#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருமீயச்சூர்

May 17, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருமீயச்சூர்
109.#திருமீயச்சூர்_லலிதாம்பிகை_திருக்கோவில்_வரலாறு
மூலவர் : மேகநாதசுவாமி (மிஹராஅருணேஸ்வரர், முயற்சிநாதர் ), புவனேஸ்வரர்
உற்சவர் : பஞ்சமூர்த்தி
அம்மன் : லலிதாம்பிகை, சவுந்திரநாயகி, மேகலாம்பிகை
தல விருட்சம் : மந்தாரை, வில்வம்
புராண பெயர் : திருமீயச்சூர்
ஊர் : திருமீயச்சூர்
மாவட்டம் : திருவாரூர்
ஸ்தல வரலாறு :
பண்டாசுரன் என்ற அரக்கன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அவர்கள் தங்களை காக்க வேண்டி அன்னை பராசக்தியை வேண்டினார்கள். வேண்டுதலை ஏற்ற பராசக்தி, அசுரனை வதம் செய்வதற்காக ஒரு வேள்வி குண்டத்திலிருந்து ஸ்ரீசக்ர ரதத்தில் லலிதாம்பிகை என்ற திருநாமத்துடன் தோன்றினாள். அசுரனுடன் போர் செய்து அவனை அழித்தாள். உக்ரமாக இருந்த அவளைச் சமாதானம் செய்யும் பொறுப்பு சிவனிடம் ஒப்படைக்கப்பட்டது. உலக உயிர்களின் நன்மை கருதி அவளை கோபம் தணியும்படியும், இதற்காக “மனோன்மணி’ என்ற திருநாமத்துடன் ஸ்ரீபுரவாசினியாக பூலோகம் சென்று தவம் செய்யுமாறும் சிவன் பணித்தார். அம்பிகையும் இத்தலம் வந்து தவம் செய்து சாந்தமானாள். தன் முகத்திலிருந்து, “வசின்யாதி வாக் தேவதைகள்’ என்பவர்களை வரவழைத்து தன்னை ஆயிரம் திருநாமங்களால் வர்ணிக்கும்படி கட்டளையிட்டாள். இதுவே “ஸ்ரீ மாத்ரே’ என துவங்கும் “லலிதா சகஸ்ரநாமம்’ ஆயிற்று.
காசிப முனிவரின் பத்தினிகளாக கர்த்துரு, விநதை இருவரும் சிவபெருமானை வழிபடுகின்றனர். இருவரின் பக்தியில் இறைவன் மகிழ்ந்து அவர்கள் முன் தோன்றி இருவருக்கும் ஒவ்வொரு அண்டத்தைக் (முட்டையை) கொடுக்கிறார். இதனைக் குறிப்பிட்ட காலமான ஒரு வருடம் பூஜை செய்து பாதுகாத்து வந்தால், உலகம் பிரகாசிக்கும் சத்புத்திரன் பிறப்பான்” என்று கூறி மறைந்தார். இருவரும் அண்டத்தைப் பாதுகாத்துப் பூஜை செய்து வந்தனர். ஒரு வருடம் கழித்து விநதை யின் அண்டத்திலிருந்து ஒரு பட்சி பிறந்தது. உடனே விநதை ஈஸ்வரனை நினைத்து, “என்ன இறைவா! எனக்குத் சத்புத்திரன் பிறப்பான் என்று கூறினாய். ஆனால் பட்சி பிறந்துள்ளதே” என்று வருந்தி வேண்டுகிறாள்.
இறைவன், “நான் கூறியது போல் அவன் மகாவிஷ்ணுவுக்கு வாகனமாய் கருடன் என்ற பெயரில் உலகமெங்கும் பிரகாசிப்பான்” என்றார்.விநதைக்குக் குழந்தை பிறந்து விட்டதே என்ற ஏக்கத்தில் அவசரப்பட்டு கர்த்துரு தான் பாதுகாத்துப் பூஜை செய்து வந்த அண்டத்தை பிட்டப் பார்த்தாள். அதிலிருந்து தலை முதல் இடுப்பு வரை வளர்ந்த அங்கஹீனனாய் ஒரு குழந்தை பிறந்தது. அவளும் இறைவனை நினைத்து, “இப்படி ஆகி விடடதே!” என்று இறைஞ்சினாள். இறைவன், “நான் கூறியது போலவே இவன் சூரியனுக்குச் சாரதியாய் இருந்து உலகம் முழுவதும் பிரகாசிப்பான்” என்றார். அங்கஹீனனான அருணன் தான் கைலாசம் சென்று ஈஸ்வரனைத் தரிசனம் செய்து வர எண்ணி சூரியனிடம் அனுமதி கேட்டான். சூரியனோ, நீ அங்கஹீனன் (நொண்டி). உன்னால் ஈஸ்வரனைத் தரிசனம் செய்ய முடியாது என்றெல்லாம் பரிகசித்தான். மனம் தளராத அருணன் இறைவனை நினைத்து தவமிருந்தான். மமதை கொண்ட சூரியன் அருணனின் தவத்தை எள்ளி நகையாடியதோடு பல தொல்லைகளும் செய்தான். சூரியன் கொடுத்த துன்பம் தாங்காது அருணன், முன்னிலும் முனைப்பாக இறைவனை நினைத்து வேண்டினான். இறைவன் அருணனுக்குக் காட்சியளித்து அருள் புரிந்தான். சூரியனிடம் என்னைத் தரிசனம் செய்ய நினைத்த அருணனைத் துன்புறுத்திய உன் மேனி கிருஷ்ண வர்ணமாய்ப் போகக் கடவது என்று சாபமிட்டார். இதன் விளைவாக உலகமே இருண்டு போனது. பரமேஸ்வரி சிவபெருமானிடம் இப்படி சாபமிட்ட வீட்டீர்களே! உலகமே இயங்காது போகுமே என்று வினவ, அருணன் தவ பலத்தால் உலகம் பிரகாசமடையும்” என்றார். தன் தவறை உணர்ந்த சூரியன் இறைவனிடம் வேண்ட, நீ எம்மை ஏழுமாத காலம் பூஜை செய்தால் உனது உருவம் கருமை நிறத்திலிருந்து விடுபட்டுக் குணமடையும் என்றார்.
தான் சாபவிமோசனம் அடை வதற்காக சூரியன் இத்தலத்தில் வந்து சிவபெருமானை ஏழு மாதம் பூஜை செய்து வழிபட்டார். அவ்வாறு வழிபட்ட பின்னரும் தன் கருமை நிறம் மாறாது போகவே வருந்தி, “ஹேமிகுரா” என்று கதறுகிறார் அப்போது சுவாமியுடனிருந்த அம்பாள் தங்களது ஏகாந்தத்தில் குறுக்கிட்ட சூரியன் மேல் கோபம் கொண்டு மீண்டும் சபிக்க முற்பட்டாள். சிவபெருமான் தடுத்து, “நான் கொடுத்த சாபம் நீங்கவில்லையென்ற வருத்தத்தில் என்னை அழைத்துள்ளான். மீண்டும் நீ சாபமிட்டால் உலகம் மறுபடியும் இருண்டு போகும். நீ பரமசாந்தையாயும் உலகம் பிரகாசிக்கவும் தவமிருப்பாயா” என்று அம்பாளைச் சாந்தப்படுத்தி, அம்பாளின் கோபம் தணிய தவமிருக்கப் பணிந்துவிட்டு, சூரியனுக்கு சாபவிமோசனம் அளித்தார். அம்பாள் சாந்த நாயகியாகிறார். அன்னை பராசக்தியின் திருவாயிலிருந்து வசினீ என்ற வாக்தேவதைகள் தோன்றி அவர்கள் திருவாய் மலர்ந்ததுவ சகஸ்ர நாம ஸ்தோத்திரம் எனப்படுகிறது. அம்பாளே அருளியதால் அவரின் பெயர் கொண்டு லலிதா சகஸ்ர நாமம் எனப் பெயர் பெற்றதாகச் சொல்வர்.
கோயில் சிறப்புகள் :
•இறைவன் மேகநாதர் அம்பாள் லலிதாம்பிகை சவுந்திரநாயகி மேகலாம்பிகை. லலிதாம்பிகை ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய வரத ஹஸ்த முத்திரையுடன் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது.
•எல்லா சிவ ஸ்தலத்திலும் சிவனை வணங்கி பிறகு தான் அம்பிகை பரிவார மூர்த்திகளை வழிபடுவது மரபு. அரிதான சில சிவ ஸ்தலத்தில் மட்டுமே அம்பிகையை முதலில் வழிபாடு செய்வது சிறப்பானது அந்த அகரவரிசையில் இத்தல அம்பாளும் ஒருவர்.
•சர்க்கரை பாவாடை என்று சொல்லும் நைவேத்தியம் இங்கு பிரசித்தமானது. சர்க்கரை பொங்கல் செய்து அம்மன் முன் வைத்து அதன் முன் நெய்யை குளம் போல் ஊற்றி வைப்பார்கள். அந்த நெய்யில் அம்பிகை உருவம் தெரியும். அது தான் சர்க்கரை பாவாடை நைவேத்தியம்.
•லலிதாம்பிகை சகல ஆபரணங்களையும் அணிந்து பட்டத்தரசியாக ஜொலித்தாலும் காலில் கொலுசு அணியாமல் அலங்காரம் செய்து வந்தனர். 1999 ஆம் வருடம் ஒரு பக்தையின் கனவில் அம்பாள் தங்கக்கொலுசு கேட்டதால் அவர் திருமீயச்சூர் ஆலய அர்ச்சகர்களிடம் தொடர்பு கொண்டு கேட்கையில் அம்பிகையின் சிலாரூபத்தில் கொலுசு அணிவிக்கும் அமைப்பு இல்லை எனத் தெரிவித்தனர். அந்த பக்தை மீண்டும் வலியுறுத்திக் கேட்கையில் கவனத்துடன் தேடிப்பார்த்தனர். ஆண்டுக்கணக்கில் அபிஷேகம் செய்திருந்ததில் அபிஷேக பொருட்கள் கொலுசு அணிவிக்கக்கூடிய துவாரத்தை அடைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதன்பின் அம்பிகைக்கு பக்தை அம்பாளுக்கு தங்கக்கொலுசு செய்து அணிவித்தார். தற்போதும் பக்தர்கள் கொலுசு காணிக்கை செலுத்துகிறார்கள்.
•லலிதாம்பிகையிடம் உபதேசம் பெற்றவர் ஹயக்கிரீவர். இவர் அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமையைப் பற்றி விவரித்து ஹயக்ரீவர் சொல்ல லலிதா சகஸ்ர நாமத்தை அகத்தியர் எழுதினார். ஹயக்கிரீவரிடம் அகத்தியர் லலிதா சகஸ்ரநாமத்தை எத்தலத்தில் கூறினால் முழுப்பலன் கிடைக்கும் என கேட்டார். அதற்கு ஹயக்கிரீவர் பூலோகத்தில் அம்பாள் மனோன்மணியாக வீற்றிருக்கும் இடத்திற்குச் சென்று சொன்னால் பூரண பலன் கிடைக்கும் என்றார். அகத்தியர் தன் மனைவி லோப முத்திரையுடன் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகையை தரிசித்து லலிதா சகஸ்ரநாமம் சொன்னார். அம்பாள் மகிழ்ந்து அத்தம்பதிகளுக்கு நவரத்தினங்களாக தரிசனம் தந்தாள். அப்போது அகத்தியர் லலிதா நவரத்தின மாலை என்னும் ஸ்தோத்திரம் பாடினார்.
•இத்தலத்தில் பூஜை செய்து சூரியன் தன் கருமை நிறத்திலிருந்து மீண்டு வந்ததின் அடிப்படையிலேயே மீயச்சூர் எனப்பெற்றது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 21 முதல் 27-ம் தேதி முடிய சூரிய கிரணங்கள் உதயமாகும் நேரத்தில் இவ்வாலயக் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது விழும்.
•100 ஆண்டுகளுக்கு ஒரு முறை கடலில் சங்கு தோன்றுவதால் அதற்கு ஆயுளைக் கெட்டிப்படுத்தும் தெய்வீக சக்தி உண்டு. சதய நட்சத்திரத்தின் அதிதேவதையான எமன் ஆயுளைத் தரவல்ல சங்கு கொண்டு 1008 சங்காபிஷேகம் செய்து, மிகவும் சக்தி வாய்ந்த மூலிகையும், எமலோகத்தின் ஸ்தல விருட்சங்களில் ஒன்றானதுமான பிரண்டை கலந்த அன்னதானம் செய்து சிவபெருமானை வழிபட்டார் என்பது ஐதீகம்.
•இத்தலத்தில் தாமரை இலைகளில் சங்கு புஷ்பத்தை வைத்து சதய நட் சத்திரத்தில் குறிப்பிட்ட ஹோரையில் சிவபெருமானை பூஜித்து, அத்தாமரை இலையிலே அன் னத்தை படைத்து, ஏழைகளுக்கு அன்னதானமளித்து தாமும் உண்டால் எக்கடுமையான நோய்களால் துன்பப்பட்டாலும் அந்நோயிலிருந்து நிவாரணம் பெற்று நீண்ட ஆயுளோடு வாழ காலனும், சிவபெருமானும் அருள் புரிவர் என்பது நம்பிக்கை.
•கோயிலின் ராஜ கோபுரம் ஐந்து நிலை களுடனும், இரண்டாவது கோபுரம் மூன்று நிலை களுடனும் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கம் லலிதாம்பிகை சன்னதி உள்ளது. மகாமண்டபத்தில் ரத விநாயகர், உள் பிரகாரத்தில் நாகர், சேகிழார், சப்தமாதர்கள் பூஜித்த லிங்கங்கள், அக்னி, எமன், இந்திரன் பூஜித்த லிங்கங்கள் உள்ளன.
•மதுரையில் மீனாட்சிக்கும், ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாளுக்கும் கிளி உண்டு. துர்க்கை சிலையிலேயே கிளி அமைக்கப்பட்டுள்ளது ஒரு சில கோயில்களில் தான். துர்க்கையம்மனின் இடது கரத்தில் அழகுற வீற்றிருக்கும் கிளி. அன்னை ஸ்ரீ லலிதாம்பிகையிடம் நாம் வைக்கும் கோரிக்கையை துர்க்கையம்மனிடம் மனமுறுக வேண்டினால் அம்மன் கையில் உள்ள கிளி தூது சென்று, லலிதாம்பிகையிடம் வரம் பெற்று வரும் என்பதும் ஐதீகம்.
•சண்டிகேஸ்வரர் நான்கு முகங்களுடன் அருள்பாலிக்கிறார்.(கச்சூரிலும் நான்முக சண்டேசுவரர் உண்டு.)
•இங்கே நவக்கிரகங்களுக்குச் சந்நிதி இல்லை. மாறாக 12 ராசிகளுக்கு உரிய 12 நாகர்களும் உள்ளனர்.
•சனிஸ்வரர், எமதருமர், அருணன், கருடன், வாலி, சுக்ரீவன் ஆகிய ஆறு பேரின் அவதாரத் தலம்.
•இக்கோயில் சிற்பக் கலையில் சிறப்போடு விளங்குகிறது என்பதற்கு உதாரணமாக, சுவாமி அம்பாளை அமைதியாய், சாந்தமாய் இருக்கச் சொல்லும் தோற்றத்தில் இத்தலத்தின் க்ஷேத்திர புராணேஸ்வரர் திருவுருவம் அமைந்துள்ளது. இந்த சிற்பத்தில் என்ன ஒரு விசேஷம் என்றால், அம்பாளையும், ஈஸ்வரனையும் ஒரு புறத்தில் இருந்து பார்க்கும்போது சிரித்த முகமாகவும், மற்றொரு புறத்தில் இருந்து காணும் போது கோபமாகவும் தோன்றும் வண்ணம் இந்த சிற்பங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன.
•சூரிய பகவான், அருணன், காசிப முனிவரின் மனைவிகளான கர்த்துரு, விநநை, அகத்திய முனிவர், என்று இவர்களோடு அல்லாமல் , எமன் இக்கோயிலிலேயே தங்கி எப்போதும் சிவ சிந்தனையிலேயே இருந்து பூஜை செய்து வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
•இத்திருக்கோயில் அன்னை லலிதாம்பிகை இவ்வுலகில் வேறெங்கும் காணமுடியாத வண்ணம் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார்.
•தமிழகத்தில் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாத வகையில் 70 மாடக்கோயில்கள் கட்டிச் சோழர் பரம்பரைக்குப் பெருமை சேர்த்தவன். திருமீயச்சூர்க் கோயிலும் அவற்றில் ஒன்று.
திருவிழா:
தைமாத ரதசப்தமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமானுக்குரிய, அம்பிகைக்குரிய அனைத்து வருடாந்திர விழாக்களும் நடக்கும்.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12.30 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு லலிதாம்பிகா சமேத மேகநாதசுவாமி திருக்கோயில்,
திருமீயச்சூர் – 609 405.
திருவாரூர் மாவட்டம்.
போன்:
+91-4366-239 170, 75988 46292, 94431 13025
அமைவிடம் :
மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து ஒரு கி.மீ தூரத்தில் திருமியச்சூர் உள்ளது. மயிலாடுதுறையிலுருந்து பேரளத்திற்கு அடிக்கடி பஸ்வசதி உள்ளது.
#திருமீயச்சூர் #திருமீயச்சூர்லலிதாம்பிகைசமேதமேகநாதர்கோயில் #shivatemple #திருமீயச்சூர்லலிதாம்பிகை
#மேகநாதர்கோயில் #ஆண்டாள் #ஸ்ரீவில்லிபுத்தூர் #திருவாரூர் #thiruvarur #thirugnanasambandar #sambandar #சம்பந்தர் #listoftemplestovisitintamilnadu #templesToVisit #templesofsouthindia #templesofindia #temples #ஸ்தலவரலாறு #தலவரலாறு #ஆலயம்அறிவோம் #கோயில்கள்வரலாறு #DrAndalPChockalingam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 2 =