#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள்

March 17, 2023 0 Comments

மூலவர் : தேவி கருமாரியம்மன்
தல விருட்சம் : கருவேல மரம்
தீர்த்தம் : வேலாயுத தீர்த்தம்
புராண பெயர் : வேலங்காடு
ஊர் : திருவேற்காடு
மாவட்டம் : திருவள்ளூர்
சக்தியை வழிபட்டால், இக்கலியுகத்தில் வரும் சங்கடங்களை எதிர்கொண்டு விலக்கிக்கொள்ள முடியும் என்பது பெரியோர்களின் அறிவுரை. அந்த சக்தியை வழிபடுவதற்கும் பூர்வ புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று, தான் பாடிய சௌந்தர்யலஹரியில் ‘ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத புண்ய: ப்ரபவதி’ என்ற வாக்கி யத்தால் உணர்த்தி இருக்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.
ஸ்தல வரலாறு :
அம்பிகையை “ஸ்ருஷ்டி கர்த்ரீ’, “கோப்த்ரீ’, “சம்ஹாரிணீ’ என்கிறது லலிதா சகஸ்ரநாமம்.
தீமைகளை அழித்து, நம்பியவர்களைக் காத்து, சகலவிதமான பிரார்த்தனைகளை நிறைவேற்றவே அம்பிகை வெவ்வேறு இடங்களில் கோயில் கொண்டுள்ளாள். அந்த வகையில் திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் மிகப் பிரசித்தி பெற்ற தலமாக பக்தர்கள் வேண்டுவதை எல்லாம் தரும், அற்புதத் தலமாக விளங்குகிறது.
ஆதிகாலத்தில் வேப்பமரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் “வேலங்காடு’ என்று அழைக்கப்பட்டது இந்த இடம். ஒருமுறை ஈசன் தேவர்களின் துன்பம் நீக்கச் சென்றபோது, இறைவன் அம்பிகையிடம் நீயே சிவனும், சக்தியுமாகி ஐந்தொழில்களையும் செய்யவேண்டும்!’ என்று கூற, அம்பிகை சம்மதித்து அகத்தியரிடம் தான் ஆட்சி செய்யத் தகுந்த இடம் கேட்க, அகத்தியர் வேற்காட்டை’க் காட்டுகிறார். மாயாசக்தியான அவளிடம் மகாவிஷ்ணு நீ பாம்பு உருவாக புற்றில் இருந்து அருளாட்சி செய். கலியுகத்தில் இப்போது இருக்கும் உருவத்துடன் திருக்கோயில் பெற்று விளங்குவாய்! என்று கூற அன்னை கருமாரியாக கருநாக வடிவம் எடுத்து புற்றில் அமர்ந்தாள். அந்தப் புற்று இன்றும் திருக்கோயில் அருகே உள்ளது.
அன்னைக்கு கருமாரி என்று பெயர் வரக் காரணமாக ஒரு புராண நிகழ்ச்சி சொல்லப்படுகிறது.
தன் தங்கை தேவகியின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தை தன்னைக் கொல்லும் என்ற அசரீரி கேட்டு கம்சன் தேவகியைச் சிறையில் அடைத்து, ஏழு குழந்தைகளையும் கொல்கிறான். எட்டாவதாக சிறையில் கண்ணன் பிறக்கிறான். கோகுலத்தில் நந்தகோபனுக்கு மாயை பெண்ணாகப் பிறக்கிறாள். இருவரையும் இடம் மாற்றிய பிறகு கம்சனுக்குத் தகவல் செல்கிறது. தேவகிக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று. கம்சன் அதைக் கொல்லப் போகும்போது மாயை ஆக்ரோஷச் சிரிப்புடன் உயர எழும்புகிறாள். தான் யார் என்பதை அறிவிக்கிறாள். கம்சன் திகைப்புடன் கரு மாறி! என்று கூற ஆகாயம், பூமி எங்கும் கருமாரி, கருமாரி! என்று ஒலிக்கிறது. உக்கிரத்துடன், ஆவேசமாக கையில் திரிசூலத்துடன் நிற்கும் அன்னையை மகாவிஷ்ணு சாந்தப் படுத்துகிறார்.
தேவி! நீ இந்த உலகை வாழ்விக்கப் பிறந்தவள். உன் கருணையும், அன்பும், கனிவும் மழை போல் இந்த பூமியைக் குளிர்விக்க வேண்டும். தீமைகளை அழித்து, நல்லவர்களைக் காக்க நீ வேலங்காட்டில் குடி கொள்ள வேண்டும். நீ சக்தியின் அம்சம்! என்று கூறுகிறார். அன்னை சாந்தமாகி புற்றில் அமர்கிறாள்.
கோயில் சிறப்புகள் :
• “ஈசனின் கட்டளைக்கிணங்க சக்தி ஐந்தொழில்களையும் செய்யும்போது, சூரியன் அன்னையை அவமதித்ததால் அவனைச் சபித்து ஒளி குன்றச் செய்தாள் அம்பிகை. சூரியன் இத்தலத்திற்கு வந்து அம்பிகையைப் பூஜித்து, இழந்த தன் ஒளியைப் பெற்றான்!’ என்று தல வரலாறு கூறுகிறது.
• ஒருமுறை சூரிய பகவான் சக்தியை அவமதித்ததால், கோபம் கொண்ட சக்தி அவனை சபித்து இருளாக்கினாள். பின்னர் கோபம் தணிந்த அன்னை சூரியனின் வேண்டுகோளுக்காக இந்த தலத்தில் அமர்ந்து சூரியனின் பூஜையைப் பெறுகிறாள் என்று வேறொரு வரலாறு கூறுகிறது.
• கோயிலுக்கு எதிரில் திருச்சாம்பல் பொய்கை தீர்த்தம் இருக்கிறது. ஈசனிடமிருந்து திருநீற்றைப் பெற்றே அம்பிகை ஐந்தொழில்களையும் செய்தாள். அதுவே தீர்த்தமாக உருமாறி விட்டது.
• பிரகாரத்தில் உற்சவ அம்பாள் ஊஞ்சலில் காட்சி தருகிறாள். கோயில் முகப்பில் அரசமரத்தின் அடியில் விநாயகர் இருக்கிறார். பால பிரத்யங்கிராவுக்கு சன்னதி இருக்கிறது. இங்கு அம்பிகை பால ரூபத்தில், சிம்ம வாகனத்துடன் நின்றிருக்கிறாள்.
• கருமாரியம்மன், மூலஸ்தானத்தில் சுயம்பு வடிவில் காட்சி தருகிறாள். இவள் சாந்த சொரூபத்துடன், பராசக்தி அம்சத்தில் தங்க விமானத்தின் கீழ் இருக்கிறாள். இவளுக்கு பின்புறம் அம்பாள் சிலை ஒன்றுள்ளது.
• அகத்தியர் அன்னையை வேற்காட்டில் போற்றித் துதித்தது ஒரு தை மாத பெளர்ணமியில்தான். ஆகவே, பௌர்ணமி, பூச நட்சத்திரம், ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்கள் இங்கு மிகவும் பிரசித்தமானது.
• இங்கு தனி சந்நிதியில் மரத்தால் செய்யப்பட்ட அன்னையின் சிலை இருக்கிறது. கருமாரியம்மன் சுயம்பு வடிவில் காட்சி அளிக்கிறாள். இவள் சாந்த சொரூபத்துடன், தங்க விமானத்தின் கீழ் பராசக்தி அம்சமாக விளங்குகிறாள்.
• அம்மனுக்கு பின்புறம் ஓர் அம்பிகை சிலை உள்ளது, இவள் அக்னி ஜ்வாலையுடன், கைகளில் கத்தி, கபாலம், டமருகம், சூலம் ஏந்தி அமர்ந்திருக்கிறாள்.
• திருஞான சம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோர் திருவேற்காடு தலத்தைப் பற்றிப் பாடி இருக்கிறார்கள். அம்மன், புற்றில் குடியிருந்த இடத்தில்தான் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. புற்று, மஞ்சள் குங்குமம் துலங்க காட்சி அளிக்கிறது.
• தினமும் மாலை பிரதோஷ வேளையில் அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்யப்படுகிறது. அம்பாள் சன்னதியில் விளக்கு ஒன்று உள்ளது. இதனை “பதி விளக்கு’ என்கின்றனர். இந்த விளக்கைச் சுற்றி விநாயகர், முருகன், எதிரெதிரே சூரியன், சந்திரன் ஆகியோர் இருப்பது விசேஷமான அமைப்பு. மயில், நாகம் மற்றும் சிம்ம வாகனங்களும் இருக்கிறது. இதில் சிம்மத்தின் மீது அம்பிகை அமர்ந்திருக்கிறாள். இந்த விளக்கு எப்போதும் எரிந்து கொண்டே இருக்கிறது. பக்தர்கள் அம்பிகையையும், இந்த விளக்கையும் தரிசித்தால் குடும்பத்தில் என்றும் குறையில்லாத நிலை இருக்கும் என்பது நம்பிக்கை.
• அம்பாள் சன்னதி எதிரில் கொடிமரம் உள்ளது. பெரும்பாலான அம்பாள் தலங்களில் திருவிழாவின்போது, காப்புக்கட்டித்தான் விழா நடத்துவர். இங்கு விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது. பசு சாணத்தில் செய்த சாம்பலையே இக்கோயிலில் பிரசாதமாக தருகின்றனர்.
• புற்றிற்கு அருகில் விநாயகர், நாகர் இருக்கின்றனர். பொதுவாக விநாயகர் வலது கையில் தந்தமும், இடக்கையில் மோதகமும் வைத்திருப்பார். இவர் வலது கையால் ஆசிர்வதித்து, இடது கையை அபய முத்திரையாக வைத்திருப்பது வித்தியாசமான அம்சம்.
• அறுபத்து மூன்று நாயன்மார்களில் மூர்க்க நாயனார் அவதரித்த தலம் திருவேற்காடு.
• வள்ளலார் சுவாமிகளால், ‘தருமமிகு சென்னை’ என்று போற்றப்பட்ட சென்னை யில், ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ள மூன்று சக்தித் தலங்களை ஒரே நாளில் தரிசித்து அருள்பெறும் விசேஷ வழிபாடுதான் திரிசக்கர தரிசனம் ஆகும். திருவேற்காடு ஸ்ரீகருமாரி அம்மன், மாங்காடு ஸ்ரீகாமாட்சி அம்மன், குன்றத்தூர் ஸ்ரீகாத்யாயனி அம்மன் ஆகிய மூன்று சக்தி ஸ்தலங்களும், சுமார் 12 கி.மீ. தூரத்துக்குள் ஒரே வரிசையில், தரிசித்து பலன் பெறும் வகையில் அமைந்திருக்கின்றன.
• இந்த மூன்று சக்திகளின் அருட் கோலங்களைப் பற்றி அகத்தியர் நாடியின் ருத்ர சம்வாத சருக்கப் பகுதியில் கலியுக க்ஷேத்திரப் பரிகார காண்டப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
• சக்தியின் மகிமையைக் கூறும் நூல்களில் ரேணுகாதேவியின் திருக்கதையில் ஸ்ரீகருமாரி அம்மன் சிறப்புகளும், ஸ்ரீசண்டிகா வழிபாட்டு முறையில் ஸ்ரீகாமாட்சி அம்மன் மகிமைகளும், தேவி மகாத்மியப் பகுதியில் ஸ்ரீகாத்யாயனி தேவியின் புகழும் விவரிக்கப்பட்டு இருக்கிறது.
• திருவேற்காடு தலத்துக்கும் குன்றத்தூர் தலத்துக்கும் நெடுங்காலமாகவே ஓர் ஆன்மிகத் தொடர்பு உண்டு, இந்த தொண்டை மண்டலத்தை ஆட்சி புரிந்து வந்த அநபாயச் சோழனும் தெய்வச் சேக்கிழார் பெருமானும் பாதயாத்திரையாகச் சென்று ஆலயப் பணிகளைச் செய்து வந்ததைக் குறிப்பிடும்படியாக வேதபுரீஸ்வரர் சந்நிதிக்குப் பின்புறம் உட்பிராகாரத்தில் லிங்கோத்பவ மூர்த்திக்கு எதிரில் தெய்வச் சேக்கிழாரையும் அநபாயச் சோழனையும் சிலையாக வைத்திருக்கிறார்கள்.
திருவிழா:
• கருமாரியம்மனுக்கு ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் நடக்கிறது.
• ஆடி மாதத்தில் இங்கு நடக்கும் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. கோயில்களில் திருவிழா அதிகபட்சம் 15 நாட்கள் நடக்கும். அரிதாக சில அம்பாள் கோயில்களில் 48 நாட்கள் வரையில் விழா நடத்துவர். ஆனால், இக்கோயிலில் ஆடி முதல் வாரத்தில் துவங்கும் விழா புரட்டாசி மாதம் வரையில் மொத்தம் 12 வாரங்கள் நடக்கிறது.
• ஞாயிற்றுக் கிழமைகளில் அம்பிகைக்கு 108 குட அபிஷேகம் நடந்து வீதியுலா செல்கிறாள். 9ம் ஞாயிற்றுக்கிழமையன்று அம்பாள் புஷ்ப பல்லக்கில் புறப்பாடாகிறாள்.
• மாசி மகத்தன்று அம்பாள் வங்காள விரிகுடா கடலுக்குச் சென்று தீர்த்த நீராடுகிறாள்.
• தை மாதம் பிரம்மோற்ஸவம், சித்ராபவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடி, புரட்டாசியில் பெரிய திருவிழா, நவராத்திரி, கந்த சஷ்டி, பங்குனி உத்திரம்.
திறக்கும் நேரம்:
காலை 5மணி முதல் இரவு 9மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில்,
திருவேற்காடு -600 077,
திருவள்ளூர் மாவட்டம்.
போன்:
+91-44-2680 0430, 2680 0487, 2680 1686.
அமைவிடம் :
சென்னை கோயம்பேட்டில் இருந்து பூந்தமல்லி செல்லும் வழியில்12 கி.மீ., தூரத்தில் திருவேற்காடு உள்ளது. நகரின் முக்கிய பகுதிகளில் இருந்து பஸ் வசதி உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 4 =