கடிதம் – 8 – சகுனம்

August 20, 2014 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

மாதா, பிதா, குரு, தெய்வம் – இந்த வரிசை சரியா, தவறா என்றால் தவறு என்று தான் கூறுவேன்….

என்னை பொறுத்தவரை

தெய்வம், மாதா, பிதா, குரு – தான் சரியான வரிசையாக இருக்க முடியும். இதற்கு காரணமாக என் வாழ்க்கையில் நான் கண்ட, பார்த்த, அனுபவித்த எத்தனையோ உதாரணங்களை கூற முடியும்….

அதில் ஒன்று….

என் அப்பா 1999 – ல் காலமானதற்கு பிறகு என் அம்மாவின் நடவடிக்கை முற்றிலுமாக மாறி விட்டது. இரவு 2 மணிக்கு, 3 மணிக்கு எழுந்து பார்த்து  எல்லோரும் தூங்கியதை உறுதிபடுத்திய பின் என் தந்தையை நினைத்து அவர் அழாத நாட்களே கிடையாது. நான், என் மனைவி, குழந்தைகள் உணவருந்த, படம் பார்க்க செல்லும்போது கூட வருவதோடு சரி….  யாரைப் பற்றி குறை கூறவோ, பேசவோ மாட்டார்கள்…  மற்றவர்களிடம் பேசுவதையும் குறைத்தும் கொண்டார்கள். வீடு உண்டு…. பொருட்கள் வாங்க வெளியே செல்வதுண்டு… என்று தனக்கென்று ஒரு வட்டம் அமைத்து வாழ ஆரம்பித்து விட்டார்கள். எங்கள் பக்கத்து வீட்டை புதியதாக ஒருவர் வாங்கி குடியேறும் வரை எல்லாம் சரியாக போய்கொண்டு இருந்தது…

பக்கத்து வீட்டில் குடி இருப்பவர்கள் சகுனம் பார்ப்பவர்கள்….  குறிப்பாக அந்த வீட்டின் ஆண் வெளியே புறப்படும் போது விதவையோ, குழந்தைபேறு இல்லாதவர்களோ எதிரே வந்தால் வீட்டின் உள்ளே சென்று, சிறிது நேரம் கழித்து அவர் வேலைக்கு போவார். இந்த விஷயத்தை பக்கத்து வீட்டு பெண்மணி ரொம்ப, ரொம்ப தீவிரமாக நடைமுறைபடுத்தி வந்தார்…

அன் அம்மாவை பார்த்தும் பல முறை பக்கத்து வீட்டுக்காரர்கள் இப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள்…. இதனை சரியாக கண்டுபிடித்த என் தாயார் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் இன்னும் கஷ்டப்பட்டு கொண்டிருந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் என் மனைவி என் அம்மாவின் முக வாட்டத்திற்கான காரணத்தை மிகத்துல்லியமாக யூகித்து விட்டார்…  என் மனைவி இந்த விஷயத்தை நன்றாக ஊர்ஜிதப்படுத்திய பின் என்னிடம் நான் மிக சந்தோஷமாக என் பையனுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, மிக கவனமாக, பக்குவமாக என்னிடம் சொன்னார்…..

என் மனைவிக்கு பயம் என்னவென்றால் நான் ஏதாவது பெரிய அளவில் பக்கத்து வீட்டுடன் தகராறு பண்ணிவிடுவேன் என்று…. இது போன்ற தருணங்களில் பலமுறை ஆத்திரத்தில் முடிவெடுத்து இருக்கின்றேன் ஆனால் அன்று ஏனோ யோசித்தேன் நான் சில நொடிகள் வழக்கத்திற்கு மாறாக. சில நொடிகள் யோசனைக்கு பின் மறுபடியும் என் பையனுடன் விளையாட ஆரம்பித்து விட்டேன்… என் மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை….  நான் பெரிய பிரச்சினையை பண்ணுவேன் என்று எதிர்பார்த்த நிலையில் நான் எதுவுமே பேசாமல் இருக்கிறேனே என்று என் மனைவிக்கும் பெரிய ஷாக்….

நான் விஷயத்தை கேள்விப்பட்ட அன்றைய இரவு தூங்கபோகும் முன் என் ஆண்டாளிடம் இரண்டு கேள்விகள் அவள் முன் வைத்தேன்….

  •  யார் செய்த பாவமோ, என் அம்மா என் தந்தையை இழந்து கஷ்டப்படுகிறார்கள்… அவர்கள் வாழும் வாழ்க்கையே எப்போது அஸ்தமிக்கும் என்பதை எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்…. அவர்களை ஏன் இன்னும் காயப்படுத்தினாய்? காயப்படுத்துகிறாய்?
  • எனக்கு இருக்கும் பலத்திற்கு நான் வீடு புகுந்து அவர்களை துவம்சம் செய்து இருப்பேன்… ஆனால் எப்போதும் எனக்கு சடாரென்று கோபம் வரும்…. ஆனால் இந்த விஷயத்தில் என்னை ஏன் கோபப்படாமல் செய்தாய் என்று?

கேள்விகள் முன் வைத்து விட்டு தூங்கிவிட்டேன்…

தூங்கி எழுந்த அடுத்த நாள் மிக அற்புதமாக கழிந்தது….  அந்த நாள் இரவும் இதே கேள்விகளை ஆண்டாளிடம் கொஞ்சம் கடினமாக கேட்டுவிட்டு தூங்கி விட்டேன்…

அதற்கு அடுத்த நாள் காலை – கிராமத்து வளர்ப்பான என் மனைவி “தினகரன்” பேப்பருடன் என்னை எழுப்பினார்….

அதில் ஒரு பெரிய ¼ பக்க செய்தி படத்துடன்….

அடுத்தவர் நிலத்தை போலி பத்திரம் தயாரித்து பல கோடி ஏமாற்றிய பலே திருடர்களின் தலைவன் என்று;  சகுனம் பார்த்து வேலைக்கு போன என் பக்கத்து வீட்டு ஆசாமி தான் அந்த கும்பலின் தலைவன்….

என் அப்பா இறந்துவிட்டார் என்று விஜயா மருத்துவமனை டாக்டர் என் கையை பிடித்து சொன்ன போது கூட கண்ணில் இருந்து குபுக்கென்று உடனே  கண்ணீர் வரவில்லை….  ஆனால் அந்த செய்தி படித்த உடன் அந்த நொடியே சடாரென்று கண்ணிலிருந்து நீர் கொட்டியது. அடுத்த நிமிடமே ஆண்டாள் எனக்கு செய்த நல்ல விஷயங்களை பட்டியலிட்டேன் என் மனைவியிடம்….

  • என் அம்மாவிற்கு சந்தோஷம் – விதவை பெண்களை கேவலப்படுத்தியவர்களுக்கு தண்டனை கிடைத்தது என்பதற்காக…
  • எனக்கு சந்தோஷம் – என்னை ஒரு பாவம் பிடித்த ஆசாமியிடம் சண்டை போடாமல் தடுத்து நிறுத்தி எனக்கு எந்த கெட்ட பெயரும் வராமல் தடுத்து நிறுத்தியதற்காக….
  • என் மனைவிக்கு சந்தோஷம் – தன் அத்தையை மனதளவில் காயப் படுத்தியவர்களை ஆண்டாள் தண்டித்ததற்காக….

இதில் முக்கியமான விஷயம்:-

எனக்கு விஷயம் தெரிந்த முதல் நாளுக்கும் பேப்பரில் விஷயம் வெளியே வருவதற்கு மூன்றாம் நாளுக்கும் இடையில் இருந்த இரண்டாம் நாளில் தான் கூட்டாளிகளுக்குள் பங்கு பிரிப்பதில் பிரச்சினை ஏற்பட்டு போலீஸிடம் மாட்டி இருக்கிறார்கள்…. அவர்கள் அவர்களுக்குள் சண்டை போட்டு போலீஸிடம் மாட்டாமல் இருந்திருந்தால் அவர்கள் செய்த குற்றம் யாருக்கும் தெரியாமலேயே போயிருந்திருக்கும். அவ்வளவு நூதனமான திருட்டு அது….

மாத, பிதா, குரு, தெய்வம்….   வரிசையில் என் மாதாவிற்கே பிரச்சினை வந்தபோது  எனக்கு என் தெய்வம், குலசாமி, ஆண்டாள் தான் அந்த இடத்தில் உதவி புரிந்தாள்…

ஆக என்னை பொறுத்தவரை

தெய்வம், மாதா, பிதா, குரு – தான் சரியான வரிசை….

பின் குறிப்பு:-

விதவையையும் குழந்தைபேறு இல்லாதவர்களையும் அசிங்கப்படுத்தும், கேவலமாக நடத்தும் பெண்களுக்கு நான் சொல்லி கொள்ள விரும்புவது…

விதவையின் மனம் கஷ்டப்பட்டால் அந்த கஷ்டத்தை உருவாக்கும் இன்னொரு சுமங்கலி பெண்ணையும் அவர் படும் கஷ்டம் விதவையாக்கும் வலிமை கொண்டது…  என்பதை நினைவில் நிறுத்தி கொள்ளுங்கள்….

குழந்தைபேறு இல்லாதவர்கள் மனம் நோகடிக்கப்பட்டால் அந்த கஷ்டத்தை உருவாக்கும் இன்னொரு பெண்ணையும் அவர் படும் கஷ்டம் குழந்தை இருந்தும் இல்லாமல் ஆக்கும் வலிமை கொண்டது… என்பதை நினைவில் நிறுத்தி கொள்ளுங்கள்….

பெண்களே உண்மையாக மற்ற பாதிக்கப்பட்ட பெண்களை போற்றுங்கள் கண்டிப்பாக ஆண்டாள் ஒருநாள் உங்களை தரிசிக்க வருவாள்…

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + twelve =