#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பண்பொழி

March 9, 2023 0 Comments

மூலவர் : குமாரசுவாமி
தீர்த்தம் : பூஞ்சனை தீர்த்தம்
ஊர் : பண்பொழி
மாவட்டம் : தென்காசி
ஸ்தல வரலாறு :
முன்னொரு காலத்தில் திருமலைக் கோவிலில் ஒரு வேல் மட்டும் இருந்தது. அந்த வேலுக்கு, பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் அபிஷேகம் மற்றும் பூஜைகளைச் செய்து வந்தார். ஒருநாள் நண்பகல் பூஜையை முடித்து விட்டு, ஓய்வுக்காக ஒரு புளிய மரத்தடியில் அர்ச்சகர் படுத்திருந்தார். அப்போது, முருகப்பெருமான் அவரது கனவில் எழுந்தருளி, “பட்டரே! இந்த மலை எனக்குச் சொந்தமானது. நான் இங்கிருந்து சற்று தொலைவிலுள்ள கோட்டைத்திரடு என்ற இடத்தில் சிலை வடிவில் இருக்கிறேன். நீ அங்கு சென்று எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியை தோண்டிப் பார். அதற்குள் சிலை இருக்கும். அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபடு” என்றார்.
அதன்படியே பந்தளத்தை ஆண்ட அரசருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, குறிப்பிட்ட இடத்தில் இருந்து முருகப்பெருமான் சிலையை எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினார்.
இத்தலத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு, பார்வதிதேவி தன் வாயால் அருளிச் செய்த ‘தேவி பிரசன்ன குமார விதி’ப்படி எட்டுக்கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இக்கோவிலில் மற்ற கோவில்கள் போன்று பள்ளி யறையில் சுவாமியைப் பாதுகை செய்வது இல்லை. மூலவருக்குப் பால், பழம், ஊஞ்சலுடன் சயனப் பூஜை மட்டுமே செய்யப்படுகிறது.
திருமலையின் வெளிப்பிரகாரத்தில் வடமேற்குப் பகுதியில் தனிக் கோவிலாகத் திருமலைக்காளி கோவில் இருக்கிறது. இங்கே காளியம்மன் வடதிசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார். இந்த ஆலயம் முருகப்பெருமானின் பிரதிஷ்டை நடைபெறுவதற்கு முன்பே இருந்த ஆலயம் என்கிறார்கள். இந்தக்காளி திருமலையின் காவல் தெய்வமாக பார்க்கப்படுகிறார். முருகனை தரிசிக்க படிகள் செல்லும் இடத்தின் மேற்கே, தனிச்சன்னிதியாக இடும்பன் சன்னிதி அமைந்துள்ளது.
கோவில் உள்பிரகாரத்தில் வடகிழக்கில் ஈசானத்தில் தெற்கு நோக்கி காலபைரவர் சன்னிதி உள்ளது. இங்கு 5½ அடி உயரமுள்ள கம்பீரமான தோற்றத்துடன் பைரவர் வீற்றிருக்கிறார். முருகன் சன்னிதியை அடுத்து 16 படிகள் ஏறிச்சென்றால், விநாயகருக்கு தனி சன்னிதி இருக்கிறது. அவர் ‘உச்சிப்பிள்ளையார்’ என அழைக்கப்படுகிறார்.
முருகப்பெருமானை மகனாக கொண்ட சிவகாமி அம்மையார்:
திருமலை குமரனை, தனது குழந்தையாக எண்ணி, நாள்தோறும், ஏன் நாழிகை தோறும் அவருக்கு தொண்டு செய்து, பல திருப்பணிகளை செய்து நற்பேறு பெற்றவர், சிவகாமி பரதேசியம்மாள் பண்பொழி மலை அடிவாரத்தில் உள்ள வண்டாடும் பொட்டலில் அடங்கி அருள்தரும் அற்புத பெண் சித்தரான இவரின் அற்புதங்கள் மிகச்சிறப்பானவை. பெண் சாது ஒருவர் அடங்கிய இடத்தில் அருள் தேடினால், அங்கு பல நூறு மடங்கு அருள் கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு.
திருமலை குமரன் திருக்கோவில் சிறப்பாகவும், செல்வச் செழிப்போடும் விளங்குவதற்கு சிவகாமி பரதேசியம்மையார் தான் காரணம் என்றால் மிகையல்ல. பண்பொழி திருமலை முருகனை பற்றி பேசும் போதெல்லாம், சிவகாமி பரதேசியம்மையாரை பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. செல்வச் செழிப்பாக பிறந்து வளர்ந்து, அனைத்தையும் துறந்து, முருகப்பெருமானுக்காக பரதேசி வேடம் பூண்டு, அருளாட்சி புரிந்தவர் அந்த பெண் சித்தர். பண்பொழி என்பது மிகவும் விசேஷமான ஊர்.
இவ்வூரில் தான் அருணகிரிநாதருக்கு பண் (பாடலை) பொழிய ஆசி வழங்கினார், முருகன். எனவே இத்தலம் ‘பண்பொழி’ எனப் பெயர் பெற்றது. இந்நகருக்கு அருகாமையில் உள்ள பெரும் ஊர் ‘அச்சன் புதூர்’. இவ்வூரில் பெரும் நிலக்கிழராக வாழ்ந்து வந்தவர் கங்கை முத்து தேவர். இவர் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு பெரும் நிலக்கிழாரான சிவகாமி அம்மையாரை மணந்தார். மேற்குதொடர்ச்சி மலையில் பல நூறு ஏக்கர் நிலங்களை தன்னகத்தே கொண்டவர்கள் இவர்கள். தங்களின் சொத்தை பராமரிக்க பல வேலையாட்களை வைத்திருந்தனர்.
எல்லா செல்வமும் அவர்களிடம் இருந்தும், குழந்தைச் செல்வம் இல்லை. இதனால் அவர்கள் இருவரும் மன அமைதி இன்றி தவித்தனர். இதையடுத்து அவர்கள் இறை சேவையில் இறங்கினர். பாத யாத்திரிகர்களுக்கு திருப்பணி செய்தனர். அச்சன்புதூர் அருகில் பல கல் மண்டபங்களை அமைத்து, அதில் வழிபோக்கர்கள் தங்கி செல்ல வழிவகுத்தனர். தெய்வ பக்தி, அடியார் களை அன்புடன் உபசரிப்பது முதலான அறச் செயல்களை கணவரின் ஒத்துழைப்போடு மிகச் சிறப்பாக செய்து வந்தார் சிவகாமி பரதேசியம் மையார். நெடுவயல் கிராமத்திலும் அடியார்கள் தங்கி செல்வதற்காக, கல் மண்டபத்தைக் கட்டிவைத்தார்கள். அந்த மண்டபத்தில் தான் ‘வாலர் மஸ்தான்’ எனும் துறவி ஒருவர் வந்து தங்கினார். அவர் தவ வலிமையில் சிறந்தவர். சித்து விளையாட்டுகளிலும் வல்லவர். தன் இடத்தைத் தேடி வந்த அந்தத் துறவிக்கு, அன்போடு பணிவிடை செய்து அன்னமிட்டு உபசரித்து வந்தார், சிவகாமி பரதேசிம்மையார்.
இந்த செயல் உறவுக்காரர்களுக்கு பிடிக்க வில்லை. ‘குழந்தை குட்டி இல்லை. இருக்கிற சொத்துகளை இப்படி வாரி இறைத்தால், இறுதியில் பிச்சைதான் எடுக்கவேண்டும். இருக்கும் சொத்து களை நமக்காவது கொடுத்தால், நம் பிள்ளைக் குட்டிகளாவது நல்லா இருக்கும். அதையும் செய்யாமல் இப்படி பணத்தை வர்றவனுக்கும், போறவனுக்கும் வாரிக் கொடுக்கிறார்களே’ என அங்கலாய்த்தனர். அதோடு நில்லாமல், சிவகாமி பரேதசியம்மையார் மீது வீண் பழி சுமத்தி வீட்டோடு உட்கார வைத்து விடவும் முடிவு செய்தனர். அதன்படி சிவகாமி பரதேசியம்மையாரின் கற்பு நெறி வாழ்க்கைக்கு களங்கம் கற்பித்தனர். இதைப் பொறுக்க முடியாத அம்மையார், ‘நான் கற்பு நிலை தவறாதவள், களங்கமற்றவள் என்றால், நான் தெருவின் மேலக்கோடியில் திரும்பும் முன், என்னை பழித்து பேசியவரின் வீட்டில் இடி விழட்டும்’ என்று சாபமிட்டார். அதன் பின் அங்கிருந்து அவர் கிளம்பினார்.
அவர் சாபமிட்ட காலம் கோடைகாலம். சுட்டெரிக்கும் வெயில் காலை 9 மணிக்கே வந்து தெருக்களை வறுத்தெடுத்தது. ஆனாலும் அம்மை யின் சபதம் ஏற்று, வருண பகவான் வெகுண்டு எழுந்தான். திடீரென்று மின்னலும், இடியும் தோன்றியது. மறு நொடியே அம்மையாரை பற்றி தவறாக பேசியவர் வீட்டில் இடி விழுந்தது. எனவே அவரைப் பற்றி புறம் பேசியவர்கள், அவரது சக்தியைக் கண்டு அமைதி அடைந்தனர். பலரும் அவரை வணங்கத் தொடங்கினர். ஆனால் சிவகாமி பரதேசியம்மையின் மனமோ அமைதி இன்றி தவித்தது. ‘தனக்கு குழந்தை இல்லாதது தானே பெரும் குறை. இது பற்றி மஸ்தானிடம் கேட்போம்’ என கல் மடத்துக்கு கணவருடன் சென்றார்.
மஸ்தான், ‘தாயே! நீயோ தெய்வப்பிறவி. உனக் கென்று குழந்தைபேறு ஏது? உனக்கு தென்திருமலை அடிவாரத்தில் அகத்தியருக்கே தமிழ் போதித்த முருகக் கடவுளே மகனாய் கிடைப்பான்’ என அருளினார். ‘ஐயா! என் குழந்தை எங்கே இருப்பான்? எனக்கு எப்படி கிடைப்பான்?’ என சிவகாமி அம்மையார் கேட்டார். ‘கவலைப்படாதே.. பண்பொழி மலை அடிவாரத் தில், நீ செல்லும் இடத்தில் ஒரு பொட்டல் காடு உண்டு. அதன் மேலே வண்டு ஆடிக்கொண் டிருக்கும். அங்குதான் முருகன், குழந்தையாய் உன் கையில் கிடைப்பார்’ என அருளினார். தம்பதியினர் அங்கிருந்து கிளம்பினர். தங்களோடு சிறு குழந்தையில் இருந்து உண்மையாக உழைத்துக் கொண்டிருந்த சங்கிலிமாடன் என்பவரையும் உடன் அழைத்துக்கொண்டு கிளம்பினர்.
ஒரு குறிப்பிட்ட இடம் வந்தது. அவ்விடம் பெரும் பொட்டல்காடாக இருந்தது. அதில் கரும் வண்டு ஒன்று ரீங்காரமிட்டு வட்டமிட்டது. அதன் அருகே உள்ள குளக்கரையில் முருகன், குழந்தையாக கிடந்தார். அவரின் அழுகுரல் கேட்டு அருகே ஓடிச்சென்று அந்த குழந்தையை தழுவி தன் மார்போடு அணைத்து ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்வை, ‘மகனே யென்றம்மை தானும் மார்பொடு சேயைச் சேர்த்து முகத்தோடு முகத்தை வைத்து முத்தமிட்டணைத்துக் கொண்டு மகனே யென்றழைத்தபோது. குழந்தையாக இருந்த முருகப்பெருமான், திருமலை முருகனாய் சிவகாமி அம்மைக்கு காட்சி தந்து, அதன் பின் திருமலையில் மறைந்தார். முருகன் வண்டாடிய பொட்டலில் கிடைத்த காரணத்தினால், இவ்வூருக்கு ‘வண்டாடும் பொட்டல்’ என பெயர் விளங்கியது. முருகன் மறைந்த திருமலை என்னும் பைம்பொழில் சிறப்பு பெற்ற மலை. அக்காலத்தில் முள்செடிகளும் மூங்கில் புதர்களும் நிறைந்த காட்டுப் பகுதியாக கிடந்தது. அது போதாதென்று கொடிய காட்டு விலங்குகளும் அங்குச் சுற்றித் திரிந்தன. எனவே பகல் நேரத்தில் கூட அங்கே செல்ல மக்கள் அச்சப்பட்டனர். ஆனால் சிவகாமி பரதேசியம்மையார், எதையுமே லட்சியம் செய்யாமல் மலை மீது ஏறினார். மலைக்கு மேல் அருள்பாலித்த திருமலைக்குமார சுவாமியை தரிசித்தார்.
சிறப்பு மிக்க அந்த தெய்வத்தையே, மகனாக பெற்றதை எண்ணி மகிழ்ந்த சிவகாமி பரதேசியம்மையார், அந்த ஆலயத்திற்கு திருப்பணிகளைச் செய்யத் தொடங்கினார். இதற்காக வண்டாடும் பொட்டலில் மடம் அமைத்தார். திருப்பணி தொடங்கியவுடன் பரதேசியம்மையாரின் வடிவமும் மாறியது. காவி உடுத்தினார். கழுத்தில் ருத்ராட்சம் தரித்தார். கரங்களில் வேலாயுதமும் கமண்டலமும் கொண்டு, நெற்றியில் திருநீறும் குங்குமமும் அணிந்து திருமலை குமரனுக்கு சேவையைத் தொடங்கினார். யாத்திரியர்களுக்குத் தினமும் உணவு வழங்கினார். கோடை காலத்தில் நீர் மோர், பானகம் வழங்கினார். தான் தொடங்கிவைத்த திருப்பணிகள் நிலையாக நடைபெற, ஏராளமான நன்செய் நிலங்களையும் மானியமாக்கி வைத்தார். மலையின் மேலே உள்ள வசந்த மண்டபம் திருப்பணி தொடங்கியது. ஏறத்தாழ 500 அடி உயரத்தில் அமைந்துள்ள மலையில் பணியை தொடங்கினார். இதற்காக முருகன் அடிமைகளை அழைத்தார். தற்போது போல அப்போது படிகளும் கிடையாது. வாகனங்கள் ஏறிச்செல்ல வழியும் கிடையாது. செல்லும் வழியில் கால் வைக்க மட்டுமே பாறையில் சிறு சிறு குழி இருக்கும். அதன் வழியாகத்தான் பாறைகளை தூக்கிச் செல்ல வேண்டும்.
சிவகாமி பரதேசி அம்மையார் நினைத்திருந்தால் திருமலையை குடைந்து கூட, முருகப்பெருமான் ஆலயத்தை அமைத்திருக்க முடியும். ஆனால் ‘இது தன் புதல்வன் மலை. இம்மலைக்கு பங்கம் எதுவும் ஏற்படக்கூடாது’ என்பதற்காக, வேறு இடங்களில் இருந்து கற்களைக் கொண்டு வந்தார். மலை உச்சிக்கு தன்னோடு வேலை செய்யும் ஊழியர்களோடு, அம்மையாரும் தலைச்சுமையாக கற்களை தூக்கிச் சென்றார். நடந்து கூட செல்லமுடியாத இடத்தில் பாறைகளை முதுகில் தூக்கி கொண்டு, மேலே கொண்டு சென்றவர் களிடம் இருந்து நழுவி விழும் பாறைகளை தனது தலையால் தடுத்து, பின் தூக்கிச் சென்றும் திருப்பணி செய்தார். அதற்கு அவரது தெய்வ சக்தி ஒத்துழைத்தது. சில நேரங்களில் பாறைகளை கயிறு கட்டி இழுத்த போது, தனது தலைமுடியை சேர்த்துக்கட்டி பாறை களை மேலே இழுத்துச் சென்றுள்ளார். இப்படித்தான், திருமலையில் வசந்த மண்டபம் உள்பட பல கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டது.
அதோடு மட்டுமல்லாமல் கோவில் தெப்பக்குளத்தை முழுவதுமாக தூர்வாரி, அதை செம்மைப்படுத்தும் பணியையும் மிக கச்சிதமாக செய்து முடித்தார். தற்போதும் கோயில் மலை உச்சியில் அழ காகக் காட்சி தரும் அந்த தெப்பக்குளம், சிவகாமி பரதேசி அம்மையார் பெயரை உச்சரித்துக்கொண்டே இருக்கிறது.
