#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஸ்ரீமுஷ்ணம்

February 24, 2023 0 Comments

மூலவர் : ஸ்ரீ பூவராகன்
உற்சவர் : ஸ்ரீயக்ஞவராகன்
தாயார் : அம்புஜவல்லி
தல விருட்சம் : அரசமரம்
தீர்த்தம் : நித்யபுஷ்கரணி
ஊர் : ஸ்ரீமுஷ்ணம்
மாவட்டம் : கடலூர்
ஒரு பிரளய காலம் முடிந்தபின் வெள்ளத்தினுள் அமிழ்ந்திருந்த பூமியை மஹாவிஷ்ணு வெண்நிற வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியைத் தமது கொம்பில் பற்றி மேலே தூக்கி வந்து நிலை நிறுத்தி ஆதி வராகர் என பெயர் பெற்றார்
ஸ்தல வரலாறு :
ஒருசமயம், இரண்யாட்சன் என்ற அசுரன் பூலோகத்தை கடலுக்குள் தன் வலிமையால் மூழ்கடித்தான். இதனால் தேவர்கள் மிகவும் அச்சமுற்று பிரம்மாவை நாடினர். பூலோகத்தை மீட்பதற்காக தியானம் செய்தார். அப்போது அவருடைய வலது நாசியில் இருந்து பன்றி ரூபம் வெளிப்பட்டது. அந்த திவ்யமான பன்றி ரூபம் தன் உருவத்தை அதிகரித்துக் கொண்டே சென்றது. பகவான் விஷ்ணு பன்றி ரூபத்தில் அவதரித்திருக்கிறார் என்று அனைவரும் உணர்ந்தனர்.
கடலுக்குள் சென்ற வராகபகவான் ஏழு தீவுகள் கொண்ட பூலோகத்திற்கு எந்த சிறு இடரும் ஏற்படாவண்ணம் சாதுர்யமாக தூக்கியபடி நீரிலிருந்து வெளிப்பட்டார். இதைக்கண்ட இரண்யாட்சன் கோபம் கொண்டு வராகமூர்த்தியைத் தாக்க, இருவருக்கும் கடுமையான யுத்தம் நடந்தது. இறுதியில் அசுரனை வீழ்த்தி பூமியைக் காத்தருளினார். பிரம்மாவும் தேவர்களும் வராக மூர்த்தியை வாழ்த்தித் துதித்தனர்.
மீண்டும் வைகுண்டம் திரும்பிச் செல்ல வராகர் எண்ணியபோது பூதேவி தன்னுடன் தங்கியிருக்கும்படி பகவானை வேண்டிக் கொண்டதாக நாரதர் புராணம் கூறுகிறது. பூமிதேவியின் வேண்டுகோளை ஏற்று ஸ்ரீ முஷ்ணம் திருத்தலத்திலேயே பகவான் கோயில் கொண்டதாக ஐதீகம்.
ஸ்ரீமுஷ்ணம் திருக்கோயில் ஏழுநிலை கொண்ட கம்பீரமான ராஜகோபுரமாகும். திருக்கோயிலின் கருவறையில் வீற்றிருக்கும் மூலவரைத் தரிசிக்கும் முன்பாக, தனி சந்நிதியில் அமைந்தருளும் ஸ்ரீநிவாசப் பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும். கோயிலின் தென் கிழக்குத் திசையில் நித்ய புஷ்கரணி அமைந்துள்ளது. இதில் ஸ்நானம் செய்து அருகிலேயே சந்நிதி கொண்டுள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணரின் தரிசனம் பெறுவது சிறப்பு.
இவ்வாலயத்தில் பூவராக சுவாமி மூலவராக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். தம் இடுப்பில் இருக்கும் சங்கு, சக்கரத்தைத் தன் இரு திருக்கரங்களால் மறைத்தவண்ணம் திருமேனி மேற்கு திசையை நோக்கியும் திருமுகம் தெற்கு திசையை நோக்கியும் அமையப்பெற்று அருள்காட்சி அருள்கிறார். உற்சவ மூர்த்தி யக்ஞ வராகர் என்ற திருநாமத்துடன் ஸ்ரீ தேவி பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார். தாயாருக்கு அம்புஜவல்லி என்பது திருநாமம்! தெற்குப் பக்கத்தில் தனிச் சன்னிதியில் அம்புஜவல்லித் தாயார், கிழக்கு திசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார். அருகே உள்ள வளையமாதேவி என்ற ஊரில் கார்த்திகாயினி முனிவரின் மகளாக அவதரித்து இத்தலப் பெருமாளைத் திருமணம் செய்து கொண்டவர்தான் அம்புஜவல்லி தாயார்.
பல வருடங்களுக்கு முன் ஆதி நவாப் என்பவர் ஓர் ஊரை ஆண்டு வந்தார். ஒரு சமயம் அவர் தீராத வியாதி கண்டு மிகவும் துன்புற்றதாகவும், அவரைக் கவனித்து வந்த வைத்தியர்கள் கைவிட்ட சமயத்தில், அவ்வூர் வழியாகச் சென்றார், மத்வ மதத்தைச் சார்ந்த யாத்ரிகர் ஒருவர். அவர், முஷ்ணத்திற்கு சென்று பூவராக ஸ்வாமியின் தீர்த்தம், துளசி பிரசாதத்துடன் தன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார் அவருக்கு நவாப்பற்றி தெரியவரவே, சுவாமி தீர்த்தத்தையும், துளசி பிரசாதத்தையும் கொடுக்க, நவாப் பூரண குண மடைந்தாராம். அது முதல் நவாப், பூவராகப் பெருமானிடம் பக்தி கொண்டு, அவருக்குத் தொண்டு புரிய விரும்பி கிழக்கு சமுத்திரம் எனும் இடத்திற்கு சுவாமி எழுந்தருளும் போது வழியில் எழுந்தருளியிருப்பதற்கு கிள்ளை தோப்பு என்ற இடத்தில் ஒரு மண்டபத்தை நிர்மானம் செய்து, அங்கு உற்சவம் சிறப்பாக நடைபெற ஏராளமான நிலபுலன்களை எழுதி வைத்தார். இதனைத் தொடர்ந்து பரிபாலிக்க தர்ம ஸ்தாபனம் ஒன்றையும் ஏற்படுத்தினார். இன்றும் முஷ்ணம் தலத்தில் மாசி மாதத்தில் நடைபெறும் பிரம்ம உற்சவத்தில் பூவராக சுவாமி தீர்த்தவாரிக்கு கிழக்கு சமுத்திரத்திற்கு எழுந்தருளும்பொழுது, முகமதியர்கள் வசிக்கும் தைக்கால் கிராமத்தின் உள்ளே நுழைந்து வீதியில் ஊர்வலமாக வருவது வழக்கம். அப்பொழுது கிராமவாசிகள் சீர்வரிசைகளுடன் எதிர்கொண்டு அழைத்து நவாப் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் மசூதியின் மேல்புறம் வாசல் எதிரில் சுவாமியை நிறுத்தி மாலை அணிவித்து சர்க்கரை, பழம் நைவேத்தியம் கொடுத்து கற்பூர தீபாரதனை செய்விக்கின்றனர். பின்னர் சுவாமி கோயில் சிப்பந்திகள் கற்பூர ஆரத்தியை மசூதிக்குள் எடுத்துச் சென்று வலம் வருகிறார்கள்.
கோயில் சிறப்புகள் :
• திருமாலின் பத்து அவதாரத்தில் வராக அவதாரம் சிறப்பு மிக்கது. இவரே பூவராக மூர்த்தியாகக் காட்சி தருகிறார். திருப்பதி – திருமலையில் ஏழுமலையானைத் தரிசிக்கும் முன்பு, அவருக்குக் கோவில் கொண்டு எழுந்தருள இடமளித்த சந்திர புஷ்கரணி என்னும் திருக்குளம் அருகில் தனிக் கோவிலில் நின்றருள் புரியும் ஆதிவராகப் பெருமாளைச் சேவிக்க வேண்டுமென்று சொல்வார்கள்.
• பிரம்மன் யாகத்தில் இருந்து தோன்றியதால் யக்ஞவராகர் என்ற பெயருடன் உற்சவர் திகழ்கிறார். இவருடன் திருமகள், நிலமகள் ஆகியோர் உடனிருந்து பேரருள் புரிகின்றனர்.
• வட இந்தியாவில், சாளக்கிராமம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்திரிகாச்ரமம், தென்னகத்தில் திருவரங்கம், திருப்பதி, வானமாமலை போல் ஸ்ரீமுஷ்ணத்தில் மும்மூர்த்தியும் தானே என்ற நிலையில் சுயம்பு மூர்த்தியாக திகழ்ந்து பெருமை சேர்க்கிறார்.
• தனது ஒரு விழிப் பார்வையால் அரச மரத்தையும், மறு விழிப் பார்வையால் துளசிச் செடியையும் உருவாக்கினார். அவர் உருவாக்கிய அரசமரம், இந்த ஆலயத்தின் பின்புறம் உள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தின் தென்கரையில் உள்ளது. இதுவே தலவிருட்சமாகவும் விளங்குகிறது. அங்கே பிரகன் நாயகி சமேத நித்தீஸ்வரர் வீற்றிருக்கும், பழங்கால சிவாலயம் ஒன்றும் இருக்கிறது.
• பிள்ளைப்பேறு வேண்டுவோர் நித்ய புஷ்கரணியில் நீராடி, அரசமரத்தைச் சுற்றிவந்து, பூவராகரை உள்ளன்புடன் உருகி வழிபட வேண்டும். பின்னர் ஆலயத்தில் சந்தான கிருஷ்ண மூர்த்தத்தை, கைகளில் வாங்கி மடியில் வைத்து வணங்கினால், மழலை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
• பெருமாள் சன்னிதிக்கு வடக்குச் சுற்றில், பாவை பாடிய ஆண்டாள் சன்னிதியும், பரமபத வாசல் கோபுரம் அருகே மகேஸ்வரி, சாமுண்டி வராகி போன்ற சப்த மாதர்கள் கோவிலும் உள்ளன.
• ஸ்ரீமுஷ்ணம் அருள்மிகு ஸ்ரீ பூவராகசுவாமி கோவில் சிறப்பு முஸ்தா சூரணம் என்கிற கோரைக்கிழங்கு பிரசாதம். ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள் பன்றி அவதாரம் எடுத்துள்ளார். இதன் காரணமாக அவரது அவதாரத்திற்கு கோரைக்கிழங்கு மிகவும் பிடித்தமான உணவு என்பதால் கோரைக்கிழங்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
• இங்குள்ள மூலவரின் திருமேனி, முழுவதும் சாளக் கிராமத்தினால் ஆனது. எனவே தினமும் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படுகிறது.
• ஸ்ரீரங்கம், திருப்பதி, வானமாமலை, சாளக்கிராமம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிகாஷ்ரமம் ஆகிய க்ஷேத்திரங்களுடன் இணைந்து, ஸ்ரீமுஷ்ணம் எட்டு முக்கிய சுயம்பு க்ஷேத்திரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

