ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க விமானம் – சம்ப்ரோக்ஷணம்

February 4, 2021 0 Comments

ஸ்ரீ

இனிமேல் நாம் அனைவரும் அவரவர் பிறந்த நாளை விட மகிழ்ச்சி அடைய வேண்டிய நாள் 20-01-2016

காரணம் தங்கத்தாயிற்கு என்று நிர்மாணம் செய்யப்பட்டுள்ள தங்க விமானத் திருப்பணியின் சம்ப்ரோக்ஷணம் நடைபெறும் நாள் 20-01-2016.

இந்த நல்ல நிகழ்வுக்காக,

சந்தர்ப்ப வசத்தால் தன்னையே வியாபாரமாக்கிய இவ்வுலகிற்கு தன்னைத் தவிர கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் தனக்கே தனக்கென்று வைத்திருந்த ஒத்தை மோதிரத்தை தாயாருக்கு கொடுத்தவளும் உண்டு……

தன்னிடம் இருக்கும் பத்து ரூபாயையும் தாயாருக்கு கொடுத்துவிட்டு 19  கிலோமீட்டர் நடந்தே ஊருக்கு சென்றவளும் உண்டு…………

கடைசி பொட்டு தங்கம் என தன்னிடம் இருந்த 100 mg தங்கத்தை தாயார் திருப்பணிக்கு கொடுத்துவிட்டு இந்தப் பணி முடிவுற ஒருகால் தாமதம் ஏற்பட்டால் என் ஒரு கிட்னியை விற்றாவது என்னால் முடிந்த பணத்தை கொடுப்பேன் என்று சொன்ன பரம ஏழை பெண்ணும் உண்டு…….

கண் முன்னே தன்னுடைய தாலி கயிற்றில் என்னிடம் இருந்து மஞ்சளை வாங்கி கட்டி கொண்டு, தன்  வாழ்கையில் தங்கம் வாங்க இனி வாய்ப்பே இல்லாத ஒரு நிலையில் இருந்த ஒருத்தி தன் தாலி கொடியில் இருந்த அத்தனை தங்கத்தையும் தாயார் திருப்பணிக்கு கொடுத்துவிட்டு தன்னால் மற்றவர்களை போல் அதிகம் கொடுக்க முடியவில்லையே என தாயாரை திட்டி சென்றவளும் உண்டு……

சடாரென்று முடிவெடுத்து தாலிகொடியையே தாயாருக்கு கொடுத்துவிட்டு வெறும் கழுத்துடன் நடந்து சென்றவளும் உண்டு………….

தாயாருக்கு தங்கம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தாலி கட்டிய கணவனே அதை எதிர்த்து நிற்கின்ற சூழ்நிலை வந்த போதும் அவனை எதிர்த்து, அவனை விடுத்து தங்கத்தை தாயாருக்கு கொடுப்பதற்காக தாலி கட்டியவனையே தூர தூக்கி வீசி எரிந்து விட்டு தங்கம் கொடுத்தவளும் உண்டு……………..

கைநிறைய பணத்தை தாயாருக்கு கொடுத்துவிட்டு தன் மகள் மற்றும் மகனுடன் தற்கொலை செய்து கொண்டவளும் உண்டு………

தாயார் தங்க விமானப் பணி நிறைவேற வேண்டி அசைவ பழக்கத்தை விட்டவளும் உண்டு; மாதமாதம் சம்பளப் பணத்தில் தாயாருக்கு என்று ஒரு பணத்தை ஒதுக்கி கொடுத்தவளும் உண்டு…..

தன் மகளின் மருத்துவத்திற்காக வைத்திருந்த மொத்த பணத்தையும் தாயார் திருப்பணிக்கு கொடுத்துவிட்டு தன் மகளை தாயார் இனி பார்த்து கொள்வாள் என நம்பிக்கையுடன் கூறி சென்றவளும் உண்டு…..

தன்னுடைய இரண்டு பிள்ளைகளும் விபத்தில் இறந்தபின் யாருடனும் பேசாமல் மவுனவாழ்க்கை வாழ்ந்து வந்த ஒருத்தி,தன் மவுனவாழ்க்கையை தாயாருக்காக உடைத்து தன் குழந்தைகளின் சிறு வயது நகைகளை தாயார் திருப்பணிக்கு என மனதார கொடுத்தவளும் உண்டு…..

தன்னுடைய கணவர் இறந்ததினால் கிடைத்த மொத்த பணத்தினை தாயார் திருப்பணிக்கு என சந்தோஷமாக கொடுத்தவளும் உண்டு……

தாயார் திருப்பணி நிறைவேற மடிபிச்சை எடுத்து கொடுத்தவளும் உண்டு……

12 வருடங்களாக சேர்ந்த பணத்தை மூட்டையாக தாயாருக்கு கொடுத்தவளும் உண்டு………

தன் கணவன் கொலை செய்யப்பட்ட பிறகு  ஆதரவற்ற நிலையில் இருந்து வந்த ஒருத்தி எனக்கு நாச்சியார் தாயாரே உறவு என அவளிடம் இருந்ததை கொடுத்தே ஆக வேண்டும் என கூறி கொடுத்து சென்றவளும் உண்டு……….

தன் திருமணத்திற்கு என்று வைத்திருந்த தங்க நகைகளை அப்படியே தாயாருக்கு கொடுத்து சென்றவளும் உண்டு………

இப்படி அடுக்கலாம் 1500 – 2000 சரித்திர சம்பவங்களை…………..

அத்தனை சம்பவங்களையும் அடுக்க வார்த்தைகளும் போதாது, காலமும் போதாது…

சரித்திர சாதனை புரிய உதவிய அத்தனை சாமானிய, நடுத்தர, பெரிய மனிதர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி.

சிறப்பு கவனம் செலுத்தி இமலாயப்பணி இத்தனை சீக்கிரம் நிறைவுற காரணமாய் இருந்த தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களுக்கும், இப்பணி நிறைவேற துணையாக இருந்த தமிழக அமைச்சர்களுக்கும், கோவில் அறங்காவலர் குழு தலைவர் திரு.இரவிச்சந்திரன் அவர்களுக்கும், இப்பணியை எனக்கு அறிமுகம் செய்த வேதபிரான் பட்டர் திரு.சுதர்சன் அவர்களுக்கும், தக்க நேரத்தில் தகுந்த மாதிரி செயல்பட்டு பணியை முடுக்கிவிட்ட அண்ணன் திரு.பூங்குன்றன் (உதவியாளர், தமிழக முதலமைச்சர்) அவர்களுக்கும், அண்ணன் திரு.லக்ஷ்மி நாராயணன் அவர்களுக்கும் நன்றி.

வாழ்க்கையில் இது போன்ற கூட்டத்தை எவரும், எந்த இடத்திலும் பார்த்தது இல்லை என்பதை மெய்பிக்கும் வகையில் நாம் அனைவரும் ஆண்டாள் பெயர் சொல்லி ஜனவரி 20, 2016 அன்று காலை 6 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கூடுவோம்…

சார்ங்கம் போல

ஒன்று நூறாகி

நூறு பலாயிரமாகி

பலஆயிரம் பல லட்சமாகி

என சொல்லும் அளவிற்கு ஒவ்வொருவரும் அவர்கள் மொத்த குடும்பத்துடன் வருகை புரிந்து இவ்விழாவில் பங்கேற்று நமக்கு இவ்வாழ்வு கொடுத்த சூடி கொடுத்த சுடர் கொடுத்த கோதை நாச்சியாருக்கு நன்றி சொல்வோம்.

January 20, 2016 6 AM @ Wednesday 

தயவு கூர்ந்து படித்து விட்டு Comment, Like போடுவதை விட்டு அதிகப்பட்சமாக பகிரவும். உங்கள் ஒவ்வொரு நண்பரையும் பகிரச் சொல்லவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − two =