#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் அரியமேய விண்ணகரம்
#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் அரியமேய விண்ணகரம்
221.#அருள்மிகு_குடமாடு_கூத்தன்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : குடமாடு கூத்தன்
உற்சவர் : சதுர்புஜ கோபாலர்
தாயார் : அமிர்தவல்லி
தல விருட்சம் : பலாச மரம்
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம்
புராண பெயர் : அரியமேய விண்ணகரம்
ஊர் : அரியமேய விண்ணகரம் (திருநாங்கூர்)
மாவட்டம் : மயிலாடுதுறை
ஸ்தல வரலாறு:
உதங்க முனிவர் சிறுவயது முதலே வைதர் என்பவரிடம் இருந்து வேதங்களைப் பயின்று வந்தார், வகுப்புகள் முடிந்ததும் குருநாதருக்கு குரு தட்சணை கொடுக்க விரும்பினார். குருநாதரின் மனைவி, தனக்கு அந்நாட்டு அரசி அணிந்திருக்கும் குண்டலங்கள் வேண்டும் என்று கேட்டார். உதங்க முனிவரும் அரண்மனை சென்று அரசியிடம் விஷயத்தைக் கூறினார். முனிவரையும் அவரது குருநாதரையும் பற்றி ஏற்கெனவே அறிந்திருந்த அரசி, தனது குண்டலங்களைக் கொடுத்தார்.
குண்டலங்களுடன் குருநாதரின் இல்லம் திரும்பும், உதங்க முனிவர் தாகம், பசி காரணமாக, தான் வழியில் சந்தித்த இடையனிடம், குடிப்பதற்கு ஏதேனும் தருமாறு கேட்கிறார். இடையன் தன் பானையில் பசுவின் சாணமும், கோமியமும் மட்டுமே உள்ளன என்றும், அவரது குருநாதரும் இவற்றையே உண்டார் என்றும் கூறுகிறான் .
குருநாதர் உண்ட பொருள் என்பதால், முனிவர் தனது கமண்டலத்தை கீழே வைத்துவிட்டு, இடையனிடம் இருந்து பெற்ற பசுவின் சாணத்தையும், கோமியத்தையும் உண்டார். அப்போது அவ்வழியே வந்த தட்சன் என்பவன் முனிவரின் கமண்டலத்தை எடுத்துக் கொண்டு ஓடுகிறான். இதைக் கண்ட முனிவர், வருத்தம் மேலிட, அதை அவனிடம் இருந்து பெறுவதற்கு இடையனிடம் ஆலோசனை கேட்கிறார். அப்போது அங்கு குதிரையில் வந்தவரை நோக்கி கைகாட்டிய இடையன், அவரிடம் சென்றால், கமண்டலத்தை திரும்ப பெறுவதற்கு உதவி செய்வார் என்றான். அதன்படி நடந்த விஷயத்தை குதிரைக்காரரிடம் சொன்னதும், அவரும் உதவுவதாக வாக்களித்தார். தட்சன் மறைந்திருந்த பொந்து அருகே சென்றதும், குதிரைக்காரர், நெருப்பைக் கக்குமாறு குதிரைக்கு ஆணையிட்டார், குதிரையும் வாயில் இருந்து நெருப்பை உமிழ்ந்தது. நெருப்பின் வெப்பத்தைத் தாங்காத தட்சன், பொந்தில் இருந்து வெளியே வந்து கமண்டலத்தைக் கொடுத்தான்.
குதிரைக்காரருக்கும் இடையனுக்கும் நன்றி தெரிவித்த முனிவர், கமண்டலத்துடன் குருநாதர் இல்லம் திரும்பி, குருநாதரிடம் நடந்தவற்றைக் கூறினார். ஞானதிருஷ்டியால் நடந்தவற்றை ஆராய்ந்த குருநாதர், முனிவரின் பக்தியை சோதிக்க, இடையனாக திருமாலும், குதிரை வடிவில் இருந்த அக்னியின் மேல் இந்திரனும் வந்ததாகக் கூறினார். உடனே உதங்க முனிவர், தனக்காக இடையனாக வந்த திருமாலின் சுயரூபம் காண வேண்டினார். உதங்க முனிவருக்காக இத்தலத்தில் வெண்ணெய் நிரம்பிய குடத்துடன் காட்சி கொடுத்தார் திருமால்.
கோயில் சிறப்புகள்:
•108 வைணவ திவ்ய தேசங்களில், திருஅரியமேய விண்ணகரம் என்று அழைக்கப்படும் குடமாடு கூத்தன் கோயில் 29-வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது.
•கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆடிய பெருமாள் என்பதால் குடமாடு கூத்தன் என்று அழைக்கப்படுகிறார்.
•தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் நடைபெறும் கருடசேவையில் இத்தல பெருமாளும் எழுந்தருள்வார்.
•அசுரர்களை அழித்து அமுதம் அளித்தது, மகாபலியை அடக்கியது, ராவணனை வதம் செய்தது, பகைவர்களை அழித்து அனைவருக்கும் நல்வழி காட்டுபவர் என்று திருமங்கையாழ்வார் இத்தல பெருமாளை, தனது 10 பாசுரங்களில் பெரிய திருமொழியில் மங்களாசாசனம் செய்துள்ளார்.
•உச்சரூருங்க விமானத்தின் கீழ் கருவறையில் மூலவர் குடமாடு கூத்தன் அமர்ந்த கோலத்தில், தரையில் வெண்ணெய் பானையை வைத்து, அதன்மீது ஒரு காலை வைத்துக் கொண்டு அருள்பாலிக்கிறார், இந்த தரிசனம் கண்டால், குடும்பத்தில் வெண்ணெய் போல மகிழ்ச்சி பொங்கும் என்பது ஐதீகம்.
•குடத்துடன் ஆடிக்கொண்டு வந்ததால் ‘குடமாடு கூத்தன்’ என்று பெருமாள் அழைக்கப்படுகிறார், கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்து மக்களுக்கு அருள்புரிந்தார் கண்ணன் என்பதாலும் பெருமாளுக்கு இப்பெயர் வழங்கப்பட்டிருக்கலாம்.
•அரி (திருமால்) மேவியிருக்கும் (தங்கி) இடம் என்பதால் இத்தலம் ‘அரிமேய விண்ணகரம் என்று அழைக்கப்படுகிறது.
•படி மீது ஏறிச் சென்று வணங்கும்படி பீடம் அமைந்துள்ளது. பக்தி எனும் படிகளை ஏறிச் சென்றால் இறைவனை அடையலாம் என்பதே பீடம் இப்படி அமைக்கப்பட்டதன் உட்பொருள் ஆகும்.
•பிரகாரத்தில் ஆழ்வார்கள், ராமர் – சீதை ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உண்டு.
•திருஅரிமேய விண்ணகரம், திருமணிமாடக் கோயில், திருத்தெற்றியம்பலம், திருவண்புருடோத்தமம் ஆகிய நான்கு திவ்ய தேசங்களும் ஒரே தெருவில் உள்ளன.
திருவிழா:
வைகாசி விசாகம், தை மாதத்தில் கருட சேவை.
திறக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில்,
அரியமேய விண்ணகரம்,
திருநாங்கூர் – 609 106.
நாகப்பட்டினம் மாவட்டம்
போன்:
+91- 4364 – 275 689, 94439 – 85843.
அமைவிடம்:
சீர்காழியில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் இவ்வூர் இருக்கிறது. இங்கிருந்து குறித்த நேரத்தில் மட்டும் பஸ்கள் செல்கிறது. சீர்காழி – அண்ணன்கோயில் சென்று அங்கிருந்து சுமார் 2 கி.மீ., தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.
#templesofsouthindia #templesoftamilnadu #templeshistory #templesofhindus #temple #ஸ்தலம் #தலவரலாறு #ஆலயம்அறிவோம் #கோயில்கள் #ஆன்மீகம் #கோவில்வரலாறு #templepost #templesecrets #FamousTemples #DrAndalPChockalingam #SABP #divyadesam #kudamadukoothan #திவ்யதேசம் #குடமாடுகூத்தன் #அரிமேயவிண்ணகரம் #மயிலாடுதுறை #arimeyavinnakaram