#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஸ்ரீவைகுண்டம்

April 28, 2023 0 Comments

மூலவர் : கைலாசநாதர்
அம்மன் : சிவகாமி
தீர்த்தம் : தாமிரபரணி
ஊர் : ஸ்ரீவைகுண்டம்
மாவட்டம் : தூத்துக்குடி
ஸ்தல வரலாறு :
உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் என்று வழங்கப்பெறுகிறது. அதில் ஆறாவது மலர் கரை ஒதுங்கிய இடம் தான் திருவைகுண்டம் ஆகும். இங்கு அவர் பிரதிஷ்டை செய்து வணங்கிய லிங்கமே கைலாசநாதர் ஆகும்.
திருவைகுண்டம் நகரின் வடகிழக்கு திசையில் அமையப்பெற்றுள்ளது கைலாசநாதர் திருக்கோவில். இங்கு வானளாவிய கோபுரத்திற்கு பதிலாக மொட்டைக் கோபுரம் நம்மை வரவேற்கிறது. அதனைத் தாண்டி உள்ளே சென்றால் நந்தி, கொடிமரம், பலிபீடம் ஆகியவை அமையப்பெற்றுள்ளன. வெளிப்பிரகாரம் முழுவதும் வில்வம், வேம்பு, தென்னை, வன்னி போன்ற மரங்களும், அரளி, நந்தியாவட்டை, திருநீற்று பச்சிலை போன்ற செடிகளும் வளர்ந்து நந்தவனமாகக் காட்சியளிக்கிறது. உள்ளே கிழக்கு நோக்கிய கருவறையில் கைலாசநாதர் கம்பீரமாக லிங்கத் திருமேனியராகக் காட்சித் தருகிறார். அவரின் கருவறைக்குள் சரவிளக்கு தீபங்கள் சுடர்விட்டு கொண்டிருக்கும். வெளியே தனி கருவறையில் சிவகாமி அம்மை நின்ற கோலத்தில் காட்சித் தருகிறார். உள்பிரகாரத்தில் பரிவார தெய்வங்களாக முறையே அதிகார நந்தி, சூரியன், நால்வர், சுரதேவர், சப்தமாதர்கள், அறுபத்து மூவர், தக்ஷிணாமூர்த்தி, கன்னிமூலை கணபதி, பஞ்ச லிங்கங்கள், வள்ளி – தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், மஹாலக்ஷ்மி, துர்கை, சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், சந்திரன், பைரவர், பூதநாதர், சிவகாமி அம்மை உடனுறை சபாபதி ஆகியோர் காட்சி தருகிறார்கள்.
கோயில் சிறப்புகள் :
•கிழக்கு நோக்கிய தனி கருவறையில் உரோமச மகரிஷி பிரதிஷ்டை செய்த சுவாமி கைலாசநாதர், லிங்கத் திருமேனியராகக் காட்சித் தருகிறார். இவர் நவகைலாய தலங்களிலேயே சற்றே பெரிய திருமேனி என்று கூறப்படுகிறது. இவருக்கு விஷேச காலங்களில் கவசம் மற்றும் நாகாபரணம் சாத்தப்பட்டு அலங்காரம் செய்யப்படும்.
•தெற்கு நோக்கிய தனி கருவறையில் நின்ற கோலத்தில் சிவகாமி அம்மை தனது ஒரு கரத்தில் மலர் ஏந்தியபடியும், மற்றொரு கரத்தைக் கீழே தொங்கவிட்ட படியும் காட்சித்தருகிறாள். அவளின் திருமுகத்தில் கோடி சூரிய பிரகாசமும், அவளுடைய புன்னகையில் மூன்றாம் பிறை நிலவும் ஒளிர்வதை காணலாம்.
•ஊமையாகப் பிறந்து, திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் சக்தி பெற்ற, குமரகுருபர சுவாமிகள் இவ்வூரில்தான் அவதரித்தார்.
•இவ்வூரிலேயே 108 திருப்பதிகளில் ஒன்றான கள்ளபிரான் கோயிலும் அமைந்துள்ளது.
•ஸ்ரீ வைகுண்டநாத பெருமாள் திருக்கோவில் இதே ஊரில் அமையப்பெற்றுள்ளது. வைகுண்டத்தில் உறையும் மகாவிஷ்ணுவே இங்கு வைகுண்டநாத பெருமாளாகக் காட்சிதருவதால் இந்தத் தலம் பூலோக வைகுண்டம் என்ற சிறப்பைப் பெறுகிறது. அதனால் திருவைகுண்டம் என்ற பெயரை இந்தத் ஊர் பெற்றது.
•திருமாலும், திருமகளும் இத்தலத்தில் தங்கியிருப்பதாக ஐதீகம். எனவே இத்தலம் “ஸ்ரீவைகுண்டம்’ என்றழைக்கப்படுகிறது. “வைகுதல்’ என்றால் “தங்குதல்’ என பொருள். இவ்வூரிலேயே 108 திருப்பதிகளில் ஒன்றான, கள்ளபிரான் கோயிலும் அமைந்துள்ளது.
•இந்த கோயிலில் உள்ள பூதநாதர் என்ற காவல் தெய்வத்தின் சிலை மிகவும் விசேஷமானது. இது மரத்தால் செய்யப்பட்டது. சித்திரைத் திருவிழாவின்போது, முதலில் இவருக்கே முதல் மரியாதை செய்யப்படுகிறது. இவர் சாஸ்தாவின் அம்சமாக கருதப்படுகிறார். 3ம் நாள் விழாவின்போது, இவர் மீது சுவாமி எழுந்தருளுகிறார். இவருக்கு புட்டு, சர்க்கரைப்பொங்கல், புளியோதரை ஆகியவை நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. இவருக்கு அபிஷேகம் கிடையாது. சந்தனாதி தைலம் மட்டுமே தடவுகின்றனர்.
•இந்தக் கோவிலில் உள்ள பூத வாகனம் பரிவார தெய்வமாகவே வணங்கப்படுகிறது. பூதநாதருக்கு வடைமாலை சாற்றி விசேஷ வழிபாடுகள் நடைபெறும். சித்திரை மாதம் நடைபெறும் இந்தக் கோவிலின் திருவிழாவில் பூதநாதருக்கே முதல் மரியாதை செய்யப்படும். இந்த விழாவின் மூன்றாம் நாள் அன்று சுவாமி கைலாசநாதர், பூத நாதர் வாகனத்தில் எழுந்தருளிச் சேவை சாதிப்பார். இந்தப் பூத வாகனம் திருநெல்வேலி அருகே உள்ள செப்பறை நெல்லையப்பர் கோவிலுக்குச் சொந்தமானது என்றும், முன்னர் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ள பெருக்கினால், செப்பறை பழைய கோவில் சிதிலமடைந்து அங்கிருந்த பொருட்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அப்படி அங்கிருந்து ஆற்றில் அடித்துக் கொண்டுவரப்பட்ட பூத வாகனமே இங்குள்ள பூதநாதர் என்று செப்பறை மஹாத்மியம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பூத நாதர் திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சங்கிலிபூதத்தாரின் அம்சமாக இங்கு வணங்கப்படுகிறார்.
•சந்தன சபாபதி மண்டபத்தில் கருணை பொழியும் வகையில் கண்ணைக் கவரும் பல சிற்பங்கள் உள்ளன.
•கோவிலின் உட்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தின் மேற்கூரையில் நவ கைலாயங்களைப் பற்றிய செய்திகளும், படங்களும் மூலிகைகளைக் கொண்டு படமாக வரைந்து வைக்கப்பட்டுள்ளது.
•இங்குள்ள கொடிமரம் கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும்.
•இங்குள்ள கல்வெட்டுகளில் இக்கோயிலின் விமானங்களையும், மண்டபங்களையும் மதுரை சந்திரகுல பாண்டியன் கட்டினார். பெரிய மொட்டை கோபுரத்தையும் கைலாயப்பதியையும் திருமலை நாயக்கர் கட்டினார், வேள்விச்சாலை, சந்தன சபாபதி மண்டபம் கொடி மரம் அதன் கீழ் அமைந்திருக்கும் பத்தி மண்டபம் ஆகியவற்றை வீரப்ப நயக்கர் கட்டினார் என்பதை கூறுகிறது .
திருவிழா:
சித்திரை, ஐப்பசியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், ஆறாட்டுவிழா, ஐப்பசி திருக்கல்யாணம், கந்தசஷ்டி, சிவராத்திரி.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்,
ஸ்ரீவைகுண்டம் – 628 601,
தூத்துக்குடி மாவட்டம்.
போன்:
+91- 4630 – 256 492.
அமைவிடம்:
திருநெல்வேலி மாநகரிலிருந்து சுமார் 23 கி. மீ தொலைவில் திருநெல்வேலி – திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ளது திருவைகுண்டம்.
இங்குச் செல்லத் திருநெல்வேலி சந்திப்புப் பேருந்து நிலையத்திலிருந்து நகரப்பேருந்துகள் மற்றும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்செந்தூர் மார்க்கமாகச் செல்லும் புறநகர் பேருந்துகள் ஆகியவை அடிக்கடி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =