#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் படவேடு

April 12, 2023 0 Comments

மூலவர் : ரேணுகாம்பாள்
தல விருட்சம் : மாமரம்
தீர்த்தம் : கமண்டலநதி
ஊர் : படவேடு
மாவட்டம் : திருவண்ணாமலை
ஸ்தல வரலாறு :
முப்பத்தெட்டு தேசங்களை ஆண்ட விதர்ப்ப தேசத்து மன்னன் இரைவத மகாராஜனுக்கு குழந்தைப் பேறில்லை. மனவேதனையில் இருந்த மன்னன் சக்தியை நோக்கிப் பல ஆண்டுகள் தவம் செய்தான். அவன் பக்தியை மெச்சிய சக்தி மன்னனுக்கு குழந்தை வரம் கொடுத்தால் மன்னனுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதேவேளையில் அமைச்சர் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அரசனின் மகளுக்கு ரேணுகை என்றும் அமைச்சரின் மகளுக்கு சாமுண்டி என்றும் பெயரிட்டு சிறப்புற வளர்த்தனர். 19-ஆவது வயதில் தனக்குக் கணவனாக வரப்போகிறவரைப் பற்றி கனவில் அறிந்து கொண்டாள். உடனே ரேணுகை, ‘’தேசம் முழுவதும் திக்விஜயம் செய்யப் போகிறேன். என்னை போரில் வெல்பவரையே மணம் புரிவேன்’ என்றாள். மன்னனும் சம்மதித்தான். சாமுண்டி மற்றும் சேனைகளுடன் புறப்பட்டாள் ரேணுகை.
வழியில்… காசி தேசத்து இளவரசி என மன்னர்கள் வரவேற்று உபசரித்தனர். ஆனால், எவரும் எதிர்க்கவில்லை. அப்படியே தொண்டை மண்டலத்தில்… பாலாறு பாயும் பெரிய காடுகளைக் கொண்ட பகுதிக்கு வந்தாள் ரேணுகை (ஆரண்யம் என்றால் காடு. இதுவே ஆரணி என்றானது). ஊரையும் ஆற்றையும் பார்த்தவள் மனதை பறிகொடுத்தாள். கனவில் தோன்றிய இடத்தைத் தேடியலைந்த ரேணுகா குண்டலிபுரத்திற்கு (படவேடு) வந்தாள். கானகமாயிருந்த இந்தப் பகுதியில் ஜமதக்கினி முனிவர் தனது சீடர்களுடன் ஆசிரமம் அமைத்து தவத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டாள். அந்த முனிவரே தன் கணவர் என்பதை உணர்ந்துகொண்ட ரேணுகா முனிவரைச் சந்தித்து, “எனது கனவில் வந்தவர் நீங்கள்தான். நீங்களே என்னை மணக்க வேண்டும்’ என வேண்டினாள். முனிவர் மறுத்தார். அவர் மனதை மாற்ற படை மற்றும் பணிப் பெண்களோடு அங்கேயே தங்கினாள் ரேணுகா.
முனிவருக்கு வேண்டிய பணிவிடைகளை அவர் கேளாமலேயே செய்தாள். அவளது பக்தியைக் கண்டு மெச்சிய முனிவர், “உன்னை என் மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் என்னோடு நீ முனிவரின் மனைவியாக மட்டுமே வாழ வேண்டும். மன்னன் மகள் என்ற ஆடம்பரத்தோடு வாழக் கூடாது’ என்றார். தன்னுடன் வந்த படை மற்றும் பணிப் பெண் களைத் திருப்பி அனுப்பிவிட்டு, ஜமதக்கினி முனிவரைத் திருமணம் செய்துகொண்டாள் ரேணுகா. இவர்களுக்கு ஹரிதத்தன், உச்சாங்கன், விஸ்வாவஸூ, மற்றும் திருமாலின் அவதாரமான பரசுராமன் என நான்கு மகன்கள் பிறந்தனர்.. பரசுராமருக்கு அனைத்து வித்தைகளையும் ஜமதக்கினி முனிவர் கற்றுத் தந்து வீரனாக வளர்த்தார். ரேணுகாதேவி தன் கணவருக்கு பணிவிடை செய்து வரும் நாளில், கணவர் பூஜைக்கு நீர் முகந்திட கமண்டல நதிக்கு சென்றாள். ரேணுகாதேவி தினமும் நதியில் நீராடி தனது கற்புத்திறத்தால் ஆற்று மணலில் குடம் செய்து கணவனின் பூஜைக்கு தண்ணீர் எடுத்து வருவது வழக்கம். அன்றும் வழக்கம்போல் குடத்தை செய்து தண்ணீர் நிரப்பும் போது, வான்வழியே சென்ற கந்தர்வனின் அழகை பார்த்து வியக்கிறாள். இதனால் குடம் சிதறுகிறது. கணவனிடம், காட்டுவிலங்கு துரத்தியதால் குடம் சிதறியதாக பொய் கூறுகிறாள் ரேணுகாதேவி. முற்றும் உணர்ந்தவரான ஜமதக்னி உண்மை அறிந்து ஆவேசமடைகிறார். தனது மகன்களிடம் தாயின் சிரத்தை கொய்து வர ஆணையிடுகிறார்.
அவர்களில் பரசுராமன் மட்டுமே, இரண்டு வரங்கள் கேட்டுப்பெற்று தந்தையின் ஆணையை சிரமேற்கொண்டு புறப்படுகிறார். மற்றவர்கள் மறுத்து தந்தையின் சாபத்துக்கு ஆளாகின்றனர்.கையில் கோடாரியுடன் அன்னை ரேணுகாதேவிளைய துரத்தி செல்கிறார் பரசுராமன். மகனிடம் இருந்து தப்பிக்க காடு, கழனிகளை தாண்டி செல்லும் ரேணுகாதேவி ஓரிடத்தில் ஆவாரம் செடி மட்டைகளை உரித்துக் கொண்டிருந்த அருந்ததி பெண்ணை கட்டியணைத்து தன்னை காக்குமாறு வேண்டுகிறாள். அப்பெண்ணும் பரசுராமனை தடுக்கிறாள். ஆவேசமடைந்த பரசுராமன் கோடாரியை வீச, ரேணுகாதேவி, அருந்ததி பெண் இருவரது சிரங்களும் தரையில் விழுகின்றன. தாயின் சிரத்தை எடுத்துச் சென்று தந்தையின் காலடியில் சமர்ப்பித்து தந்தையின் ஆணையை நிறைவேற்றி விட்டதாக கூறி கதறி அழுகிறார் பரசுராமன். தந்தை ஜமதக்னி, மகனை ஆசீர்வதித்து என்ன வரங்கள் வேண்டும் என கேட்க, உடன்பிறந்தோர், தாய் ஆகியோர் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். தாய்க்காக சிரம் தந்த அருந்ததி பெண்ணும் உயிர்பெற வேண்டும் என்று கேட்கிறார். அவரும் வரம் அருள, உடன்பிறந்தவர்கள் உயிர் பெறுகின்றனர். பின்னர் தந்தை தந்த கமண்டல நீருடன் சிரங்களை வேகமாக எடுத்துச் சென்று உடல்களில் பொருத்தி புனிதநீரை தெளிக்க ரேணுகாவும், அருந்ததி பெண்ணும் உயிர்பெறுகின்றனர்.
ஆனால், தாயை உயிர்ப்பிக்கும் அவசரத்தில் தலைகளை உடல் மாற்றி பொருத்தி விடுகிறார் பரசுராமன். அப்பெண்ணின் உடம்போடு பிழைத்த நின்று தன் புதல்வனை பார்த்து தனக்கு நேர்ந்த வேறுபாட்டை சொன்னார். பின் தன் தந்தையின் முன்சென்று நடந்தவற்றை விவரிக்கிறார். இது தெய்வச் செயலால் வந்தது. இனி இதை மாற்ற முடியாது எனக் கூறியதனால், அதுமுதல் அவ்வேருபட்டவுடலுடன் ஜமதகினி முனிவருக்கு அன்னை பணிவிடை செய்து வந்தார். இந்நிலையில் அப்பகுதிக்கு கார்த்தவீர் யார்ஜுனன் என்ற மன்னன் வேட்டையாட வந்தான். பசி, தாகத்தால் அவனும் அவனது படை வீரர்களும் வருந்தினர். அப்போது ஜமதக்கினி முனிவரின் ஆசிரமத்தைக் கண்ட மன்னன் அவரிடம் சென்று உதவி கேட்டான். கேட்டதை வழங்கும் காமதேனுவை வைத்திருந்த முனிவர், அதன் உதவியால் அனைவருக்கும் அறுசுவை விருந்து படைத்தார். காமதேனுவின் மகத்துவத்தை அறிந்த மன்னன் அதைத் தனக்குத் தருமாறு கேட்க, முனிவர் மறுத்தார். அதனால் கோபம் கொண்ட மன்னன் முனிவரைக் கொன்றுவிட்டு காமதேனுவை இழுத்துச் சென்று விட்டான். அதன் பின்னரே அங்கு வந்த பரசுராமர் நடந்ததை அறிந்து கடுங்கோபமுற்றார். உடனே சென்று கார்த்தவீரியனைப் போரிட்டுக் கொன்று காமதேனுவையும் மீட்டு வந்தார். ஜமதக்கினி முனிவரின் உடல் எரியூட்டப்பட, ரேணுகாதேவியும் தீயில் புகுந்தாள். அவளது பதிபக்தியைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் மழை பெய்யச் செய்தார். தீ அணைந்தது, தீக்காயங்கள் பட்ட உடலுடன் வேப்பிலை ஆடையுடன் வெளிப்பட்டாள் ரேணுகாதேவி. சிவபெருமான், பிரம்மா, விஷ்ணுவுடன் தேவர்களோடு அவ்விடம் தோன்றி, கோபத்தை விட்டுவிடும் படியும், இக்காரியம் விதிப் பயனாலானது என்றும் யாராலும் தடுக்க முடியாது எனக்கூறி சாந்தப் படுத்துகிறார். ஜமதக்கினி முனிவரையும் உயிர்ப்பித்தார்
சிவபெருமான். மேலும், “பூவுலகில் தலை மட்டும் கொண்ட தெய்வமாக விளங்கி பக்தர்களுக்கு அருள் செய்வாய்’ என்று ரேணுகாதேவிக்கு வரமும் தந்தார். அன்னை ரேணுகாதேவி சிவபெருமானிடம் வேண்டியபடி சிரசு மட்டும் பிரதானமாகக் கொண்டு இப்பூவுலகில் பூஜைக் கருவுருவாய் விளங்கவும், உடலின் மற்ற பிரிவு முனிவருடன் சுவர்க்கத்துக்கு செல்லவும் சிவபெருமான் அருள் வழங்கினார். அவ்வாறே அன்னை ரேணுகாதேவி பூவுலகில் சிரசை பிரதானமாகக் கொண்டு படைவீட்டில் அமர்ந்து அருள் பாளித்து வருகிறாள். அதனால் தான் இக்கோவிலின் தேவி தலை மட்டும் கொண்டு அருள்புரிகிறாள். உடல் மாறியதால் மாரியம்மன் என்று அழைக்கப்படு கிறாள்.
கோயில் சிறப்புகள் :
• இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
•அம்மன் தலங்களில் குங்குமம் தான் பிரசாதமாக தரப்படும். ஆனால் இங்கு மட்டும் வித்தியாசமாக மண் பிரசாதமாகத் தரப்படுகிறது. இத்தலத்தில் தரப்படும் மண் விசேசமானது.தானாகத் தோன்றியாதாகும். பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாகும். இந்த மண் இத்தலத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள ஜமதக்னி முனிவர் (அதாவது ரேணுகாதேவியின் கணவர்)வாழ்ந்ததாக கருதப்படும் ஆசிரமத்தில், அவர் யாகம் செய்த இடத்திலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது.
•அத்திமரத்தால் ஆன அம்மனின் முழு உருவமும், அதன் கீழ் சுயம்புவாக தோன்றிய அம்மனும்,அம்மனின் இடப்பக்கம் ரேணுகாதேவியின் சிரசும் உள்ளது.
•ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த பாணலிங்கமும், சிலா சிரசும், சுதையிலான அம்மன் முழு திருவுருவமும் கருவறையில் அமையப் பெற்றுள்ளது.
•இத்திருக்கோயிலின் கருவறையில் அன்னை ரேணுகாதேவி(சிரசு மட்டும்) சுயம்பு உருவமாகவும், பிரம்மா, திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அரூபங்களாகவும் உள்ளனர். மேலும், ஆதிசங்கரர் பிரதிட்டை செய்த பாணலிங்கமும், சிலாசிரசும், சுதையிலான அம்மனின் முழுத்திருவுருவமும் கருவறையில் அமையப் பெற்றுள்ளது.
•மும்மூர்த்திகளுடன் எழுந்தருளியுள்ள அன்னை ரேணுகாதேவியை வழிபட, மும்மூர்த்திகளையும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபட்ட பலன் உண்டு. பரசுராமரின் சிலையும் கருவறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
•ஞானியர் பலர் தவமிருந்து சித்திகள் பல பெற்றது இத்திருத்தலத்தில்தான். தொண்டை மண்டலத்து சக்தி தலங்களில் இத்தலம் முக்கியமான ஒன்றாகும். ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாம்பாளுக்கும் பிறந்த பரசுராமர் அவதரித்த தலம் இது. பரசுராம சேத்திரம் என்று இத்தலத்துக்கு பெயர்.
•இக்கோயில் அம்மன் கோயில் என்றாலும் சுற்றுச் சுவர்களில் சிங்க வாகனம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதில் இங்கு பசு உள்ளது.
•ஒரு காலத்தில் 1008 சிவாலயங்களும், 108 விஷ்ணு ஆலயங்களும் இவ்வூரில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவற்றுள் ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில் , அம்மையப்பன் திருக்கோயில் , மற்றும் இராமச்சந்திர சுவாமி திருக்கோயில் தவிர இதர திருக்கோயில்கள் அனைத்தும் இயற்கை சீற்றத்தால் அழிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இவ்வூர் அரசர்கள் காலத்தில் பட்டிணமாக இருந்ததாகவும், காலப்போக்கில் இயற்கை சீற்றங்களினால் அழிந்ததாகவும் கூறப்படுகிறது.
•படை + வீடு = படைவீடு. படைகள் தங்கு இருந்த இடம். அன்னை ரேணுகாதேவி இத்தலத்தில் படையுடன் வந்து அருள் பாலித்ததால் படைவீடு எனவும், இராச கம்பீர சம்புவராயர் எனும் அரசன் தனது படைகளுடன் இத்தலத்தில் தங்கி போரிட்டதால் படைவீடு எனவும் பெயர் பெற்று நாளடைவில் படவேடு என் பெயர் மருவி வந்துள்ளது.
•சிவபெருமானிடம் அளவற்ற வரங்களைப் பெற்று தன்னை வெல்ல யாரும் இல்லை என்ற அகங்காரத்தோடு அனைத்து தேவர்களையும் அடக்கியாண்டு கொடுமைப்படுத்தினான் சூரபத்மன். சூரபத்மனின் கொடுமையால் வருந்திய தேவர்கள், சிவபெருமானை அணுகி அருள்புரிய வேண்ட அசுரர்களை சம்ஹாரம் செய்வதற்கென்றே எமது நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய சிவசுப்பிரமணியன் விரைவில் அவர்களைக் கொல்வான் என்று கூறிய பெருமான், கந்தனை நோக்கிக் கடைக்கண்ணால் அருளாணை பிறப்பித்தார். இந்திரன், உமாபத்திரா, எங்களை அசுரரிடமிருந்து மீட்டு வாழவைத்த நீதான் இந்த இந்திரலோகத்துக்கு அதிபதியாக வேண்டும். எனது நன்றிக்கடனாக என் மகள் தெய்வானையை மணம் புரிந்து கொள்ள வேண்டும் என முறையிட்டான்.புன்னகை புரிந்த முருகப்பெருமானோ நீயே இந்திராபதியாக இரு. நாம் தேவர் படைக்குத் தளபதியாக தேவசேனாதிபதியாக இருந்து அசுரர் கூட்டத்தை அழித்து, எப்போதும் அமைதி நிலவச் செய்வோமா என அருள்புரிய, பிரம்மா, விஷ்ணு தேவர்களும் சிவசுப்பிரமணியனே தேவசேனாதிபதியாக இருக்க வேண்டும் என்று ஆமோதித்து வணங்கினர்.
•ரேணுகாதேவியின் ஆலயத்துக்கு எதிரேயுள்ள ஓரு சிறிய குன்றில் வந்து குவிந்தனர். குன்றில் வந்தமர்ந்த குமரக் கடவுளுக்கு அந்தணர்கள் வேத முழக்கம் செய்ய தேவேந்திரன் அபிஷேக ஆராதனை செய்து சர்வ உபச்சாரங்களையெல்லாம் நிகழ்த்தி, சிவசுப்பிரமணியனுக்கு தேவசேனாதிபதி என்றபடி மணிமகுடம் சூட்டி பட்டாபிஷேகம் மங்களகரமாக நடத்தி முடித்தாள்.
•கிழக்கே பார்த் திருமுகம். மயில் மீது அமர்ந்த முருகனைத்தான் நாம் குன்று தோறாடும் குமரக் கடவுளைத் தரிசிப்பது வழக்கம். ஆனால் இங்கோ வடக்குப்புறம் பார்த்து தோகை விரிக்காமல் நிற்கும் மயிலின் மீது வள்ளிநாயகன் நின்றபடி காட்சியளிப்பது வியப்பானது. அதுமட்டுமல்ல மயில் பாம்பைக் கவ்வியிருக்க, பாம்பு படம் விரித்து ஆடாமல் தலை சாய்ந்து தொங்கியபடி இருப்பதும், எங்கும் காணமுடியாத காட்சியாகத்தான் தென்படுகிறது.
•ராவண சம்ஹாரத்துக்குப் பிறகு, தசகண்ட ராவணன் ராம லக்ஷ்மணர்களை அழிக்க வர, படவேட்டில், செங்கமலத் தடாகத்தில் இருக்கும் தாமரை மலரில் உள்ள வண்டு ஒன்றில், அரக்கனின் உயிர் இருப்பதை அறிந்து அதனை எடுப்பதற்காக அனுமன் இங்கே வந்தார். அனுமன் தனது எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்ததால் ரேணுகாம்பாள் கோபம் கொண்டாள். இதையறிந்த ராம-லட்சுமணர்கள், இங்கு வந்து, இருவரையும் சமாதானம் செய்தனராம்! பிறகு இங்கேயே கோயில் கொள்ளும்படி ரேணுகாம்பாள் வலியுறுத்த… ஸ்ரீராமர் இங்கே கோயில் கொண்டாராம்!
திருவிழா:
ஆடி மாதம் – ஏழு வெள்ளிக் கிழமைகளும் இத்தலத்தில் மிகவும் விசேசமாக இருக்கும்.
திறக்கும் நேரம்:
காலை 6.40 மணி முதல் 1 மணி வரை,
மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில் படவேடு.
திருவண்ணாமலை மாவட்டம்.
போன்:
+91- 4181 – 248 224, 248 424.
அமைவிடம்:
திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் சந்தவாசல் என்ற ஊரிலிருந்து பிரிந்து செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவில் படவேடு உள்ளது. காஞ்சிபுரம், வேலூர், போளூர், ஆற்காடு, ஆரணி முதலிய இடங்களிலிருந்து படவேட்டிற்கு பேருந்து வசதி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 10 =