#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் உத்தரகோசமங்கை

February 8, 2023 0 Comments

மூலவர் : மங்களநாதர்
அம்மன் : மங்களேஸ்வரி
தல விருட்சம் : இலந்தை
ஊர் : உத்தரகோசமங்கை
மாவட்டம் : ராமநாதபுரம்
மிகவும் பழமையான திருக்கோயில். இத்தலத்தின் பழமையை உணர்த்துவதாக மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது என்னும் பழமொழி இப்பகுதியில் வழங்குகிறது. மேலும், இத்தலத்தின் வரலாற்றுப் புராணத்தில் இராவணனின் மனைவி மண்டோதரியின் பெயர் குறிக்கப் படுவதாலும் கல்வெட்டுக்களில் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாலும், இக்கோயிலின் பழைமை புலனாகிறது. இத்துடன், சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் இலவந்திகைப் பள்ளி என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்பாரும் உளர். மேற்குறித்த கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது.
சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, இங்கிருந்த அடியார் சிவயோகிகள் முதலிய பல்லாயிரவர்க்கும் ஞானோபதேசம் செய்து முத்தி நல்கி, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம், உத்தரகோசமங்கை ஆகிய இரு கோயில்களும் முதலில் இலங்கையில் இருந்த கண்டி மகாராஜாவால் கட்டப்பட்டு, பின்பு பலராலும் திருப்பணிகள் செய்யப்பட்டு – ஆதிசைவர்கள் வசமிருந்து பின்னரே இராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டதாம். அதுமுதல் இன்றுவரை இராமநாதபுர சமஸ்தான ஆளுமைக்கு உட்பட்டதாகவே இருந்து வருகிறது இத்தலம்.
உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் கோயில் பழம்பெருமை மிக்கது.
ராவணனின் மனைவியான மண்டோதரிக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது. உலகிலேயே சிறந்த சிவபக்தனைத்தான் திருமணம் முடிப்பேன் என அவள் அடம் பிடித்தாள். ஈசனை தியானித்தாள். தென்இலங்கை அழகமர் மண்டோதரிக்கு, அவளுடைய தவத்தை ஏற்றுக் காட்சி தந்தருளப் பெருமான் உள்ளங்கொண்டார். தன்பாலிருந்து ஐம்புலனும் அடக்கி அருந்தவம் புரிந்து வந்த ஆயிரம் முனிவர்களைப் பார்த்து “மண்டோதரிக்கு (வண்டோதரி) அருள் செய்ய யாம் இலங்கை மூதூர் செல்கின்றோம். நீவிர் அனைவரும் இத்தலத்தை விட்டு அகலாது இருப்பீராக! எம்மால் ஒப்படைக்கப்படும் இவ்வேதாகமச் சுவடிகளை கைவிடாது காத்து வருவீராக! இலங்கையரசன் இராவணனால் எப்போது எம்திருமேனி தீண்டப்படுகிறதோ, அப்போது அதற்கு அடையாளமாக, இத்திருக்குளத்தின் நடுவே அக்கினிப் பிழம்பு தோன்றும்” என்று வானொலியாக அருள் செய்தார்.
மாதர்குலத் திலகமாக விளங்கிய மாதரசி மண்டோதரி (வண்டோதரி) தன் உள்ளத்தில் எவ்வடிவில் இறைவனை நினைத்துத் தவமிருந்தாளோ அவ்வடிவத்தையே ஏற்று, அழகிய திருவுரக் கொண்டு இறைவன் சென்று அவளுக்குக் காட்சி தந்தார். தரிசனம் பெற்ற மாதரசி, தன்னை மறந்து, பரவசமாகி, கண்களாரக் கண்டு கைகளாரத் தொழுது பிரமித்துப்போய் அசையாது நின்றாள். அப்போது வெளியே சென்றிருந்த இராவணன் உள்ளே வந்தான். இறைவனும் அழகான குழந்தையாக மாறிக் காட்சியளிததார அவன் அக்குழந்தையைக் கண்டு அதன் அழகில் மயங்கி ‘யார் பெற்றதோ இது’ என்று வினவினான். வண்டோதரி, “யாரோ ஒரு தவமகள் வந்து இக்குழந்தையைத் தந்து சென்றாள்” என்றாள். குழந்தையின் உடம்பில் மாறிமாறித் தோன்றிய வண்ணத்தைக் கண்டு உள்ளம் வியப்புற்ற இராவணன் அக்குழந்தையைக் கையாலெடுத்துத் தழுவி மகிழ்ந்தான். அவ்வளவில் – இறைவன் திருமேனியை இராவணன் தீண்டியதால் – குளத்தில் அக்கினிப் பிழம்பு தோன்றியது. அதுகண்ட முனிவர்கள் செய்வதறியாது திகைத்து, அதில் வீழ்ந்து மறைந்தனர். அவர்களுள் மாணிக்கவாசகர் மட்டும் தம் அறிவால் உணர்ந்து, இறைபணியில் நிற்றலே கடமையென்று முடிவு செய்து, அத்தீர்த்தத்தின் கரையிலேயே அமர்ந்திருந்தார்.
மூதாட்டி ஒருத்தி வந்து மண்டோதரி (வண்டோதரி)யிடமிருந்து குழந்தையைப் பெற்றுச் சென்றாள்.இறைவன் திரும்ப வந்து குளக்கரையில் இருந்தவர் மூலமாகச் செய்தியறிந்தார்.மூழ்கிய 999 பேர்களுக்கும், மூழ்காதிருந்த மாணிக்கவாசகருக்கும் இறைவன் உமையோடு விடைமீதமர்ந்து காட்சி தந்து தம் சந்நிதியில் தம்முடன் அவர்களை இருத்திக் கொண்டார்.இதனால் பெருமானுக்குக் காட்சி கொடுத்த நாயகன் என்ற பெயரும் வழங்கலாயிற்று.ஆயிரவர்களும் ஒவ்வொரு இலிங்கவடிவில் இறைவனோடு ஒன்றினர் – அதுவே சஹஸ்ரலிங்கமாகத் தரிசனம் தருகின்றது.இக்கோயிலை வலம் வந்து வழிபடுவோர் எல்லாச் சித்திகளையும் அடைவர் என்பது தலவரலாறு.
• இறைவன் சுயம்புவாக ஒரு இலந்தை மரத்தடியில் தோன்றினார். அந்த மரம் இன்னும் உள்ளது. வேறு எந்த தலத்திலும் காண முடியாத அற்புதமான மரகத நடராஜர் சிலை இங்கு உள்ளது.
• இத்தலத்தில் நடராசர் கோயிலுக்குப் பக்கத்திலேயே சஹஸ்ர லிங்கக் கோயிலும் தனிக் கோயிலாக உள்ளது.
• மாணிக்கவாசகருக்கு தன்னைப்போலவே லிங்கவடிவம் தந்து கவுரவித்தார். இப்போதும் இத்தலத்தில் மாணிக்கவாசகர் லிங்கவடிவில் காட்சி தருகிறார்.
• பொதுவாக, ஒரு கோயிலுக்கு சென்றால் ஒருமுறை வணங்கி விட்டு, உடனேயே திரும்பி விடுகிறோம். ஆனால் ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையத்தக்க வகையிலான கோயில் உத்தரகோசமங்கை
• வேறு எந்த தலத்திலும் காண முடியாத அற்புதமான மரகத நடராஜர் சிலை இங்கு உள்ளது. மார்கழி திருவாதிரை அன்று மட்டும் இதற்கு பூஜை உண்டு. மற்ற நாட்களில் சந்தனக்காப்பு சார்த்தப்பட்டிருக்கும்.
• ஈஸ்வரத் தலங்களிலேயே இங்கு மட்டும் தான் இறைவனுக்கு தாழம்பூ சார்த்தலாம் என்பது சிறப்பான செய்தி. ஏனெனில் இறைவனின் முடியைக் கண்டதாக தாழம்பூவின் சாட்சியுடன் பொய் சொன்ன பிரம்மா இத்தலத்தில் வணங்கி சாப விமோசனம் பெற்றார்.
• உத்தரகோச மங்கை கோவிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர். பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில் சிறந்து இருந்த போது, அவர்களது. தலைநகராக சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை இருந்தது..
• திருவாசகத்தில் 38 இடங்களில் புகழ்ந்து பாடப்பட்டுள்ள ஸ்தலம்.
• மாணிக்கவாசகப் பெருமான், வேதவியாசர், காகபுஜண்டரிஷி, மிருகண்டு முனிவர், வாணாசுரன் ஆகியோர் வழிப்பட்ட திருத்தலம்
• நடராசருக்குரிய ஆறு அபிஷேகக் காலங்களிலும் இச்சந்நிதியில் இறைவன் தாண்டவமாடிக் காட்சித் தரும் ஐதீகம் நடைபெறுகிறது.
• சிதம்பரத்தைப் போலவே இங்கேயும் நடராஜர் பெருமான் தான் விசேஷம். இங்கே உள்ள பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார். இந்த விக்கிரகத் திருமேனியையும் கல்வெட்டுக் குறிப்புகளையும் பார்க்கும் போது, நடராஜர் சிலையும் தொன்மையானது எனப் புலப்படுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்!
• கோயில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர் என்பது வித்தியாசமான அமைப்பாக விளங்குகிறது. அதேபோல், முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான் என்று ஆதி சிதம்பர மகாத்மியம் எனும் புராதனமான நூல் விவரிப்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்
• இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம்.
• உத்தரம் – உபதேசம்; கோசம் – ரகசியம்; மங்கை – பார்வதி. பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்தமையால் இத்தலம் உத்தரகோசமங்கை என்னும் பெயர் பெற்றது.
• அக்கினி தீர்த்தம் கோயிலுள் உள்ளது. இது தவிர, கோயிலுக்கு வௌ¤யில் பிரம்ம தீர்த்தமும்; சற்றுத் தள்ளி ‘மொய்யார்தடம் பொய்கை’த் தீர்த்தமும், வியாச தீர்த்தம், சீதள தீர்த்தம் முதலியனவும் உள்ளன. கோயிலுள் மங்கள தீர்த்தமும் உள்ளது.
• கீர்த்தித் திருவகவலில் “உத்தரகோச மங்கையுள் இருந்து, வித்தக வேடம் காட்டிய இயல்பும்” என்று வருந்தொடர், இத்தல புராணத்தில் 8ஆம் சருக்கத்தில் சொல்லப்படும் – ஆயிரம் முனிவர்கட்கும் இறைவன் தன் வடிவம் காட்டிக் காட்சி தந்த வரலாற்றைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இதையொட்டியே இத்தலத்துப் பெருமானுக்கு “காட்சி கொடுத்த நாயகன்” என்ற பெயரும் வழங்குகிறது. இதுதவிர, ‘மகேந்திரம்’ என்பது உத்தரகோசமங்கையைக் குறிக்கும் என்று கொண்டு, இறைவன் அம்பிகைக்கு உபதேசித்ததையே “மகேந்திரம் அதனில், சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்” என்ற தொடர் குறிப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள்.
• இங்குள்ள நடராசமூர்த்தி ஆதிசிதம்பரேசர் என்றழைக்கப்படுகிறார். இங்குள்ள சபை இரத்தினசபை எனப்படுகிறது.
• அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடப்பெற்ற கோயில்
• அம்பிகை காண இங்கு அறையில் ஆடிய நடனத்தைத்தான் அம்பலவாணர், தில்லையில் அம்பலத்தில் ஆடினார் என்று சொல்லப்படுகிறது.
• டெல்லியை தலைநகராகக் கொண்டு 1300-ம் ஆண்டு ஆட்சி செய்து வந்த அலாவுதீன் கில்ஜி, உத்தரகோச மங்கையில் மரகதகல் நடராஜர் சிலை இருப்பதை அறிந்து அதை கொள்ளையடிக்க முயன்றான். மங்களநாதர் அருளால் அவன் முயற்சிக்கு வெற்றிகிடைக்கவில்லை.
• காகபுஜண்ட முனிவருக்கு கவுதம முனிவரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான் நீங்கியது.
• சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் இத்தலத்தில் தான் ஞான உபதேசம் பெற்றனர்.
• காரைக்கால் அம்மையாரும் இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டு சென்றுள்ளார்.
• 11 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். சிவனாரை பிராகாரமாகச் சுற்றி வரும் போது மகாலட்சுமியை வழிபடலாம். ராஜகோபுரத்தில் சரபேஸ்வரர் சிலை என அற்புதங்களும் ஆச்சரியங்களும் கொண்ட திருத்தலம் இது!
• உத்தர கோசமங்கை திருத்தலமானது ஸ்ரீராமருக்கு ஈசன் சிவலிங்கம் வழங்கி சேது சமுத்திரத்தில் பாலம் போட உத்தரவு வழங்கிய இடமாகும்.
• இத்தலத்தில் மாணிக்கவாசகர் பாடிய பொன்னூஞ்சல் பாடலை குழந்தைகளை தாலாட்டும்போது பாடினால், குழந்தைகள் உயரமாகவும், உன்னத மாகவும் வாழ்வார்கள் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.
• ஆண்டுக்கு இரண்டு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது. ஒன்று சித்திரைத் திருவிழா, இன்னொன்று மார்கழித் திருவாதிரைத் திருவிழா.
• இத்திருத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளது.
• சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.
சித்திரை மாதம் திருக்கல்யாண விழா 12 நாட்கள்,
மார்கழி திருவாதிரை திருவிழா 10 நாட்கள் நடக்கின்றன.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல்11 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் திருக்கோயில்,
உத்தரகோசமங்கை – 623 533,
ராமநாதபுரம் மாவட்டம்.
+91 94869 53009
04567 221 213.
மதுரை – இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில்; பரமக்குடி, சத்திரக்குடி முதலியவற்றைத் தாண்டி, (இராமநாதபுரத்திற்கு 10 கி.மீ. முன்பாகவே) வலப்புறமாக பிரிந்து செல்லும் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் சென்று, உத்தரகோசமங்கை Railway level crossing தாண்டி, 7-கி.மீ. சென்றால் இத்தலத்தையடையலாம். சாலை பிரியுமிடத்தில் கோயில் பெயர்ப் பலகையுள்ளது. கோயில் வரை வாகனங்கள் செல்லும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + fourteen =