#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கொட்டையூர்

September 5, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கொட்டையூர்
220.#அருள்மிகு_கைலாசநாதர்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : கோடீஸ்வரர், கைலாசநாதர்
அம்மன் : பந்தாடு நாயகி, கந்துக கிரீடாம்பாள்
தல விருட்சம் : வில்வம், கொட்டை (ஆமணக்கு)
தீர்த்தம் : அமுதக்கிணறு
புராண பெயர் : திருக்கொட்டையூர்
கோடீச்சரம், பாபுராஜபுரம்
ஊர் : கொட்டையூர்
மாவட்டம் : தஞ்சாவூர்
ஸ்தல வரலாறு:
திரிஹர்த்த தேசத்தை ஆண்டவர் சத்தியரதி. இவரது மகன் சுருசி ஒரு சாபத்தின் காரணமாக பிசாசு வடிவம் பெற்றான். இவனது உருவைக்கண்டு ஊரே நடுங்கி ஓடியது. தன்னைக் கண்டாலே ஓடும் மக்களை தன்வசம் மீண்டும் இழுக்க அவன் சிவபெருமானை வணங்கினான். அவரது அருளாசியின்படி கொட்டையூர் என்ற தலத்திற்கு சென்று வணங்கும்படி கூறினார். அவனும் கொட்டையூருக்கு வந்து இங்குள்ள தீர்த்தத்தில் மூழ்கினான். இந்த தீர்த்தம் ஏரண்ட முனிவரால் உருவாக்கப்பட்டது. இதை அமுதக்கிணறு என்கிறார்கள். இந்தக் கிணற்று நீரில் நீராடி முன்பைவிட வனப்பான உருவம் பெற்றான். இப்போதும் இந்தக்கிணறு இங்கு உள்ளது. பல பெண்கள் இந்தக்கிணற்று நீரை தங்கள் தலையில் தெளித்து அழகிய வடிவம் பெறலாம் என நம்புகிறார்கள்.
காவிரி நதி திருவலஞ்சுழியில் வலம் சுழித்துச் செல்கிறது. அவ்வாறு வலம் சுழித்துச் சென்ற காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு பெரிய பிலத்துவாரம் (பள்ளம்) ஏற்பட்டது. பாய்ந்து வந்த காவிரியாறு ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில் இறங்கி விட்டது. அது கண்ட சோழ மன்னன் கவலையுற்றுத் திகைத்தபோது, அசரீரியாக இறைவன், “மன்னனோ மகரிஷியோ இறங்கி அப்பாதாளத்தில் பலியிட்டுக் கொண்டால் அப்பிலத்துவாரம் மூடிக்கொள்ளும். அப்போது காவிரி வெளிப்படும்” என்றருளினார். அதுகேட்ட மன்னன் கொட்டையூர் என்ற இந்த ஊரில் ஏரண்டம் என்னும் கொட்டைச் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ள இடத்தில் தவம் செய்த ஏரண்ட முனிவரையடைந்து அசரீரி செய்தியைச் சென்னான். இதைக் கேட்ட ஏரண்ட முனிவர் நாட்டுக்காகத் தியாகம் செய்ய முன்வந்தார். அவர் அந்த பிலத்துவாரத்தில் இறங்கி தன்னைப் பலி கொடுக்கவும் பள்ளம் மூடிக்கொள்ள காவிரி வெளி வருகிறாள். இந்த ஏரண்ட முனிவருக்கு கோடீஸ்வரர் கோவிலில் தனி சந்நிதி உள்ளது.
கோயில் சிறப்புகள்:
•ஆமணக்கு கொட்டைச் செடியின் கீழ் சுயம்பு மூர்த்தியாக லிங்கம் வெளிப்பட்டதால் ஊர் கொட்டையூர் என்று பெயர் பெற்றது.
•இறைவன் கோடீஸ்வரர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மூலவர் மீது பாணம் முழுவதிலும் கொட்டை கொட்டையாக – ஆமணக்குச் செடியின் காய் காய்த்த மாதிரி காணப்படுகிறது.
•அம்பாள் பந்தாடு நாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. அம்பாள் சிலையின் ஒரு கால் பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது. செய்த பாவங்களை தன் காலால் எட்டி உதைத்து அருள்செய்பவள் என்ற பொருளில் இவ்வாறு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள் முன்னேற இந்த அம்மனை வழிபட்டுச் செல்வது வழக்கம். இங்குள்ள அமுதக் கிணறு தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டால் புறத்தூய்மை மட்டுமின்றி அகத்தூய்மையும் கிடைப்பதாகவும் மேலும் கல்வி, அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றை இந்த தீர்த்தம் தருவதாக நம்பிக்கை.
•சோழ மன்னனுக்கும் ஏரண்ட முனிவருக்கும் கோடி லிங்கமாகக் காட்சி தந்தமையால் கோடீஸ்வரர் என்று சுவாமிக்கும் கோடீச்சரம் என்று கோயிலுக்கும் பெயர் வந்தது. ஏரண்டம் என்றால் ஆமணக்கு கொட்டைச் செடியைக் குறிக்கும். அதன் கீழிருந்து தவம் செய்தமையால் அம்முனிவர் ஏரண்ட முனிவர் என்று பெயர் பெற்றார்.
•இத்தலத்திற்கு வில்வாரண்யம், ஏரண்டபுரம் என்றும் வேறு பெயர்கள் உண்டு.
•இத்தலத்தில் மார்க்கண்டேயர் இறைவனை வழிபட்டுள்ளார்.
•பத்திரயோகி முனிவருக்கு இறைவன் கோடி விநாயகராக, கோடி அம்மையாக, கோடி முருகனாக, கோடி தம் திருவுருவாகக் காட்சி தந்ததால் இறைவன் கோடீஸ்வரர் எனப்பட்டார்.
•கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. பிராகாரத்தில் விநாயகர், முருகன், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன.
•இத்தலத்தில் புண்ணியம் செய்தாலும் பாவஞ் செய்தாலும் கோடி மடங்காகப் பெருகும் என்பது நம்பிக்கை. இங்குப் பாவஞ் செய்தால் கோடி மடங்காகப் பெருகுவதால் அதற்குக் கழுவாயே இல்லாமற் போகும் என்பதை “கொட்டையூரிற் செய்த பாவம் கட்டையோடே” என்னும் பழமொழியால் அறியலாம்.
•திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஐந்து மூர்த்திகளையும் காண்போர் வேறு தலங்களில் கோடித் திருவுருவம் கண்ட பயனைடவர். இங்குச் செய்த எப்புண்ணியமும் பிற தலங்களிற் செய்த புண்ணியங்களினும் கோடி மடங்கு பயன் தருமென்று தல புராணம் கூறுகிறது.
•இக்கோவிலின் தீர்த்தங்கள் காவிரியாறு, அமுதக் கிணறு எனகிற கோடி தீர்த்தம் என்பவை. அமுதக் கிணறு கோயிலின் முதல் பிரகாரத்தில் உள்ளது.
•தல விருட்சமாக ஆமணக்கு கொட்டைச் செடி உள்ளது.
•இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. உட்பிரகாரத்திலுள்ள முருகப் பெருமான கோடி சுப்பிரமணயர் என்ற பெயருடன் உள்ளார். இவர் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கோவிலின் நுழைவாயிலில் தண்டாயுதபாணி சந்நிதி உள்ளது.
•திருநாவுக்கரசர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இப்பதிகம் திருக்கொட்டையூர் மற்றும் திருவலஞ்சுழி (காவிரி தென்கரைத் தலம்) ஆகிய இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்களுக்கும் பொதுவானது.
திருவிழா:
பங்குனி உத்திரம், திருவாதிரை, சிவராத்திரி, புரட்டாசி மாதத்தில் அம்புபோடும் திருவிழா ஆகியவை முக்கியமானது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை மணி 3 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கோடீஸ்வரர், கைலாசநாதர் திருக்கோயில்
கொட்டையூர்-612 002,
தஞ்சாவூர்.
போன்:
+91 435 245 4421
அமைவிடம்:
கும்பகோணத்திலிருந்து திருவையாறு செல்லும் ரோட்டில் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது. தஞ்சாவூரிலிருந்து 42 கி.மீ.
#templesofsouthindia #templesoftamilnadu #templeshistory #templesofhindus #temple #ஸ்தலம் #தலவரலாறு #ஆலயம்அறிவோம் #கோயில்கள் #ஆன்மீகம் #கோவில்வரலாறு #templepost #templesecrets #FamousTemples #DrAndalPChockalingam #SABP #திருக்கொட்டையூர் #கோடீஸ்வரர் #கைலாசநாதர் #பந்தாடுநாயகி #கந்துககிரீடாம்பாள் #tirukottayur #kodiswarar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =