கடிதம் – 24 – கொடு – கெடு – கேடு

December 2, 2014 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

தினமும் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு உயிரினம் “கொசு”. அந்த கொசுவை ஒழிக்க சில செடிகளின் இலைகள் முதலில் பயன்பட்டது. பின் கொசுவை கொல்ல கொசுவர்த்தி சுருள் பயன்பாட்டுக்கு வந்தது. அதற்கு அடுத்தகட்டமாக கொசுவை இல்லாமல் ஆக்க திரவம் அடைத்த இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் மின்சார பேட் கண்டுபிடிக்கப்பட்டது. பின் நம் உடம்பில் கொசு உட்காராமல் இருக்கும் வகையில் ஒரு வகையான பேஸ்ட் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. இப்போது கொசுவை ஒழிக்க மேம்படுத்தப்பட்ட திரவம் (Advanced Liquid)  சந்தையில் விற்கப்படுகின்றது. இதில் அதி முக்கியமான இரண்டு உண்மைகள் பொதிந்து இருக்கின்றது. அவை கீழ்கண்டவாறு:-

  1. கொசுவிற்கு ஆறறிவு கிடையாது. இருந்தாலும் ஆறறிவு கொண்ட மனிதனின் கண்டுபிடிப்பை அது தொடர்ந்து முறியடித்து கொண்டே இருக்கின்றது. கொசுக்களின் ஒரு தலைமுறை மேற்சொன்ன கண்டுபிடிப்புகளில் சொல்லப்பட்ட ஒரு பொருளால் அழிந்து போனால் அதன் அடுத்த தலைமுறை கொசுக்கள், தன் முன்னோர்கள் எந்த கண்டுபிடிப்பால் இறந்து போனார்களோ அந்த குறிப்பிட்ட கண்டுபிடிப்பை வெற்றி கொள்ளும் வகையிலேயே பிறப்பெடுக்கின்றது. இது எப்படி சாத்தியமாயிற்று என்பது விடையில்லா கேள்வியாகத்தான் மனிதனுக்கு என்றுமே இருக்கப்போகின்றது. இதற்கான விடையை பிரச்சினைகளுடன் பிறந்து, பிரச்சினைகளுடன் வாழ்ந்து, பிரச்சினைகளுடன் இறந்து போகும் ஆறறிவு கொண்ட மனிதனால் கண்டுபிடிக்கவே முடியாது அவன் அவனுடைய ஆறாவது அறிவை பயன்படுத்தும் வரை.
  2. மனிதன் ஆறறிவு கொண்டவன் / படைத்தவன் என்றால் என்ன செய்து இருக்க வேண்டும் இந்த நிலையில். கொசு உற்பத்திக்கு காரணம் என்ன? குப்பையும், அசுத்த நீரும் சேர்வது தானே.
  3. அதை ஒவ்வொருவரும் தன் வீட்டிலும், தன் வீட்டின் அருகிலும் இல்லாமல் பார்த்து கொண்டாலே போதும் என்ற அறிவு அவனுக்கு இல்லாமல் போனதுக்கு காரணம் என்ன?
  4. ஒரு கொசுவிற்கு உள்ள அடிப்படை சிந்தனை கூட மனிதர்களுக்கு இல்லாமல் போனதற்கு காரணம் என்ன? கொசுவை ஒழிக்கிறேன் என்று சொல்லி மனிதன் உபயோகப்படுத்தும் கருவிகள் எல்லாம் அவனுக்கு நோயையும் கொடுக்கவல்லது என்பது அவனுக்கு தெரியாமல் போனது எப்படி?

நான் ஏற்கனவே பேசிய “கொடுத்தல்” என்கின்ற வார்த்தை புரியாமல், தெரியாமல் மனிதன் என்றைக்குமே தன்னை நேர்மறை கருத்து(Positive Thoughts) கொண்டவனாக மாற்றிக் கொள்ளவே முடியாது. என்னுடைய சொந்த ஆராய்ச்சியின் படி நேர்மறை கருத்துக்கள் ஒரு மனிதனுக்கு உருவாக வேண்டுமானால், ஆறாவது அறிவை செயல்படுத்த(Activate செய்ய) வேண்டுமானால் அவன் செய்ய வேண்டிய ஒரே ஒரு விஷயம் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். எந்த மனம் கொடுக்க பழகியதோ, எந்த மனதிற்கு கொடுக்க தெரிகின்றதோ அந்த மனம் மட்டுமே ஆறாவது அறிவை இயக்கும், திறக்கும் மந்திர சாவி.

அடுத்தவர்களுக்கு

நீ அன்பை கொடு

நீ மகிழ்ச்சியை கொடு

நீ சந்தோஷத்தை கொடு

நீ பணத்தை கொடு

நீ விட்டு கொடு

நீ சொத்தை கொடு

நீ பொருளை  கொடு

கொடுக்கும் போது கொ – என்ற எழுத்திற்கு பக்கத்தில் வரும் கால் எழுத்து தான் நம் மொத்த மனித வாழ்க்கையின் ஒட்டு மொத்த ஒரேழுத்து தத்துவம். அந்த ஒரு கால் இல்லை என்றால் நம் வாழ்க்கையில் என்றுமே கெடு – தான்; கேடு – தான்.

நான் ஒரு குறிப்பிட்ட காலம் வரை நிறைய நம்பிக்கை துரோகம் இழைத்திருக்கலாம்.

நிறைய ஏமாற்றி இருக்கலாம்.

நிறைய பொய் சொல்லி இருக்கலாம்.

தவறான பழக்கவழக்கங்கள் கொண்டு இருந்து இருக்கலாம். – இதற்கெல்லாம் நான் துளிகூட வெட்கப்படவில்லை. வருத்தப்படவில்லை. காரணம் என்னைப் பொறுத்த வரை அது ஒரு அனுபவம். செய்த தவறுகளுக்கும் / தப்புகளுக்கும் தண்டனையை இன்முகத்துடன் ஏற்றுக் கொள்ள நான் இன்றும், என்றும் தயாராக இருக்கின்றேன். ஆனால் என்னுள் என்னையே எப்போதும் மன்னிக்கவே முடியாத அளவிற்கு ஒரு விஷயம் உண்டு என்றால் அது, ஆண்டாளை முதன் முதலாக பார்த்த போது என்னையறியாமல் ரூ.100/- ஐ ஆண்டாள் கோவில் உண்டியலில் செலுத்தினேன் என்று இன்று சொல்ல தெரிந்த எனக்கு, ஏன் நான் என்னிடம் இருந்த மொத்த பணத்தையும் ஆண்டாளிடம் அன்று சேர்க்கவில்லை என்பதற்குண்டான காரணத்தை மட்டும் சொல்லத் தெரியவில்லை. இதற்காக நான் கூனி குறுகி வெட்கப்படாத நாட்களே இல்லை. இன்றுவரை ஆண்டாள் கோவிலுக்கு போகும் போதெல்லாம் மனதார இதற்காக முதலில் மன்னிப்பு கேட்டு விட்டு தான் ஆண்டாளையே சந்திப்பேன்.

இன்று நான் நூறு விஷயங்கள் ஆண்டாள் கோவிலுக்கு செய்யலாம். ஆண்டாள் பெயரை முன்னிறுத்தி கொடுக்கலாம். ஆனால் இருந்து கொடுப்பது எல்லாம் ஒரு வாழ்க்கையா?

இல்லாமல், ஒன்றுமே இல்லாமல் கொடுப்பது தானே வாழ்க்கையின் உச்சகட்ட ஆனந்தம். அந்த ஆனந்தம் கிடைக்க இருந்து அதை தவற விட்டு விட்டேனே என்கின்ற வருத்தம் என்னை கொல்லாத நாட்களே இல்லை. உடல் செத்த பிறகு, உடலை விட்டு ஆன்மா பிரிந்த பிறகு சரணாகதி தத்துவம் புரிந்து என்ன பயன்? இந்த விஷயத்தில் ஆண்டாளிடம் நான் மன்னிப்பு கேட்டதை விட நிறைய தடவை சண்டை தான் போட்டிருக்கின்றேன் காரணம் ஏன் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை நீயே கொடுத்து நீயே பிறகு என்னை அந்த வாய்ப்பை தவற விட வைத்து விட்டாயே என்று. அரிய ஒரு வாய்ப்பை தவற விட்டவனான நான் இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு விஷயத்தை கூறிக் கொள்கின்றேன்.

தயவுசெய்து என்னைப் போல் நீங்களும் இருக்காதீர்கள். நீங்களும் இருந்துவிடாதீர்கள்.

ஒரு உதவி தேவைப்படும் இடத்தில் நாம் உடனடியாக சென்று அவர்களுக்கு தேவைப்படும் உதவியை செய்து கொடுப்பது, கேட்பவர்களுக்கு கொடுப்பது, கேள்விப்பட்ட உடனே கொடுப்பது, தேவை இருந்து, தேவை அறிந்து கேட்காதவர்களுக்கும் கொடுப்பது என உங்களை தகுதி உயர்த்தி கொள்ளுங்கள். உடல் உறுப்புகள் அனைத்தும் சரியாக உள்ள ஒருவனுக்கு பிச்சை கொடுப்பது, வட்டிக்கு கடன் கொடுப்பது இரண்டும் “கொடுத்தல்” – அதிகாரத்திற்கு கீழ் வருவது கிடையாது. இது இரண்டும் பெரிய பாவம் என்பதால் இதை தவிர்த்து ஏனைய மற்ற விஷயங்களுக்கு கொடுப்போம்.

எடுத்து கொடுப்போம்

அள்ளி கொடுப்போம்

விட்டும் கொடுப்போம்

கொடுத்தால் என்ன ஆகும்; கொடுத்தவர்கள் என்ன ஆனார்கள் என்று அடுத்த கடிதத்தில் புரிய வைத்துவிட்டு அதன் பிறகு ஆண்டாள் கற்று கொடுத்த A . B . C . D., (?!!!) தத்துவத்திற்குள் செல்வோம். பின் அதனை கொண்டு கொடுத்ததை பார்ப்போமா!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =