#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தலச்சங்காடு

June 13, 2023 0 Comments

மூலவர் : நாண்மதியப்பெருமாள்,
உற்சவர் : வெண்சுடர்ப்பெருமாள், செங்கமலவல்லி
தாயார் : தலைச்சங்க நாச்சியார்
புராண பெயர் : திருத்தலைசங்க நாண்மதியம்,
தலைசிங்க நான்மதியம்
ஊர் : தலச்சங்காடு
மாவட்டம் : நாகப்பட்டினம்
ஸ்தல வரலாறு :
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, அதில் இருந்து, அமுதம், மகாலட்சுமி, சந்திரன் முதலானோர் தோன்றினர். இதில் சந்திரன் முதலில் தோன்றியதால், திருமகளுக்கு அவர் அண்ணன் ஆகிறார், நவக்கிரகத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக முக்கிய இடத்தில் சந்திரன் இருக்கிறார். அத்திரி முனிவருக்கும் அனுசுயா தேவிக்கும் பிறந்தவர்களில் சோமன் என்பவரே சந்திரன் என்று அழைக்கப்படுகிறார் என்று புராணங்களில் கூறப்படுகிறது. புறத் தோற்றத்தில் சந்திரன் மிகவும் அழகானவர். தேவகுருவிடம் முறையாகக் கல்வி பயின்றவர், கலைகள் பலவற்றில் தேர்ச்சி பெற்றவர்.
ஒரு சமயம் சந்திரன் தனக்கு அனைத்திலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று திருமாலை வணங்கி ‘ராஜசூய யாகம்’ நடத்தினார். இதில் முனிவர்கள் பலர் வந்திருந்தனர். தேவகுருவின் மனைவி தாரை வந்திருந்தார். தாரையும் சந்திரனும் சந்தித்துக் கொண்டதில் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. இதுகுறித்து கவலையடைந்த தேவகுரு, திருமாலிடம் முறையிட்டார். தனது சீடன் இவ்வாறு செய்ததில் கோபம் கொண்ட தேவகுரு, சந்திரன் கொடிய நோயை அடையும்படி சபித்தார், இந்நிலையில் சந்திரனுக்கும் தாரைக்கும் புதன் பிறந்தார். திருமால் கூறியபடி சந்திரன் தாரையை குருவிடம் ஒப்படைத்தார். தந்தையின் மீது வெறுப்பு கொண்ட புதன், இமயமலைக்குச் சென்று கடும்தவம் புரிந்து கிரகங்களில் ஒன்றானார்.
தக்கன் என்பவருக்கு 27 மகள்கள். அவர்கள் அனைவரும் சந்திரனை திருமணம் செய்து கொண்டனர். அனைவரிடத்தும் சமமாக அன்பு செலுத்துவதாக சந்திரன் உறுதி அளித்த நிலையில், ரோகிணியிடத்தில் மட்டும் அதிக அன்பு செலுத்தினார். இதனால் மற்றவர்களுக்கு கோபம் வந்து, தந்தையிடம் முறையிட்டனர். சினமடைந்த தக்கன், சந்திரனின் அழகும் ஒளியும் தினம் தினம் குறையும்படி சபித்தார். இதன் காரணமாக முழு சந்திரன் தினம் தினம் தேயத் தொடங்கினார். தேவகுருவின் சாபம், தக்கனின் சாபம் – இரண்டு சாபங்களால் தவித்த சந்திரன், இவற்றில் இருந்து மீள்வதற்கு, திருமாலிடம் யோசனை கேட்டார், உடனே திருமால், ஸ்ரீரங்கம், திருஇந்தளூர், தலைச்சங்காடு ஆகிய தலங்களுக்குச் சென்று வழிபடும்படி சந்திரனுக்கு அறிவுறுத்தினார். சந்திரனும் ஸ்ரீரங்கம், திருஇந்தளூர் தலங்களுக்குச் சென்றுவிட்டு நிறைவாக இத்தலம் வந்தடைந்தார். தீர்த்தத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்ததும், சாபம் நீங்கப்பெற்றார் சந்திரன். பெருமாளும் சந்திரனுக்கு காட்சி கொடுத்துவிட்டு, அவரை தலையில் சூடிக் கொண்டார்.
கோயில் சிறப்புகள் :
•சந்திர விமானத்தின் கீழ் மூலவர் நாண்மதியப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கியபடி சேவை சாதிக்கிறார்.
•அழகிய சங்கை ஏந்தியபடியால் திருமங்கையாழ்வார் இத்தலத்தை தலைச்சங்க நாண்மதியம் என்று அழைத்தார்.
•இத்தல பெருமாள், சிவபெருமானைப் போல தலையில் பிறைச் சந்திரனை தலையில் சூடி அருள்பாலிக்கிறார். சந்திரன் தனது சாபம் நீங்கும் பொருட்டு இவ்வூர் தீர்த்தத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
•இக்கோயிலில் சில காலம் வழிபாடு இன்றி இருந்த நிலையில் வடுக நம்பி சீரமைக்க முயன்றார். பின்னர் அவரது சீடர் சுந்தர ராமானுஜ தாசர் திருப்பணிகள் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
•இக்கோயிலை திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் 2 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்.
•தலை + சங்கு + காடு – என பிரித்து பார்த்தால் பழந்தமிழர்கள் இயற்கைத் தாவரங்களின் பெயரிலேயே நிலத்துக்கும் அதைச் சார்ந்த ஊருக்கும் பெயர் வைத்துள்ளனர் என்பதை உணர முடியும். சங்குச் செடிகள் மிகுதியாகப் பயிரிடப்பட்டு, அதன் பூக்கள் இவ்வூர் கோயில்களுக்கும், சுற்று வட்டாரங்களில் உள்ள கோயில்களுக்கும் அனுப்பப்பட்டன.
•இவ்வுலக உயிர்களைக் காப்பதற்காக சங்காரண்யேஸ்வரரை வழிபாடு செய்து தனது ஆயுதமாக சங்கைப் பெற்றுள்ளார் திருமால். அதனால் இவ்வூரில் உள்ள சிவபெருமான் கோயிலில் திருமாலுக்கு தனி சந்நிதி உண்டு. திருமாலுக்கு பாஞ்சசன்யம் என்ற சங்கை அருளிய காரணத்தால் சிவபெருமான், சங்காரண்யேஸ்வரர், சங்கவனநாதர் என்று அழைக்கப்படுகிறார்.
•இத்தல பெருமாளை சந்திரன், தேவர்கள், ஆகியோர் தரிசித்துள்ளனர்.
•108 வைணவ திவ்ய தேசங்களில் மயிலாடுதுறை மாவட்டம் தலைச்சங்காடு நாண்மதியப் பெருமாள் கோயில் 25-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.
•இக்கோயிலுக்கு அருகில் திருநாங்கூர், திருவாலி, திருநகரி, திருவெண்காடு, பல்லவனீஸ்வரம், கீழப் பெரும்பள்ளம், மேலப் பெரும்பள்ளம், திருக்கடையூர் போன்ற தலங்கள் அமைந்துள்ளன.
திருவிழா:
வைகுண்ட ஏகாதசி வைபவம், நவராத்திரி தினங்களில் சுவாமி, தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு நாண்மதியப்பெருமாள் திருக்கோயில்
தலைச்சங்க நாண்மதியம் (தலச்சங்காடு)-609107
நாகப்பட்டினம் மாவட்டம்
போன்:
+91- 99947 29773
அமைவிடம் :
மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 18 கிமீ தொலைவிலும், சீர்காழியிலிருந்து (15 கி.மீ.) காரைக்கால் செல்லும் வழியில் தலைச்சங்காடு உள்ளது. பஸ்ஸ்டாப்பிலிருந்து மேற்கே 2 கி.மீ. தூரத்தில் கோயில் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − two =