#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சுசீந்திரம்

March 17, 2023 0 Comments

மூலவர் : தாணுமாலையர்
தல விருட்சம் : கொன்றை
தீர்த்தம் : பிரபஞ்சதீர்த்தம்
புராண பெயர் : ஞானாரண்யம்
ஊர் : சுசீந்திரம்
மாவட்டம் : கன்னியாகுமரி
சிவன்- பிரம்மா- விஷ்ணு ஆகிய மூவரும் ஒருசேர எழுந்தருளும் திருத்தலம் இது. திருவாதிரை தரிசனம் செய்ய உகந்த தலமும்கூட. இந்தத் தலம் அத்திரி மகரிஷியின் மனைவி அனுசூயாதேவியின் கற்பின் மேன்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
ஸ்தல வரலாறு :
இன்று சுசீந்திரம் என்று அழைக்கப்படும் பகுதியே முன்னொரு காலத்தில் ஞானாரண்யம் என்று அழைக்கப்பட்டது. இது அடர்ந்த வனம் நிறைந்த பகுதியாக இருந்தது . இந்த வனத்தில் ஒரு பகுதியில், ஆசிரமம் அமைத்து அத்திரி மகரிஷி தன்னுடைய தர்மபத்தினியான, அனுசூயாதேவி உடன் வாழ்ந்து வந்தார்.
அனுசூயாவின் கற்பை சோதிக்க எண்ணிய சிவபெருமான், பிரம்மா, விஷ்ணு, ஆகிய மும்மூர்த்திகளும் அத்திரி மகரிஷி இல்லாத நேரத்தில், துறவிகள் போல் வேடமணிந்து ஆசிரமத்திற்கு வந்தனர். மூன்று துறவிகளும் அனுசூயா தேவியிடம் பிச்சைக் கேட்டனர். உடனே அனுசூயா தேவி தன் கணவனின் பாத தீர்த்த சக்தியினால், அறுசுவை உணவுகளை தயாரித்தாள், துறவிகளை, ஆசனம் அமைத்து அமரச்செய்தாள். விருந்து பரிமாற வந்தபோது, துறவிகள் மூவரும் எழுந்து விட்டனர். நான் என்ன தவறு செய்துவிட்டேன், என்று தேவியானவள் அழுதுகொண்டே கேட்டாள். அதற்கு, துறவிகள் மழை இல்லாத காரணத்தினால் ஒரு மண்டலம் உணவு இல்லாமல் வருந்திய நாங்கள் உணவு உண்ண வேண்டுமென்றால், அதற்கு ஒரு நோன்பு உண்டு அந்த நோன்பு முடியாமல் நாங்கள் உணவு உட்கொள்ளக் கூடாது என்றனர். மேலும் நீங்கள் பிறந்த மேனியுடன் அன்னம் பரிமாறினால் உணவை உண்ணுவோம் என்றதும், திடுக்கிட்ட அனுசூயாதேவி, கணவனே கண்கண்ட கடவுள் என்றும், கற்பினை நன்னெறி என்றும் நினைத்து வாழும் நான் என் கற்பின் பெருமையை முனிவர் கூறியவாறே அமுது படைப்பேன் என்று நினைத்துக் கொண்டு தன் கணவர் காலை கழுவி வைத்திருந்த தீர்த்தத்தை கையிலெடுத்து கணவனை மனதில் தியானித்துக் கொண்டு, இவர்கள் குழந்தைகளாக மாறக்கடவார் என்று கூறி அத்துறவிகளின் தலையில் தெளித்தார். ஆக்கல், காத்தல், அழித்தல், ஆகிய முத்தொழில் செய்யும் மும்மூர்த்திகளும் பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தைகள் ஆனார்கள்.
பின்பு தான் பிறந்தபோது இருந்த நிலையில் அமர்ந்து உணவு ஊட்டினாள் அனுசூயாதேவி. தங்களின் கணவர்கள் குழந்தையாக மாறியதை கேள்விப்பட்ட முப்பெரும் தேவியரும், ஆசிரமம் வந்து தங்களுக்கு மாங்கல்ய பிச்சை அளிக்குமாறும், இவர்களை மன்னித்து சுய உருவை அடைய வைக்குமாறும், அனுசூயாதேவியிடம் வேண்டிக்கொள்ள , அனுசூயா தேவியானவள் மூன்று குழந்தைகளுக்கும் சுய உருவை அளித்தாள் . அப்போது திரும்பி வந்த அத்திரி மகரிஷி அனுசூயா தேவியோடு சேர்ந்து மும்மூர்த்திகளின் காட்சியை பெற்றார். மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்த இடம் இத்தலத்திலுள்ள கொன்றை மரத்தடியில் ஆகும். பின்பு மும்மூர்த்திகளும் சிவன் (தாணு) விஷ்ணு(மால்) பிரம்மா (அயன்) என்ற பெயரில் இங்கு எழுந்தருளினார்கள்.
அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் நீங்க தேவேந்திரன் இத்தலத்திற்கு வந்து மும்மூர்த்திகளை ஒரே சமயத்தில் வழிபட்டு சாபவிமோசனம் பெற்ற தலம் இதுவே. இந்திரன் இங்கு வந்து விமோசனம் பெற்றதால் கோரம் ஆகிய உடல் தூய்மையாகவும், அழகாகவும் மாறினான். ‘சுசி’ என்றால் தூய்மை என்று பொருள். இவ்விடம் சுசீந்திரம், சுசி+ இந்திரன் = சுசீந்திரம். என்பது மருவி, சுசீந்திரம் என்று அழைக்கப்படுகிறது.
கோயில் சிறப்புகள் :
• இக்கோயிலில் மூலவராக தாணு(சிவன்), மால் (விஷ்ணு), அயன் (பிரம்மா) மூவரும் இங்கு இருப்பதாக ஐதீகம். ஆனால் “சுசிந்திரமுடையார் பரமசிவன்’ எனக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இக்கோயிலின் வடபகுதியில் சிவனுக்கும், தெற்கே விஷ்ணுவிற்கும் கருவறைகள் உள்ளன. இதன் விமானத் தூபி தங்கத்தகட்டால் வேயப்பட்டது. இக்கருவறை கி.பி.9-ஆம் நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்டது.
• 6 மீட்டர் உயரப் பாறையில் கைலாசநாதர் கோயில் உள்ளது.
• தலபுராணத்தில் கூறியபடி: அத்திரி முனிவரும் அவர்தம் மனைவி அனுசூயாவும், இங்குள்ள தலவிருட்சம் கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர்.
• இங்குள்ள தாணுமாலயனை ஒவ்வொரு இரவும் தேவேந்திரனே பூஜை செய்கிறான் என்று ஒரு நம்பிக்கை. இங்கு அர்த்த ஜாம பூஜை கிடையாது. ஆனால் பூஜை திரவியங்களைச் சேகரித்து வைத்து விட்டு அர்ச்சகர்கள் நின்று கொள்வர். அர்த்தஜாம பூஜை அமராபதியால் நடப்பதால் மாலை பூஜை செய்தவர் மறுநாள் காலை கடைதிறக்கக் கூடாது என்பது கட்டளை. இது காரணமாக இங்கு பூஜைக்கு இருவர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். காலையில் கடை திறக்கும்போது ‘அகம் கண்டது புறம் கூறேன்’ என்று சத்தியம் செய்தே வாயில் திறக்க வேணும் என்பது உத்தரவு. தேவேந்திரன் கட்டளையிட்டபடியே இங்கு தாணுமாலயருக்கு, இக்கோயிலைக் கட்டினான் என்பது கர்ணபரம்பரை.
• இறைவன் மீது அளவற்ற பற்றுக்கொண்ட அறம்வளர்த்தாள் என்ற பெண்ணை இறைவன் உயிரோடு ஆட்கொண்ட இடம் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் என்றும் தலப்புராணம் கூறுகிறது. அதன்காரணமாக அறம்வளர்த்த நாயகி அம்மன் சன்னதி அமைந்துள்ளது என்றும், இந்த சம்பவத்தின் நினைவாக ஆண்டுதோறும் மாசி மாதம் திருக்கல்யாண விழா நடைபெறுகிறது என்றும் கூறுகிறார்கள்.
• கன்னியாகுமரி அம்மை தல புராணத்திற்கும் சுசீந்திரம் தலபுராணத்திற்கும் தொடர்பு உண்டு என்கின்றனர். பூவுலகம் நடுங்கும் வண்ணம் பாணாசுரன் பல வகையில் கொடுமைகள் செய்து வந்தான். உடனே நம் தேவர்களும், முனிவர்களும் வழக்கப்படி “எங்களைக் காத்து அருளும்” என சிவனிடம் வேண்டினர். முன்னமேயே, “பாணாசுரன் ஒரு கன்னியினால் அழிவான்” என பிரம்மன் சாபமிட்டிருந்தான். ஆகவே, சிவன், தன் சக்தியான பார்வதியைப் பூவுலகிற்கு அனுப்பி வைத்தார். அம்மையோ, தாணுமாலயப் பெருமானை மணக்க விரும்பியதால் ஒரு நன்னாளில் நள்ளிரவில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நன்னாளில் பெருமான் கன்னியாகுமரி கிளம்பினார். திருமணம் நடந்தால் அசுரவதம் நடக்காதே எனக்கவலையுற்ற நாரதர், ஒரு சேவலாக அங்கு வந்து கூவ, குறித்த நேரம் தவறிவிட்டது என தாணுமாலயன் சுசீந்திரம் திரும்பினார். திருமணம் தடைபட்டதால், கன்னியாகவே தவமிருந்து பாணாசுரனை அழித்து இன்னமும் கன்னித்தவத்தில் இருக்கிறாள் அம்மை.
• சுசீந்திரத்தில் தாணுமாலயனுக்குத் திருமுழுக்காட்டு நடைபெற்றதும் அப்புனித நீர் நிலத்தடியே சென்று கன்னியாகுமரிக் கடலில் ஓர் இடத்தில் கலக்கிறது. அது தாணுமாலயத் தீர்த்தம் என அழைக்கப்படுகின்றது.
• இங்குள்ள அனுமன் சிலை மிகவும் அழகானது. பிரம்மாண்டமானது. இதன் உயரம் 18 அடியாகும். அற்புதமான சிற்பமாக அமைந்திருக்கும். இந்த அனுமன் இத்தலத்தில் மிகவும் விசேஷம். மேலக்கோபுர வாயிலுக்கு நிலத்தைத் தோண்டும்போது கண்டெடுத்த அனுமன் சிலை 18 அடி உயரம் உடையது. வெற்றிலை, வட மாலை, வெண்ணெய் சாத்தி இவரை வேண்டி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
• பெரிய அனுமன் சிலையும், இறைவன் ஊர்தியாகிய நந்தியின் உருவமும் நான்கு இன்னிசைத் தூண்களும் மண்டபங்களின் கட்டழகும் இங்கு சிறப்பாகும். எங்கும் காணமுடியாத கணேசினி என்ற பெண்ணுருவில் அமைந்த பிள்ளையார். இது கண்ணுக்கோர் சிறந்த கலைவிருந்தாகும்.
• தாணுமாலயன் கோயில், 5400 சதுர அடி பரப்பில் அமைந்துள்ளது. இங்குள்ள கோபுரம் நூற்றி முப்பத்தி நாலரை அடி உயரம் கொண்டது. ராஜ கோபுரம் ஏழு நிலைகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது . கோபுரத்தை முதலில் வணங்கி விட்டு உள்ளே சென்றால் 12 அடி உயரம் உள்ள நந்தியின் சிலையைக் காணலாம். கைலாசநாதர், அய்யனார், சிதம்பரேஸ்வரர் ஆகியோரும் காட்சி தருகின்றனர்.
• தாணுமாலய சுவாமியின், லிங்க வடிவில் கட்டப்பட்டுள்ள தங்க கவசத்தில், சுவாமியின் திருமுகம் அதன் மேல்புறம் 14 சந்திர பிறைகளும், அதன்மேல் ஆதிசேஷனும் காட்சியளிக்கின்றனர். கருவறைக்கு தென்புறம் விஷ்ணு சன்னதியும் ,செண்பகராமன் மண்டபமும் உள்ளன. இங்குள்ள 32 தூண்களிலும் கண்ணை கவரும் அழகு சிற்பங்களை காணலாம்.
• விஷ்ணு சன்னதியில் எம்பெருமான் 8 அடி உயரத்தில் நின்றவாறு காட்சியளிக்கிறார். கருவறைக்குப் பின்னால் உள்ள பிரகாரத்தில் பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி அளிக்கிறார் . அருகில் மூடு விநாயகர், துர்க்கை அம்மன் சங்கரநாராயணர் , சண்டிகேஸ்வரர், நடராஜர் சன்னதிகள் உள்ளன. இங்கு செப்பு சிலை வடிவாக அம்மன் காட்சி தருகிறாள் .
• சில திருத்தலங்களில் விநாயகப் பெருமானை சித்தி புத்தி சமேதராக வழிபடுவதும் நாம் அறிந்த செய்தியாகும். ஆண் தெய்வமாக வணங்கப் படும் பிள்ளையார் பெண் தெய்வமாக வணங்கிய மரபும் தமிழகத்தில் இருந்துள்ளது என்பது ஆச்சரியமான செய்தியாகும்.
• சுசீந்திரம் தலத்தில் உள்ள ஒரு தூணில் பெண் உருவம் கொண்ட விநாயகா் அருள்பாலிக்கின்றனர் பெண்ணுருவில் உள்ள இந்த பிள்ளையார் விக்னேஷ்வரி, விநாயகி, கணேஷினி, கணேஷ்வரி என்று பல திருநாமங்களில் வணங்கப்படுகின்றார்
• தாணு என்றால் சிவபெருமான்; மால் என்றால் திருமால்; அயன் என்றால் பிரம்மதேவன். இந்த ஆலயத்தில் நடைபெறும் ஒவ்வொரு பிரதோஷ விழாவிலும் இடப வாகனத்தில் சிவபெருமானும், கருட வாகனத்தில் திருமாலும் இணைந்து ஆலயப் பிராகாரத்தில் பவனி வருவது குறிப்பிடத்தக்கது. இது வேறெந்த ஆலயத்திலும் நடைபெறுவதில்லை.
திருவிழா:
சித்திரை மாதம் தெப்பத்திருவிழா – 1 நாள்.
ஆவணி பெருநாள் திருவிழா – 9 நாள்
மார்கழி திருவாதிரை திருவிழா- 10 நாள் திருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர்
மாசி திருக்கல்யாண திருவிழா – 9 நாள் திருவிழா
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு தாணுமாலையர் திருக்கோயில்,
சுசீந்திரம் – 629704,
கன்னியாகுமரி
போன்:
+ 91- 4652 – 241 421.
அமைவிடம் :
திருநெல்வேலியிலிருந்து (70 கி.மீ.)தூரத்தில் சுசீந்திரம் உள்ளது இத்தலத்திற்கு திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி செல்லும் பஸ்களில் செல்லலாம். நாகர்கோவிலிலிருந்து 7 கி.மீ. தூரத்திலும், கன்னியாகுமரியிலிருந்து 13 கி.மீ. தூரத்திலும் சுசீந்திரம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =