வாஸ்து என்றால் என்ன?
உயிரற்ற ஜடப்பொருட்களான செங்கல் , சிமெண்ட், மணல், கம்பிகள், வெட்டப்பட்ட மரம் போன்ற வஸ்துகளை சரியான விகிதத்தில் கலந்து நிலத்தின் மேல் கட்டிடமாக எழுப்பி உயிரோட்டம் கொடுப்பதே வாஸ்து
வாஸ்து அறிவியல் சார்ந்த விஷயமா?
பொதுவாக உலகில் உள்ள கண்டுபிடிப்புகள் அனைத்தும் இரண்டு முறைகளில் வகைப்படுத்தப்படும். முதன்மையாக
தர்க்கரீதியான முடிவு ( Logical Conclusions )
குறிப்பிட்ட கண்டுபிடிப்பை தர்க்கரீதியாகத்தான் மெய்ப்பிக்க முடியும் என்பதற்கு கீழ்க்கண்ட உதாரணத்தை எடுத்து கொள்வோம்.
( உ . ம் )
A = B என்றும் B=C என்றும் வைத்து கொண்டால் A=C என்று மெய்ப்பிக்க முடியும்
அடுத்ததாக தர்க்கரீதியாக மெய்ப்பிக்க முடியாத விஷயங்களை, புள்ளிவிவரங்களை (Statistics) கொண்டுதான் மெய்ப்பிக்க முடியும் / சொல்ல முடியும். இது அனுபவத்தை அடிப்படையாக கொண்ட ஒரு விஷயமாகும்.
இதே போன்று வாஸ்து என்பது அறிவியலே என்று தர்க்கரீதியாக அனைத்து விஷயங்களையும் மெய்ப்பிக்க முடியாவிட்டாலும் புள்ளி விவரங்கள் அடிப்படையில் அனைத்தையும் மெய்ப்பிக்க முடியும்.
வாஸ்து என்பது இந்து மதம் சம்பந்தப்பட்ட விஷயமா?
கட்டாயமாக வாஸ்து என்பது இந்து மதம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. வாஸ்துவில் யந்திரம், மந்திரம், தந்திரம், பூஜை, தாயத்து மற்றும் கண்கட்டு வித்தைகளுக்கு வேலையே இல்லை
குறிப்பாக சொன்னால் பரிகாரங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டதே வாஸ்து
வீடு, நிலம் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள் ?
- வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், காம்ப்ளக்ஸ்கள், அபார்ட்மென்ட்கள், கல்யாண மண்டபங்கள், இதர பெரிய கட்டிடங்கள் கட்டுவதற்காக நாம் வாங்கப்போகும் நிலம் முதல் தரமான மனையா, இரண்டாம் தரமான மனையா, மூன்றாம் தரமான மனையா, நான்காம் தரமான மனையா என்பதை அறிந்து முதல் தரமான மனையை மட்டுமே வாங்க வேண்டும்.
- வாங்கும் இடத்தின் சுற்றுப்புற/சுற்றுசூழல் அமைப்பு அறிந்து வாங்க வேண்டும்.
- நிலம் சதுரமா? நீண்ட சதுரமா? கோணலாக உள்ளதா? என்பதை மிக முக்கியமாகப் பார்க்கவேண்டும்.
- வாங்கிய நிலத்தில் வீடு கட்டும் போது தேவைப்படும் இடங்களில் – இடைவெளி கொடுக்க இடம் உள்ளதா? என்பதை பார்க்க வேண்டும் .
- நமது இடத்தை ஒட்டி விலைக்கு ஒரு இடம் வந்தால் வாங்கலாமா? வாங்குவதால் நம் வீட்டு வாசல்கள் நீச்சம் ஆகிவிடுமா? என்பதை பார்க்க வேண்டும்.
- நம் வீட்டுக்கு ஒட்டிய அடுத்த நிலத்தை வாங்கினால் நமக்கு நன்மையா?கெடுதலா? என்பதை பார்க்க வேண்டும் .
- நம் இடத்திலிருந்து ஒரு பகுதியை விற்கும் போது எந்த பகுதியை விற்றால் நன்மை, எந்த பகுதியை விற்றால் பாதிப்படைவோம்? என்பதை பார்க்க வேண்டும்.
- நிலத்திற்குத் தெரு தாக்கம் உள்ளதா? என்பதை கவனிக்க வேண்டும்.
- வீடு அருகில் வாஸ்து-க்கு வக்கிரமான அதே சமயம் அகற்றமுடியாத மேடுகள், பள்ளங்கள் உள்ளதா? இருந்தால் வாங்கலாமா? என்பதை கவனிக்க வேண்டும்.
- நம் வீட்டு அருகில் ஓடை, ஆறு உள்ளதா? இருந்தால் வாங்கலாமா? என்பதை கவனிக்க வேண்டும்.
- நம் நிலத்துடன் தெரு முடிவடைந்தால் அந்த இடத்தை வாங்கலாமா? என்பதை பார்க்க வேண்டும். இவ்வாறு பல கோணங்களில் அறிந்து ஆராய்ந்து ஓர் இடத்தை வாங்க, விற்க முடிவு செய்ய வேண்டும்.
எப்போதெல்லாம் வாஸ்து ஆலோசனைகள் பெற்றால் நல்லது ?
- வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், காம்ப்ளக்ஸ்கள், அபார்ட்மென்ட்கள், கல்யாண மண்டபங்கள் ,இதர எந்த ஒரு கட்டிடங்களுக்காகவும் இடங்களை வாங்குவதற்கு முன்பு வாஸ்து ஆலோசனை பெற வேண்டும்.
- மேற்படி கட்டிடங்களுக்கு ஆரம்ப பிளான் (initial plan) போடும்போது வாஸ்து ஆலோசனை பெறவேண்டும்
- பழைய வீடுகள், தொழிற்சாலைகள் வாங்குவதற்கு முன்பு வாஸ்து ஆலோசனை பெறலாம்.
- தொழில் முடக்கம், பணக்கஷ்டம், குடும்பத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் கஷ்டங்களின் வாஸ்து பலனறிவதற்கும், மாற்றி அமைப்பதற்கும் வாஸ்து ஆலோசனைகளை பெறவேண்டும்.
- பூமிக்கடியில் கட்டிடம் கட்டும் போது அதாவது “செல்லார்” கட்டிடம் கட்டும் போது வாஸ்து ஆலோசனைகளை பெறவேண்டும்.
- நமது நிலத்தை, வீட்டை ஒட்டியுள்ள பகுதியை விலைக்கு வாங்கும்போது அதை வாங்கினால் நல்லதா? கெட்டதா? என்பதற்கு ஆலோசனை பெற்றிடவேண்டும்.
- நாம் குடியிருக்கும் வீட்டையோ அல்லது கட்டிடங்களையோ நமது தேவைக்கு கொத்தனார் மூலம் மாற்றம் அல்லது கட்டிட விரிவாக்கம் செய்வதற்கு முன்பாக வாஸ்து ஆலோசனை பெற வேண்டும்.
- வாடகை வீடு பார்க்கும் போது அது வாஸ்து பலமுள்ள வீடா என்பதற்கு ஆலோசனை பெற்றிடல் வேண்டும். ஒரு கட்டிடத்தை பாகப்பிரிவினை செய்யும் போது வாஸ்து ஆலோசனை பெற்றுக் கொள்ளுதல் நன்று.
பூர்வீக சொத்தை சகோதரர்களிடையே பாகப் பிரிவினை செய்யும்போது எப்படி பங்கிடுவது வாஸ்து ரீதியாகச் சிறந்தது?
யார் எந்த பகுதியை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பிரிக்கும் இடங்களிடையே வடக்கு, கிழக்கு அதிகம் இடம் விட்டு கட்டிடம் கட்டுதல் மட்டுமே முக்கியம்.
கோவில்கள் இருக்கும் இடத்திற்கு அருகே மனை வாங்குவது நல்லதா? அல்லது அதனால் கெடுதல் ஏதேனும் ஏற்படுமா?
எந்த கடவுளும் பக்தனை கெடுக்க நினைப்பதில்லை. என்றாலும் கோவிலின் கோபுரம் நம் வீட்டின் வடக்கு, கிழக்கு பக்கத்தில் இல்லாமல் இருப்பது நலம். மேலும் கோவிலை ஒட்டி கட்டிடம் கட்டாமல் போதிய இடைவெளி விட்டு கட்டிடம் கட்டுவது நல்லது.
தலைவாசலில் ஜன்னல் இருக்கலாமா?
தலைவாசலின் இரு புறங்களிலும் ஜன்னல்கள் இருப்பது மிக நல்லது.
மனையை இரண்டாகப் பிரித்து இரண்டு வீடுகள் கட்ட வேண்டுமானால் எப்படி கட்டலாம்?
ஒரே மனையில் இரு வீடுகள் அமைவதாக இருந்தால் முதலில் தெற்கு அல்லது மேற்கில் வீடு கட்ட வேண்டும். பிறகு கிழக்கிலோ, வடக்கிலோ கட்டி முடிக்கலாம்.
பூஜைக்குரிய படங்களை வீட்டில் மாட்டுவது போலவே வேலை செய்யும் இடத்திலும் மாட்டலாமா?
மாட்டலாம். படங்கள் கிழக்கு பார்த்தபடி இருக்க வேண்டும். அலுவலகத்தின் தென் மேற்கிலும், தென் கிழக்கிலும் பூஜைக்குரிய படங்கள் இருக்கக்கூடாது.
படுக்கையறை தனித்தனியாக இருக்கிறது என்றால் யார் யார் எங்கெங்கு படுக்கலாம்?
தெற்கு திசையில் அமையும் படுக்கை அறை அனைவருக்குமே நல்லது. தென்மேற்கு இளம் தம்பதிகளுக்கு உகந்தது. வடகிழக்கு திசை வயோதிகர்களுக்கு நல்லது. சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்கும் வடகிழக்கு நல்லது. வடமேற்கு இளம் பெண்கள், விருந்தினர்களுக்கு உகந்தது. மேலும் தென்மேற்கு பெரியவர்களுக்கு குறிப்பாக குடும்பத்தலைவன், தலைவிக்கு நல்லது.
படிப்பதற்கு தனி அறை அமைக்கலாமா ?
இடவசதி மற்றும் அவரவர் சூழ்நிலைக்கேற்ப படிக்கும் அறை அமைப்பதென்றால் வடக்கு அல்லது கிழக்கு திசையில் அமைக்கவும். படிக்கும் பிள்ளைகள் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து படிப்பது நல்ல பயனைத்தரும்.
இடம் திசைக்கு கோணமாக இருந்தால் ?
இடமானது திசைகாட்டியின் திசைப்படிக்கு அமையாமல் மூலைகள் இழுத்து சில இடங்களில் நிலம் அமையலாம். நிலத்தின் கட்டிடம் கட்டுவதற்கு முன்பு திசை காட்டும் கருவியிலுள்ள படி நில அமைப்பு உள்ளதா என்பதை உறுதிபடுத்த வேண்டும். திசைகாட்டி திசைப்படி அமையாவிடில் சரியான வாஸ்து சாஸ்திர நிபுணரிடம் விவரம், ஆலோசனை கேட்டுக் கொண்டு செய்வது தான் விவேகமானது. இப்படிப்பட்ட பிளாட்டுகளில் சில வாஸ்து நிபுணர்களுக்கே எங்கே வாசல்கள் அமைக்க வேண்டும் என்பதில் குழப்பம், சந்தேகம் வந்துவிடும். அல்லது இப்படிப்பட்ட நிலங்களை / பிளாட்டுகளை தவிர்த்து விடலாம்.