#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கிருஷ்ணாபுரம்

April 12, 2023 0 Comments

மூலவர் : வெங்கடாசலபதி
உற்சவர் : ஸ்ரீ தேவி பூதேவி
தாயார் : பத்மாவதி
தல விருட்சம் : புன்னை
புராண பெயர் : பர்பகுளம்
ஊர் : கிருஷ்ணாபுரம்
மாவட்டம் : திருநெல்வேலி
ஸ்தல வரலாறு :
இக்கோவிலில் உள்ள கலையழகு மிளிரும் சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை. நம் முன்னோர்கள் சிற்பக்கலையில் அடைந்திருந்த உன்னத நிலையும், தொழில் நுட்பத்திறனும் காண்போரை பிரமிக்க வைக்கும். வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்லும். இங்குள்ள எழில் கொஞ்சும் சிற்பங்களில் தெரியும் முகபாவங்கள், கை மற்றும் கால்களில் ஓடும் நரம்புகள் கூட தெளிவாகத் தெரியும்படியான நுணுக்க வேலைப்பாடுகள், தத்ரூபமாக காணப்படும் ஆடை அணிகலன்கள் ஆகியவற்றை கவனிக்கும்போது, இவை சிற்பங்களா அல்லது உயிர் பெற்று வந்து நிற்கும் நிஜ உருவங்களா என்று நம்மை எண்ண வைக்கும். தட்டினால் இனிய ஓசை எழுப்பும் இசைத் தூண்கள், ஒரு சிற்பம் பற்றியுள்ள வளைவான வில்லின் ஒரு முனையில் ஒரு குண்டூசியைப் போட்டால் மற்றோரு முனை வழியாக தரையில் விழுவது போன்ற நேர்த்தியான வடிமைப்பு கொண்ட சிற்பங்கள் நமது சிற்பிகளின் திறமையை உலகுக்கு பறை சாற்றுகின்றன.
இக்கோவிலில் ரதி-மன்மதன், ரம்பை, கர்ணன், அர்ஜுனன், அரசியை தோளில் சுமக்கும் வாலிபன், யானையும் காளையும் (ரிஷப குஞ்சரம்) சிற்பம், பெண்ணின் தோளில் கொஞ்சும் மொழி பேசும் பச்சைக்கிளி முதலிய, மொத்தம் 42 அழகு மிளிரும் சிலைகளைக் காணலாம்.
பதினாறாம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசின் மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர் இந்த கோவிலைக் கட்டி சிற்பங்களை நிறுவியுள்ளார். 110 அடி உயரத்தில் ஐந்து நிலை வானளாவிய இராஜகோபுரமும், கருங்கல்லிலான திருச்சுற்று மதில்களும் சூழப்பெற்று விசாலமாக 1.8 ஏக்கர் (0.73 ஹெக்டேர்) பரப்பில் நாயக்கர் கட்டிடக்கலைப்பணியில் அழகுற அமைந்த 16 ஆம் நூற்றாண்டுக் கோவில் இது. இக்கோவிலில் மூன்று பிரகாரங்கள் இருந்துள்ளன. ஆற்காட்டு நவாப் உத்தரவின்படி சந்தா சாஹிப் மூன்றாம் பிரகாரத்தை தரைமட்டமாக்கிவிட்டான். இதுமட்டுமல்ல இடித்த கற்களைக்கொண்டு பாளையங்கோட்டையில் கோட்டை ஒன்றையும் கட்டினானாம். இராஜகோபுரம் தாண்டியவுடன் துவஜஸ்தம்பத்தையும் பெருமாளை நோக்கி அமர்ந்துள்ள கருடனையும் காணலாம்
கருவறையில் மூலவர் வெங்கடாசலபதி உருவம் கருங்கல்லால் நன்கு அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு கரங்களுடன் நின்றகோலத்தில் ஸ்ரீதேவி பூதேவி புடைசூழ சேவை சாதிக்கும் பெருமாளின் மேலிரண்டு கைகள் சங்கு மற்றும் சக்கரம் பற்றியுள்ளன; கீழிரண்டு கைகள் அபய மற்றும் கடிஹஸ்த முத்திரைகள் காட்டுகின்றன. உற்சவர் பெயர் ஸ்ரீனிவாசன், மூலவரைப் போலவே நான்கு கரங்களுடன் நின்றகோலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சேவை புடைசூழ காட்சியளிக்கிறார் கருவறையைத் தொடர்ந்து அர்த்தமண்டபம் அமைந்துள்ளது. அர்தமண்டப நுழைவாயில் ஆஜானுபவ தோற்றம்கொண்ட துவாரபாலகர்கள் காவலில் உள்ளது. அலர்மேல்மங்கைத் தாயாரின் தனி சன்னதி பிரகாரத்தில் உள்ளது.
கோயில் சிறப்புகள் :
• இங்குள்ள கற்சிலைகளை தட்டினால் வெண்கல ஓசை வரும்.
• இந்தக் கோவிலில் பந்தல் மண்டபம், வாகன மண்டபம், ரங்க மண்டபம், நாங்குநேரி ஜீயர் மண்டபம் என ஏராளமான மண்டபங்கள் உள்ளன. பந்தல் மண்டபத்தில் புஷ்பபொய்கை, பலகை மற்றும் வரிகோலம் ஆகியவற்றைக் காண்பிக்கும் கட்டடக்கலை அம்சங்கள் நிறைந்த தூண்கள் உள்ளன.
• இங்கு உற்சவ மூர்த்திகள் ஊஞ்சலில் எழுந்தருள ஏற்றவாறு உஞ்சல் மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
• ஒரே கல்லில் இருந்து வெளிப்படும் வகையில் பீமன், வியாக்ர பாதர் மற்றும் தர்ம ராஜா சிற்பங்கள் மிக நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பம் பீமனுக்கும், வியாக்ரபாதருக்கும் இடையிலான சண்டையைக் குறிக்கும் வகையில் அமையப்பெற்றுள்ளது. இதில் காணப்படும் தர்மராஜா அமைதியான தோற்றத்துடனும், பீமன் சற்றே திமிருடனும் கூடிய வகையிலும் காணப்படுகிறார்கள். மூன்று பேர்களையும் ஒரே தூண்களில் உள்ளடக்கிச் செதுக்கியுள்ள சிற்ப்பியின் திறமை இங்கு வெளிப்படுகிறது.
• இலங்கை ஆட்சியாளர்களுக்குப் பொதுவான மூன்று அடுக்கு கிரீடத்துடன் கூடிய அழகாக அலங்கரிக்கப்பட்ட ராணியின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்தக் கோவில் ராமாயண காலத்திற்கு முன்பே இலங்கையுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
• இங்குக் காணப்படும் வீரபத்திரர் சிற்பத்தில் கால் நரம்புகள் புடைத்துக் கொண்டிருக்கிறது. அவரது முறுக்கு மீசையும் துடிப்பாகத் தெரியும் வண்ணம் இந்தச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இவரது கண்கள் மேலிருந்து கீழே நிற்கும் நம்மை கூர்ந்து பார்ப்பது போல இருக்கும்.
• இந்தக் கோவிலின் நுழைவாயிலில் வலது புறம் தேவலோக பெண்ணான ரம்பையின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. ரம்பையின் சிற்பம் நீண்ட கூர்மையான மூக்கு மற்றும் பெரிய காது வளையங்களுடன் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பத்தின் முன் நின்று ரசிக்கும் ஒருவர் ரம்பையின் அழகை நன்றாகக் கற்பனை செய்து பார்க்க முடியும்.
• இங்குக் காணப்படும் கர்ணன் முறுக்கிய மீசையுடனும், கையில் வில் ஏந்தியபடியும் இருக்கிறார். இந்த சிற்பத்தைப் பார்க்கும் போது ஒருவருக்கு துரியோதனன், கர்ணனுக்கு மகுடம் சூட்டிய நாட்கள் நியாபகத்துக்கு வரும். கர்ணனின் கால்களிலும், கரங்களிலும் காணப்படும் நரம்புகள் கூட புடைத்துக் கொண்டு தெரியும்படி இந்தச் சிற்பம் உயிரோட்டமாகச் செதுக்கப்பட்டுள்ளது.
• கர்ணன் சிற்பத்திற்கு அடுத்தபடியாக ஆழ்ந்த தவத்தில் அமர்ந்திருக்கக் கூடிய அர்ஜுனன் சிற்பம் உள்ளது. தவம் செய்யும் அர்ஜுனன் நீண்ட தாடியுடன் காணப்படுகிறார். இந்த அர்ஜுனன் சிற்பத்தில் அவரது வலது கையில் காணப்படும் வெட்டப்படாத நீண்ட நகங்கள் அவர் பல்லாண்டு காலம் தவம் செய்வதை குறிக்கும் வண்ணம் உள்ளது. அந்த அளவுக்குச் சிற்பிகள் நயமாக யோசித்து நீண்ட நகங்கள் மற்றும் தாடியுடன் கூடிய அர்ஜுனனை செதுக்கியுள்ளார்கள்.
• இங்குக் காணப்படும் மற்றோரு கலையம்சம் பொருந்திய சிற்பம் ஒரே கல்லில் காணப்படும் யானை மற்றும் பசுவின் சிற்பம். இந்தச் சிற்பத்தை இடது பக்கம் நின்று பார்க்கும் போது யானை அதன் தந்தத்தை தூக்கி பார்ப்பது போலவும், வலது பக்கம் நின்று பார்க்கும் போது அதே சிற்பம் ஒரு பசுவைப் போலவும் தெரியும் வகையில் மிக உன்னதமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இது சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
• ஒரு ராஜா தனது எதிரிகளை எதிர்த்துப் போராடும் போது தனது ராணியைத் தோளில் தூக்குகிறார். அவரது ராணியின் எடை காரணமாக ஏற்படும் ராஜாவின் வலது கையில் நீட்டிய தசைகளையும், விரிவடையும் விலா எலும்புகளையும் காட்டும் வகையிலும், ராஜாவின் தோளில் உள்ள ராணியின் சேலையின் ஒரு பகுதியை வீசும் தென்றல் காற்று அவளுடைய தலைக்கு மேலே தூக்கும் வண்ணமும் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இது காண்போரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் அமையப்பெற்றுள்ளது.
• இந்தக் கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில், 1975 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை இடையில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது. அதற்க்கு பின்னர் இந்தக் கோவில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி தேவஸ்தான கட்டுப்பாட்டின் கீழ் மாற்றப்பட்டு நிர்வாகம் செய்து வரப்படுகிறது.
• இக்கோயில் கி.பி 9 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பதை விளக்கும் வகையில் ஒரு கல்வெட்டு உள்ளது. மேலும் இங்கு 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஐந்து செப்புத் தகடுகள் கோயிலுக்கு வழங்கப்பட்ட பல்வேறு மானியங்களைக் குறிக்கின்றன.
• .இத்தலத்திற்கு அருகில் அகத்தீஸ்வரர் திருக்கோயில், காசிநாதசுவாமி திருக்கோயில், தென்னழகர் திருக்கோயில், கிருஷ்ணசுவாமி திருக்கோயில், நீலமணிநாத சுவாமி திருக்கோயில் ஆகிய திருத்தலங்கள் அமைந்துள்ளன.
திருவிழா:
புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழா – 11 நாள் திருவிழா,
வைகுண்ட ஏகாதசி
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோயில்
கிருஷ்ணாபுரம் – 627 759
திருநெல்வேலி மாவட்டம்.
அமைவிடம் :
திருநெல்வேலி மாநகரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றுள்ளது கிருஷ்ணாபுரம் ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோவில். இங்கு செல்லத் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூர், உடன்குடி, ஆத்தூர் மார்க்கமாகச் செல்லும் புறநகர் பேருந்திலும், திருநெல்வேலி சந்திப்புப் பேருந்து நிலையத்தில் இருந்து முத்தாலங்குறிச்சி, செய்துங்கநல்லூர், கருங்குளம், ராமானுஜம்புதூர் செல்லும் நகர பேருந்திலும், பயணித்துச் செல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 17 =