அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள்
#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருப்புன்கூர்
நந்தனார் நாயனாருக்காக நந்தி விலகிய கோயில்…
163.#அருள்மிகு_சிவலோகநாதர்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : சிவலோகநாதர்
அம்மன் : சவுந்திரநாயகி, சொர்க்க நாயகி
தல விருட்சம் : புங்கமரம்
தீர்த்தம் : ரிஷப தீர்த்தம்,தேவேந்திர
தீர்த்தம், நந்தனார் தீர்த்தம்
புராண பெயர் : திருப்புன்கூர்
ஊர் : திருப்புன்கூர்
மாவட்டம் : நாகப்பட்டினம்
ஸ்தல வரலாறு:
ராசேந்திரசோழன் தன் நாட்டில் மழை இல்லாமல் பஞ்சம் நிலவியதால் எல்லாச் சிவாலயங்களிலும் பூசைகளைச் செய்தான். அவன் கனவில் இறைவன் தோன்றித் திருப்புன்கூர் சிவலோக நாதரை வழிபட்டால் மழை உண்டாகும் என்று கூறினார். மன்னனும் திருப்புன்கூர் வந்து சுவாமியை வழிபட்டான். அப்போது சுந்தரர் அங்கு வந்தார். அரசன் அவரை வணங்கி மழை வர செய்யுமாறு வேண்டினான். சுந்தரரும் மழை வரவழைத்தால் சுவாமிக்குப் பன்னிரு வேலி நிலமளிக்க வேண்டும் என்று மன்னனுக்கு கட்டளையிட்டு விட்டுப் பாடினார். மழை பெய்தது. எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை அதிமகா பெய்வதை கண்ட மன்னன் அதை நிறுத்தாவிடில் பெருஞ்சேதம் உண்டாகும் என்றெண்ணிச் சுந்தரரைப் பார்த்து மழை போதும் என்று கூறினார். சுந்தரர் கோவிலுக்கு பன்னிருவேலி நிலம் கேட்டார். மன்னனும் உடனே தர சுந்தரரும் இறைவனை பாடினார் மழையும் நின்றது.
மேல ஆதனூர் என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர் நந்தனார் மிகச் சிறந்த சிவபக்தர். இவர் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் நடராஜப்பெருமானை தரிசிக்க மிகுந்த ஆவல் கொண்டிருந்தார். ஆனாலும் கூலி வேலை செய்து பிழைக்கும் அவரால் உடனடியாக சிதம்பரம் செல்லமுடியவில்லை. அவர் வேலை செய்யும் இடத்திலும் அனுமதி கிடைக்கவில்லை. நாளை போகலாம் நாளை போகலாம் என்றே இருந்தார். அதனால் அவருக்கு திருநாளைப்போவார் என்ற பெயர் ஏற்பட்டது. ஒருநாள் சிதம்பரம் செல்கையில் திருப்புன்கூர் தலத்திற்கு வருகிறார். அப்போது அவர் தாழ்த்தப்பட்ட குலத்தவர் என்பதால் கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுக்கப்படுகிறது. கோயில் வாசலில் இருந்தபடியே எட்டி எட்டி உள்ளே பார்க்கிறார். சுவாமி தெரியவில்லை. முன்னால் இருக்கும் பெரிய நந்தி மறைத்துக் கொண்டிருந்தது. என்ன செய்வேன் இறைவா என்று மனமுருகுகிறார். மலைபோல் நந்தி படுத்திருக்கே என்று பாடுகிறார். துவார பாலகர்கள் மூலவரிடம் நந்தனார் வந்திருக்கிறார் என்று கூற சிவபெருமான் நந்தானாரின் பக்தியை மெச்சி தனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் நந்தியை சற்றே விலகி இருக்குமாறு பணித்தார். இறைவன் சொல்படி நந்தி விலக இறைவன் நந்தனாருக்கு காட்சி தந்தார்.
கோவில் 5 நிலை ராஜகோபுரத்துடனும் 2 பிராகாரங்களுடனும் காட்சி அளிக்கிறது. வெளிப்பிராகாரத்தில் குளம் வெட்டிய விநாயகர் சந்நிதியும் சுப்பிரமணியர் சந்நிதியும் தலமரமும் பிரம்மலிங்கமும் உள்ளன. கவசமிட்ட கொடிமரத்தையும் சற்று விலகியுள்ள பெரிய நந்தியை கடந்து சென்றால் உள் வாயிலை அடையலாம். உள்வாயிலின் மேற்புறத்தில் வண்ணச்சுதையில் பஞ்சமூர்த்திகள் காட்சி தருகின்றனர். துவார விநாயகரை வணங்கி உள்வாயிலைக் கடந்தால் உள்பிராகாரத்தில் இடப்பால் சூரியன், நால்வருடன் கலிக்காமரும் சேர்ந்த சந்நிதி. சுந்தரவிநாயகர் சந்நிதிகள் உள்ளன. சோமாஸ்கந்தர் பெரிய திருமேனியுடன் உள்ளார். அடுத்து சூரியன், அக்கினி வழிபட்ட லிங்கங்கள் உள்ளன. புங்க மரக்காட்டுப் பகுதியில் இறைவன் புற்று வடிவமாக இருப்பதால் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் மாலை 8.30 மணிக்கு குவளை எடுத்துவிட்டு புனுகு சட்டம் சாத்தி வழிபடுகிறார்கள். சுவாமியை திருக்குவளை சாத்தியுள்ள நிலையில்தான் தினசரி பக்தர்களால் காணமுடியும்.
கோயில் சிறப்புகள்:
•சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 20 வது தேவாரத்தலம் திருப்புன்கூர்.
•மூலவர் சிவலோகநாதர். மூலவர் சற்று குட்டையான பாணத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கம் மண் புற்றினால் ஆன சுயம்பு மூர்த்தியாகும். சுயம்பு லிங்கத்தின் மீது குவளை சார்த்தியே காணப்படுகிறார். புணுகு சட்டம் சார்த்தும் நாளில் மட்டும் கவசமின்றி மூலவரை தரிசிக்கலாம்.
•அம்பாள் சொக்கநாயகி, சௌந்தர நாயகி. இறைவன் சந்நிதிக்கு இடதுபுறம் அம்பாள சொக்கநாயகியின் சந்நிதி தனிக்கோவிலாக ஒரு சுற்றுப் பிராகாரத்துடன் அமைந்துள்ளது.
•இந்த ஊர் புங்க மரம் நிறைந்த காட்டுப்பகுதியாக இருந்ததால் திருப்புன்கூர் என்றும் புங்க மரத்தடியின் கீழே சிவபெருமான் தரிசனம் கொடுப்பதால் திருப்புன்கூர் என்றும் இத்தலம் வழங்கப்படுகிறது.
•நந்தனாருக்காக சிவபெருமான் நந்தி சற்று விலகி இருக்கச் சொன்ன தலம். அதனால் நந்திதேவர் மூலவருக்கு நேராக இல்லாமல் விலகியே இருக்கிறார். நந்தி திருவுருவம் மிகவும் அழகாக உள்ளது. நந்தனார் ஊராகிய ஆதனூர் கோயிலுக்கு தெற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
•எல்லாக் கோயில்களிலும் நந்திக்கு நாக்கு இருக்கும். ஆனால் இங்கிருக்கும் நந்திக்கு நாக்கு இருக்காது.
•துவார பாலகர்கள் எல்லாக் கோயில்களிலும் நேராக இருப்பர். இங்கு தலை சாய்த்து இருக்கின்றார்கள். சுவாமியிடம் தரிசிக்க நந்தனார் என்ற பக்தன் வந்துள்ளார் என்று இறைவனிடம் கூறியதால் இவ்வாறு அமைந்துள்ளளது.
•குளம் வெட்டிய பிள்ளையார் என்பவர் இங்கு பிரசித்தம். நந்தனாருக்காக அவர் சிவபெருமானை தரிசிக்கும் முன் குளித்து விட்டு வர வசதியாக இந்த பிள்ளையார் ஒரே இரவில் பூதங்களை கொண்டு குளம் வெட்டினார் என்பது வரலாறு.
•சுவாமிக்கும் அம்பாளுக்கும் அழகில் யார் சிறந்தவர் என்ற போட்டி வந்து விடுகிறது. போட்டி வரும் போது பூலோகத்தில் ஒரு தர்ப்பை புல்லை எடுத்து மூன்று முடிச்சு போட்டு கீழே போடுகிறேன். அது எங்கு எந்த இடத்தில் கீழே விழுகிறதோ அங்கு இருவரில் யார் உருவம் தோன்றுகினதோ அவரே அழகில் சிறந்தவர் என்று சுவாமி சொல்ல அதற்கு அம்பாள் சம்மதிக்கிறாள். அதன்படி சுவாமி தர்ப்பையை கீழே போட தர்ப்பை இந்த இடத்தில் கீழே விழுந்து பஞ்சலிங்கமாக ஆகிவிடுகிறது. அந்த பஞ்ச லிங்கங்கள் இங்கு உள்ளது.
•சிவபெருமான் திரிபுரத்தை எரித்தபோது அழியாமல் பிழைத்த அசுரர்கள் மூவரில் இருவரை தனது திருக்கோயிலின் வாயில் காவலராகும்படி பணித்தார். மற்றொருவனை தான் நடனம் ஆடும்பொது அழகிய மத்தளத்தை இசைக்கும்படி அருள் செய்தார் என்ற வரலாற்றை சுந்தரர் தனது பாடலில் பாடி திரிபுர அசுரர்களுக்கு அருள் செய்ததை அறிந்து அடியேன் உன் திருவடியை அடைந்தேன் என்னை ஏற்றுக் கொண்டருள் என்று தனது பாடலில் இறைவனை வேண்டுகிறார். சுந்தரரின் பாடலில் உள்ள வரலாற்றுப்படி இக்கோவிலில் உள்ள நடராஜ சபையில் உள்ள நடராஜரின் பாதத்தில் தேவர் ஒருவர் தன் நான்கு கரங்களாலும் பஞ்சமுக வாத்யத்தை அடித்து இசை எழுப்புகின்றபடி அமர்ந்துள்ளார்.
•இத்தலத்துக் கல்வெட்டுக்களில் இறைவனுடைய திருமஞ்சனத்திற்கும் திருப்பள்ளியெழுச்சிக்கும் பூமாலைகள் கட்டிச்சார்த்துதற்கும் நிலம் விடப்பட்ட செய்திகள் குறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டில் இவ்விறைவன் சிவலோகமுடைய நாயனார் என்று குறிக்கப்படுகின்றார்.
•பிரமன், இந்திரன், அகத்தியர், சந்திரன், சூரியன், அக்கினி, பதஞ்சலி, வியாக்ரபாதர், சப்தகன்னியர், ஏயர்கோன் கலிக்காமர், ராசேந்திர சோழன் வழிபட்டுள்ளனர்,
•திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.
•வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “ஒன்றிக் கருப்புன்கூர் உள்ளக் கயவர் நயவாத் திருப்புன்கூர் மேவும் சிவனே” என்று போற்றி உள்ளார்.
•சுந்தரர்பால் கோபங்கொண்ட விறன்மிண்ட நாயனார் (இத்தலத்திற்கு வந்து தங்கியிருந்து) வழிபட்ட சிறப்புடைய தலம்.
•இங்குள்ள சோமாஸ்கந்தர் – பெரிய திருமேனி இத்தலத்திற்குரிய தனிச்சிறப்பு
•தலப்பதிகங்கள் சலவைக் கல்லில் பதிக்கப்பட்டுள்ளது.
•தேரடியில் நின்று தரிசித்த நந்தனாருக்கு, அத்தேரடியைப் புதுபித்துக் கோயில் கட்டப்பட்டுள்ளன.
திருவிழா:
வைகாசி விசாகம் – 10 நாட்கள் திருவிழா – பிரம்மோற்சவம் – இத்தலத்தில் மிகச்சிறப்பாக நடக்கும்
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சிவலோகநாதர் சுவாமி திருக்கோயில்,
திருப்புங்கூர் – 609 112.
நாகப்பட்டினம் மாவட்டம்.
போன்:
+91- 9486717634
அமைவிடம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வைதீஸ்வரன் கோவிலில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, திருபுங்கூர் சிவலோகநாதர் சுவாமி திருக்கோவில். மயிலாடுதுறையிலிருந்தும் சீர்காழியிலிருந்தும் திருப்புன்கூருக்கு நிறைய பஸ் வசதிகள் உள்ளன.