#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கண்ண மங்கை

May 13, 2023 0 Comments

மூலவர் : பக்தவத்சலப்பெருமாள், பத்தராவிப்பெருமாள்
உற்சவர் : பெரும் புறக்கடல்
தாயார் : கண்ணமங்கை நாயகி (அபிஷேகவல்லி)
தல விருட்சம் : மகிழ மரம்
புராண பெயர் : லட்சுமி வனம்
ஊர் : திருக்கண்ண மங்கை
மாவட்டம் : திருவாரூர்
ஸ்தல வரலாறு :
பாற்கடலை கடைந்தபோது, மஹாலட்சுமி அவதரித்தார். அவரோடு உதித்த யானை, குதிரை, பாரிஜாதம் உள்ளிட்டவற்றை தேவர்களுக்குக் கொடுத்த திருமால், லட்சுமியின் அழகிய உருவத்தைக் கண்டு அவரை மணக்க நினைத்தார். இதேபோல், மஹாலட்சுமியும் திருமாலை மணக்க எண்ணி, தவம் செய்ய விரும்பினார். தவம் செய்வதற்கு ஏற்ற தலமாக திருக்கண்ணமங்கையைத் தேர்ந்தெடுத்து, தர்சன புஷ்கரணிக் கரையை அடைந்து தவம் மேற்கொண்டார். அவரின் தவத்தை மெச்சிய திருமால், உத்பலாவதகம் என்ற விமானத்தில் ஏறி, தர்சன புஷ்கரணி கரைக்கு வந்தார். கரையின் மேல் திசையில் நின்றுகொண்டு, கீழ்த்திசையில் தவம் செய்த லட்சுமியைக் கண்டார். பின்னர், விஷ்வக்சேனரிடம் ஓலை எழுதி, லட்சுமிக்கு அனுப்பினார். அதில், நான் மேற்குக் கரையில் நின்று கொண்டிருக்கிறேன் என எழுதியிருந்தது. திருமாலின் இங்கிதத்தை கண்டு மகிழ்ந்த லட்சுமி, பெருமாளிடம் தோழிகள் சகிதமாக வந்து வணங்கினார். பின்னர், ரிஷிகள், தேவர்கள், கந்தவர்கள், கின்னரர் ஆகியோர் அனைவரும் ஒன்று சேர்ந்து, லட்சுமி-திருமாலின் திருமண வைபத்தை நடத்தி வைத்தனர். தேவர்கள், ஒன்று கூடி பகவானுடைய பட்டமகிஷியாக மஹாலட்சுமியை தர்சனபுஷ்கரணி தீர்த்தங்களால், பட்டாபிஷேகம் செய்து வைத்தனர். அதனால், மஹாலட்சுமிக்கு அபிஷேகவல்லி என்ற பெயர் ஏற்பட்டது. லட்சுமி தவம் செய்ததால், இது லட்சுமி வனம் என்றும் வழங்கப்படுகிறது.
பக்தவத்சலனும், பிரம்மாவும்
முன்னொரு நாளில், மது, கைடபர் என்ற இரு அசுரர்கள், பிரம்மதேவனிடமிருந்து வேதங்களை அபகரித்துக்கொண்டு, கடலில் மறைந்தனர். வேதங்களை மீட்கும் பொருட்டு, உதவிகேட்க திருமாலிடம் சென்றார் பிரம்மன். பாற்கடலிலுள்ள திருமாலுடைய கோயில் காப்பான் ஸநந்தன் என்பவன், பகவான் பாற்கடலில் இல்லை, மஹாலட்சுமி தர்சன புஷ்கரணிக் கரையில் தவம் செய்வதால், அவருக்காக திருக்கண்ணமங்கையில் தர்சன புஷ்கரணியின் மேற்குத் திசையில் உள்ளார் என்று கூறினான். இதைக்கேட்ட பிரம்மன் பாற்கடலின் வடப்புறத்தில் திருமாலை நினைத்து தவம் புரிந்தார். தவத்தின் பயனாக, திருமால் விரைந்து வந்து, அசுரர்களை வதம் செய்து, வேதங்களை மீட்டுத் தந்தார். பின்னர் தன்னை வணங்கிய பிரம்மனிடம் அவர், இந்த லட்சுமி ஷேத்ரம் மஹாபுண்யமானது. என் ஸ்ரீபாத தீர்த்தமே தர்சன புஷ்கரணி. பிராட்டியோடு நான் இங்கு நித்யவாசம் செய்கிறேன். இந்த புஷ்கரணிக் கரையில் தரிசனம் கொடுத்தபடியால், இதற்கு தர்சன புஷ்கரணி எனப் பெயர் ஏற்படும் என்றார்.
இந்த புஷ்கரணிக்கு விஷ்ணு பாதகங்கை என்ற பெயரும் உண்டு. மஹாபலியின் யாகசாலைக்கு வாமன ரூபத்துடன் சென்று மூன்றடி மண் கேட்டபோது, அவன் கொடுக்க இசைந்தவுடன் த்ரிவிக்ரம அவதாரம் எடுத்தார். அப்போது, அவர் பாதத்திலிருந்து பெருகி வந்த விஷ்ணுபதி என்ற கங்கா தீர்த்தம், பெருமாளுடைய கால் பெருவிரலால் பள்ளமாக்கச் செய்து இங்கே நிறுத்தப்பட்டது. அதுவே தர்சன புஷ்கரணி. இது கங்கையைக் காட்டிலும் புனிதமானது. இந்த புஷ்கரணியில் ஒருமுறை நீராடுபவர்கள் கூட நற்பேறு பெறுவார்கள். இந்த புஷ்கரணியை ஸ்தாணு என்ற சிவன், பிரம்மன், முருகன், விநாயகர் ஆகியோர் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு திக்குகளில் காத்து வருகின்றனர். நடுவில், ஷேத்ர பாலகனோடு இந்திராதி தேவர்கள் அவர்களுக்குரிய திக்குகளில் காவல் புரிகின்றனர். மேலும், முப்பத்து முக்கோடி தேவர்கள், வசிஷ்டர், வாமவர், ஜாபாலி, காச்யபர், பராசரர், வியாசர், விஸ்வாமித்திரர், அஷ்டவக்ரர் ஆகிய பிரம்ம ரிஷிகள் திசைதோறும் நின்று தீர்த்த சேவை புரிவதாகப் புராணம் தெரிவிக்கிறது.
கோயில் சிறப்புகள் :
•பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. ஒரு தலத்திற்கு இருக்க வேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களும் அமைய பெற்றதால்,”ஸப்த புண்ய க்ஷேத்ரம்’,”ஸப்தாம்ருத க்ஷேத்ரம்’ என்ற பெயர் பெற்றது.
•இத்தலத்தில் நடந்த திருமால் திருமகள் திருமணத்தை காண தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்ததோடு, எப்போதும் இந்த திருக்கோலத்தை கண்டு கொண்டே இருக்க வேண்டும் என நினைத்தார்கள். எனவே தேனீக்கள் வடிவெடுத்து கூடுகட்டி அதில் இருந்து கொண்டு தினமும் பெருமாளின் தரிசனம் கண்டு மகிழ்கிறார்கள்.இன்றும் கூட தாயார் சன்னதியின் வடபுறத்தில் ஒரு தேன் கூடு உள்ளது. இந்த தேன் கூடு எவ்வளவு காலமாக உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. இந்த தேனீக்கள் பக்தர்களை ஒன்றும் செய்வதில்லை. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது ஓர் அற்புதமாகும்.
•மோட்சம் வேண்டுபவர்கள் ஒரு இரவு மட்டும் இங்கு தங்கினால் போதும் என்பது நம்பிக்கை.பக்தர்களுக்காக ஆவி போல வேகமாக வந்து அருள்பாலிப்பதால், பக்தர் ஆவி என்றாகி, “பத்தராவி’ என பெயர் பெற்றார் பெருமாள். இத்தல பெருமாள் உத்பல விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். சிவபெருமான் நான்கு உருவம் எடுத்து இத்தலத்தின் நான்கு திசைகளையும் காத்து வருகிறார்.
•கிருஷ்ண மங்கள ஷேத்திரமான பக்தவத்சலப் பெருமாள் கோயில் 4 பிரகாரங்களைக் கொண்டது. முதல் கோபுரமான மொட்டை கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால், பலிபீடமும் கொடிமரமும் உள்ளன. இடது புறம் ஆழ்வார்கள் சன்னதி. வலது புறம் ஸ்ரீ மணவாள மாமுனிகள் சன்னதி. இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் உள்ளது. இதைக் கடந்தால் முதல் பிரகாரம் வரும். செண்பக பிரகாரம் என அழைக்கப்படும் இந்த வெளிச்சுற்றில் நந்தவனமானது, கோயிலுக்கு மாலை போல அமைந்துள்ளது. இப்பிரகாரத்தின் வடபுறத்தில் திருக்கண்ணமங்கையாண்டான் திருவரசும், தலவிருட்சமாகிய மகிழமரமும் உள்ளன.
•பலிபீடத்தின் மேல்புறத்தில் இரண்டாவது ராஜகோபுரம் உள்ளது. கோபுரத்துக்கு உட்புறம் கருடாழ்வார் சன்னதி பெருமாளை நோக்கி உள்ளது. இங்கு கருடாழ்வார் கூப்பிய கரங்களுடன் நின்ற கோலத்தில் சங்கு சக்கரம் தரித்தபடி காட்சியளிக்கிறார். கருடாழ்வாரை வணங்கி, தென்புற பிரகாரத்துக்குச் சென்றால், தென்கிழக்குப் பகுதியில் விசாலமான திருமடைப்பள்ளியையும், மடைப்பள்ளி நாச்சியாரையும் காணலாம். அதையடுத்து திருவந்திக்காப்பு மண்டபம் உள்ளது. இதன் மேல்புறத்தின் இரண்டு பக்கங்களிலும் கருடன் சிலை காணப்படுகிறது. இம்மண்டபத்தில் பஞ்சவர்ண புறப்பாடுகளில் அந்திக்காப்பு பூஜை நடைபெறும்.
•தாயார் சன்னதியானது, கர்ப்பகிருஹம், அர்த்த மண்டபம், மஹா மண்டபம் ஆகிய அமைப்புகளைக் கொண்டது. கர்ப்பகிருஹத்தில் அபிஷேகவல்லித்தாயார், வீற்றிருந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். அர்த்த மண்டபத்தில் தெற்கு வடக்கு சுவர்களில் செவ்வக வடிவில் உள்ள சாளரத்தில் தேன்கூடு காணப்படுகிறது. பெருமாள் தாயார் திருக்கல்யாணத்தைக் காண வந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கு வண்டாக இருப்பதாக ஐதீகம்.
•இரண்டாம் சுற்றின் வடக்கு பிரகாரத்தில் மேற்குப் பகுதியில் ஆண்டாள் சன்னதி அமைந்துள்ளது. போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் ஆகிய நாள்களில் ஆண்டாள் புஷ்கரணிக்கு எழுந்தருளி, அங்குள்ள மண்டபத்தில் எழுந்தருளி நீராட்டு உற்சவம் கண்டருளுவார்.
•பிரகாரத்தின் தென்புறம் நடுப்பகுதியில் சொர்க்கவாசல் கோபுரத்துடன் காணப்படுகிறது. இதன் வழியாகவே வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் எழுந்தருள்வார். இவ்வாசலின் கிழக்குப் பகுதியில் ஒரு மேடை அமைக்கப்பட்டு, திருமாலின் இரண்டு பாதங்கள் உள்ளன. இதனையடுத்த பிரகாரத்தின் வடபுறத்தில் தேசிகர் சன்னதி, நவநீதகிருஷ்ணன் சன்னதி, கோதண்டராமர் சன்னதி, யாகசாலை ஆகியவை வரிசையாக தெற்கு நோக்கி அமைந்துள்ளன. தேசிகர் சன்னதிக்கு எதிரில் உள் சுற்றுச்சுவரில் லட்சுமி, நரசிம்மர் யாழ் மீட்டும் நங்கையின் உருவங்கள் உள்ளன.
•108 திவ்ய தேசங்களில் இவரே பெரிய பெருமாள். இப்பெருமாள் வருணனுக்கும், மார்க்கண்டேயருக்கும் சேவை சாதித்ததால், இவர்கள் இருந்த கோலத்தில் கூப்பிய கையுடன் எதிரெதிராக கருவறைக்குள் அமர்ந்துள்ளனர். இப்பெருமாள் பிராட்டியின் திருமணக் கோலத்தைக் காண வந்த தேவர்களின் சிற்பங்கள் கருவறையின் நான்கு புறச்சுவர்களிலும் உள்ளனர்.
•நின்ற கோலத்தில் சங்கு, சக்கரம் தரித்தவாறு காட்சியளிக்கும் கருடாழ்வார், பக்தர்களின் வேண்டுகோளை உடனுக்குடன் பூர்த்தி செய்வதால், கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறார்.
•தர்சன புஷ்கரணி என்பது கங்கையாகும். மேலும், கங்கை, யமுனை, நர்மதை, கெளமுதி, கோதாவரி, கிருஷ்ணவேணி, துங்கபத்ரை, சரஸ்வதி, அஸிக்நி, சதக்நி, ஷீரிணி, வேதவதி, ஸரயு, காவேரி, தாமிரபரணி, மஹாநதி, வாராஹி, சிந்து ஆகிய 18 தீர்த்தங்களும் தர்சன புஷ்கரணியில் வந்து தங்கியுள்ளன.
•மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்த போது, வானத்தை அளந்த காலை பிரம்மன் தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார். அதிலிருந்து தெறித்து விழுந்த ஒரு துளி இவ்விடத்தில் விழுந்தது. அதுவே தர்ஷன (தரிசன)புஷ்கரணி ஆனது. சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க அலைந்த போது இந்த புஷ்கரணியை கண்டான். இதைப் பார்த்த உடனேயே அவனது சாபம் தீர்ந்தது. எனவே தான் இதற்கு தர்ஷன புஷ்கரணி(தரிசித்த மாத்திரத்தில் பயன் தர வல்லது) என்ற பெயர் ஏற்பட்டது.இங்குள்ள தாயாரை பெருமாள் இந்த தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, பட்ட மகிஷியாக்கினார். இதனால் இந்த தாயாருக்கு அபிஷேகவல்லி என்று பெயர்.
•நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகளுக்கு திருக்கண்ணமங்கையாண்டான் என்ற சீடர் ஒருவர் இருந்தார். இவ்வூரில் பிறந்த இவர் பெருமாளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கோயிலைச் சுத்தம் செய்து பெருமாளே அடைக்கலம் என்று இருந்தார். ஒருநாள் இவர் வேதபாராயணம் செய்து கொண்டே நாய் வடிவம் கொண்டு மூலஸ்தானத்திற்குள் ஓடி ஜோதியாகி, இறைவனுடன் கலந்தார். இன்றும் ஆனி மாதம் திருவோண நட்சத்திரம் இவரின் மகா நட்சத்திரமாக கொண்டாடப்படுகிறது. இவரது பெயரே இவ்வூருக்கும் நிலைத்துவிட்டது.
திருவிழா:
சித்ராபவுர்ணமியை ஒட்டி பத்து நாள் திருவிழா நடக்கிறது.
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 12 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில்,
திருக்கண்ணமங்கை-610104
திருவாரூர் மாவட்டம்
போன்:
+91 4366 278 288, 98658 34676
அமைவிடம் :
திருவாரூர் கும்பகோணம் சாலையில் திருவாரூரிலிருந்து 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. திருவாரூர் அல்லது கும்பகோணத்திலிருந்து பேருந்தில் செல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =