#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருப்பனந்தாள்

June 2, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருப்பனந்தாள்
125.#அருள்மிகு_அருணஜடேசுவரர்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : அருணஜடேசுவரர்,
செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர்
அம்மன் : பெரிய நாயகி
தல விருட்சம் : பனைமரம்
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
புராண பெயர் : தாடகையீச்சரம், திருப்பனந்தாள்
ஊர் : திருப்பனந்தாள்
மாவட்டம் : தஞ்சாவூர்
ஸ்தல வரலாறு :
தாடகை என்ற பெண் மகப்பேறு வேண்டி பிரம்மனை நோக்கி தவம் இருந்தாள். அப்போது பிரம்மன் அவள் முன் தோன்றி நீ தாலவனேஸ்வரரை சென்று பூசித்து வழிபட்டால் விரும்பிய பேற்றைப் பெறுவாய் என்று அருளினார். தாடகையும் அவ்வாறே இத்தலத்திற்கு வந்து நியமம் தவறாமல் விதிப்படி இறைவனைப் பூசித்து வந்தாள். ஒரு நாள் பூஜை முடிவில் மாலையைச் சாத்த எழுந்த காலத்து அவள் அன்பை உலகத்திற்கு வெளிப்படுத்த இறைவன் அவளுடைய ஆடையை விலகச் செய்தனன். ஆடையை ஒரு கையால் பற்றிக்கொண்டு மாலை சாத்தமுடியாமல் இரண்டு கைகள் மட்டுமே இருக்கிறதே இன்னும் கைகள் இருந்தாள் இறைவனுக்கு மாலை சாத்தலாமே என்று அப்பெண் வருந்தி துதித்து வழிபட்டாள். அப்போது இறைவன் அந்த பெண்ணுக்காக இரங்கி தன் தலையை சற்று சாய்த்து கொடுத்தார். மேலு இறைவன் அவளுக்கு தரிசனம் கொடுத்து 16 கைகளை கொடுத்தார். மங்கையும் மாலையை அணிவித்து விட்டு மகிழ்ச்சியுடன் வணங்கிச் சென்றாள். அன்று முதல் சிவலிங்க திருமேனி சாய்ந்தே இருந்தது. அப்போது இந்தக் கோயிலில் சோழ மன்னனின் திருப்பணி நடந்து கொண்டிருந்தது. சிவன் தலை சாய்ந்திருக்கும் செய்தியை மன்னன் கேள்விப்பட்டான். உடனே தனது படையை அனுப்பி சிவனது தலையை நிமிர்த்த ஏற்பாடு செய்தான். யானைகளை சிவலிங்கத்தோடு சேர்த்து கயிற்றால் கட்டி இழுத்தனர். ஆனால் முடியவில்லை. மனம் வருந்தினான் மன்னன். 63 நாயன்மார்களில் ஒருவரான குங்குலியக்கலய நாயானர் இத்தல சிவனை வழிபட வந்திருந்தார். அவருக்கும் இந்த செய்தி எட்டியது. நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி சிவனுக்கு குங்குலியப் புகையினால் தூபமிட்டார். பின் பூவினால் சுற்றப்பட்ட ஓர் கயிறை எடுத்து ஒரு முனையை சிவலிங்கத்தில் இணைத்து மற்றொரு முனையை தன் கழுத்தில் கட்டி பலமாக இழுத்தார். கயிறு இறுகியதால் இவரது உயிர் போகும் நிலை ஏற்பட்டது. ஆனால் நாயனார் கவலைப்படவில்லை. தன் முழு பலத்தையும் கொண்டு இழுத்தார். இவரது அன்புக்கு கட்டுப்பட்டார் சிவன். இதற்கு மேலும் நாயனாரை இறைவன் சோதிக்க விரும்பவில்லை. சிவலிங்கம் நேரானது. குங்குலியக்கலயனாரின் பக்தியையும் இறைவனிடம் கொண்ட அன்பையும் கண்ட மன்னன் மகிழ்ந்தான். நாயனாருக்கு பல பரிசுகள் கொடுத்து கவுரவப்படுத்தினான்.
முன்னொரு கற்பத்தில் அம்பாள் இறைவனை வணங்கி ஞானோபதேசம் புரிந்தருளல் வேண்டும் எனப் பிரார்த்தித்தாள். அதற்கு இறைவன் நீ தாலவனம் சென்று எம்மை பூசித்தால் அருள் செய்வோம் என்று உரைத்தனர். அம்மையாரும் இறைவன் ஆணைப்படி இத்தலத்துக்கு வந்து எதிர்முகமாக வடக்கு திசையில் அமர்ந்து தவம் செய்தார். இறைவன் காட்சியளித்து அம்பாளுக்கு ஞானத்தை உபதேசித்து அருள் செய்தனர். இக்காரணத்தால் இறைவர் மேற்கு முகமாக எழுந்தருளியிருக்கிறார். இறைவி கிழக்கு முகமாக எழுந்தருளி இருக்கிறார். அம்பாள் உபதேசம் பெறுவதற்கு முன்பாக பாலாம்பிகை எனவும் உபதேசம் பெற்றபின் பிரகந்நாயகி எனவும் பெயர் அழைக்கப்படுகிறாள்.
அசுரர்களின் கொடுமைக்கு உட்பட்ட தேவர்கள் ஓடிவந்து இந்திரனிடம் முறையிட்டார்கள். இதனைக் கேட்ட இந்திரன் போர் புரிய ஐராவதத்தை வருமாறு அழைத்தான். ஐராவதம் போகத்தை விரும்பி மண்ணுலகில் மந்தர மலையைக்கு வந்திருந்தது. இதனை அறிந்த இந்திரன் தக்க சமயத்துக்கு உதவாத காரணத்தால் தெய்வ வலிமையை இழந்து மண்ணுலகத்தில் காட்டானையாக திரிவாய் என்று சாபமிட்டான். இதனால் காட்டில் ஐராவதம் காட்டுயானையாக திரிந்து கொண்டிருந்தது. அப்போது காட்டிற்கு வந்த நாரதரை வணங்கி சாபவிமோசணம் பெற அவரிடம் வழி கேட்டது. நாரதர் தாலவனேஸ்வரரை வணங்கினால் சாபத்தை போக்கிக் கொள்ளலாம் என்று கூறினார். அவரின் சொற்படி இத்தலத்திற்கு ஐராவதம் வந்து தாலவனநாதரை வணங்கித் தன் சாபத்தைப் போக்கிக் கொண்டது.
கோயில் சிறப்புகள் :
•திருப்பனந்தாளில் வாழ்ந்த நக்கன் தரணி என்பவனால் இக்கோயில் கருங்கல்லால் கட்டப்பட்டது.
•பனையின் தாளின் இறைவன் எழுந்தருளியிருத்தலாலும்; பனைமரம் தலமரமாதலின் பனந்தாள் என்று பெயர் பெற்றது. கோயிலுக்கு தாடகையீஸ்வரம் – தாடகேச்சுரம் என்று பெயர்; தாடகை பூசித்தமையால் இப்பெயர் பெற்றது.
•இத்தலத்தில் சந்திர பகவான் ஈசனை வேண்டித் துதித்து தனது தோஷங்களைப் போக்கிக் கொண்டார்.
•இத்தல இறைவன் பிரம்மனுடைய சாபத்தை நிவர்த்தி செய்து அவனுக்குரிய பதவியையும், பெருமையையும் திரும்பத் தந்தவர்.
•பசியோடு வருந்தி வந்த காளமேகப் புலவனுக்குச் சிவாச்சாரியார் வடிவத்தில் வந்து அன்னத்தை அளித்தவர் இத்தல இறைவன்.
•அனைத்தும் அறிந்த அன்னை பார்வதி தேவி திருவைந்தெழுத்தின் பெருமையை அறிய விரும்பினாள். அவளுக்குப் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசித்த ஞான குருவாக இருப்பவர் செஞ்சடையப்பர். குருவாய் இருந்து குருதோஷ நிவர்த்திகளைச் செய்பவர் இத்தல இறைவன்.
•கீழப்பெரும்பள்ளம், காளகஸ்தி, திருநாகேஸ்வரம் ஆகியவை ஆண் நாகம் வழிபாடு செய்த தலமாகும். திருப்பனந்தாள் பெண் நாகம் (நாககன்னி) வழிபாடுசெய்த தலமாகும். மிகவும் சக்தி வாய்ந்த துர்க்கை இங்கு அருள்பாலிக்கிறாள்.
•சித்திரை மாதம் சில நாட்களில் மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுகின்றன
•தல விருட்சத்தின் பக்கத்தில் உள்ள சிவலிங்கத்தையடுத்துள்ள கிணறு, நாககன்னிகை பிலம் எனப்படும். இதன் வழியாக நாககன்னியர் வந்து இறைவனை வழிபட்டதாக ஐதீகம் சொல்லப்படுகிறது.
•கொள்ளிடம் ஆற்றின் தென்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் மேற்கு நோக்கிய 7 நிலை ராஜகோபுரம் கிழக்கில் 5 நிலை கோபுரம் மூன்று பிரகாரகங்களுடன் கோயில் உள்ளது. இரண்டு ஆண் பனைமரங்கள் கோயில் பிரகாரத்தில் உள்ளன. சுவாமி விமானம் பிரணவ வடிவில் மூன்று ஸ்தூபிகளுடன் விளங்குகிறது.
•இத்தல விநாயகர் ஆண்ட விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
•திருநாவுக்கரசர், ஐயடிகள் காடவர்கோன், நம்பியாண்டார் நம்பி, அருணகிரிநாதர், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், செஞ்சடை வேதிய தேசிகர், தருமை சண்முகத்தம்பிரான் ஆகியோர் இத்தலத்தை போற்றி பாடியுள்ளனர்.
•இத்தலத்தில் தான் குமரகுருபர சுவாமிகள் நிறுவியுள்ள ஸ்ரீ காசிமடம் உள்ளது.
•இத்தலம் உமையம்மையார் சிவ பூசையியற்றி ஞானோபதேசம் பெற்ற சிறப்புடையது.
•இக்கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் மேற்கு கோபுரத்தின் தெற்கு பக்கம் குங்குலியக்கலய நாயனாரின் கோயில் உள்ளது. இந்நாயனாரின் மனைவியின் பெயர் நீலாயி என்று கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டில் இத்தலம் திருத்தாடகை ஈச்சரம் என்றும் இறைவன் பெயர் தாடகேச்சரத்து மகாதேவர் என்றும் குறிக்கப்படுகிறது. ஆஸ்தான மண்டபத்தில் ஊர்த்துவ தாண்டவர் உள்ளார். தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான இக்கோயிலில் குமரகுருபரர் ஏற்படுத்திய காசிமடம் உள்ளது.
•பதினாறு கால் மண்டபத்தில் தாடகையினால் சாத்தப்பட்ட மாலையினை ஏற்றுக் கொள்ள பெருமான் தலை குனிந்ததும் அதனை நிமிர்த்த அரசன் யானைகளைக் கட்டி இழுத்ததும் குங்குலியக்கலய அரிகண்டம் போட்டு நிமிர்ந்ததும் அப்போது சிவலிங்கத்திடையே இறைவரது திருக்கரம் தோன்றியதும் நாயனார் வழிபட்டதும் ஆகிய உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன
•நாகுன்னன் என்பவர் அந்தணர் குலத்தில் உதித்தவன் பிதுர்க்கடனுக்காக வைத்திருந்த பொருள்களை அபகரித்ததால் நரகத் துன்பமடைந்து இறுதியில் வேடுவனாகப் பிறந்தான். வழிப்போக்கர்களின் பொருள்களைக் கவர்ந்து உயிர் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் தலயாத்திரை செய்து வரும் முனிவர்களுடைய பொருள்களை அபகரிக்க எண்ணி அவர்களைப் பின் தொடர்ந்து வந்தான். இத்தலத்து எல்லைக்கு வந்ததும் தனது நல்வினைப் பயனாலே வந்த காரியத்தை மறந்து மூன்று நாட்கள் தாலவனேஸ்வரரை பூசித்துத் திருவாதிரைத் திருநாளன்று சிவலோகம் சென்று அடைந்தான். சங்குகன்னன் என்ற வேடுவர் தலைவன் நாரதர் ஆணைப்படி இத்தலத்திற்கு வந்து தீர்த்தங்களில் நீராடி தாலவனேஸ்வரரை பூசித்து விரும்பியபடி மகப்பேற்றை அடைந்தான்.
•குங்குலியக்கலய நாயனார் இவ்வூரில் தங்கியிருந்த காலத்தில் அவரது மகன் இறந்தான். தன் மகன் இறந்த செய்தி கேட்டதும் இது இறைவன் செயல் என்று எண்ணி மகனை எடுத்துக் கொண்டு ஈமக்கடன் முடிக்கச் சென்றார். அப்போது விநாயகர் அசரீரியாக நாக கன்னிகை தீர்த்தத்தில் மூழ்கி எடுங்கள் என்று அருளினார். வினாயகர் அருளியபடி நாயனார் அவ்வுடலைக் கொண்டு வந்து நாக கன்னிகை தீர்த்தத்தில் மூழ்கி எடுக்க அவரது மகன் உயிர் பெற்று எழுந்தான். இவ்விநாயகர் இன்றும் பிணமீட்ட விநாயகர் என்ற திருநாமத்துடன் திருவீதியின் வாயு மூலையில் எழுந்தருளியுள்ளார்.
•நாகலோகத்தில் வாசுகி தன் மகள் சுமதிக்கு திருமணம் செய்ய எண்ணினாள். சுமதி அதைப் பற்றிய முயற்சி எதையும் தற்போது செய்ய வேண்டாம் என்று கூறி கன்னி மாடத்தில் அமர்ந்திருந்தாள். இறைவன் அவளது கனவில் தோன்றி நீ தாலவனேஸ்வரரை பூசிப்பாய் என அருளினார். சுமதியும் அவ்வாறே அக்கோவிலின் கிணறு வழியாக இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு வந்தாள். அப்போது தல யாத்திரை செய்து வந்த அரித்துவசன் என்னும் அரசனும் இத்தலத்தை வந்தடைந்தான். சுமதி அவனைக் கண்டு விருப்பமுற்று நாகலோகத்திற்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டாள். சில நாள் அங்கிருந்து மீண்டும் கிணற்றின் வழியாக வந்து அம்பாளுக்கு மேல்புறம் ஓர் தடாகம் அமைத்து தினந்தோறும் வழிபட்டு வந்தாள். அரித்துவசனும் ஆலயத்திற்குத் தெற்கு பக்கமு ஓர் தடாகமும் இலிங்கமும் அமைத்தான். இவ்வாறு இருவரும் பூசித்துப் பல திருப்பணிகளும் செய்து முத்தி பெற்றார்கள்.
•திருப்பனந்தாள் சிவபெருமான் பக்திக்காக வளைந்து கொடுத்தார் – ஆட்சி அதிகாரத்துக்கு அடிபணிய மறுத்தார் – அடியவர் அன்புக்கு இரங்கினார் நிமிர்ந்து கொடுத்தார் என்பது தல வரலாறு. அன்புக்காக எதையும் செய்வார் அருணஜடேஸ்வரர். அடியவர்களுக்கு உதவுவார் என்பதை உணர்த்தும் வரலாறு இது.
திருவிழா:
சித்திரையில் பிரமோற்சவம் நடைபெறுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில்,
திருப்பனந்தாள் – 612 504
தஞ்சாவூர் மாவட்டம்.
போன்:
+91- 435 – 256 422, 245 6047, 94431 16322, 99658 52734
அமைவிடம் :
கும்பகோணத்திலிருந்து (15 கி.மீ.) சென்னை செல்லும் வழியில் கோயில் உள்ளது.
#templesofsouthindia #templesoftamilnadu #templesofsiva #templeshistory #templesofthanjavur #ஸ்தலவரலாறு #சிவன்கோயில்கள் #பாடல்பெற்றஸ்தலங்கள் #ஆலயம்அறிவோம் #ஆன்மீகம் #கோவில்களும் #வரலாறும் #arunajadeswarar #periyanayagi #arunajadeswarartemple #thiruppanandal #kumbakonamtemples #அருணஜடேசுவரர் #திருப்பனந்தாள் #கும்பகோணம் #பெரியநாயகி #SriAandalVastu #kovilvastu #DrAndalPChockalingam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 9 =