#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருச்சி

May 3, 2023 0 Comments

மூலவர் : தாயுமானவர், மாத்ரு பூதேஸ்வரர்
அம்மன் : மட்டுவார்குழலி, சுகந்த குந்தளாம்பிகை
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், காவேரி
புராண பெயர் : சிரபுரம், மலைக்கோட்டை
ஊர் : திருச்சி
மாவட்டம் : திருச்சி
ஸ்தல வரலாறு :
ஒரு முறை ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் பலசாலி யார் என்று அறியும் ஆவல் ஏற்பட்டது. ‘‘மேரு பர்வதத்தை இறுகப் பற்றிக் கொண்டு உன் பலத்தால் முடிந்தால் அகற்றிப் பார்!’’ என்றார் ஆதிசேஷன். வாயுவால் அந்த நிலையில் மேருவை அசைக்கக் கூட முடியவில்லை. அதனால் வாயுவுக்கு உதவ தேவர்கள் முன்வந்தனர். அவர்கள் ஆதிசேஷனிடம் வஞ்சகமாக பேச்சுக் கொடுத்து, ஆதிசேஷனது கவனத்தைச் சிதறடித்தனர். அதன் மூலம் வாயுவின் வீரியம் மலையைப் பெயர்த்து வீசியது. அதனால் மேரு பர்வதத்தின் பகுதிகள் ஆங்காங்கே சிதறி விழுந்தன! அப்படி சிதறி விழுந்த பகுதிகளில் ஒன்றுதான் சிரா மலை. மற்றவை திருக்காளத்தியும், திரிகோண மலையும் (இலங்கை) என்று கூறுவர். திருச்சிமலைக்கு தென் கயிலாயம் என்ற பெயர் ஏற்பட்டதும் இதனால்தான்.
ஸ்ரீராம பட்டாபிஷேகத் துக்குப் பிறகு இலங்கைக்குப் புறப்பட்ட விபீஷணன், திருமாலின் சயனக்கோல விக்கிரகத்தை ராமனிடம் இருந்து பரிசாகப் பெற்று இலங்கையில் பிரதிஷ்டை செய்ய விரும்பினான். அப்போது ராமன், ‘இலங்கையை அடையும் வரை விக்கிரகத்தை எங்கும் கீழே வைக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்தார். ஒப்புக் கொண்டு நடந்தான் விபீஷணன்.காவிரிக் கரையை அடைந்ததும் நீராட விரும்பிய விபீஷணன், அப்போது அங்கு அந்தணச் சிறுவன் ஒருவனிடம் கொடுத்து, ‘நான் குளித்து வரும் வரை இதை கீழே வைக்காதே!’ என்றான். அந்தச் சிறுவன் விநாயகர். அவன் விக்கிரகத்தைக் கீழே வைத்து விட்டு மலைக்கோட்டை உச்சியில் போய் உட்கார்ந்து விட்டான். கரையேறிய விபீஷணன் அதிர்ந்தான். விக்கிரகத்தை அங்கிருந்து எடுக்க முயன்று, முடியாமல் தோல்வியடைந்தான். இந்தக் கோபம் தாங்காமல் துரத்திக் கொண்டு வந்து அந்தணச் சிறுவனின் தலையில் ஓங்கிக் குட்டினான் விபீஷணன். அந்த வடுவை உச்சிப் பிள்ளையாரின் தலையில் இன்றும் காணலாம்
தாயுமானவரான சிவபெருமான் :
காவிரிப்பூம் பட்டினத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர் ரத்தின குப்தன் என்ற வணிகன். இவருக்கு அழகிய பெண் குழந்தைப் பிறந்தது. ரத்தினாவதி என்ற பெயரில் வளர்ந்து வந்த அந்தப் பெண், பருவம் அடைந்ததும் அவளுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து திருச்சிராப்பள்ளியில் இருந்த தனகுப்தன் என்ற வணிகனுக்கு தன் பெண்ணை சிறப்புற திருமணம் செய்து கொடுத்தனர். ரத்தினாவதி தனது கணவருடன், திருச்சிராப்பள்ளி மலைக்கோவில் தெற்கு வீதியில் அமைந்த ஒரு இல்லத்தில் வாழ்ந்து வந்தனர். சிவ பக்தையான ரத்தினாவதி, தினந்தோறும் சிவ பெருமானை வழிபட்டு வந்தாள். இந்த நிலையில் ரத்தினாவதி கருவுற்றாள். சில மாதங்கள் சென்ற நிலையில் அவளது கர்ப்ப காலம் முடிந்து, பேறு காலம் வந்தது. ரத்தினாவதியின் தாயார், தன் மகளுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று எண்ணினார். எனவே, பேறு காலத்தில் தேவைப்படும் காய மருந்து, தைலம் போன்ற பொருட் களுடன் பூம்புகாரில் இருந்து, காவிரியின் வடகரை வழியாக திருச்சியை நோக்கி பயணித்தார். பல ஊர்களைக் கடந்து வரும்போது, பலத்த மழை கொட்டியது. பெரு மழையின் காரணமாக காவிரியில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. சரியான பாலங்கள் அந்த நாளில் இல்லை. வெள்ளப்பெருக்கால் படகு சவாரியும் நின்று போனது. ஆகவே ரத்தினாவதியின் தாயாரால் அக்கரைக்கு செல்ல முடியவில்லை.
இந்த நிலையில் தன்னுடைய பேறு காலத்தின்போது, தாயார் அருகில் இருக்க வேண்டும் என்று எண்ணிய ரத்தினாவதி, அவரது வருகைக்காக காத்திருந்தாள். பல நாட்கள் ஆகியும் தாய் வராததால் வருத்தம் அடைந்தாள். அவளது மனம் தாயின் வருகைக்காக ஏங்கியது. தாயின் துணை இல்லாததால், தான் தினமும் வழிபடும் திருச்சி செவ்வந்திநாதரையும், மட்டுவார் குழலி அம்பாளையும் நினைத்து பிரார்த்தித்து வந்தாள்.
பக்தையின் மன வேதனையைப் பொறுக்க முடியாத ஈசன், ரத்தினாவதியின் தாய் போன்ற நரைத்த தலை, தளர்ந்த நடை என்று, கையில் கோலூன்றியபடி, பேறு கால மருந்து பொருட்களுடனும், தாய் வீட்டுச் சீருடனும் அங்கு வந்து சேர்ந்தார். தன் தாயின் வருகையைக் கண்டு ரத்தினாவதி மனம் மகிழ்ந்தாள்.
தாயைப் போல் வந்த இறைவனும், ரத்தினாவதிக்கு தைலம் தடவி, மருந்து போன்றவற்றைக் கொடுத்து பேறு கால உதவிகள் அனைத்தையும் செய்தார். ஒரு நாள் ரத்தினாவதிக்கு பிரசவ வலி ஏற்பட்டு, அவள் அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். தாயுமான இறைவன், ரத்தினாவதிக்கும், அவள் பெற்ற குழந்தைக்கும் வேண்டிய பணிவிடைகளைத் தாயாகவும், தாதியாகவும் இருந்து செய்து வந்தார். குழந்தையை தினமும் குளிப்பாட்டி, தொட்டிலில் இட்டு, கண்ணும் கருத்துமாக காத்து வந்தார். குழந்தை பிறந்து 7 நாட்கள் கடந்துவிட்டன. அப்போது இயற்கையின் சூழல் மாறிவிட்டது. புயல், மழை நின்று, ஆற்றில் வெள்ளப்பெருக்கும் குறைந்து விட்டது. இதனால் ரத்தினாவதியின் உண்மையானத் தாயார், அவளது வீட்டுக்கு வந்து சேர்ந்தார். ‘ஏற்கனவே வீட்டில் தன்னுடைய தாய் இருக்கும் நிலையில், வந்திருப்பது யார்?’ என்று குழம்பிப்போனாள் ரத்தினாவதி. அவனது கணவன் தனகுப்தனும் திகைத்துப் போய் நின்றான். அப்போது தாயுமானவராக வந்த இறைவன் மறைந்து, ரிஷப வாகனத்தில் அனைவருக்கும் காட்சி கொடுத்து மறைந்தார்.
உலகமெங்கும் எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தியுள்ள சிவபெருமான், இந்தத் திருத்தலத்தில் தாயாக வந்து தங்கியிருந்து, ஒரு மானுடப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தது அதிசயத்திலும் அதிசயம். யாருக்கும் கிடைக்காத பாக்கியமல்லவா இது. என்ன புண்ணியம் செய்தாலோ அந்தப் பெண். காவிரியின் தென்கரையில் சிறு குன்றின் மீது குடியிருந்து மலைக்கொழுந்து ஈசர் என்றும், சாரமா முனிவரால் செவ்வந்தி நந்தவனம் அமைக்கப்பட்டு, அந்தக் பூக்களை விரும்பிச் சூடிக்கொண்டதால் ‘செவ்வந்திநாதர்’ என்றும் அழைக்கப்பட்டு வந்த இத்தல ஈசன், இந்த நிகழ்வுக்குப்பிறகு ‘தாயுமானவர்’ என்றே அழைக்கப்படலானார். சாரமான முனிவரை, உறையூர் சோழ மன்னன் உதாசீனப்படுத்தினான் என்பதற்காக, மேற்குப்புறமாக திரும்பி உறையூரில் மண் மழையைப் பெய்ய வைத்து மன்னனுக்கு தண்டனை கொடுத்த இறைவன், தன் பக்தையான ரத்தினாவதிக்கு தாயாக வந்து தலைப்பிரசவம் பார்த்தார் என்று சொல்லும்போது, இறைவன் தனது பக்தர்களுக் காக எதையும் செய்வார் என்பது புரிகிறது.
கோயில் சிறப்புகள் :
•மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலை முகட்டில் உச்சிப்பிள்ளையாரும் வீற்றிருக்க, மலையின் இடையில் தாயுமானவர் திருக்கோவில் அமைந்துள்ளது. படி ஏறிச் சென்றால் அங்கு பெரிய லிங்கத் திருமேனியுடன் சுயம்புவாய் எழுந்துள்ள இறைவன் மேற்குப் பார்த்த சன்னிதியில் இருந்து அருள்புரிகிறார்.
•இத்தல அம்பாள் ‘மட்டுவார் குழல் அம்மை’ என்று அழைக்கப்படுகிறார். அம்பாள் கிழக்கு பார்த்தபடி தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
•திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும், மாணிக்கவாசகரும், ஐயடிகள் காடவர்கோனும், பிற்காலத்தில் தாயுமான அடிகளும் இத்தல இறைவனைப் போற்றிப் பாடியுள்ளனர்.
•இந்த ஆலயத்தில் அருணகிரிநாதரால் பாடப்பட்ட முருகப்பெருமானும், எட்டு முனிவர்களுக்கு உபதேசம் செய்யும் ஆதிகுருவாக தட்சிணாமூர்த்தியும் வீற்றிருக்கிறார்கள்.
•கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக, இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபடுகிறார்கள். குழந்தை பிறந்தவுடன் வாழைத்தார்களைக் கொண்டு வந்து சுவாமிக்கு காணிக்கை செலுத்தி, வாழையடி வாழையாக தங்கள் வம்சம் விருத்தியாக வேண்டும் என்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
•ராவணனின் சகோதரனான மூன்று தலைகளை உடைய திரிசிரன், இங்குள்ள இறைவனை பூஜித்து பேறு பெற்றதால், ‘சிராப்பள்ளி’ என்று பெயர்.
•உமாதேவி, பிரம்மன், இந்திரன், அகத்தியர், ஜடாயு, சப்த ரிஷிகள், திரிசிரன், ராமபிரான், அர்ஜுனன், அனுமன், விபீஷணன், ஐயனார், நாக கன்னிகைகள், சாரமா முனிவர், சோழன், ரத்னாவதி, ஸ்ரீமௌனகுரு, தாயுமான அடிகள், அத்திரி முனிவர், தூமகேது, சேக்கிழார் மற்றும் வண்டு ஆகியோர் இங்குள்ள இறைவனை பூஜித்து பேறு பெற்றுள்ளனர்.
•கயிலாயம் போன்று சிராப்பள்ளி மலையும் மூன்று அடுக்குகள் கொண்டது. எனவே, இதை ‘தட்சிண கயிலா யம்’ என்பர்.
•பூமியின் வயது சுமார் 460 கோடி ஆண்டு. சிரா மலையின் வயது சுமார் 230 கோடி ஆண்டு. இமயத்தின் வயது சுமார் 4 கோடி ஆண்டுகளே என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
•மலைக் கோயிலை கிழக்கிலிருந்து பார்த்தால், விநாயகர் போன்றும், வடக்கிலிருந்து பார்த்தால் தோகை விரித்தாடும் மயில் போன்றும், மேற்கிலிருந்து பார்த்தால் நங்கூரம் பாய்ச்சிய கப்பல் மற்றும் சிவலிங்கம் போலவும் தெற்கிலிருந்து பார்த்தால் தலை உயர்த்தி அமர்ந்திருக்கும் ரிஷபம் அல்லது யானை மேல் அம்பாரி இருப்பது போலவும் தோற்றம் அளிக்கும்.
•கோயில்களில் சிவன் சன்னதிக்கு எதிரில்தான் கொடிமரம் இருக்கும். ஆனால், இக்கோயிலில் சிவனுக்கு பின்புறம் கொடிமரம் இருக்கிறது. முன்பு இக்கோயிலில் சிவன் சன்னதி, கிழக்கு திசையை நோக்கி இருந்தது. எனவே, பிரதான வாசலும், கொடிமரமும் கிழக்கு திசையில் அமைக்கப்பட்டது. சாரமா முனிவருக்காக, மன்னனைத் தண்டிக்க சிவன் மேற்கு திசை நோக்கித் திரும்பி விட்டதால், சன்னதி வாசலும், கொடி மரமும் அங்கேயே நிலைத்து விட்டது. சிவனுக்கு பூஜையின்போது சன்னதிக்குப் பின்புறத்தில்தான் (கிழக்கு திசையில்) மேளதாளம் வாசித்து, தேவாரம் பாடுகின்றனர்.
•சிவன் சன்னதி பிரகாரத்தில் மகாலட்சுமி, நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது சிலை மரத்தில் செய்யப்பட்டதாகும். மற்றோர் சன்னதியில் மரத்தில் செய்யப்பெற்ற, துர்க்கையும் காட்சி தருகிறாள்.
•பிரகாரத்தில் அருகில் சாரமா முனிவர் வணங்கியபடி இருக்க விஷ்ணு துர்க்கை எட்டு கரங்களுடன் காட்சி தருகிறாள்.
•சித்திரை பிரம்மோற்ஸவத்தின் 5ம் நாளில், சிவன் ரத்னாவதிக்கு பிரசவம் பார்த்த வைபவம் நடக்கிறது. அன்று, சோமாஸ்கந்தர் அருகில் கர்ப்பிணிப்பெண் ரத்னாவதியின் சிலையை வைக்கின்றனர். அப்போது, திரையிட்டு சிவன், ரத்னாவதி இருவரையும் மறைத்துவிடுவர். இவ்வேளையில் ரத்னாவதியின் மடியில் குழந்தை அமர வைத்து அலங்கரித்து, பின்பு திரையை விலக்கி தீபராதனை காட்டுவர். இந்த வைபவத்தின் போது, பிறந்த குழந்தைகளுக்குக் கொடுக்கும், மருந்து மற்றும் தைலமே பிரசாதமாக தரப்படும். இதைச் சாப்பிடும் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.
•சிவன், அம்பாள் மட்டுவார்குழலி மற்றும் உச்சிப்பிள்ளையார் ஆகிய மூவரும் இந்த குன்றில் தனிதனி கோயில் கொண்டு அருளுகின்றனர். 417 படிகளுடன், 273 அடி உயரத்தில் அமைந்த குன்று இது. இக்குன்றை வெவ்வேறு திசைகளில் இருந்து பார்க்கும்போது, சிவனின் வாகனமான ரிஷபம், அம்பிகையின் வாகனமான சிம்மம், மற்றும் தும்பிக்கையை நீட்டி அமர்ந்த கோலத்தில் விநாயகர் என மூன்று வடிவங்களில் காட்சியளிப்பது கலியுகத்திலும் நாம் காணும் அதிசயம்.
•தாயுமானவர் சன்னதியைச் சுற்றி பாதாளத்தில் ஒரு பிரகாரம் அமைத்து, இரண்டு அடுக்குகளுடன் கூடியதாக சிவன் சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. இப்பிரகாரத்தில் பிரம்மா, அகத்தியர், இந்திரன், ஜடாயு, அத்திரி மகரிஷி, தூமகேது, திரிசிரன், அர்ஜுனன், ராமர், ஆஞ்சநேயர், விபீஷணர், நாக கன்னி, சாரமா முனிவர், ரத்னாவதி, மௌனகுரு சுவாமிகள், தாயுமானவ அடிகள், சேக்கிழார் ஆகிய அனைவரும் ஒரே இடத்தில் வரிசையாக காட்சி தருகின்றனர்
•கோயில்களில் சிவலிங்கத்தின் வடிவத்திற்கேற்ப, எதிரில் நந்தி சிலையை பெரிதாகவோ, சிறிதாகவோ அமைப்பர். இத்தலத்தில் மலையே சிவனாகக் கருதி வழிபடப்படுவதால், மலைக்கு நேரே அடிவாரத்தில் பிரம்ம தீர்த்தக் கரையில் பெரிய நந்தி சிலை அமைத்து, தனிக்கோயில் எழுப்பியுள்ளனர். நந்திக்கோயில் என்றழைக்கப்படும் இங்கு, பிரதோஷத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.
•இங்குள்ள முருகப் பெருமான் முத்துக்குமார சாமியாக பன்னிரு கரங்களும், ஆறு முகமும் கொண்டு மயில் மீதமர்ந்து கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். தேவியர் புடைசூழ விளங்குகின்றார். வேறொரு சந்நிதியில் முருகப் பெருமான் ஒரு முகமும் நான்கு கரங்களும் கொண்டு இரு தேவியருடன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். இந்த முருகப்பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பட்டவர்.
திருவிழா:
சித்திரையில் பிரம்மோற்ஸவம், பங்குனியில் தெப்ப உற்சவம், ஆடிப்பூரம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, மகரசங்கராந்தியன்று பஞ்சமூர்த்தி புறப்பாடு வைபவம், சிவராத்திரி.
திறக்கும் நேரம்:
காலை 6 – மதியம் 12 மணி,
மாலை 4 – இரவு 8.30 மணி வரையில் கோயில் திறந்திருக்கும்.
உச்சிப்பிள்ளையார் கோயில்
காலை 6 – இரவு 8மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு தாயுமானவசுவாமி திருக்கோயில்,
மலைக்கோட்டை,
திருச்சி – 620 002.
போன்:
+91- 431 – 270 4621, 271 0484, 270 0971.
அமைவிடம் :
திருச்சி நகரில் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + eight =