#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள்

March 31, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள்
61.#அருள்மிகு_ஆதிகேசவ_பெருமாள்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : ஆதிகேசவ பெருமாள்
தாயார் : மரகதவல்லி நாச்சியார்.
தீர்த்தம் : கடல் வாய் தீர்த்தம், வாட்டாறு, ராம தீர்த்தம்
ஊர் : திருவட்டாறு
மாவட்டம் : கன்னியாகுமரி
ஸ்தல வரலாறு :
கேசன் கொடூர அரக்கன். பிரம்மனை நோக்கி வழிபட்டு, பல வரங்களையும் பெற்று அதன்மூலம் பலம்பெற்றவன். ஆனால் அந்த பலத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தாமல் தேவர்கள், முனிவர்களையும் துன்புறுத்தினான். பாதிக்கப்பட்ட இவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். திருமால் கேசனை அழித்து, கேசியின் மேல் சயனம் கொண்டார்.
கேசியின் மனைவி பெருமாளை பழிவாங்கும் நோக்கத்துடன், கங்கையையும், தாமிரபரணியையும் துணைக்கு அழைக்க, கங்கை இருகிளைகளாகப் பிரிந்து ஆதிகேசவனை அழிக்கவந்தன. இதைப்பார்த்த பூதேவி பரமன் இருந்த தலத்தை உயரும்படி அருளிச் செய்தார். இதனால் இருநதிகளாலும் பரமனை ஒன்றும் செய்ய இயலவில்லை. அந்த கேசியால் கொண்டுவரப்பட்ட இருபிரிவு நதிகளே இன்றும் குமரியில் ஓடிக்கொண்டிருக்கும் கோதையாறாகவும், பறளியாறாகவும் ஆகியது என்பது ஐதீகம்.
இதை வெறுமனே புராணக்கதை எனக் கடந்து போய்விட முடியாது. இன்றும் திருவட்டாறில் இந்த ஆலயம் மட்டும் தரைமட்டத்தில் இருந்து 16 அடி உயரத்தில் இருக்கிறது. இத்தனைக்கும் இங்கு பாறைகள் இல்லை. இதன் கட்டுமானப் பணிகளின்போதே கல்லையும், மண்ணையும் கொண்டுவந்து குவித்திருக்கவேண்டிய தேவையும் இல்லை. இப்போதும் திருவட்டாறைச் சுற்றி ஆறாகத்தான் ஓடுகிறது. அந்த ஊருக்குள் ஒரு சுற்று, சுற்றி வந்தாலே இதைப் பார்க்கமுடியும். இந்த இடத்தில்தான் கேசியின் வேண்டுதலால் தண்ணீர் வந்ததையும், மகா விஷ்ணு இருக்கும் இடம் உயர்ந்ததையும் நாம் அறியலாம்.
திருமால் இருந்த இடத்தை சுற்றி வணங்கி இரண்டு மாலைகள் போல் வட்ட வடிவில் ஓட ஆரம்பித்தனர். இதனால் இத்தலம் “வட்டாறு’ என அழைக்கப்பட்டது. இரு நதிகளும் பெருமாளுக்கு மாலை சூட்டியது போல் இருப்பதைக்கண்ட நம்மாழ்வார், “மாலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான்’, என பாடுகிறார். கேசனை அழித்ததால் இத்தல பெருமாள் கேசவப் பெருமாள் எனப்படுகிறார். கேசியின் மீது சயனித்த போது, அவன் தன் 12 கைகளால் தப்புவதற்கு முயற்சி செய்தான். பெருமாள் அவனது 12 கைகளிலும் 12 ருத்ராட்சங்களை வைத்து தப்பிக்க விடாமல் செய்தார். இவையே திருவட்டாரை சுற்றி சிவாலயங்களாக அமைந்தன. மகாசிவராத்திரியின் போது பக்தர்கள் 12 சிவாலயங்களையும், ஓடியவாறு தரிசித்து, கடைசியில் ஆதிகேசவப் பெருமாளையும், அவர் பாதத்தின் கீழ் உள்ள சிவனையும் தரிசிப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது.
கோயில் சிறப்புகள் :
• இங்குள்ள பெருமாளின் திருமேனி கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால், 16008 சாளக்கிராம கற்களை (நாராயணனின் வடிவமான கல் வகை) இணைத்து உருவானது.
• மலைநாட்டுத் திருப்பதியில் வரும் 13 கோயில்களில் இருப்பது திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில். திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் மலைநாட்டுக் கோயில்களைப் பற்றி பாடியிருக்கிறார்கள். அதில் நம்மாழ்வார் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாளைக் குறித்து 11 பாடல்கள் பாடியிருக்கிறார்.
• மகாவிஷ்ணுவின் தசாவதாரங்கள் நமக்குத் தெரியும். அவைகள் மட்டுமே இல்லாமல் கூடுதலாக சில வடிவங்கள் எடுத்தார் மகா விஷ்ணு. குமரி மாவட்டத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டால் பறக்கை கிராமத்தில் நின்ற கோலத்திலும், திருப்பதி சாரத்தில் அமர்ந்த கோலத்திலும், திருவட்டாரில் சயனநிலையிலும் விஷ்ணு அருள்பாளிக்கிறார். பறக்கையில் மதுவாகிய அரக்கனை வென்றதால் மதுசூதனப் பெருமாள் என அருள்பாலிக்கிறார். அதேபோல்தான் திருவட்டாறில் கேசன் என்னும் அரக்கனையும், அவரது சகோதரியான கேசி என்னும் அரக்கியையும் வீழ்த்தினார். அதனால் தான் ஆதிகேசவப்பெருமாள் எனப் பெயர் வந்தது.
• திருச்சி ஸ்ரீரங்கம், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில்களுக்கு முந்தைய கோயில் திருவட்டாறு
• சுயம்புவாக தோன்றிய பெருமாளை பரசுராமர் பிரதிஸ்டை செய்துவிட்டு தனது அவதாரத்தை நிறைவு செய்ததாக ஐதீகம்.
• திருவட்டாறு கோயிலுக்கு பிறகுதான் திரேதாயுகத்தில் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயில் அமைந்தது. கலியுகம் தொடங்கி 950-ம் ஆண்டு திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் அமைக்கப்பட்டது.
• இவர் திருவனந்தபுரம் அனந்தபத்மநாபரை பார்த்த நிலையில் மேற்கு நோக்கி அருளுகிறார். மேற்கு பார்த்த பெருமாளை தரிசிப்பது மிகவும் சிறப்பு. இடது கையை தொங்கவிட்டு, வலது கையில் முத்திரை காட்டி, தெற்கே தலைவைத்தும், வடக்கே திருவடி காண்பித்தும் சயனத்தில் உள்ளார்.
• ஆதிகேசவப் பெருமாள் மூலவராக புஜங்க சயனத்தில் மேற்கே பார்த்து வீற்றிருக்கிறார். இடது கையை தொங்கவிட்டு வலது கையில் முத்திரை காட்டி தெற்கே தலை வைத்தும் வடக்கே திருவடி காண்பித்தும் சயனத்தில் உள்ளார்.
• பெருமாள் 22 அடி நீளம் கொண்டு காட்சி அளிப்பதால் ஒரு வாசல் வழியாக முழுமையாக தரிசிக்க முடியாது என்பதால் அவரை தரிசிக்க திருத்தலை திருக்கரம் திருப்பாதம் என மூன்று வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருமுக நிலைவாயிலில் அறிதுயிலில் ஆழந்துள்ள முகத்தையும் நீட்டிய இடக்கையையும் ஆதிசேடனையும் கருடாழ்வாரையும் காணலாம். திருக்கர வாயிலில் சின்முத்திரை காட்டும் வலக்கரத்தையும் சங்கு சக்கரம் உள்ளிட்ட ஐம்படையினையும் காணலாம். திருப்பாத வாயிலில் திருப்பாதங்களையும் இருவர் பயந்து ஒளிந்திருக்கும் சிலைகளையும் காணலாம். திருமுகம் திருக்கரம் திருப்பாதம் இவற்றை இதே வரிசைக்கிரமத்தில் தரிசிப்பது இக்கோவிலின் மரபு ஆகும்.
• ஆண்டுதோறும் பங்குனி 3 முதல் 9 வரையிலும், புரட்டாசி 3 முதல் 9 வரையிலும் சூரியனின் அஸ்தமன கதிர்கள் மூலவரின் மீது பட்டு தரிசிப்பதைக் காணலாம்.
• ஒரு யுகம் முடியும் போது திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் புரண்டு படுப்பார் என்று கூறப்படுகிறது!
• போகர் சித்தர் நவ பாஷாண முறையில் பழனி முருகன் சிலையை வடித்ததுபோல் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாளின் நெடிதுயர்ந்த சிலையும் கடு சர்க்கரை யோகம் என்ற முறையில் வடிக்கப்பட்டுள்ளது.
திருவிழா:
ஓணம், ஐப்பசி பிரமோற்ஸவம், புரட்டாசி சனி, வைகுண்ட ஏகாதசி.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில்,
திருவட்டாறு-629 177.
கன்னியாகுமரி மாவட்டம்
போன்:
+91- 94425 77047
அமைவிடம்:
கன்னியாகுமரியில் இருந்து சுமார் 48 கிலோமீட்டர் தொலைவிலும், மார்த்தாண்டத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில். திருவட்டாறு பஸ்நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + six =