#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மன்னார்கோயில்

March 17, 2023 0 Comments

மூலவர் : வேதநாராயணப்பெருமாள்
உற்சவர் : ஸ்ரீ ராஜகோபாலர்
தாயார் : ஸ்ரீ தேவி, பூதேவி
தல விருட்சம் : பலா
தீர்த்தம் : பிருகுதீர்த்தம்
புராண பெயர் : வேதபுரி
ஊர் : மன்னார்கோயில்
மாவட்டம் : திருநெல்வேலி
ஸ்தல வரலாறு :
தற்போது கோயில் அமைந்திருக்கும் பகுதியானது முன்பு பலா மரங்கள் நிறைந்திருந்த அடர் வனமாக இருந்தது. பெருமாளின் அடியார்களான பிருகு முனிவர் மற்றும் மார்க்கண்டேய முனிவர் ஆகியோர் அவரின் திருப்பாதம் பணிந்து பல இடங்களிலும் அவரைத்தரிசனம் செய்து வந்தனர். அவ்வாறு வந்த அவர்கள் இவ்வனப்பகுதிக்கு வந்து சுவாமியை நோக்கி தவம் புரிந்து தமக்கு அருட்காட்சி தந்து அருள்புரியும்படி வேண்டினர். அவர்களின் தவவலிமையைக் கண்டு மகிழ்ந்த பெருமாள் அவர்களுக்கு இவ்விடத்தில் பிரசன்னமாகத் தோன்றி அருட்காட்சி தந்து அருள்புரிந்தார். இதனால், அகம் மகிழ்ந்த பிருகு மற்றும் மார்க்கண்டேய முனிவர்கள் தமது குரலுக்கு செவிசாய்த்து அருள்புரிந்தது போலவே இவ்விடத்தில் வீற்றிருந்து தன்னை நோக்கி வரும் பக்தர்களுக்கும் காட்சி தந்து அவர்களின் இல்வாழ்வு சிறக்கும்படியாக அருள்புரிய வேண்டும் என வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற பெருமாள் இவ்விடத்தில் வேதங்கள் அருளும் வேதநாராயணனாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். பிற்காலத்தில், இப்பகுதியை ஆட்சி செய்த சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பல்வேறு காலகட்டங்களில் இக்கோயிலை எடுத்துக்காட்டி சீரமைத்துள்ளனர்.
9-ம் நூற்றாண்டில் தென்பகுதியை ஆண்ட சேர பேரரசன் குலசேகரன். இந்த மாமன்னன் அரச பதவி வேண்டாம், பெருமாளின் திருவடியைத் தொழும் பாக்கியமே வேண்டும் என்று இறைப்பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரானார்.
நெடியானே வேங்கடவா நின்கோயிலின் வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய்க் காண்பேனே…
திருப்பதியில் படியாகக் கிடந்தாயினும் உன்னைச் சேவிப்பேன் என்று பாடிப் பரவியவர் குலசேகர ஆழ்வார். இவர், தம்முடைய இறுதிக் காலத்தில் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு முக்தியடைந்தாராம். அவருடைய திருவரசு (ஜீவசமாதி) இத்திருக்கோயிலின் உள்ளே ஸ்ரீகுலசேகரஆழ்வார் சந்நிதியாக விளங்குகிறது. குலசேகர ஆழ்வார் வழிபட்ட ஸ்ரீராமன், சீதா, லட்சுமணன் ஆகியோர் அர்த்த மண்டபத்தில் அருள்கின்றனர்.
கோயில் சிறப்புகள் :
• தாமிரபரணி நதி பாயும் நெல்லைச் சீமையில், மன்னார்கோவில் எனும் ஊரில் அற்புதமாகக் கோயில்கொண்டிருக்கிறார் ஸ்ரீவேதநாராயண பெருமாள். இந்தத் திருவிடம், முன்னொரு காலத்தில் வேதபுரி என்றும், ராஜேந்திர விண்ணகரம் என்றும் அழைக்கப்பட்டதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.
• காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவே திருவரங்கம் திருத்தலம் இருப்பது போல், தாமிரபரணிக்கும் கடனா நதிக்கும் நடுவே அமைந்துள்ளது இந்தக் கோயில்
• இத்தலத்தில் அருள்பாலிக்கும் பெருமாள் தெற்கே தாமிரபரணி, வடக்கே கடனாநதி ஓட, அதன் நடுவிலே சுற்றிலும் வேதங்கள் ஒலித்திட, மூலிகைகள் அடங்கிய சுதையால் செய்யப்பட்டவராக வீற்றிருக்கிறார்.
• இங்குள்ள கருவறையில் பெருமாள் நின்ற கோலம், அவருக்கு மேல், அஷ்டாங்க விமானத்தின் முதல் அடுக்கில் வீற்றிருந்த கோலம், அதற்கு மேல் உள்ள அடுக்கில் சயனகோலம் என கருவறையிலும், அதற்கு மேலேயும் மூன்று கோலத்திலும் காட்சி தருவது பிற வைணவ ஆலயங்களில் இல்லாத சிறப்பாக உள்ளது.
• இந்த திருக்கோயிலில் காண்பதற்கு அரிய அஷ்டாங்க விமானத்தின் கீழ் ஸ்ரீமன் வேத நாராயணன் நின்ற இருந்த, சயன திருக்கோலங்களில் காட்சியளிக்கிறார்.
• குலசேகர மன்னன் திருப்பணிகள் பல செய்து வந்ததால், அவரையும் இத்தலத்தின் ஸ்ரீராஜகோபாலனையும் தொடர்புப்படுத்தி, மன்னனார் கோயில் என்று அழைக்கப்பட்டதாம் இவ்வூர். தற்போது அப்பெயர் மருவி மன்னார்கோயில் என்று வழங்கப்படுகிறது.
• சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட பிரமாண்ட ஆலயம்; பிருகு முனிவரும் மார்க்கண்டேய மகரிஷியும் தவமிருந்து திருமாலை வழிபட்டு, அருள் பெற்ற திருத்தலம்.
• மூலவரான ஸ்ரீதேவி- பூதேவி சமேத வேதநாராயண பெருமாள், மூலிகைகளால் செய்யப்பட்ட வர்ணக் கலாப திவ்விய திருமேனியராக, சுதை வடிவில் தரிசனம் தருகிறார். தனிக்கோயிலில் ஸ்ரீவேதவல்லித் தாயாரும், ஸ்ரீபுவனவல்லித் தாயாரும் காட்சி தருகின்றனர். இங்கே, பிருகு மற்றும் மார்க்கண்டேய முனிவர்களுக்குச் சந்நிதிகள் உள்ளன.
• குலசேகர ஆழ்வார், தலங்கள் பலவற்றுக்கும் சென்று இறைவனைத் தரிசித்துவிட்டு, வேதபுரித் தலத்துக்கு வந்தார். ஸ்ரீவேதநாராயணரின் பேரழகில் திளைத்து, இங்கேயே தங்கி சேவையாற்றினார். பிறகு, கைங்கர்யங்கள் பலவற்றிலும் ஈடுபட்டு ஆலயத்தை நிர்வகித்த குலசேகர ஆழ்வார், இங்கே இந்தத் தலத்திலேயே பரமபதம் அடைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.
• குலசேகரஆழ்வார் பூசித்து வந்த பெருமாள் திருவுருவம் இன்றும் இக்கோயிலில் உள்ளது.
• ஆழ்வார் திருவாராதனை செய்த ஸ்ரீசீதாபிராட்டி, ஸ்ரீலட்சுமணன் மற்றும் ஸ்ரீராமனின் விக்கிரகத் திருமேனிகளை இன்றைக்கும் இந்தத் தலத்தில் தரிசிக்கலாம்.
• இங்கு, குலசேகர ஆழ்வாருக்குக் கொடிமரத்துடன் கூடிய தனிச்சந்நிதி அமைந்துள்ளது, குறிப்பிடத்தக்க ஒன்று.
• உற்சவ மூர்த்தியான ஸ்ரீ ராஜகோபால சுவாமிக்கு அருகில் கருடாழ்வார் மற்றும் ஆண்டாள் ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருப்பதை போல காட்சியளிப்பது சிறப்பு.
• வேதங்கள் ஒலிக்கும் இடமென்பதால் வேதபுரி என்றும் அழைக்கப்படும் இத்தலத்தில் அருள்புரியும் வீற்றிருந்த பெருமாளுக்கு நேர் எதிரே பிள்ளைத்தொண்டு ( தொண்டு – பாதை) எனும் சிறிய துளைபோன்ற பகுதி உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், வேதநாராயணனை மனமுருகி வேண்டிக்கொண்டு இத்தொண்டு வழியாக சென்று வர அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் அதிசயம் நிகழ்வதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
• ராமாயண காலத்தில் விபீஷ்ணரால் இங்கு மங்களா சாசனம் செய்யப்பட்டது.
• ஸ்ரீராமானுஜருக்குக் குருவாக விளங்கிய பெரியநம்பிகளின் பரம்பரையினர் சுமார் 900 ஆண்டுகளாக இந்த ஆலயத்தில் இறைப் பணிகள் செய்து வருகின்றனர். குலசேகர ஆழ்வார் சந்நிதியில் உள்ள கல்வெட்டு இதைப்பற்றி குறிப்பிடுகிறது
• இத்தலத்துக்கு வேறொரு சிறப்பும் உண்டு. நாலாயிரதிவ்ய பிரபந்தத்துக்கு உரை எழுதிய வாதிகேசரி ஸ்ரீஅழகிய மணவாள ஜீயர் அவதரித்ததும் இந்தத் தலத்தில்தான். மேலும், திருநெல்வேலி- பாளையங்கோட்டையில் இருக்கும் ஸ்ரீவேத நாராயணன் கோயிலுக்கு மூலமாக விளங்குவது இந்தத் திருக்கோயில் என்றும் சொல்கிறார்கள்,
• தஞ்சை பெரிய கோயிலை தந்த இராஜராஜசோழன் மகன் ராஜேந்திர சோழனால் 1024 ல் இத் திருக்கோவிலுக்கு பல சுற்று சுவர்கள் கட்டப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டது. இதனால் ராஜேந்திர விண்ணகர் என சிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் வந்த நாயக்க மன்னர்களாலும் திருப்பணிகள் செய்யப்பட்டு வெளிப்பிரகார சுவர்கள் கட்டப்பட்டது.
திருவிழா:
சித்திரை மற்றும் மாசியில் 10 நாள் பிரதானத்திருவிழா.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 10 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில், மன்னார்கோயில் – 627 413 திருநெல்வேலி மாவட்டம்.
போன்:
+91- 4634 – 252 874
அமைவிடம் :
அம்பாசமுத்திரத்திலிருந்து அடிக்கடி செல்லும் மினி பஸ்கள் மற்றும் ஆட்டோவில் சென்று கோயிலை அடையலாம். திருநெல்வேலி, அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி செல்லும் பஸ்களில் மன்னார்கோயில் விலக்கில் இறங்கி 1 கி.மீ., தூரம் நடந்து சென்றும் கோயிலை அடையலாம். முக்கிய ஊர்களில் இருந்து தூரம் : திருநெல்வேலியில் இருந்து 42 கி.மீ., தென்காசியில் இருந்து 37 கி.மீ., அம்பாசமுத்திரத்திலிருந்து 6 கி.மீ.,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − four =