#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் விராலிமலை
#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் விராலிமலை
118.#அருள்மிகு_சண்முகநாதர்_திருக்கோவில்
மூலவர் : சண்முக நாதன் ( ஆறுமுகம் )
அம்மன் : வள்ளி, தேவசேனா
தல விருட்சம் : விராலிச் செடி
தீர்த்தம் : நாகதீர்த்தம்
புராண பெயர் : சொர்ணவிராலியங்கிரி
ஊர் : விராலிமலை
மாவட்டம் : புதுக்கோட்டை
#ஸ்தல_வரலாறு :
இப்போது கோயில் இருக்கும் மலைப்பகுதியில் குரா மரம் இருந்தது. வேடன் ஒருவன் வேங்கையை விரட்டி வரும்போது குரா மரம் இருக்கும் இடத்தில் வேங்கை காணாமல் போய் விடுகிறது. குரா மரம் இருக்கும் இடத்திலேயே இறைவன் இருப்பதாக எண்ணி வழிபாடு நடந்திருக்கிறது. வயலூரிலிருந்த அருணகிரிநாதரை, ‘விராலி மலைக்கு வா’ என்று முருகப்பெருமான் அழைக்க அவ்வாறே வந்த அருணகிரிநாதா் குறிப்பிட்ட இடம் தெரியாமல் தவிக்க வேடன் ரூபத்தில் வந்து விராலிமலைக்கு வழிசொல்லி அழைத்துச் சென்று மலையை அடைந்தவுடன் மறைந்து விடுகிறாா். அஷ்டமா சித்தியை அருணகிரிநாதருக்கு இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் வழங்கியதால் இத்தலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இக்கோயிலில் ஒரு காலத்தில் நடந்த திருப்பணியில் கருப்பமுத்து என்றபக்தர் ஈடுபட்டார். ஒருநாள் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அருகில் இருந்த நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றைக் கடக்க முடியவில்லை. முருகனைப் பிரார்த்தித்தார். குளிர் தாங்காமல் சுருட்டு ஒன்றை பற்றவைத்தார். அப்போது அவர் அருகே ஒருவர் நடுங்கியபடி வந்து நின்றார். அவர் மீது இரக்கப்பட்ட கருப்பமுத்து, “உங்களுக்கும் சுருட்டு வேண்டுமா?’ என கேட்டார். வந்தவரும் சுருட்டை வாங்கிக் கொண்டார். அந்த நபர் கருப்பமுத்துவுக்கு ஆற்றைக் கடக்க உதவி செய்தார். பின்னர் காணாமல் போய்விட்டார். கருப்பமுத்து கோயிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்தபோது அவர் முன்னால் சுருட்டு இருந்ததைக் கண்டு அதிர்ந்தார். கருப்பமுத்து நடந்ததைக்கூற அங்கிருந்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அன்று முதல் மாலை வேளை பூஜையில் முருகனுக்கு சுருட்டு நைவேத்யமாக படைக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது.
இடைக்காலத்தில் புதுக்கோட்டை மகாராஜா இப்பழக்கத்திற்கு தடை விதித்தார். அவர் கனவில் தோன்றிய முருகன், “எனக்கு சுருட்டு படைப்பது மற்றவருக்கு உதவி செய்யும் மனப்பான்மை வளரவேண்டும் என்பதற்காகத்தானே தவிர, புகைக்கும் பழக்கத்திற்கு முக்கியத்துவம் தருவதற்காக அல்ல. துன்பப்படும் ஒருவனுக்கு ஏதோ ஒரு வழியில் உதவி செய்ய வேண்டும் என என் பக்தர் விரும்பினார். அதற்காகவே அவர் தந்த சுருட்டை தகுதியற்றதாயினும் அன்புடன் ஏற்றுக்கொண்டேன். இப்பழக்கம் தொடரட்டும். தடை செய்யாதே!’ என்றார். அதன்பிறகு இன்றுவரை இப்பழக்கம் இருக்கிறது. இந்த சுருட்டை பிரசாதமாகப் பெற்று, வீட்டில் கொண்டு வைக்கின்றனர். இறைவனுக்கு என்ன படைக்கிறோம் என்பது முக்கியமல்ல; பக்தியும் அன்புமே முக்கியம் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.
#கோயில்_சிறப்புகள் :
வள்ளி திருமணம் நடந்த தலம் என்று கூறப்படுகிறது.மூலவர் முருகப்பெருமான் 10அடி உயரத்தில் இருப்பது சிறப்பாகும்
சுமார் 2,000 வருடப் பழமை வாய்ந்த ஆலயம். ஆறுமுகங்களுடன் அசுர மயிலில் அமர்ந்தபடி, அற்புதமாகக் காட்சி தருகிறார் மயில்வாகனன். எப்படியும் இங்கே ஆயிரத்து ஐந்நூறு மயில்களுக்கும் அதிகமாக இருக்கின்றன என்று பெருமிதத்துடன் சொல்கின்றனர், பக்தர்கள்.
அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய தலம். வயலூரில்அருணகிரிநாதருக்கு காட்சி தந்த முருகன் விராலிமலைக்கு வரச் சொல்லியதால் இங்கு அருணகிரி நாதர் வந்துள்ளார். வயலூரிலிருந்து கிளம்பிய அருணகிரிநாதர் முருகப்பெருமான் சொன்ன விராலிமலை எங்கிருக்கிறது என்று வழி தெரியாமல் தவிக்கவே வேடன் ரூபத்தில் முருகப்பெருமான் வந்து அருணகிரிநாதருக்கு வழிகாட்டி அழைத்து வந்தாராம்.அத்தகைய சிறப்பு வாய்ந்த தலம் விராலிமலைத் தலம்.
வயலூரில் ஓம் என்று நாவில் எழுதி திருப்புகழ் பாட வைத்த முருகப்பெருமான் இந்த விராலிமலைத் தலத்தில்தான் அருணகிரிநாதருக்கு அஷ்டமாசித்தி வழங்கியுள்ளார். இத்தலத்தில் பலகாலம் தங்கியிருந்த அருணகிரி நாதர் இத்தலத்து முருகனை தன் திருப்புகழில் உருகிப்பாடியுள்ளது இத்தலத்தின் பெருமைக்கு சான்று.
திருவண்ணாமலைக்கு ஈடாக ஏராளமான ஞான சித்தா்கள் இந்த மலையில் தவம் செய்துள்ளனா். திருவாரூா் தட்சிணா மூா்த்தி அடியார்க்கு இறைவனே அப்பம் தந்த தலம். ஜனகா், செனந்தா், செனாதனா், செனக்குமாரா் நால்வருக்கும் தியானம் செய்த போது முருகனே தோன்றி அருள் தந்த திருத்தலம். மயில்கள் நிறைந்த மலை. ஆறுமுகப் பெருமான் வீற்றிருக்கும் தெற்கு பார்த்த மயில் அசுர மயில் என்றழைக்கப்படுகிறது.
விராலிமலை சண்முக நாதா் கோயிலில் நாரதா் உற்சவராக இருக்கிறார். பிரம்மாவின் ஆணவத்தை அடக்குவதற்காக சிவன் அவரது ஒரு தலையைக் கொய்தார். அப்போது நாரதா் தன் தந்தை எந்தத் தவறும் செய்யவில்லை என்று சிவனிடம் வாதிட்டார். இதனால் அவா் சிவநிந்தனைக்கு ஆளானார். அவரது தம்புராவும் வளைந்தது. எனவே இத்தலத்தில் முருகப் பெருமானை வணங்கி விமோசனம் பெற்றார். இதன் அடிப்படையில் இங்கு நாரதா் உற்சவராக இருக்கிறார். இவரது தம்புரா வளைந்து காணப்படுகிறது. கோயில் திருவிழாவின்போது சுவாமி முன்பாக இவரும் உலா செல்வது சிறப்பு.
இங்குள்ள வீரபாகுவின் திருமேனி ஐந்து அடி உயரத்திற்கு மேல் இருப்பது நாம் எந்த ஆலயத்திலும் காணாத காட்சி ஆகும். பாதி மலையேறியதும் இடும்பர் கடம்பர் சன்னிதி உள்ளது.
சரவணப் பொய்கையில் முருகப் பெருமான் தோன்றிய சமயத்தில், வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி, முருகனுக்கு உணவு அளிக்க மறந்து விடுகிறார். இதனால் முனிவர் மனைவியை சபித்து விடுகிறார். இதை அறிந்த முருகப் பெருமான், வசிஷ்ட முனிவருக்கு சாபம் அளிக்கிறார். இத்தலத்துக்கு வந்த வசிஷ்ட முனிவர், முருகப் பெருமானை வேண்டி, தன் சாபம் நீங்கப் பெற்றார்.
திருவாரூர் தட்சிணாமூர்த்தி அடியாருக்கு இறைவனே அப்பம் தந்த தலமாகவும், பிரம்மதேவர் முதன்முதலாக படைத்ததாகக் கூறப்படும் சனகர், சதானந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நால்வரும், தியானம் செய்த இடத்துக்கே முருகப் பெருமான் வந்து அருள்பாலித்த தலமாகவும் இத்தலம் போற்றப்படுகிறது. இத்தலத்தில் நாக தீர்த்தத்தின் நடுவே நாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
#திருவிழா:
வைகாசி விசாகம் – 10 நாட்கள்,
தைப் பூசம் – 10 நாள்.
கந்த சஷ்டித் திருவிழா (சூரசம்காரம்) – ஐப்பசி– 6 நாட்கள்.
அருணகிரிநாதர் இசை விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடக்கிறது.
#திறக்கும்_நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சண்முக நாதர் திருக்கோயில்,
விராலிமலை – 621 316
புதுக்கோட்டை மாவட்டம்.
போன்:
+91 4322 221084, 98423 90416
அமைவிடம் :
மதுரை- திருச்சி நெடுஞ்சாலையில் கோயில் இருப்பதால் போக்குவரத்து வசதி எளிது.திருச்சி நகரிலிருந்து நகர பேருந்து வசதி மூலம் கோயிலை சென்றடையலாம்.
#viralimalaitemple #Viralimalai #சண்முகநாதர் #templesofsouthindia #templesoftamilnadu #templeshistory #ஸ்தலவரலாறு #ஆலயம்அறிவோம் #முருகன்கோயில்கள் #murugantemples #templesofmurugan #SriAandalVastu #DrAndalPChockalingam #10அடிமுருகன் #வீரபாகு #நாரதா் #சரவணபொய்கை