கடிதம் – 4

August 16, 2014 0 Comments

கடிதம் – 4

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

நான் இதற்கு முன் குறிப்பிட்ட சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும் முன், எனக்கும் ஆண்டாளுக்கும் உள்ள தொடர்பை சுருக்கமாக சொல்லி விடுகின்றேன்…

  • என்னை ஒன்றுமே இல்லாதவன் என ஆக்கியவளும் ஆண்டாள் தான்
  • என்னுள் ஒன்றும் இல்லை என ஆக்கியவளும் ஆண்டாள் தான்

பகலை பகலுக்கு முந்திய இரவும்,

இரவை இரவுக்கு முந்திய பகலும் தீர்மானிக்கின்றது என்றார் ஒரு கவிஞர்

ஆனால் எனக்கோ என்னுடைய பகலும், இரவுமே ஆண்டாள் தான்….

–    இந்த எண்ணம் என்னுள் முழுவதும் வியாபித்து இருப்பதால் தான் என்னவோ, சந்தோஷங்கள் என்னை எப்போதும் பெரிய அளவில் சந்தோஷப் படுத்துவதில்லை…

–    இதுவரை ஆண்டாள் கோவிலுக்கு 1500 தடவைக்கு மேல் தனியாகவும், நண்பர்களோடும், குடும்பத்தினருடனும் போய் வந்து இருப்பேன் என நினைக்கின்றேன்….

எப்போதெல்லாம் ஆண்டாள் கோவிலின் மூலஸ்தானத்தில் நின்று ஆண்டாளை பார்த்தாலும் அப்போதெல்லாம் நான் ஆண்டாளை வேண்டுவது இரண்டு விஷயங்கள் தான்…

  1. உன்னை பார்க்கும் இந்த நொடியே எனக்கு மரணத்தை கொடு என்பது தான்… நான் எப்போது ஆண்டாளை பார்த்தாலும், நான் பார்க்கும் அந்த முதல் ஷனம் எந்த காலகட்டத்திலும், எந்த சூழ்நிலையிலும் ஒரு பரிபூரணத்துவத்தை மட்டும் தான் எனக்குள் ஏற்படுத்தும்….   இதற்கு மேல் வாழ்க்கை கிடையாது… இருந்தாலும் வேண்டவே வேண்டாம் என்பது தான் அந்த நிலை… அந்த அற்புத நிலை எப்பொழுதெல்லாம் எனக்கு கிட்டியதோ, அப்போதெல்லாம் நான் ஆண்டாளை உணர்ந்து இருக்கின்றேன்…
  2. அந்த நிலைக்கு அடுத்து நான் சகஜ நிலைக்கு திரும்பியவுடன் ஆண்டாளிடம் நான் வேண்டி, வேண்டி, விரும்பி, விரும்பி கேட்டுக்கொள்வது என்னவென்றால், தயவுசெய்து எனக்கு நிறைய பிரச்சினைகளை கொடு என்பது தான்…  காரணம் எப்பொழுதெல்லாம் எனக்கு பிரச்சினை உண்டாகிறதோ அப்பொழுதெல்லாம் எனக்கு ஆண்டாள் உதவி புரிவாள் என்பது நான் மட்டும் அறிந்த, எனக்கு மட்டும் புரிந்த உண்மை…

மேற்சொன்ன இரண்டு விஷயங்களின் மேல் உள்ள என் அசைக்க முடியாத மன உறுதி தான் விலாசம் இல்லாமல் அனுப்பபட்ட கடிதம் போல் இருந்த என்னை பல நூறு பேருக்கு விலாசமாக்கி உள்ளது. தரையில் புதைந்து போக இருந்த என்னை வளரவைத்து பலர் வானமாய் வளர வழி வகுத்து இருக்கின்றாள் என்பதை பரிபூரணமாக உணர்ந்து இருக்கின்றேன்….

அந்த உணர்வு தான் இன்றளவிலும் நிறைய பேருக்கு உதவக் கூடிய வகையில் என் வாழ்க்கையை கைபிடித்து கொண்டு செல்கின்றது….

என் அளவில், நான் சொல்லியதால் ஆண்டாளை தரிசனம் செய்தவர்கள், செய்து கொண்டு இருப்பவர்கள் நிறைய பேர் உண்டு…

ஆண்டாள் தரிசனத்தால், ஸ்ரீவில்லிபுத்தூர் மண்ணை மிதித்த புண்ணியத்தால்

  • குழந்தை பேறு கிடைக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையை கணக்கிலிட முடியாது
  • திருமணப் பேறு கிடைக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையை கணக்கிலிட முடியாது
  • உடல் நலம் சீரானவர்களின் எண்ணிக்கையை கணக்கிலிட முடியாது
  • பணத்தை இனி நம் வாழ்க்கையிலே பார்க்கவே முடியாது என்ற நினைவோடு இந்த மண்ணிற்கு வந்து இன்று தனியாக அமர்ந்து எண்ணவே முடியாத அளவிற்கு பணம் சேர்த்தவர்களும் நிறைய உண்டு.

இப்படி தன்னை நம்பிய எல்லோருக்கும் எல்லா நல்ல விஷயங்களையும் கொடுக்கும் இப்பூவுலகின் தாய்க்கு தங்க விமான திருப்பணி நடைபெறுகின்றது என்று தெரிந்து இருந்தும் தெரியாதது போல இருப்பதை தான் என்னால் பொறுத்து கொள்ளவே முடியவில்லை….

கலையின் மூலமான ஆண்டாளையே தென்கலை சார்ந்தவள் என பிரித்து, வடகலை, தென்கலை என்கின்ற பாகுபாட்டால் தங்க விமான திருப்பணி இன்று தடை பெற்றிருக்கிறது என்பது மிகுந்த வருத்தத்துக்குரிய செய்தி….

ஆண்டாளால் பயன் பெற்றவர்களும் இப்பணியை முடிக்க தேவையான பணத்தை கொடுக்க முன் வரவில்லை….

ஆண்டாளை மட்டும் பேசி பணம் பெற்றவர்களுக்கும் இப்பணியை முடிக்க மனது வரவில்லை…

மொத்தத்தில் பணம் இருந்தாலும் செய்ய மனம் இல்லை என்கின்ற விஷயத்தை மிகுந்த கஷ்டத்துடன் என் மனதிற்கு பிடித்த ஒரு சகோதரியிடம் ஏதேச்சையாக தொலை பேசியில் சொல்ல நேரிட்டது…

அந்த உரையாடல் மற்றும் அதன்பின் நடந்த நிகழ்வுகளை நான் அடுத்த கடிதத்தில் விளக்கமாக கூறுகின்றேன்….

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =