது புறம் பைரவர், சட்டநாதராக தனி சன்னிதியில் காட்சி தருகிறார். ஆலய சுற்று பகுதியில் கன்னி விநாயகர், தட்சணாமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் முருகன், சண்டிகேஸ்வர், சனீஸ்வரர் அருள்பாலிக்கிறார்கள்.
•சிவபெருமானுக்கு 64 வடிவங்கள் இருப்பது போலவே, பைரவருக்கு 64 வடிவங்கள் சிறப்பானதாக போற்றப்படுகிறது. இந்த தலத்தில் இருக்கும் பைரவரை, ‘அஷ்ட பைரவர் மற்றும் சட்டநாதர்’ என்று போற்றுகின்றனர்.
•சிறப்பு மூர்த்தம்: 64 பைரவர்களின் அதிபதியாக சட்டைநாத மூர்த்தம்
சர்ப்ப வாகனம் கொண்டு சட்டைநாத பைரவ திருக்கோலம். மேற்கரங்களில் பாசம், அங்குசம் வலதுகரத்தில் கதை, சூலம், இடது கரத்தில் பிரம்மகபாலம் கொண்டு ஜ்வாலா கேசத்துடன் கூடிய அழகியரூபம்.
•‘பை’ என்றால் படைப்பு. ‘ர’ என்றால் வாழ்க்கை. ‘வா’ என்றால் அழித்தல். மூன்று தொழிலையும் செய்யக்கூடிய தன்மை கொண்டவர் பைரவர்.
•வரலாற்று பெருமை வாய்ந்த இவ்வூரில் முற்கால பாண்டியன் மாறன் சடையனால் 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வலம்புரி பிள்ளையார் கோவில் உள்ளது.
•இந்த கோயில் அருகில் வேயிலுகந்தம்மன் மற்றும் மாலை அம்மன் கோவில்கள் உள்ளது.
•கொங்கராயக்குறிச்சி கிராமத்தின் காடு, திரடு போன்ற பல்வேறு பகுதிகளில் பானை ஓடுகள், தாழியின் சிதைந்த பாகங்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. இந்த பானை ஓடுகள் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதிகளில் கிடைத்த பொருட்களை ஒத்தே காணப்படுகின்றது. இப்படி பல சான்றுகள் ஆதிச்சநல்லூர் கொங்கராயக்குறிச்சி வரலாற்று தொடர்பை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 10.30 வரையிலும்,
மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வீரபாண்டீஸ்வரர் திருக்கோவில்,
கொங்கராயக்குறிச்சி
கருங்குளம்
தூத்துக்குடி.
போன்:
குணா சிவாச்சாரியார் -9791820903
கூகுள் மேப்:
https://goo.gl/maps/SDBUsQEsJSNCEL2J8
அமைவிடம் :
திருநெல்வேலி- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் 20 கிலோமீட்டர் தொலைவில் கருங்குளம் உள்ளது. அங்கு இருந்து 2 கிலோமீட்டர் தூரம் சென்றால் கொங்கராயகுறிச்சி சட்டநாதர் ஆலயத்தை அடையலாம். ஆட்டோ வசதி உண்டு.
#templeshistory #templesofhindus #temple #ஸ்தலம் #தலவரலாறு #ஆலயம்அறிவோம் #கோயில்கள் #ஆன்மீகம் #templepost #famoustemples #konkarayakurichi #வீரபாண்டீஸ்வரர் #காலபைரவர் #சட்டநாதர் #historyoftemples #templeshistory #veerapandiswarar #ponnuruthi #sattanathar #bairavar #Thamirabarani #தாமிரபரணி #கருங்குளம் #கொங்கராயகுறிச்சி #ஆதிச்சநல்லூர் #athichanallur #agalvaraichi #SriAandalVastu #DrAndalPChockalingam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 12 =