#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருமறைக்காடு

February 24, 2023 0 Comments

மூலவர் : திருமறைக்காடர் (வேதாரண்யேஸ்வரர்)
அம்மன் : வேதநாயகி
தல விருட்சம் : வன்னிமரம், புன்னைமரம்
தீர்த்தம் : வேததீர்த்தம், மணிகர்ணிகை
புராண பெயர் : திருமறைக்காடு
ஊர் : வேதாரண்யம்
மாவட்டம் : நாகப்பட்டினம்
ஸ்தல வரலாறு:
வடமொழி வேதங்கள் ரிக், யசூர்,சாம, அதர்வண என்ற நான்கும் மனித உருக் கொண்டு இத்தலத்திற்கு அண்மையில் உள்ள நாலுவேதபதி என்கிற ஊரில் தங்கி அருகாமையில் உள்ள புஷ்பவனம் என்கிற ஊரில் மலர் எடுத்து இத்தலத்து இறைவனைப் போற்றி வழிபாடுகள் செய்தன. கலியுகம் பிறந்தவுடன் இனி நல்லவற்றுக்கு காலம் இல்லை .இனி நாங்கள் இருப்பது நல்லதல்ல என்று இறைவனிடம் கூறிவிட்டு இத்தலத்தின் பிரதான வாயிலை அடைத்து விட்டுச் சென்று விட்டன. இன்றும் இத்தலத்தை சுற்றிலும் மரம், செடி, கொடி என்று வனமாக இருந்து இறைவனை வழிபாடு செய்து வருவதாகக் கருதப்படுகிறது.பிரதான வாயில் அடைக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் பக்கத்திலுள்ள திட்டி வாயில் வழியாக வந்து இறைவனை வழிபட்டு வந்தனர். பின்னர் இத்தலத்திற்கு வருகை தந்த திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தேவாரப்பதிகம் பாடி கதவை திறந்தனர் என்பதும் ,வேதங்களே இறைவனை வணங்கியதால் வேதாரண்யம் என்று பெயர் வந்தது.
சைவ சமயத்தின் முக்கிய நாயன்மார்களில் இருவரான அப்பரும் ஞானசம்பந்தரும் சிவத்தலம் தோறும் சென்று எம்பெருமானை போற்றி பதிகம் பாடி வருகையில் இந்த திருமறைக்காட்டிற்கும் வந்தனர். அப்போது வேதங்களே வழிபட்ட இத்தலத்து மறைக்காட்டீசுவரரை வழிப்பட எண்ணி கோயிலுக்கு செல்கையில் கோயிலின் பிரதான வாயிற் கதவு மூடப்பட்டிருந்தது. இறைவனை எல்லோரும் பக்கத்து வாயில் வழியாகவே சென்று வழிபட்டவண்ணம் இருந்தனர். இதைப்பார்த்த அப்பரும் சம்பந்தரும் இறைவனை வணங்க இப்படியொரு சிக்கல் இருப்பது ஏன் என்று வினவினர். வேதங்கள் பூஜித்து வந்து வரம்பெற்றுப் பின்னர் திருக்கதவைத் தாழிட்டு விட்டுச் சென்ற விபரம் அறிந்தனர். உடனே ஞானசம்பந்தர் அப்பரிடம் மிக்க பழமை மிக்க வேதங்களே வழிபட்ட இத்திருக்கோயில் கதவை திறந்து இறைவனை நேராக தரிசிக்க திருப்பதிகம் பாடியருளுமாறு வேண்டிக் கொண்டார்.அதைக்கேட்ட அப்பர் மிகுந்த ஆராமையோடும் பண்ணினேர்மொழியென்று மொத்தம் 10 திருப்பாசுரம் பாடியவுடன் கதவு திறந்து கொண்டது. உள்ளே சென்று ஆனந்தப்பரவசத்துடன் மறைக்காட்டீசரை வணங்கிவிட்டு வெளியே வந்தபோது அப்பர், சம்பந்தரே இந்த கதவு எப்போதும் மூடவும் திறக்கவும் பதிகம் பாடும் என்று கேட்டுக்கொள்ள ஞானசம்பந்தர் சதுரம் மறை என்று ஒரே ஒரு திருப்பதிகம் பாடியவுடன் கதவு மூடிக் கொண்டது. இறைவனின் இந்த கருணையை எண்ணி இருவரும் பரவசம் எய்தினர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கதை நிகழ்ந்த கோயில் இது.
கோயில் சிறப்புகள்:
• இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அமைந்துள்ளார். இறைவன் திருமறைக்காடர் (வேதாரண்யேசுவரர்) எனவும் இறைவி வேதநாயகி எனவும் அழைக்கப்படுகின்றனர்.
• இவ்வூர் முன்பு திருமறைக்காடு எனவும் கோயில் திருமறைக்காடர் என்றும் தமிழில் அழைக்கப்பட்டது. வேத காலத்துக்குப் பிறகு வேதாரண்யம் (வேத ஆரண்யம்) என்றும் கோயில் வேதாரண்யேசுவரர் கோயில் எனவும் அழைக்கலாயிற்று.
• வேதங்கள் வழிபட்டதால், இப்பெயர் பெற்றது.
• அகத்தியருக்குத் திருமணக் காட்சி நல்கிய திருத்தலம்.
• தங்களால் அடைக்கப்பட்டத் திருக்கதவினை, அப்பரடிகள் திறப்பிக்கவும், ஞானசம்பந்தர் திருக்காப்பிடவும் பாடியப் பெருமை பெற்றத் தலம்.
• இராமர், இராவணனை கொன்ற பழி நீங்கப் பூஜித்த தலமாதலால், இஃது கோடிக்கரை என்றும் வழங்கப்படுகிறது.
• திருவிளையாடற் புராணம் அருளிய பரஞ்சோதி முனிவர் அவதாரத் தலம். பரஞ்சோதி முனிவரே இக்கோவில் தலபுராணத்தை அருளிச் செய்துள்ளார்.
• இங்குள்ள மரகத லிங்கம் முசுகுந்த சக்கரவர்த்தியால் நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இந்தக் கோயில் சோழர்கள் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுப் பதிவுகளோடு காணப்படுகிறது. இக்கோயிலின் நிர்வாகத்தில் குறிப்பிட்ட காலத்தில் இலங்கை வரணி ஆதினத்தின் பங்களிப்பு இருந்துள்ளது.
• தியாகேசர் சன்னதியில் உள்ள மரகத லிங்கத்திற்கு காலை மாலை இருவேளையும் பூஜை உண்டு. இந்திரன் அளித்து முசுகுந்தன் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.
• இந்தக் கோயிலின் கருவறையில் பரமசிவன் – பார்வதி இருவரும் திருமணக் கோலத்தில் காட்சியளிப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பு.
• 64 சக்தி பீடங்களில் ஒன்றான சுந்தரி பீடம் அமையப் பெற்ற கோயிலாகவும் இது திகழ்கிறது.
• தல விருட்சமாக வன்னி மற்றும் புன்னை மரங்கள் திகழ்கின்றன. இவற்றில் வன்னி மரத்தில் ஒருபுறம் காய்கள் நீளமாகவும் முட்கள் உடையதாகவும் இன்னொரு பக்கம் உருண்டையாகவும் முட்கள் இல்லாமலும் இருக்கின்றன என்பது சிறப்பம்சம்.
• வேதநாயகி கோயிலின் அம்பாள் வேதநாயகி எனவும் தமிழில் யாழைப் பழித்த மொழியாள் என்றும் வடமொழியில் வீணாவாத விதூஷணி எனவும் அழைக்கப்படுகிறார். அம்பிகையின் குரல் சரஸ்வதியின் வீணை நாதத்தைவிட

இனிமையாக

இருந்ததால் யாழைப் பழித்த மொழியாள் என்ற பெயர் வந்ததாகவும், இதன் காரணமாக இங்குள்ள சரஸ்வதி, வீணையில்லாமல் தவக்கோலத்தில் சுவடியைக் கையில் கொண்டு இருப்பதையும் காண முடிகிறது.

• ஒருமுறை பசியுடன் இருந்த எலி ஒன்று திருமறைக்காடு கோயில் தீபத்தில் உள்ள நெய்யைத் தனக்கு ஆகாரமாக உட்கொள்ள வந்தது. தன்னையறியாமல் எலி தன் மூக்கால் அச்சமயம் அணையும் தருவாயிலிருந்த தீபத்தின் திரியை தூண்டிவிட்டதால் தீபம் சுடர் விட்டுப் பிரகாசிக்க ஆரம்பித்தது. சிவன் கோயில் விளக்கு அணையாமல் காத்த பயனின் காரணமாக எலி அடுத்த பிறவியில் சிவபெருமானின் அருளால் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறக்க நேர்ந்தது. இதன் விபரத்தை திருநாவுக்கரசர் தனது திருக்குறுக்கை சிவத்தலம் பதிகத்தில் எட்டாம் திருப்பாட்டில் (4-ம் திருமுறை – “ஆதியில் பிரமனார் தாம்” என்று தொடங்கும் பதிகம்) தெரிவிக்கிறார்.
• பாண்டிய நாட்டு அரசி மங்கையர்க்கரசி பாண்டிய நாடு வரவேண்டும் என்று சம்பந்தருக்கு அழைப்பு விட்டார். மதுரை செல்வதற்கு முன் திருமறைக்காட்டில் தங்கியிருந்த திருநாவுக்கரசரிடம் கூறிவிட்டுப் போக வந்தார். மதுரையில் உள்ள சமணர்கள் கொடுந்தொழில் செய்பவர்களென்றும் தற்போது நாளும் கோளும் நன்றாக இல்லையென்று சொல்லி சம்பந்தர் மதுரை செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறினார். அதற்கு சம்பந்தர் சிவபெருமானை வழிபடும் அடியார்களுக்கு நாளும் கோளும் நன்மையே செய்யும் இடர் செய்யாது என்று கூறி கோளாறு திருப்பதிகம் பாடியருளினார்.
• இத்தலத்தின் பரிவார தேவதையான துர்க்கை தென்திசை நோக்கியுள்ளாள். திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் முறுவல் காட்டி எழுந்தருளி உள்ள இக்காவல் தெய்வம் இத்தலத்தில் பிரார்த்தனை தெய்வம்.
• முசுகுந்தச் சக்கரவர்த்தி தியாகேசப் பெருமானை எழுந்தருளுவித்த ஏழு விடங்க தலங்களுள் ஒன்று (தியாகர் – புவனவிடங்கர்; நடனம் – ஹம்ச நடனம்; மேனி – மரகத் திருமேனி; ஆசனம் – இரத்தின சிம்மாசனம்).
• இத்தலத்தில் பிரம்மா பூஜை செய்து தனது சிருஷ்டித் தொழிலை செய்யலானார்.
• விசுவாமித்திர முனிவர் பிரம்மரிஷி ஆகவேண்டும் என்ற தனது ஆவலை சிவபெருமானை இத்தலத்தில் பூஜித்து நிறைவேற்றிக் கொண்டார்.
• அகத்தியர், விசுவாமித்திரர் தவிர, கௌதமர், வசிஷ்டர் ஆகிய முனிவர்களும் இத்தலத்து மறைக்காட்டுநாதரை வழிபட்டுள்ளனர்.
• பரஞ்சோதி முனிவரே இக்கோவில் தலபுராணத்தை அருளிச் செய்துள்ளார்.
• இத்தலத்தில் மேற்குக் கோபுர வாயிலில் உள்ள விநாயகர், இராமர் இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை விநாயகர் விரட்டி அடித்ததால் இத்தலத்திலுள்ள விநாயகர் வீரஹத்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த வீரஹத்தி விநாயகர் ஒரு காலைத் தூக்கிய நிலையில் காட்சி தருகிறார்.
• முதல் பிரகாரத்தில் மணிகர்ணிகை தீர்த்தம், விசுவாமித்திர தீர்த்தம், விக்கினேசுவர தீர்த்தம், சுப்பிரமணிய தீர்த்தம் ஆகியவை உள்ளன. மேலும் திருக்கோடி தீர்த்தமும் உள்ளது. இதிலிருந்து தான் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய நீர் எடுத்து உபயோகிக்கப்படுகிறது.
• இக்கோயிலுக்குள் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால் கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவேரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம்.
• இத்தலத்திற்கு தெற்கே நேர் எதிரே கிழக்கே உள்ள கடல் ஆதி சேது என்னும் கடல் தீர்த்தம்
• புகழ்பெற்ற கோளாறு பதிகத்தை ஞானசம்பந்தர் இங்கேதான் பாடியருளினார்.
• தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம் இது.
• இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் மேலக்குமரர் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றவர்.
• இக்கோயில் வளாகத்திற்கு வெளியில் உள்ள அத்தனை இடங்களிலும் உப்பு கரிக்கும் தண்ணீரே இருக்கும். இத்தலத்தில் மட்டுமே நல்லதண்ணீர் உள்ளது. இவ்வூருக்கு குடிதண்ணீர் இந்த கோயில் வளாகத்துக்குள் இருந்து எடுத்து தான் பயன்படுத்தப்படுகிறது.
• சுதந்திரப் போராட்டத்தின் போது – பெரும் திருப்பு முனையாக அமைந்தது – வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம்.
• 63 நாயன்மார்களோடு சேர்ந்து தொகையறாக்கள் 10 பேர் ஆக மொத்தம் 73 பேருக்கும் இங்கு சிலைகள் உள்ளன.
திருவிழா:
• மாசி மகம் – பிரம்மோற்சவம் – 29 நாட்கள் திருவிழா – அடைக்கப்பட்டிருந்த கதவு திறந்ததை கொண்டாடும் வகையில் திருவிழா நடக்கும். இதில் மக தீர்த்தம் அன்று சுவாமி கடலுக்கு போய் தீர்த்தமாடி வருவது சிறப்பு – 73 மூவர் சுவாமி புறப்பாடும் கைலாச வாகனம் புறப்பாடும் நடக்கும்.
• ஆடிப்பூரம் – 10 நாட்கள் – இது அம்மனுக்கு நடக்கும் பெரிய அளவிலான திருவிழா ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில்,
வேதாரண்யம்,
திருமறைக்காடு- 614 810.
நாகப்பட்டினம் மாவட்டம்.
போன்:
+91- 4369 -250 238
அமைவிடம் :
நாகபட்டினத்திலிருந்தும், தஞ்சாவூரிலிருந்தும் வேதாரண்யத்துக்கு பேருந்து வசதி உள்ளது. திருத்துறைப்பூண்டியிருந்தும் பேருந்து வசதி உள்ளது. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : நாகபட்டினம் – 45 கி.மீ. திருத்துறைபூண்டி – 35 கி.மீ. திருவாரூர் – 63 கி.மீ. கோடியக்கரை – 12 கி.மீ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =