#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருநின்றியூர்

February 26, 2023 0 Comments

மூலவர் : மகாலட்சுமிபுரீஸ்வரர்
அம்மன் : உலகநாயகி, லோகநாயகி
தல விருட்சம் : வில்வம், விளமாம்
தீர்த்தம் : நீலப்பொய்கை, லட்சுமி தீர்த்தம்
புராண பெயர் : திரிநின்றஊர், திருநின்றியூர்
ஊர் : திருநின்றியூர்
மாவட்டம் : நாகப்பட்டினம்
ஸ்தல வரலாறு :
தனது தந்தை ஜமதக்னி முனிவரின் ஆணைப்படி தனது தாயான ரேணுகாவைக் கொன்றார் பரசுராமர். பின் தனது தந்தையிடம் அன்னையை உயிர்ப்பிக்கும் படி வரம் வேண்டி தாயை உயிர்ப்பித்தார். தாயைக் கொன்ற தோஷம் நீங்குவதற்காக இத்தலத்தில் இறைவனை வழிபட்டு மன அமைதி பெற்றார். ஜமதக்னி முனிவரும் தான் அவசரத்தில் செய்த செயலுக்கு வருந்தி இங்கு சிவபெருமானை வணங்கி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். சிவன் இருவருக்கும் காட்சி தந்து அருள் செய்தார்.
பரசுராமர் வழிபட்ட சிவன் பிரகாரத்தில் பரசுராம லிங்கமாக காட்சி தருகிறார். ஜமதக்னி முனிவருக்கு காட்சி தந்த சிவன் ஜமதக்னீஸ்வரர் என்ற பெயருடன் சிறிய பாண வடிவில் காட்சி தருகிறார். அருகில் மகாவிஷ்ணுவின் சந்நிதியும் உள்ளது. மகாலட்சுமியும் இத்தலத்தில் சிவனை வழிபட்டு அருள் பெற்றாள். எனவே தான் இத்தலத்து சிவன் மகாலட்சுமீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இந்திரன், அகத்தியர், பரசுராமர், ஐராவதம், பசு, சோழ மன்னன் ஆகிய பலரும் இத்தல இறைவனை வழிபட்டு பேறுகள் யாவும் பெற்றுள்ளனர்.
சோழ மன்னன் ஒருவன் தினந்தோறும் சிதம்பரம் சென்று நடராஜரை தரிசிக்கும் வழக்கும் உடையவன் அவ்வாறு தனது படைகளுடன் செல்லும் போது இத்தலம் இருக்கும் காட்டு வழியே தான் தினமும் செல்வான். இரவு நேரத்தில் தீப்பந்தங்களுடன் இவ்வழியே செல்லும் போது தீப்பந்தங்கள் தானாகவே அணைந்து, இத்தல எல்லையைத் தாண்டியவுடன் தானாகவே எரிய ஆரம்பிக்கும். இவ்வாறு பல நாட்கள் தொடர்ந்து நடைபெற, மன்னன் காட்டில் மாடுகளை மேய்ந்து கொண்டிருந்த ஒரு இடையனிடம் இத்தலத்தில் ஏதேனும் விசேஷம் உண்டா எனக் கேட்டான்.
இடையன் பசுக்கள் இங்கு ஓரிடத்தில் தானாகவே பாலை கறப்பதைக் கண்டதாகக் கூறினான்.
மன்னன் அவ்விடத்தில் நிலத்தைத் கோடாரியால் தோண்ட இரத்தம் வெளிப்பட்டது. மன்னன் மேலும் அவ்விடத்தை ஆராய ஒரு சிவலிங்கம் இருப்பதையும், அதன் பாணத்தின் மேல் பகுதியில் கோடாரி பட்டு இரத்தம் வருவதையும் கண்டு மிகவும் வருத்தம் அடைய, அப்போது அசரீரி மூலம் இறைவன் தான் இருக்குமிடத்தை தெரியப்படுத்தவே இவ்வாறு செய்ததாக கூறி, இவ்விடத்தில் ஆலயம் எழுப்ப மன்னனுக்கு ஆணையிட்டார். மன்னனும் சிவலிங்கம் இருந்த அதே இடத்தில் கோவிலை கட்டினான் என்று தல வரலாறு கூறுகிறது. இன்றும் சிவலிங்கத்தின் பாணத்தில் தற்போதும் கோடாரி வெட்டிய தழும்பு குழி போல இருப்பதைப் பார்க்கலாம். இத்தலத்தில் மூலவர் சுயம்பு லிங்கமாக உயர்ந்த பாணத்துடன் எழுந்தருளியுள்ளார். தீப்பந்தம் திரி நின்ற ஊர் ஆனதால் இத்தலம் திரிநின்றஊர் என்று பெயர் பெற்று தற்போது மருவி திருநின்றியூர் என்று வழங்குகிறது.
