அம்மா – சிறகுகள் 10
அம்மா
சிறகுகள் 10
இன்றைய தீபாவளி சென்னையில்
அமோகமாக மக்களால் கொண்டாடப் பட்டது
இரவு வெளியே வாகனம் ஓட்ட முடியாத அளவிற்கு புகை மூட்டம்
அந்த அளவிற்கு மக்கள் வெடித்து தீர்த்துவிட்டார்கள்.
எனக்குத் தெரிந்த ஒருவரும் ஒவ்வொரு தீபாவளி அன்றும் லட்சங்களை கரி ஆக்குவார்
இந்த தீபாவளியும் அவருக்கு விதிவிலக்கான தீபாவளியாக எப்படி இருக்க முடியும்???
ஆட்டம்
பாட்டம்
கொண்டாட்டம்
வாண வேடிக்கைகள்
வந்தவருக்கெல்லாம் உணவு
கைநீட்டிய அனைவருக்கும் பணம்
பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பதால் இங்கே நடக்கும் அத்தனை கொண்டாட்டங்களும்
அவர்கள் கண்டு களித்திட பிரத்தியோக வீடியோ பதிவாக படம் பிடிக்கப்பட்டது தனிக்கதை
சத்தம் அகன்றது
நெருப்பு அணைந்தது
புகை காற்றோடு கலந்து போனது
அனைவரும் இப்போது தூங்க சென்று விட்டார்கள் இத்தனைக்கும் காரணமான எனக்குத் தெரிந்தவர் வீட்டில்…
எல்லாம் இருந்தது எனக்கு தெரிந்தவர் வீட்டில்…
அவரைப் பெற்றெடுத்து
படிக்க வைத்து
பெரிய ஆளாக்கிய
அவரைப் பெற்ற அவர் அம்மா இருப்பது மட்டும் முதியோர் இல்லத்தில்.
காரணம் எனக்கும் என் மனைவிக்கும் வயதாகி விட்டதால் இங்கு இருந்து
அவர் பார்க்கப்படுவதை
கவனிக்க படுவதை விட
அதிகமாக பார்த்து கவனிக்கபடுவார்
அவர் இருக்கும் இடத்தில்
அம்மாவை முதியோர் இல்லத்தில் அனாதையாக
விட்டுவிட்டு
வைத்துவிட்டு
இவர் எல்லாம் தீபாவளி கொண்டாட வில்லை என்று யார் கேட்டது என்று அந்த வீட்டு வேலைக்காரன் போதையில் புலம்பிக் கொண்டே சென்றது ஏனோ எனக்கு இப்போதும் மனதை பிசைய கூடிய விஷயமாகவே இருந்து கொண்டிருக்கின்றது.
பிச்சைக்காரன் படத்தில்
அருமையான
ஒரு பாட்டு:
நூறு சாமிகள் இருந்தாலும்
அம்மா உன்னைப்போல் ஆகிடுமா
கோடி கோடியாய் கொடுத்தாலும்
நீ தந்த அன்பு கிடைத்திடுமா
ரத்தத்தை நான்
தந்தாலுமே உன் தியாகத்துக்கு ஈடாகுமா
நான் பட்டக் கடன்
தீா்ப்பேன் என்றால் ஓா் ஜென்மம் போதாதம்மா
இந்தப் பாட்டை எப்போது நான் கேட்டாலும் என்னை நிறுத்தி யோசிக்க வைக்கும்.
உண்மை கதையோ
சினிமா கதையோ
மகன் அம்மா என்றால் இப்படித்தான் என்று
நம்மில் பெரும்பான்மையோர் வளர்க்கப் பட்டு இருப்போம்
பலர் இப்படி இருக்க
சிலர் மேல் சொன்னதுபோல் இருக்கத்தானே செய்கிறார்கள்
இப்படிப்பட்டவர்கள் இருக்கத்தான் போகிறார்கள் என்றால்
தீபாவளியே நீ எல்லாம் இனி எங்களுக்கு அவசியமா???
என்ற கேள்வியுடன் வராத தூக்கத்தை வரவழைக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன்.
கீழ் கேட்ட சொல்வடை
வீட்டின் பெயரோ அன்னை இல்லம்
அன்னை இருக்கும் இடமோ அனாதை இல்லம்..
நான் வாழும் நாளிலேயே உண்மையாகி போனதைக் கண்டு அதிர்ச்சியுடன் சிறகை ஒடுக்கிக் கொள்கின்றேன்.
என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்