#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தீர்த்தமலை

March 31, 2023 0 Comments

மூலவர் : தீர்த்தகிரீஸ்சுவரர்
அம்மன் : வடிவாம்பிகை
தல விருட்சம் : பவளமல்லிமரம்
தீர்த்தம் : ராமதீர்த்தம், குமாரர்,
அகத்தியர்,கௌரி, அக்னி தீர்த்தம்
புராண பெயர் : தவசாகிரி
ஊர் : தீர்த்தமலை
மாவட்டம் : தர்மபுரி
ஸ்தல வரலாறு :
ராமர் இரண்டு இடங்களில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்திருக்கிறார். ஒன்று ராமேஸ்வரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்து காணப்படும் இந்த தீர்த்தமலை. வனவாசத்தின் போது ராமனோடு வனத்தில் இருந்த சீதையை மாய வேலைகள் செய்து கடத்திச் சென்றான் ராவணன். சீதையை மீட்பதற்காக ராவணனுடன் யுத்தம் செய்தார் ராமபிரான். அந்த யுத்தத்தில் ராவணன் வதம் செய்யப்பட்டான். இதையடுத்து ராமர் அயோத்தி திரும்பினார். வழியில் இந்த தலத்திற்கு வந்தபோது சிவபூஜை செய்ய விரும்பினார். இங்கு சிவலிங்க பிரதிஷ்டை செய்து பூஜைக்குத் தேவையான தீர்த்தத்தை காசியில் இருந்து கொண்டு வரும்படி அனுமனிடம் ராமபிரான் கூறினார். ஆனால் அனுமன் வந்து சேருவதற்கு கால தாமதம் ஆனது. எனவே ராமர் தனது பாணத்தை எடுத்து அங்கிருந்த மலை மீது விட்டார். ராமர் விட்ட பாணம் பாறையில் பட்ட இடத்தில் இருந்து தீர்த்தம் உண்டாகியது. அந்த தீர்த்தத்தைக் கொண்டு ராமர் சிவபூஜையை நடத்தி முடித்தார். ராமரின் பாணத்தால் உருவானது என்பதால் இதற்கு ராம தீர்த்தம் என்று பெயர். இதற்கிடையில் காசியில் இருந்து அனுமனும் தீர்த்தம் கொண்டு வரும் வழியில் இந்தத் தகவலை அறிந்ததும், கலசத்தில் எடுத்து வந்த கங்கை நீர் வீணானதே என்று வருந்தினார். புனித நீர்க் கலசத்தை தனது வாலால் சுழற்றி வீசினார். அது, அருகில் உள்ள ஆற்றில் விழுந்தது. அப்போது அவர் முன் தோன்றிய சிவபெருமான், ஆஞ்சநேயா, வருந்தாதே! உன்னால் வீசியெறியப்பட்ட கலசம் விழுந்த ஆறு, அனுமன் தீர்த்தம் என்றே இனி அழைக்கப்படும். பக்தர்கள் இதில் நீராடிய பிறகே தவசாகிரி வந்து என்னை வணங்குவார்கள். மட்டுமின்றி, ஸ்ரீராமனின் பிரார்த்தனைக்கு இணங்க பாறையெங்கும் தீர்த்தம் கசியும் தவசாகிரி தலம், தீர்த்தமலை என்று பெயர் பெறும் என்று அருளினார்.
தீர்த்தகிரீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. இதனைச் சோழர் காலத்தில் முதலாம் இராஜேந்திர சோழனுடைய அதிகாரிகள் கட்டியுள்ளனர். இவர் காலத்தை சேர்ந்த கல்வெட்டுக் குறிப்புகள் இங்கு காணப்படுகின்றன. இங்கு மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் இராஜேந்திரன் மற்றும் விஜயநகர அரசர்களான வீர புங்கன உடையார், வீர விஜயராச தேவர், மல்லிகாதேவர் ஆகியோருடைய கல்வெட்டுகள் உள்ளன. பிற்காலத் சோழர், விஜயநகர அரசர்கள், நாயக்க கட்டடக்கலைக்கு சான்றாக இங்குள்ள கோயில்கள் உள்ளன.
தீர்த்தமலையிலுள்ள சிகரங்களுக்கு கீழே பிறை வடிவப் பாறைகளிலிருந்து ஊற்றுகள், இம்மலையின் சிறப்பிற்கே காரணமான பஞ்ச தீர்த்தங்களாக அமைந்துள்ளன. இவற்றுள் முதன்மையானது இராமதீர்த்தம். ஏறத்தாழ 30 அடி உயரத்திலிருந்து எக்காலத்திலும் ஒரே சீராக ஒரு நீர்வீழ்ச்சி போல இந்த தீர்த்தம் விழுந்துக்கொண்டே இருக்கிறது. இதன் அருகிலேயே இதே பாறையிலிருந்து கசியும் நீர், சுனைகளாக அகத்தியர் தீர்த்தம், அக்னி தீர்த்தம், குமார தீர்த்தம், கௌரி தீர்த்தமாக அமைந்துள்ளன. கனிம வளமும் மூலிகைகள் சத்தும் நிறைந்த இந்த தீர்த்தங்களில் நீராடி, தீர்த்தகிரீஸ்வரரை தரிசித்தால் தீராத வினைகளிலெல்லாம் தீரும், ஆரோக்கியமும் அமைதியும் பெருகும் என்பது நம்பிக்கை. இம்மலையின் பிற சிகரங்களில் ஓரிரு இடங்கள் தவிர வேறு எங்குமே ஒரு துளி நீர்கூட இல்லை. வடகிழக்குச் சிகரத்தின் கீழ் மகரிஷி வசிஷ்டர் தவம் கூறப்படும் குகை உள்ளது. இப்பாறையின் வெடிப்பிலிருந்து சொட்டுசொட்டாக வசிஷ்டர் தீர்த்தம் வருகிறது.
தீர்த்தமலைச் சிகரங்களின் தோற்றத்தையும் அமைப்பையும் அழகையும் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் துணை ஆட்சியராக இருந்த லேபானு இம்மலைச்சிகரங்களின் மீது ஏறிக் கண்டுகளித்து வருணித்துள்ளார். “வடக்கே இருந்து பார்க்கும்போது தீர்த்தமலையின் கீழ்ப்பகுதியிலிருந்து உச்சி நோக்கி ஒரு நீண்ட, சுவர் போன்ற செங்குத்தான குறுகிய பெரும்பாறை செல்கிறது. இந்தப் பாறை ஒரு காட்டுப்பன்றியின் பிடரியைப் போல முதுகிலிருந்து ஆரம்பித்து தலை வரை நீண்ட முகடு போலச் செல்கிறது. விலங்கின் முதுகெலும்பை போல அமைந்துள்ள இப்பாறை நெடிதுயர்ந்து செங்குத்தாக நிற்கிறது. இதன் முகடு மிகக் குறுகலாக 2-3 அடி அகலமே உள்ளது. மலை ஏறுவதிலே வல்லவர்கள் கூட இச்செங்குத்துப் பாறையில் ஏறி உச்சிக்குச் செல்லத் துணியமாட்டார்கள்’ என்று வருணிக்கிறார்.
இந்த மலையின் மூன்றாவது சிகரத்தின் அருகே அமைந்துள்ளது சீலநாய்க்கன்கோட்டை. சிகரத்தின் அடி விளிம்பை ஒட்டி நீண்டு வளைந்து செல்லும் கோட்டை மதில் உள்ளது. இது பெரிய கருங்கற்களை அடுக்கி அமைக்கப்பட்டுள்ளது. மேலே செங்கற்களால் கட்டப்பட்டுள்ள அழகிய மண்டபமும் படைவீடுகளும் இரண்டு பெரிய குளங்களும் மற்றும் குதிரை லாயங்களும் உள்ளன. இன்று இந்த கோட்டை மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளது.
லேபானு இந்தக் கோட்டையைப் பற்றி விவரிக்கும்போது, இக்கோட்டையில் பெரிய உருண்டைக் கற்களால் செய்யப்பட பீரங்கிக்குண்டுகள் பலப்பலவாகக் காணப்படுகின்றன. இதைப் பார்த்தால் இந்த மலைக்கு வரும் எதிரிகளுக்கு எவ்வளவு பயங்கரமான வரவேற்பை சீலநாய்க்கன் தந்திருப்பான் என்பது தெரிகிறது என்று ஆச்சிரியப்படுகிறார்.
இந்த கோட்டையைக் கடந்து மேலும் செங்குத்தான பாறைகளில் ஏறிச் சென்றால் கன்னிமார் பாறையை கடந்து இம்மலையின் மிக உயர்ந்த சிகரத்தை அடையமுடியும். இச்சிகரத்தின் மேல் சுமார் இரண்டு அடி உயரமுள்ள, இரும்பு கொண்டு செதுக்கப்பட்ட ஒரு விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அருகே ஒரு இரும்பு கொப்பரையும் உள்ளது. இதனை உச்சி பிள்ளையார் சிகரம் என்கிறார்கள் இப்பகுதியினர். கார்த்திகை மாதம் தீபத்திருநாள் அன்று இங்குள்ள இரும்பு கொப்பரையில் தீபமேற்றி வழிபடுவதும் வழக்கம்.
கோயில் சிறப்புகள்:
• இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்
• அடிவாரத்தில் ஒன்றும், மலைக்கு மேல் ஒன்றுமாக இரண்டு கோயில்கள் உள்ளன.
• தீர்த்தமலையின் உச்சியில் சக்தி வாய்ந்த தெய்வமாகவும், தெற்கில் சிவபெருமான் வாழும் இடமாகவும் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் கோவில். இந்த கோவில் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய மற்றும் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. பல கல்வெட்டுக்கள் இங்கு காணப்படுகின்றன.
• இங்கு உள்ள கோயில் வளாகத்தில் ஒரு குன்று அமைந்துள்ளது. இந்த குன்றிலிருந்து 50 அடி உயரத்தில் கால் அங்குள அளவிற்கு ஒரு குழாயின் வழியே நீர் ஊற்றிக் கொண்டே இருக்கும். இதனுடைய சிறப்பு என்னவென்றால் கோடை மற்றும் மழை காலங்களில் குழாயின் வழியாக ஊற்றும் நீரின் அளவு மாறாமல் இருக்கும்.
• குமார தீர்த்தம் முருகனை தேவ சேனாதிபதியாக நியமித்த போது இத்தீர்த்தத்தால் முருகனுக்கு அபிஷேகம் செய்தனர். முருகனுக்காக வழங்கப்பட்ட இத்தீர்த்தத்தை தெளித்துக் கொள்வதாலும் பருகுவதாலும் உயர்ந்த வாழ்வும் ஞானமும் பெருகும் என்று புராணம் கூறுகிறது.
• அகத்திய தீர்த்தம் அகத்திய மாமுனிவரின் குன்ம நோய் நீங்க இறைவனால் அருளப்பெற்றது. இத்தீர்த்தம் தாமிர சத்தும் மூலிகைகளின் சக்தியும் கொண்ட இத்தீர்த்தத்தை தெளித்துக் கொள்வதாலும் பருகுவதாலும் உணவு சமைக்கவும் பயன்படுத்தி வந்தால் குன்ம நோய் (அல்சர்) நீங்கி வயிற்று வலியும் குணமடையும் என்று புராணம் கூறுகிறது.
• ராம தீர்த்தம் மரம் செடி கொடி இலைகளில் இருந்தும் பாறைகளில் இருந்தும் இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட அரிய தீர்த்தம் இது. ராமரால் உருவாக்கப்பெற்ற இந்த தீர்த்தத்தில் ஸ்ரீ ராம ஜெயம் என்று தெளித்துக் கொள்வதாலும் பருகுவதாலும் சகல பாவங்களும் நீங்கும் என்று புராணம் கூறுகிறது.
• அனுமன் தீர்த்தம் அனுமான் ஒரு கிண்ணம் கங்கை நீரை இந்த பகுதியில் தெளித்ததாக புராணம் தெரிவிக்கிறது. மேலும் இந்த பகுதியில் இருக்கும் ஒரு பாறையில் இருந்து ஒரு நீரூற்று வருகிறது. இதன் தண்ணீர் மிக இனிப்பாக இருக்கும். இந்த நீரூற்றின் சிறப்பு என்னவென்றால் பென்னாற்றில் நீர் வற்றினாலும் இந்த நீரூற்று மட்டும் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும். அனுமந்த தீர்த்தத்தில் குளித்து விட்டு இங்குள்ள ராம தீர்த்தத்தில் குளித்தால் பாவங்கள் நீங்கும் என்று புராணம் கூறுகிறது.
• கௌரி தீர்த்தம் இது அன்னை வடிவாம்பிகைக்காக வழங்கப்பெற்றது. இத்தீர்த்தத்தை கொண்டு இறைவனை வழிபாடு செய்ததால் வடிவாம்பிகை இறைவனை மணந்து இறைவனின் இடப்பாகத்தில் இடம் பெற்றாள் என புராணம் கூறுகிறது. இத்தீர்த்தத்தை தெளித்துக் கொண்டும் பருகியும் இறைவனையும் இறைவியையும் வணங்கினால் சகல தோசங்களும் நீங்கும். இல்லறம் நல்லறமாக இருக்கும் என்று புராணம் கூறுகிறது.
• அக்னி தீர்த்தம் அக்னி தேவனின் பெண்ணாசையால் ஏற்பட்ட பாவங்களைப் போக்கிய தீர்த்தம் இது. இதனால் உடலின் தட்பவெப்பம் சமமாகும். ஆஸ்துமா சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்று புராணம் கூறுகிறது.
• தீர்த்தகிரீஸ்வரர் கோயிலில் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன என்றாலும் இவற்றில் பழமையான கல்வெட்டு மேலைக் கங்க மன்னனான மல்லிதேவ மகாராசர் என்ற மன்னன் இந்த இறைவனுக்கு ஆலம்பாடி என்ற சிற்றூரை தானமாக அளித்தார் என்று கி.பி ஆறாம் நூற்றாண்டு கல்வெட்டே பழமையானதாக உள்ளதால் இக்கோயில் ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டக் கோயிலாகும்.
• தீர்த்தகிரீஸ்வரர் கோயில் ஏழாம் நூற்றாண்டில் சோழர் மற்றும் பாண்டியர்களால் கட்டப்பட்டது. இதற்கான பல கல்வெட்டுக்கள் இங்கு காணப்படுகின்றன.
• ராஜேந்திரச் சோழன் தினந்தோறும் இந்த கோயிலுக்கு வந்து அவர் கையாலே சிவபூஜை செய்வார் என்று கல்வெட்டுகளின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
• தீர்த்தகிரிப் புராணம் கி.பி 16 ஆம் நூற்றாண்டில் சைவ எல்லப்ப நாவலர் என்பவரால் எழுதப்பட்டது. இந்நூல் சிறப்புப் பாயிரம் சாற்றுக்கவி பாயிரம் நீங்களாக நானூற்று முப்பத்திரண்டு பாடல்களைக் கொண்டுள்ளது. அவை 14 சருக்கங்களாக அமைக்கப்பட்டுள்ளன. என்னும் சருக்கங்கள் நீங்கலாக மற்ற 9 சருக்கங்கள் தீர்த்தங்களின் பெயரைக் கொண்டுள்ளன.
• கோயிலில் உள்ள முருகப்பெருமான் மீது அருணகிரிநாதர் நான்கு பாடல்கள் பாடியுள்ளார்.
திருவிழா:
மாசி மாதம் – பிரம்மோற்சவம் – 10 நாட்கள் தேரோட்டம், திருக்கல்யாணம், சத்தாபரண உற்சவம் (சயன உற்சவம்)
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில்,
தீர்த்தமலை- 636906,
தர்மபுரி மாவட்டம்.
போன்:
+91-4346 -253599
அமைவிடம் :
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே அமைந்துள்ளது தீர்த்தமலை. தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் இத்தலம் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + five =