#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் குற்றாலம்.

February 24, 2023 0 Comments

மூலவர் : குற்றாலநாதர்
அம்மன் : குழல்வாய்மொழி, பராசக்தி (2 அம்மன் சன்னதிகள்)
தல விருட்சம் : குறும்பலா
தீர்த்தம் : சிவமதுகங்கை, வட அருவி, சித்ரா நதி
புராண பெயர் : திரிகூட மலை
ஊர் : குற்றாலம்
சிவன் தனது பிரபஞ்ச நடனத்தை நிகழ்த்திய பஞ்ச சபை கோயில்களில் இதுவும் ஒன்றாகும். சிவன் திரிபுர தாண்டவம் செய்த சித்திர சபையைக் குறிக்கும் கோயில் இது.
ஸ்தல வரலாறு :
திருக்கயிலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடக்கிறது. இதை தரிசிக்க பிரம்மா, விஷ்ணு, முப்பத்துமுக்கோடி தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோர் வந்துள்ளனர். இதனால் பூமியின் வடதிசை தாழ்ந்து, தென் திசை உயர ஆரம்பிக்கிறது. இதை சமப்படுத்த சிவன் அகத்தியரை அழைத்து,””நீ ஒருவன் மட்டும் தென்திசை சென்றால் போதும், உலகம் சமநிலைக்கு வந்துவிடும். அத்துடன் இதுநாள் வரை குற்றாலத்தில் விஷ்ணுவாக அருள்பாலித்து வந்த என்னை, சிவலிங்கமாக்கி பூஜை செய்தால் எங்களது திருமணத்தை இங்கிருந்தபடியே தரிசிக்கலாம்,”எனக்கூறி அனுப்பிவைக்கிறார்.
சிவனின் கட்டளைப்படி அகத்தியர் குற்றாலம் வந்து, விஷ்ணு வடிவில் அருள்பாலிக்கும் சிவனை தரிசிக்க செல்கிறார். ஆனால் அங்கிருந்த துவாரபாலகர்கள் சைவ சமயத்தை சேர்ந்த அகத்தியரை கோயிலுக்குள் விடவில்லை. இதனால் வருத்தமடைந்த அவர் இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள இலஞ்சிக்குமாரர் கோயிலுக்குச் சென்றார். அங்கு வெண்மணலில் லிங்கம் பிடித்து, சிவனை வழிபட்டார். தான் குற்றாலத்தில், சிவதரிசனம் செய்ய அருளும்படி வேண்டினார். அவருக்கு காட்சி தந்த முருகன், “”அகத்தியரே! தாங்கள் சிவக்கோலத்தை கலைத்துவிட்டு, வைணவக்கோலத்துடன் கோயிலுக்குள் சென்று பெருமாளை சிவலிங்கமாக்கி வழிபாடு செய்யுங்கள்,”என யோசனை கூறுகிறார்.
முருகனின் யோசனைப்படி அகத்தியரும் நெற்றியில் திருமண் இட்டு, கழுத்தில் துளசி மாலை அணிந்து கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்கிறார். உடனே திருமாலின் கையில் சங்கு இருந்த இடத்தில் மான், துளசி இருந்த இடத்தில் சந்திரன், பொட்டு இருந்த இடத்தில் நெற்றிக்கண், ரத்தினம் இருந்த இடத்தில் பாம்பு என அனைத்தும் மாறியது. அத்துடன் உயரமாயிருந்த திருமாலின் தலையில் கைவைத்து, திருமேனி குறுக குறுக என சிவனை வேண்டி பிரார்த்தனை செய்ய, நெடிய திருமால் குறுகிய சிவனாக மாறி விடுகிறார். அந்த இடத்திலேயே அகத்தியருக்கு திருமண காட்சி கிடைக்கிறது. இன்றும் கூட இத்தலத்தில் பகலில் தேவர்களும், இரவில் அகத்தியரும் பூஜை செய்வதாக கூறப்படுகிறது. அகத்தியர் தன் கைவிரல்களால் சிவலிங்கத்தில் தலையில் வைத்து அழுத்தியதால் இன்றும் கூட லிங்கத்தின் மேல்பகுதியில் விரல்களின் தடம் இருப்பதை காணலாம்.
இலஞ்சியில் அகத்தியர் பூஜித்த சிவன், “இருவாலுக நாயகர்’ என்ற பெயரில் அருளுகிறார். குற்றாலநாதரை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள், முதலில் இந்த சிவனை தரிசித்துவிட்டு இங்கு வருவது விசேஷ பலனைத் தரும். இக்கோயில் திருமால் தலமாக இருந்தபோது, சங்கு வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. தற்போதும் இக்கோயில் சங்கின் வடிவில் இருப்பதைக் காணலாம். திருக்குற்றால மலையிலுள்ள செண்பகாதேவி, கோயிலுக்குச் செல்லும் வழியில், அருவியின் மேற்பரப்பில் இருந்து இந்த வடிவத்தை பார்க்கலாம்.
மகாலட்சுமியின் அம்சமான சங்கு, ஆற்றலின் வடிவமாகும். இதன் ஒலி, சக்தியைத் தருவதாகும். எனவேதான், சிவபூஜையில் சங்கு ஒலிக்கும் வழக்கம் உண்டு. இதன் அடிப்படையிலும், இக்கோயில் சங்கின் அமைப்பில் அமைந்திருப்பதாகச் சொல்வர். இங்கு 8 கால பூஜையிலும், சிவன் சன்னதியில் சங்கு ஊதுகின்றனர்.
இங்குள்ள மையக் கோயில் ஆரம்ப சங்க காலத்திலிருந்தே இருந்ததாகக் கூறப்படுகிறது (சங்க இலக்கியங்களில் பொதிகை மலைகள் பற்றிய பல குறிப்புகள் உள்ளன). சில ஆதாரங்களின்படி, கோச்செங்க சோழன் ஸ்தல விருட்சத்தை இங்கு நட்டார். 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டில் இடைக்கால பாண்டியர்களின் ஆரம்பகால குழுவால் ஒரு கட்டமைப்பு கோயில் கட்டப்பட்டது. பின்னர், கோயில் 10 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் புதுப்பிக்கப்பட்டது, பின்னர் நாயக்கர்களால் சில சேர்த்தல்களைக் கண்டது. கோயில் சுவர்களில் பல கல்வெட்டுகளும் உள்ளன, அவற்றில் முதலாம் பராந்தக சோழன் காலத்து கல்வெட்டுகள் உள்ளன. ஒரு கல்வெட்டு திருக்குற்றாலப் பெருமாள் கோயிலைக் குறிப்பிடுவதாகவும், இது இருந்த விஷ்ணு கோயிலைக் குறிப்பிடுவதாகவும் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
கோயில் சிறப்புகள் :
• பெயர்க்காரணம்: “கு’ என்றால் பிறவிப்பிணி. “தாலம்’ என்றால் தீர்ப்பது என்று பொருள். இத்தலத்தை வழிபட்டால் இம்மையிலும், மறுமையிலும் உள்ள பிறவிப்பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன.
• நான்கு வேதங்கள் 4 வாயிலாகவும், இறைவனின் நடனம் காண பிலவேந்தன் வந்த வழி ஐந்தாவது வாயிலாகவும் அமைந்துள்ளது. இங்குள்ள துவாரபாலகர்களின் அமைப்பு மிகவும் சிறப்பானது. இக்கோயில் வைணவக்கோயிலாக இருந்த போது, அகத்தியர் நேற்று வந்தாரா? என ஒரு துவாரபாலகர் கேட்பதைப்போலவும், இன்னொரு துவார பாலகர் அவர் வரவில்லை என கூறுவதைப்போலவும் உள்ளது.
• நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் என பஞ்சபூத லிங்கங்களையும் இங்கு ஒன்றாக தரிசிக்கலாம். பஞ்ச சபைகளான பொற்சபை, வெள்ளி சபை, தாமிர சபை, ரத்ன சபை, சித்ர சபை என்ற 5 சபைகளில் குற்றால நாதர் கோயில் அருகே சித்ர சபை அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் நடராஜர் சித்திரமாக அருளுகிறார்.
• குற்றாலநாதர் கோயிலுக்கு அருகில் நடராஜர் நாட்டியமாடும் பஞ்சசபைகளில் ஒன்றான சித்திரசபை இருக்கிறது. ஒரு கோயிலின் அமைப்பிலுள்ள இந்த இடம் தாமிரத் தகடால் வேயப்பட்டுள்ளது. இந்த சபையில் நடராஜர், ஓவிய வடிவில் திரிபுரதாண்டவ மூர்த்தியாக காட்சி தருகிறார். பெருமாளை சிவனாக மாற்றிய வரலாறு, மதுரையில் சிவன் நிகழ்த்திய திருவிளையாடல்கள், தட்சிணாமூர்த்தியின் பல்வேறு வடிவங்கள் என பல சித்திரங்கள் மூலிகைளால் வரையப்பட்டுள்ளது.
• பிரகாரத்தில் மகாவிஷ்ணு, ‘நன்னகரப் பெருமாள்’ என்ற பெயரில் அருளுகிறார். தன்னை வேண்டும் பக்தர்களுக்கு நன்மைகள் தருபவர் என்பதால் இவருக்கு இப்பெயர். அருகில் கிருஷ்ணரும் இருக்கிறார். ரோகினி நட்சத்திர நாட்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. முற்காலத்தில் சிவன் சன்னதியில் இருந்த பெருமாளே, இங்கு எழுந்தருளியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
• குற்றாலநாதர் லிங்கத்தின் மீது, அகத்தியரின் விரல் பதிந்த தடங்கள் தற்போதும் இருக்கிறது. அகத்தியர், திருமாலின் தலையில் கை வைத்து அழுத்தியதால், சிவனுக்கு தலை வலி உண்டானதாம். எனவே, இவருக்கு தலை வலி நீங்க தினமும் காலையில் 9.30 மணிக்கு நடக்கும் பூஜையில், தலையில் (லிங்க பாணத்தின் மீது) தைலம் தடவுகின்றனர்.
• பசும்பால், இளநீர், சந்தனம் மற்றும் 42 விதமான மூலிகைகளைச் சேர்த்து 90 நாட்கள் வேகவைத்து, அந்த கலவையில், செக்கில் ஆட்டி எடுத்த தூய நல்லெண்ணெய் சேர்த்து, இந்த தைலம் தயாரிக்கின்றனர். சிவனுக்கு, அபிஷேகம் செய்த தைலம் பிரசாதமாகவும் தருகின்றனர்.
• பல வித உணவு வகைகளை சுவாமிகளுக்கு நைவேத்யம் படைப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், இங்கு மூலவருக்கு கஷாய நைவேத்யம் செய்யப்படுகிறது. தினமும் அர்த்தஜாம பூஜையின் போது சிவனுக்கு, கடுக்காய் கஷாயம் நைவேத்யம் படைக்கின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் கஷாயத்தை ‘குடினி’ என்பர். எனவே இதற்கு ‘குடினி நைவேத்யம்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். அருவி விழும் இடத்தில் இருப்பதால் சிவனுக்கு ஜுரம், குளிர் காய்ச்சல் உண்டாகாமல் இருக்க சிவன் மீதான அன்பின் காரணமாக இவ்வாறு செய்யப்படுகிறது. சுக்கு, மிளகு, கடுக்காய் உள்ளிட்ட மூலிகைகள் சேர்த்து ‘குடினி’ தயாரிக்கப்படுகிறது.
• பிரகாரத்திலுள்ள முருகன், கையில் வில்லேந்தியபடி காட்சி தருகிறார். இவருடன் வள்ளி, தெய்வானை இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தபடி இருக்கின்றனர்.
• ஆடிஅமாவாசையன்று கோயில் முழுவதும் 1008 தீபம் ஏற்றும், ‘பத்ர தீப’ விழா இங்கு வெகு விமரிசையாக நடக்கும்.
• சிவன், மணக்கோலநாதர் என்று பெயரில், அம்பிகையை மணம் முடித்த கோலத்தில் பிரகாரத்தில் காட்சி தருகிறார். அருகில் திருமணத்தை நடத்தி வைத்து பிரம்மா, தாரை வார்க்கும் கோலத்தில் விஷ்ணு, மகாலட்சுமி, திருமணக்காட்சி பெற்ற அகத்தியர் மற்றும் பிருங்கி உள்ளனர். திருமணத்தடை உள்ளவர்கள் இவர்களுக்கு மஞ்சள், பன்னீர் அபிஷேகம் செய்து பாயசம் நைவேத்யம் செய்து வழிபடுகிறார்கள்.
• சக்தி பீடங்கள் 64ல் இது, ‘பராசக்தி பீடம்’ ஆகும். அகத்தியர் திருமால் தலத்தை சிவத்தலமாக மாற்றியபோது சுவாமிக்கு வலப்புறம் இருந்த ஸ்ரீதேவியை, குழல்வாய்மொழி நாயகியாகவும், பூதேவியை, பராசக்தியாகவும் மாற்றினார். குரல் வளம் சரியாக இல்லாதவர்கள், பிறப்பிலேயே பேசாதிருப்பவர்கள் அம்பிகை, குழல்வாய்மொழி நாயகிக்கு சர்க்கரைப் பொங்கல், வடை படைத்து வழிபடுகிறார்கள். ஐப்பசி பூசத்தன்று நடக்கும் திருக்கல்யாண சிவன், அம்பாள் இருவரும் அகத்தியர் சன்னதி அருகில் எழுந்தருளி திருமணக்காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது.
• இக்கோயிலில் பராசக்தி ஸ்ரீசக்ர அமைப்பிலுள்ள பீட வடிவில் காட்சி தருகிறாள். பூமாதேவியாக இருந்து மாறிய அம்பிகை என்பதால் இதற்கு ‘தரணி பீடம்’ (தரணி – பூமி) என்று பெயர். இவள் உக்கிரமானவன் என்பதால், இவளுக்கு எதிரே சிவலிங்க பிரதிஷ்டை செய்துள்ளனர். இவர், ‘காமகோடீஸ்வரர்’ என்றழைக்கப்படுகிறார். ஒன்பது அம்பிகையரின் அம்சமாக இந்த அம்பிகை இருப்பதால், பவுர்ணமியன்று இரவில் இப்பீடத்திற்கு ‘நவசக்தி’ பூசை செய்கின்றனர் அப்போது, பால், வடை படைக்கப்படும். பவுர்ணமி, நவராத்திரி நாட்களில் இந்த பீடத் திற்கு, பன்னீர் கலந்த குங்கும அர்ச்சனை செய்கின்றனர்.
• தலவிருட்சம் பலா மரத்தைச் சுற்றி சிறிய சன்னதி எழுப்பப்பட்டிருக்கிறது. இம்மரத்தின் கீழ் “ஆதிகுறும்பலாநாதர்’ பீட வடிவில் காட்சி தருகிறார். இந்த மரத்தில் வருடத்தின் அனைத்து நாட்களிலும், பலா காய்த்துக் கொண்டிருக்கும். இதை யாரும் பறிப்பதில்லை. இந்த பலாவில் உள்ள சுளைகள், “லிங்க’த்தின் வடிவில் இருப்பது கலியுக அதிசயம். இதை பழமையான நூலான குற்றாலக்குறவஞ்சி, “”சுளையெலாஞ் சிவலிங்கம்” என்று குறிப்பிடுகிறது. விசேஷ காலங்களில் சிவனுக்கு, பலா சுளையை பிரதானமாக படைக்கின்றனர். இதுதவிர பல்லாண்டுகள் பழமையான பலா மரம் ஒன்று பிரகாரத்தில் உள்ளது. இதனை சிவனாகவே பாவித்து, நைவேத்யமும் படைத்து தீபாராதனை செய்கின்றனர்.
• அர்ஜுனன், தான் பூஜை செய்த லிங்கம் வைத்திருந்த சம்புடத்தை (பெட்டி), காசியில் தொலைத்துவிட்டான். வருந்திய அர்ஜுனன் இங்கு வந்தபோது, அந்த பெட்டியைக் கண்டெடுத்தான். அதை இங்கேயே வைத்து பூஜித்துவிட்டுச் சென்றான். இந்த லிங்கம் பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறது. பொருளை தொலைத்தவர்கள் இந்த லிங்கத்திடம் வேண்டிக்கொள்ள, மீண்டும் அவை கிடைக்கும் என்கிறார்கள். பங்குனி உத்திரத்தன்று, அர்ஜுனன் இங்கு லிங்கத்தைக் கண்டான். எனவே, அன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. இவரது சன்னதிக்கு அருகிலிருந்து இந்த லிங்கம், மேற்கு முக விநாயகர், குற்றாலநாதர் விமானம், திரிகூட மலை மற்றும் குற்றால அருவி ஆகிய ஐந்தையும் தரிசிக்கலாம்.
• திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் எப்படி மலையாக இருக்கிறாரோ, அதே போல் குற்றாலநாதர் தலத்தில் குறும்பலாவாக சிவன் வீற்றிருப்பதாக ஐதீகம்.
• பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று சிகரங்கள் குற்றால மலையில் உள்ளன. இவ்வாறு மும்மூர்த்திச் சிகரங்கள் உள்ளதால் குற்றால மலையை ‘திரிகூட மலை’ என்று அழைக்கிறார்கள். ஊழிக் காலங்களில் மீண்டும் உலகைப் படைத்துக் காத்து ஈசன் நிலையாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் தலம் இந்த குற்றாலம் ஆகும்.
• திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், பட்டினத்தார், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம்.
• அரியும் அரனும் ஒன்று என்ற தத்துவத்தை உள்ளடக்கி நிற்கிறது குற்றாலநாதர் ஆலயம். ஏனைய ஆலயங்களில் லிங்கத் திருமேனி இருக்கும் கருவறையின் பின்புறம் லிங்கோத்பவர் கோயில் கொண்டிருப்பார். இங்கோ, திருமால் அமர்ந்திருக்கின்றார்.தவிரவும் பிராகாரச் சுற்றில் நன்னகரப் பெருமாள் தனிக்கோயில் கொண்டுள்ளார்.திருக்குற்றாலநாதர், அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்ட விஷ்ணு அம்சங்கொண்ட சிவலிங்கமாகும்.
• காளிகா புராணமோ திருக்குற்றாலத்தில் திரி மூர்த்திகளும் இணைந்தே அருளாட்சி புரிவதால் திரிகூட மலைக்கு வாருங்கள் என்கிறது.
திருவிழா:
• ஆடி அமாவாசையில் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.
• நவராத்திரியில் பராசக்திக்கு 10 நாள் திருவிழா.
• ஐப்பசி, பங்குனியில் பிரம்மோற்ஸவம்,
• மார்கழி திருவாதிரை,
• தை மகத்தில் தெப்போற்ஸவம்
• பங்குனி உத்திரம்.
• ஆடி அமாவாசையன்று கோயில் முழுதும் 1008 தீபம் ஏற்றும், “பத்ரதீப’ விழா இங்கு வெகு விமரிசையாக நடக்கும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு குற்றாலநாதசுவாமி திருக்கோயில்,
குற்றாலம்
தென்காசி மாவட்டம் – 627 802.
போன்:
+91-4633-283 138, 210 138
அமைவிடம் :
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் இடையே தென்காசியில் இருந்து தென்மேற்கே 5 கி.மி. தொலைவிலும், செங்கோட்டையில் இருந்து 7 கி.மி. தொலைவிலும் குற்றாலம் சிவதலம் உள்ளது. தென்காசியிலிருந்தும் செங்கோட்டையிலிருந்தும் அடிக்கடி பேருந்துகள் உள்ளன. மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் இருந்தும் தென்காசி செல்ல பேருந்து வசதிகள் நிறைய உள்ளன. ரயிலில் செல்ல விரும்புவோர் சென்னை – செங்கோட்டை பொதிகை விரைவு வண்டியில் செங்கோட்டை சென்று அங்கிருந்து பேருந்தில் குற்றாலம் செல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 13 =