அம்மையார் ஒவ்வொரு கடைசி வெள்ளிக்கிழமையிலும், திருச்செந்தூர் செல்வது வழக்கம். அங்கு முருகப் பெருமானை தரிசித்து விட்டு நடைபயண மாகவே பண்பொழிக்கு திரும்ப வந்துவிடுவார். ஒரு நாள் செந்தூரில் ஆடிவரும் முருகப் பெருமானின் தேரை பார்த்தார். அவன் அழகு முகத்தைக் கண்டு ஓடோடி அருகில் சென்றார். தேரின் வடத்தினை பிடித்து இழுத்தார்.
யார் இது.. பெண் பரதேசி. தூரப்போ’ என தடுத்தார் ஒருவர். கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார் அம்மையார். ‘என் மகன் தேரை நான் வடம்பிடித்து இழுக்கக் கூடாதா? ‘முருகா! நீ என் மகன் தான் என்றால், இந்தத் தேர் நகரக்கூடாது’ என ஆணையிட்டு விட்டு, கடற்கரையில் போய் அமர்ந்து கொண்டார். தேர் நகர்ந்ததா? திருமலைக்கு முருகன் வந்த கதை திருமலையை ‘பிரணவத்தின் மலை’ என்றும் கூறுவார்கள். பிரணவத்தின் வடிவான ‘ஓம்’ என்ற வடிவில் இம்மலை இருப்பதால், இந்தப் பெயர் வந்தது. ‘அகத்தியம்’ என்னும் முதல் தமிழ் இலக்கண நூலை அருளியவர் அகத்தியர். அவருக்கும் தமிழ் போதித்தவர் முருகப்பெருமான். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத் தான், ஓம் வடிவில் அமைந்த பண்பொழி திரு லையில் முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்து அகத்தியர் வணங்கினார் என்று கூறுகிறார்கள். மேலும் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்காக அழகிய பூஞ்சுனை ஒன்றையும் அகத்தியர் அமைத்தார்.
கோயில் சிறப்புகள் :
• ஓம் என்ற பிரணவத்திற்கு விளக்கம் கூறிய முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள இம்மலையின் வடிவமும் ஓம் வடிவமாக இருப்பதாக புராணம் கூறுகிறது.
• இங்கு எழுந்தருளியுள்ள குமரனை அகத்திய முனிவர் வழிபட்டதாகவும், அபிஷேகத்திற்காக அகத்தியர் ஞாயிறு, திங்கள், அக்கினி ஆகிய சுனைகளை அமைத்ததாகவும் அதில் பூக்கும் குவளை மலர்களை கொண்டு அகத்தியர் வழிபட்டதாகவும் புராணம் கூறுகிறது. மேலும் சுனை வற்றினால் மழை பெய்து சுனை நிரம்பும் அதிசயமும் நிகழ்ந்ததாக புராணம் கூறுகிறது.
• திருமலைக்கோவில் வரலாற்றை எழுதிய பேராசிரியர் கணபதிராமன், “சிலப்பதிகாரத்தில் வரும் நெடுவேள்குன்றம் என்பது இக்குன்றமே” என்றும், “கண்ணகி இக்குன்றைக் கடந்தே சேரநாடு சென்றாள்” என்றும் ஆராய்ச்சிக் குறிப்பேட்டில் கூறியுள்ளார்.
• அருணகிரிநாதர் தமது நூலான திருப்புகழில் திருமலை முருகனைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
• அருணகிரிப் பெருமான், கவிராசப்பண்டாரத்தையா, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஆகியோர் இப்பெருமானைப் பாடிப்பரவியுள்ளார். அகத்தியர், கற்புக்கரசி கண்ணகி, சப்தகன்னியர், இம்முருகனை வழிபட்டு வந்துள்ளனர்.
• ‘ஓம்’ என்ற வடிவம் கொண்ட உயர்ந்த குன்றில் அமைந்துள்ள, இந்தக் கோவிலின் தீர்த்தத்தை ‘பூஞ்சுனை’ என்று அழைக்கின்றனர். இது அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்டது. நாள்தோறும் ஒரு தாமரை மலர் இந்தச் சுனையில் மலரும். அதைப் பறித்து, இந்திராதி தேவர்களும், சப்த கன்னியர்களும் முருகனுக்குச் சூட்டி வழிபடுவதாக நம்பிக்கை நிலவுகிறது. இத்தகைய அற்புதமான இந்த ஆலயத் தீர்த்தத்தில் நீராடினால் பலவித நோய்கள் நீங்குவதாக சொல்கிறார்கள். இங்குள்ள தீர்த்தக்கரையில் சப்த கன்னியர்களும் வாசம் செய்கின்றனர்.
• பந்தளமன்னர் எழுப்பிய கோயில் எது என யாரைக் கேட்டாலும், இது தெரியாதா! சபரிமலை ஐயப்பன் கோயில்,’ என்பார்கள். பந்தளத்தை ஆண்ட ராஜாக்கள் தான் கேரள எல்லையிலுள்ள திருமலைக் கோயிலையும் எழுப்பியுள்ளனர். இக்கோயில் உருவாக காரணமாக இருந்த பூவன் பட்டரின் வேண்டுகோளின்படி பந்தளமன்னர் இக்கோயிலை எழுப்பியுள்ளார். இவ்வூரைச் சுற்றி ஐயப்பன் ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழை உள்ளிட்டவை உள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது.
• இங்குள்ள மூலவருக்கு மூக்கன் என்று ஒரு பெயர் உண்டு. நெல்லை மாவட்டத்து மக்கள் கிராமப்புறங்களில் அநேகருக்கு மூக்கன், மூக்கம்மாள் என்ற பெயர் இருப்பதற்கு இது ஒரு காரணம் என்கின்றனர்.
• சிலருக்கு குழந்தைகள் பிறந்து தங்காமல் இறந்து போனால், அடுத்த குழந்தை பிறந்தவுடன் இங்கு வந்து மூக்கு குத்துவதாக நேர்த்திக் கடன் செலுத்தி குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் பலர் என்றும் இன்றும் அதை கடைபிடித்து வருவதை காணலாம்.
• மலை மீது ஏற 623 படிக்கட்டுக்கள் அமைந்துள்ளது. அந்த படிக்கட்டுக் கள் ஸ்கந்த கோஷ்டப்பித்ருக்கள் வசிக்கும் தேவ படிக்கட்டுக்கள் என்கின்றனர்.
• மலை உச்சியிலுள்ள கோயிலின் தீர்த்தத்தை அஷ்டபத்ம குளம் என்று அழைத்தனர். தற்போது பூஞ்சுனை என்று இந்த குளத்தை அழைக்கிறார்கள். இங்கு இலக்கியங்களில் கண்ட குவளை என்னும் மலர் இதில் பூத்தது. அதை கரையில் இருந்த சப்த கன்னிமார் எழுவரும் முருகனை பூஜித்தனர். சப்தகன்னியர் சிலை சிவாலயங்களில் மட்டுமே இருக்கும். ஆனால், இங்கு முருகன் தலமாக இருந்தாலும் இங்குள்ள தீர்த்தக்கரையிலும் சப்த கன்னியர் இருப்பது வேறு முருகன் கோவில்களில் இல்லாத சிறப்பாகும்
திருவிழா:
சித்திரை முதல் தேதி படித்திருவிழா,
வைகாசி விசாகம்,
கந்தசஷ்டி,
கார்த்திகையில் தெப்பம்,
தைப்பூசம்.
திறக்கும் நேரம்:
காலை 6-பகல் 1 மணி,
மாலை 5- இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில்,
பண்பொழி – 627 807
செங்கோட்டை
தென்காசி மாவட்டம்
போன்:
+91-4633- 237 131, 237 343
அமைவிடம்
செங்கோட்டையில் இருந்து வடமேற்கில் 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் வடமேற்குத் திசையில் இருக்கின்றது. தென்காசி மற்றும் செங்கோட்டையில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. 2012-ம் ஆண்டு முதல் மலை மேல் வாகனங்கள் சென்று வர தார் சாலையாக மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + fourteen =