#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஆச்சாள்புரம்

June 13, 2023 0 Comments

மூலவர் : சிவலோகத் தியாகேசர்,பெருமணமுடைய மகாதேவர்.
உற்சவர் : திருஞான சம்பந்தர்
அம்மன் : வெண்ணீற்று உமை நங்கை,
சுவேத விபூதி நாயகி, விபூதிகல்யாணி.
தல விருட்சம் : மாமரம்
புராண பெயர் : சிவலோகபுரம்,
நல்லூர்பெருமணம், திருமண நல்லூர் திருமணவை
ஊர் : ஆச்சாள்புரம்
மாவட்டம் : நாகப்பட்டினம்
திருஞானசம்பந்தர் மூன்று வயது பாலகனாக இருந்தபோதே ஞானம் பெற்றவர். தன் வாழ்நாள் முழுமையும் சிவத் தலங்களை தேடித்தேடி, அந்தந்த பெருமானைப் பாடுவதையே பணியாகக் கொண்டவர். சம்பந்தர் தமது 16-வது வயதில் சீர்காழிக்கு வந்திருந்தபோது, தனது தந்தை சிவபாதரைக் கண்டார். மகனுக்குத் திருமணம் செய்துவைக்க தந்தை விரும்பினார். தந்தையின் விருப்பப்படி திருமணத்திற்கு சம்மதித்தார். ஆச்சாள்புரம் என்று அழைக்கப்படும் திருநல்லூர் பெருமணம் என்னும் தலத்தில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி என்னும் அடியாரின் மகள் தோத்திர பூர்ணாம்பிகை. சிறுவயது முதலே சிவபெருமான் மீது அபார பக்தி கொண்டவர். இவரையே திருஞானசம்பந்தருக்குத் திருமணம் செய்துவைக்க பெரியோர்கள் முடிவெடுத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருவெண்ணீற்று உமையம்மை உடனாகிய சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தான் திருஞானசம்பந்தருக்கும், தோத்திர பூர்ணாம்பிகைக்கும் திருமணம் நடைபெற்றதாக புராண வரலாறு கூறுகிறது.
திருமண விழாவில் பங்கேற்க வந்த புது மாப்பிள்ளையாகிய திருஞானசம்பந்தருடன், நாயன்மார்களான திருநீலநக்க நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார் ஆகிய மூவரும் வந்திருந்தனர். இவர்களைக் கண்டு ஆச்சாள்புரம் கிராமம் ஆனந்தத்தில் மூழ்கியது.
பெரியோர்கள் வாழ்த்த, திருஞானசம்பந்தருக்கும், தோத்திர பூர்ணாம்பிகைக்கும் திருமணம் இனிதே நிறைவுற்றது. திருமாங்கல்யம் பூட்டியதும் அங்கிருந்தவர்கள் மத்தியில் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றைப் பாடினார். அதுதான் அவர் பாடிய கடைசி பதிகமாகும்.
அன்றைக்கு வைகாசி மாதம் மூலம் நட்சத்திர நன்னாள். சம்பந்தரின் பதிகத்தைக் கேட்டு, இறைவன் ஜோதி ரூபமாய் பிரசன்னமானார். திருஞானசம்பந்தர் தன்னோடு நின்ற அத்தனை அடியார்களையும் சிவஜோதியில் கலக்க அழைத்தார். முதலாவதாக தோத்திர பூர்ணாம்பிகையின் கைகளைப் திருஞானசம்பந்தர் பற்றிக்கொண்டு ‘நமசிவாய வாழ்க’ என்றபடியே ஜோதியில் இருவரும் கலந்தனர். அடுத்து திருமண விழாவிற்கு வந்திருந்த நாயன்மார் மூவரும், தம் மனைவியரோடு ஜோதியில் புகுந்து கலந்தனர். பின்னர் அடியார்கள் எல்லாம் கலந்தனர்.
கோயில் சிறப்புகள் :
•சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு வேதநெறி தழைத்தோங்கவும் சைவத்துறை விளக்கம் பெறவும் திருஞானசம்பந்தர் அவதரித்த தலம் சீர்காழி. அதேபோல் தனது திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவருடன் தானும் சிவ ஜோதியில் கலந்த தலம் ஆச்சாள்புரம்.
•அம்பாள் திருவெண்ணீற்று உமையம்மை, சுவேத விபூதிநாயகி. ஆச்சாள், ஆயாள் அம்பிகையின் வேறு பெயர்கள். ஆச்சாளே நேரில் வந்து திருஞானசம்பந்தரின் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு திருநீறு அளித்ததால் அம்பாளுக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற திருநாமமும் இத்தலத்திற்கு ஆச்சாள்புரம் என்ற பெயரும் ஏற்பட்டது
•பிரம்மா இங்கு வந்து வழிபட்டு படைப்பு தொழிலை கைவரப்பெற்றார்.
•விஷ்ணு வந்து வழிபட்டு அசுரர்களை வெல்லும் வரம் பெற்றார்.
•இந்திரன் போகம் பெற்றான். சந்திரன் அபயம் பெற்றான்.
•கங்கா தேவி தவம் செய்து இங்குள்ள வாசலில் எழுந்து இறைவனை வழிபட்டாள்.
•காகபுசுண்டரிஷி இத்தலத்தில் இறைவனுடன் ஐக்கியமானார்,
•திருமால், காகமுனிவர், வசிட்டர், பராசரர், பிருகு, ஜமதக்னி, பிரமன், முருகன், அத்ரி, வியாசர், மிருகண்டு, அகத்தியர், ஜமதக்னி ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்,
•காக முனிவர் இத்தலத்தை காலால் மிதிப்பதற்கு பயந்து தலையால் நடந்து வந்து நிருதி திசையில் அமர்ந்து தவமிருந்தார்.
•திருஞானசம்பந்தர். திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலநக்கநாயனார் ஆகியோர் வழிபட்டுள்ளனர். உள்வாயிலில் இருபுறமும் தலப்பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன.
•சோழ, பாண்டிய, மகாராட்டிர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. கல்வெட்டில் இறைவன் திருப்பெருமண முடைய மகாதேவர் என்று குறிக்கப்பட்டிருக்கின்றார்.
•எல்லாம் வல்ல ஈசன் ஜோதிப்பிழம்பாக தோன்றி,””நீயும் உனது மனைவியும் திருமணம் காண வந்தோர் அனைவரும் இந்த ஜோதியில் கலந்து விடுக”என்று அருள்புரிந்தார். இந்த காட்சியைக்கண்ட ஞான சம்பந்தர் மெய்சிலிர்த்து
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினு மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே’
எனத் தொடங்கும் நமசிவாய திருப்பதிகம் பாடி அனைவருக்கும் சிவலோகம் வழங்கி, தாமும் தன் துணைவியார் மங்கை நல்லாளுடன் சிவஜோதியில் கலந்தார். இந்த பதிகம் தான் சம்பந்தர் தன் வாழ்நாளில் பாடிய கடைசிப்பதிகமாகும்.
•இங்கு வந்த அருணகிரிநாதர் ஒரு திருப்புகழ் பாடினார்.
•பொதுவாக எந்த ஆலயத்திலும் உற்சவரை கருவறைக்குள் எடுத்துச் செல்ல மாட்டார்கள். ஆனால் இங்கு திருஞான சம்பந்தரின் திருமணம் முடிந்தபின், சம்பந்தரின் உற்சவ மூர்த்தியை கருவறைக்குள் கொண்டு சென்று மூலவர் காலடியில் வைப்பர். பின் மிகப்பெரிய கற்பூரக் கட்டிகளை ஏற்றி தீபாராதனை செய்வார்கள். அப்போது சம்பந்தர் ஜோதியில் கலப்பதாக ஐதீகம்.
•தீர்த்தம் பஞ்சாக்கர, பிருகு, அசுவ, வசிஷ்ட, அத்திரி, சமத்கனி, வியாச மிருகண்டு தீர்த்தம்,
•கோயில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலைகளுடைய ராஜ கோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. ராஜ கோபுரத்தை அடுத்து நந்த மண்டபமும் அடுத்து நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளது. நூற்றுக்கால் மண்டபத்தில் திருஞானசம்பந்தர் ஸ்தோத்திர பூராணாம்பிகையோடு மணக்கோலத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். கிழக்கே பார்த்தபடி சிவலோகதியாகராஜர் சன்னதியும் திருவெண்ணீற்று உமையம்மையின் சன்னதியும் அமைந்துள்ளது.
திருவிழா:
தோத்திர பூர்ணாம்பிகையின் கைகளைப் திருஞானசம்பந்தர் பற்றிக்கொண்டு ‘நமசிவாய வாழ்க’ என்றபடியே ஜோதியில் இருவரும் கலந்தனர். அடுத்து திருமண விழாவிற்கு வந்திருந்த நாயன்மார் மூவரும், தம் மனைவியரோடு ஜோதியில் புகுந்து கலந்தனர். பின்னர் அடியார்கள் எல்லாம் கலந்தனர். இவ்விழா ஆண்டுதோறும் ஆச்சாள்புரம் தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் வைகாசி மூலம் நட்சத்திர நாளில் நடைபெறுகிறது. முதல்நாள் காலையில் திருஞானசம்பந்தருக்கு உபநயனம், தீருவீதி வலம் வருதல், இரவில் சீர்வரிசை புறப்பாடு, மாப்பிள்ளை அழைப்பு ஆகியவை நடைபெறும். தொடர்ந்து இரவு 10 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். அதன் பின்னர், திருஞானசம்பந்தரும், தோத்திர பூர்ணாம்பிகையும் வெள்ளிப் பல்லக்கில் வீதி வலம் வருவார்கள்.
மறுநாள் அதிகாலையில் வைகாசி மூல நட்சத்திரத்தன்று பேரின்ப பேரொளிக்கு திருப்பதிகம் ஓதுதல் நிகழ்ச்சியும், சிவஜோதி தரிசனமும் நடைபெறும். இதைக்காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சிவலோக தியாகராஜ சுவாமி திருக்கோயில்,
ஆச்சாள்புரம்,
சீர்காழி- 609 101.
நாகப்பட்டினம் மாவட்டம்.
போன்:
+91- 4364 – 278 272, 277 800.
அமைவிடம்:
சிதம்பரம் – சீர்காழி சாலையில், கொள்ளிடத்திலிருந்து 8-கி.மீ. தொலைவில் உள்ளது. சீர்காழியிலிருந்து வடகிழக்கில் 13 கி.மீ. தூரத்திலும், சிதம்பரத்திலிருந்து தென்கிழக்கில் 12 கி.மீ தூரத்திலும் ஆச்சாள்புரம் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு சீர்காழியிலிருந்து மஹேந்திரபள்ளி செல்லும் பஸ்சில் ஏறி ஆச்சாள்புரத்தில் இறங்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − three =