கோயில் சிறப்புகள் :
• மகாலட்சுமியும் இத்தலத்தில் சிவனை வழிபட்டு அருள் பெற்றாள். எனவே, இத்தலத்து சிவன் மகாலட்சுமீஸ்வரர் என்றும், அம்மன் உலகநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். மகாலட்சுமி வழிபட்டதால் இவ்வூர் திருநின்றியூர் என்று பெயர் பெற்றது.
• நவக்கிரகத்தில் உள்ள சூரியனும், சந்திரனும் ஒருவரையொருவர் நேரே பார்த்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பு. அமாவாசை நாட்களில் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்
• சிவலிங்கத்தின் பாணத்தில் தற்போதும் கோடாரி வெட்டிய தழும்பு இருக்கிறது.
• இத்தலம் மூவர் தேவாரப் பாடலும் பெற்ற சிறப்புடையதாகும்
• தேவாரம் பாடப்பட்ட காலத்தில் இத்தலமும் கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்றாக விளங்கியது.
• நூறு ஆண்டுகளுக்கு முன் நகரத்தார் திருப்பணி செய்தபோது இதை இப்போதுள்ள அமைப்பில் மாற்றிக் கட்டிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
• சுந்தரரின் இரண்டு பதிகங்களில் ஒன்று இங்கு தரப்பட்டுள்ளது. அதில் முதல் 7 பாடல்களே நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. 8, 9, 10 பாடல்கள் சிதைந்து போய் விட்டன.
• இப்பதிகத்தின் முதல் பாடலில் சிலந்திக்கு அருள் செய்து மறுபிறப்பில் கோச்செங்கட் சோழனாக பிறக்க அருள் செய்ததைக் குறிப்பிடுகிறார்.
• 2-வது பாடலில் 4900 பதிகங்கள் பாடிய திருநாவுக்கரசருக்கும், சண்டேசுர நாயனாருக்கும், கண்ணப்ப நாயனாருக்கும் அருள் செய்ததை குறிப்பிடுகிறார்.
• 3-வது பாடலில் இத்தலத்தின் புராணத்தைக் குறிப்பிடுகிறார். பரசுராமர் தனக்கு காட்சி கொடுத்தருளிய இறைவனுக்கு 300 வேதியர் சூழ, 340 வேலி நிலத்தைக் கொடுத்து திருநின்றியூர் என்று பெயரிட்டு பொன்னாலாகிய அழகிய கலசங்களைக் கொண்டு நீர் வார்த்து அளிக்க, அவருக்கு தன் திருவடியை அளித்த இறைவன் என்று குறிப்பிடுகிறார்.
• 4வது பாடலில் பசு ஒன்று தன் மடியாகிய கலசத்திலிருந்து பாலைச் சொரிந்து வழிபட்டு இறைவன் திருவடியை அடைந்ததைக் குறிப்பிடுகிறார்.
• 5-வது பாடலில் இத்தலத்திலுள்ள இறைவனை இந்திரன் வழிபட அவனுக்கு வான நாட்டை ஆட்சி செய்யும் உரிமையை வழங்கியதையும், அகத்தியருக்கு பொதியமலையில் வீற்றிருக்க அருள் புரிந்ததையும் குறிப்பிடுகிறார்.
• 7-வது பாடலில் துர்வாசர் சாபத்தால் காட்டானையாகி திரிந்த தேவலோக யானை ஐராவதம் இறைவனை வழிபட அதற்கு முன்வடிவத்தையும் விண்ணுலகம் அடையும் பேற்றையும் வழங்கியதைக் குறிப்பிடுகிறார்.
• பரசுராமர் வழிபட்ட சிவன் பிரகாரத்தில் “பரசுராமலிங்க’மாக இருக்கிறார். அருகில் ஜமதக்னிக்கு காட்சி தந்த சிவன் “ஜமதக்னீஸ்வரராக’ சிறிய பாண வடிவிலும், பரிகேஸ்வரர் பெரிய பாண வடிவிலும் அருகில் மகாவிஷ்ணுவும் இருக்கின்றனர்.
• இக்கோயிலைச் சுற்றி மாலையிட்டது போல, மூன்று குளங்கள் இருப்பது விசேஷம்.
• இத்தலத்து தீர்த்தத்தை “நீலமலர் பொய்கை’ என்று சம்பந்தர் தனது பதிகத்தில் பாடியிருக்கிறார்.
• இங்கு வழிபடுவோர் பயம், பாவம் மற்றும் நோய்கள் நீங்கி நல்வாழ்வு வாழ்வர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
• இங்கு சிவனுக்கு மாதுளம்பழ முத்துக்களால் அபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷம்.
திருவிழா:
ஆனித்திருமஞ்சனம், சிவராத்திரி, திருக்கார்த்திகை.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில்,
திருநின்றியூர் – 609 118.
நாகப்பட்டினம் மாவட்டம்.
போன்:
+91- 4364 – 279 423 ,320 520, +91- 94861 41430.
அமைவிடம் :
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருநின்றியூர் திருத்தலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 12 =