#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் :
மூலவர் : திருவிக்கிரமர் (உலகளந்த பெருமாள்)
உற்சவர் : ஆயனார், கோவலன்
தாயார் : பூங்கோவல் நாச்சியார்
தல விருட்சம் : புன்னைமரம்
தீர்த்தம் : பெண்ணையாறு, கிருஷ்ண தீர்த்தம்,ஸ்ரீசக்ரதீர்த்தம்
புராண பெயர் : திருக்கோவலூர்
ஊர் : திருக்கோவிலூர்
மாவட்டம் : விழுப்புரம்
கோவில் உருவான வரலாறு :
அசுர குலத்தில் பிறந்திருந்தாலும், நாடு போற்றும் நல்லாட்சியை புரிந்த மகாபலி சக்ரவர்த்தி தனது முன்பிறவியில் எலியாக இருந்தான். அப்போது சிவன் கோவில் ஒன்றில் அணையும் நிலையில் இருந்த ஒரு விளக்கை அங்கு வந்த ஒரு எலியின் மூக்கு நுனியால் விளக்கு திரி தூண்டப்பட்டு, விளக்கு பிரகாசமாக எரிய தொடங்கியது. தன்னையும் அறியாமல் நற்காரியம் செய்த அந்த எலியை, மறு பிறவியில் நாடு போற்றும் சக்ரவர்த்தியாக பிறக்க அருள்புரிந்தார் சிவபெருமான்.
அவனே மகாபலி சக்ரவர்த்தியாக அடுத்த பிறவியில் பிறந்தான். அவன் தன் நாட்டு மக்களுக்கு செய்த நற்காரியங்கள், அவனை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றது. இந்த நிலையில் நாட்டின் நலனுக்காக வேள்வி ஒன்றை நடத்த முன்வந்தான் மகாபலி. இதை அறிந்த தேவர்கள் பல நற்காரியங்கள் செய்திருக்கும் நிலையில், இந்த வேள்வியையும் மகாபலி செய்து முடித்து விட்டால், அசுரகுலத்தைச் சேர்ந்த அவன் இந்திரப்பதவியை அடைந்துவிடக்கூடும் என்று எண்ணினர்.
அதனைத் தடுத்தருளும்படி மகா விஷ்ணுவிடம் போய் நின்றனர். அவனால் தேவர்களான எங்களுக்கு பெரும் ஆபத்து வரலாம். எனவே அவனது வேள்வியை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று வேண்டினர். இந்த தேவர்களுக்குத்தான் எத்தனை பொறாமை. அவனால் இவர்களுக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்று என்னிடமே வந்து உதவிக்கு நிற்கிறார்களே என்று எண்ணிக் கொண்டார் மகாவிஷ்ணு.
இருப்பினும் தேவர்களை காப்பது தனது கடமை என்பதால் அவர்களுக்கு உதவ முன்வந்தார். அதே சமயம் மகாபலியின் சிறப்பையும் உலகம் அறிய செய்ய அவர் சித்தம் கொண்டார். அதற்காக வாமன அவதாரம் (குள்ளமான) எடுத்தார் மகாவிஷ்ணு. மூன்று அடி உயரமே கொண்ட அவர், மகாபலி நடத்தும் வேள்வி சாலைக்குச் சென்றார். அவரை வரவேற்ற மகாபலி, தானம் வழங்க முற்பட்டான்.
ஆனால் வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை அறிந்த அசுர குல குரு சுக்ராச்சாரியார் மகாபலியிடம், “வந்திருக்கும் அந்தணரின் மேல் எனக்கு சந்தேகமாக உள்ளது. அவர் திருமாலின் அவதாரமாக இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. எனவே தானம் கொடுப்பதில் அவசரம் வேண்டாம்” என்று அறிவுறுத்தினார்.
மகிழ்ச்சியில் திளைத்தான் மகாபலி. “குருவே! என்னிடம் தானம் பெற வந்திருப்பது திருமாலின் அவதாரம் என்றால், இதைவிட பெரிய பேறு என்ன எனக்கு இருக்க போகிறது?” என்று கூறியதுடன் நில்லாமல், கமண்டலத்தை எடுத்து நீரை வார்த்து தானத்தை கொடுக்க முன்வந்தான்.
இனி அவனைத் தடுக்க முடியாது என்பதை அறிந்த சுக்ராச்சாரியார், தும்பியின் (வண்டு) உருவம் கொண்டு கமண்டலத்திற்குள் புகுந்து நீர் வரும் வழியை அடைத்துக்கொண்டார். இதை பார்த்த வாமனர், தர்ப்பைப் புல் ஒன்றை எடுத்து நீரை அடைத்திருந்த வண்டை நோக்கி குத்தினார். இதில் சுக்ராச்சாரியாரின் கண் பார்வை பறி போனது.
மகாபலி சக்ரவர்த்தி நீர் வார்த்து தானத்தை கொடுத்தான். பின்னர் தங்களுக்கு உரிய நிலத்தை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று வாமனரை நோக்கி கூறினான். இதற்காகவே காத்திருந்த வாமனர், குள்ள உருவில் இருந்து வானுயரத்திற்கு உயர்ந்தார். இதை பார்த்து ஆச்சரியத்தில் மலைத்துப் போய் நின்றான் மகாபலி சக்ரவர்த்தி.
உயர்ந்து நின்ற வாமனர் “முதல் அடியை கொண்டு மண்ணுலகையும், இரண்டாம் அடியாக விண்ணுலகையும் அளந்து முடித்தார்”. பின்னர் மகாபலியிடம், “சக்ரவர்த்தியே! நான் இரு உலகங்களையும் இரண்டு அடியில் அளந்து விட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது” என்று கேட்டார். ‘இறைவா! மூன்றாவது அடியை என் தலை மீது வையுங்கள்’ என்று நிலத்தில் மண்டியிட்டு அமர்ந்து சிரம் தாழ்த்தி இருந்தான்.
மகாவிஷ்ணுவும் தனது மூன்றாவது அடியை மகாபலியின் தலைமீது வைத்து அவனை பாதாள உலகத்திற்கு தள்ளினார், தொடர்ந்து ‘மகாபலியே! உன் நல்லாட்சியால் உன் நாட்டை வளம் பெறச் செய்தாய். அதனால் நீ பெற்ற பலன்கள் அனைத்தும் உனக்கு உயர்வைத் தந்தது. இப்போது நீ எனக்கு வழங்கிய தானத்தினால், இந்த உலகமே போற்றும் அளவுக்கு சிறப்புற்று இருப்பாய்’ என்று அருளினார்.
அவ்வரலாற்றின்படி மாலவன் கால் தூக்கி நிற்கும் காட்சியே இக்கோவில் கருவறையில் மூலவராக வடிக்கப்பெற்றிருக்கிறது.
திருக்கோவிலூரில் கோவில் கொண்டுள்ள உலகளந்த பெருமாள் கோவில் (திரிவிக்ரம பெருமாள்) ஶ்ரீசக்கர விமானத்தின் கீழ் அடியார்களுக்கு சேவை சாதிக்கிறார். 108 வைணவ திவ்ய தேசங்களில் தொண்டை நாட்டைச் சேர்ந்த 43வது திவ்ய தேசமாகும். இத்தலத்தை நடுநாட்டு திருப்பதி என்று கூறுகின்றனர்.
மூலவரின் திருமேனி தாருவால் (மரம்) ஆனது. இவ்வளவு பெரிய பெருமாள் திருமேனியை வேறு எந்த ஊரிலும் காணமுடியாது. சாளகிரமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் உள்ளார்.
ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இத்திருக்கோவில் தமிழகத்தில் மூன்றாவது பெரிய ராஜகோபுரத்தை தன்னகத்தே கொண்டுள்ள ராஜகோபுரம் 192 அடி உயரத்துடன் பதினோரு நிலைகளைக் கொண்டு விளங்குகிறது. (முதல் பெரிய ராஜகோபுரம் ஸ்ரீரங்கம் – 236 அடி, இரண்டாம் பெரிய ராஜகோபுரம் ஸ்ரீவில்லிபுத்தூர் – 196 அடி).
இக்கோவிலின் திரிவிக்ரமப் பெருமாளின் நெடிய திருவுருவம் ஒரு காலினைத் தரையில் ஊன்றி நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி மேலே தூக்கிய திருக்கோலத்துடன் சேவை சாதிக்கிறார்.
பெருமாள் சன்னதிக்கு நேர் எதிரில் கருடன் தூண் ஒன்று உள்ளது. 40 அடி உயரமுள்ள இந்தத் தூண் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. அதன் மேல் பகுதியில் உள்ள சிறிய கோவில் காண்போரை வியப்பில் ஆழ்த்தும். இந்த தூணின் மேல் பகுதியில் கருடன் நின்று பெருமாளை வணங்குவதாக ஐதீகம்.
கோபுர நுழைவாயில்கள் கோவிலை ஒட்டி இல்லாமல், கோவிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக அமைந்துள்ளன.
இந்த தலத்தில் விஷ்ணு துர்க்கையும் சுயம்புவாக அருள் பாலிக்கிறாள்.
பொதுவாக அனைத்து சிவாலயங்களிலும் சுற்றுப் பிராகாரத்தில் விஷ்ணு துர்க்கையின் சந்நிதியைக் காணலாம். ஆனால் பெருமாள் கோவில் கொண்டுள்ள இத்திருத்தலத்தில் பெருமாளின் அருகிலேயே அமர்ந்து விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கிறாள். இவர்கள் இருவரையும் ஒரே இடத்திலிருந்து தரிசனம் செய்து அருள்பெறும் வாய்ப்பு வேறு எந்த வைணவ திவ்யதேச திருத்தலத்திலும் நமக்கு கிடைக்காது.
பொதுவாக பெருமாளை மட்டுமே மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார், இத்தலத்தில் விஷ்ணு துர்க்கையையும் (மாயை) சேர்த்து “விந்தம் மேவிய கற்புடை மடக்கன்னி காவல் பூண்டகடி பொழில்” என்று புகழ்ந்து மங்களா சாசனம் செய்திருக்கிறார்.
இங்குள்ள திரிவிக்ரம பெருமாள் மகாபலியைத் தன்னுடன் இணைத்துக்கொண்ட மகிழ்ச்சியில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் வலக்கையில் சங்கினையும், இடக்கையில் சக்கரத்தினையும் ஏந்தி சேவை சாதிக்கறார். இப்படி சேவை சாதிப்பது பக்தர்களுக்கு ஞானத்தை அருள்வதாக ஐதீகம்.
திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம் ஆகிய பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இது முதலாவது தலம்
கோவில் நுழைவு வாயிலின் வலதுபக்கம் சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
மணவாள மாமுனிகளும் இத்தல பெருமாளை பாடியுள்ளார். பரசுராமர் இங்கு தவம் செய்ததாக புராணங்களும், அகத்தியர் தவம் செய்ததாக தமிழ் இலக்கியங்களும் கூறுகின்றன.
புராண காலத்து கிருஷ்ணபத்ரா நதியே தற்போது “தென்பெண்ணை” என்ற பெயரில் ஓடுகிறது. “வெண்ணெய் உருகும் முன்பே பெண்ணை உருகும்” என்ற பழமொழி உண்டு.
பெருமாளை புகழ்ந்து பாடிய முதலாழ்வார்களான பொய் கையாழ்வார்,பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் இத்தலத்து பெருமாளைத்தான் முதன் முதலாகப் பாடினர்.
மூன்று ஆழ்வார்களும் இத்தலத்தில் தான் முக்தி பெற்றனர்.
இத்திருக்கோவிலில் பங்குனி மாதம் – பிரம்மோற்ஸவம் பதினைந்து நாட்கள் விமர்சையாக நடைபெறும். பஞ்சபர்வ உற்சவமும் ஸ்ரீபுஷ்பவல்லித் தாயார் வெள்ளிக் கிழமை ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுவது இத்தலத்தின் மிக சிறப்பான விழா ஆகும். இத்திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்குவந்து பெருமாளை தரிசித்து வழிபடுவர். மாசி மாதம் – மாசி மக உற்சவம் – இவ்விழாவின் போது பெருமாள் கடலூருக்கு தோளிலேயே செல்வார் என்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு திருவிக்கிரமசுவாமி (உலகளந்த பெருமாள்) திருக்கோயில்,
திருக்கோவிலூர் – 605757,
விழுப்புரம் மாவட்டம்.
போன்:
+91- 94862 79990