• அருணகிரிநாதர் தரிசித்த தலம் ஸ்ரீமுஷ்ணம். இது புகழ்பெற்ற ஆதிவராகப்பெருமாள் கோவில் கொண்டுள்ள

அருமையான

தலம். வைஷ்ணவர்கள் இதை “ஸ்வயம்வ்யக்த ஸ்தலம்” – தானாகவே தோன்றி விளங்கும் தலம் என்று கொண்டாடுகிறார்கள். இவ்வாறு எட்டுத் தலங்கள் உள்ளன. இங்கெல்லாம் லக்ஷ்மியே பெருமாளைப் பூஜித்ததாக வரலாறு. இங்குள்ள பெருமாள் மூர்த்தம் இயற்கையாகவே எழுந்த சாளக்ராமத்தால் அமைந்தது.

• இங்கு வந்த அருணகிரிநாதர், இங்கு நித்தீஸ்வரர் கோவிலில் உள்ள முருகனைப் பாடியதாகச் சொல்கிறார்கள். இரண்டு திருப்புகழ்ப் பாடல்கள் கிடைத்துள்ளன. பெருமாளைப் போற்றும் நம் ஸ்வாமிகள், ஆதிவராகப் பெருமாளையும் தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
சிறைவிட்ட சூரர் தலைவெட்டி ஞான
திருமுட்ட மேவு பெருமாளே !
சிறையில் அடைத்த தேவர்களுக்கு சூரர்கள் இட்ட விலங்கைத் தகர்த்தெரிந்தவனே! ஞான உருவானவனே ! ஸ்ரீமுஷ்ணம் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே ! தேவியரோடும், அடியவர் குழாத்துடனும் மயில்மீது வந்து தரிசனம் தரவேணும். இங்கு சுவாமிகள் முருகன் அடியவர் குழாத்துடன் வரவேணும் என்கிறார்..
அடுத்த பாடலில்
திருவுற் றுப்பணி யாதிவ ராகர்த
மகளைப் பொற்றன வாசையொ டாடிய
திருமுட் டப்பதி வாழ்முரு காசுரர் …… பெருமாளே.
லக்ஷ்மிதேவி பூஜித்துப் பணிந்த ஸ்ரீ ஆதிவராகப் பெருமாளின் திருமகளாகிய வள்ளியுடன் ஆடி மகிழ்ந்த, திருமுட்டத் தலத்தில் விளங்கும் முருகா! தேவர்கள் பெருமாளே ! என்று அருணகிரிநாத பெருமான் இரண்டு பாடல்களை இங்கு பாடியிருக்கிறார்.
திருவிழா:
•மாசி மகம் பிரம்மோற்சவம் -10நாட்கள் திருவிழா –
•சித்திரை பிரம்மோற்சவம் – 10 நாள் தேர் தெப்பம் – சித்திரை மாதத்தில் ஸ்ரீ முஷ்ணத்திலேயே நடைபெறுவது ,ஒன்பது நாட்கள் பகல், இரவு பெருமாள் வீதிக்கு எழுந்தருள்கிறார். ஒன்பதாவது நாள் மட்டையடி உற்சவம் விசேஷமானது.
•சித்ராபவுர்ணமி அன்று நண்பகலுக்கு மேல் புஷ்கரணியில் தீர்த்தவாரி.
•ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு ஏகாதசிகள் , பவுர்ணமி, அமாவாசை , மாதப்பிறப்பு இந்த நாட்களில் யோக நரசிம்மசுவாமி பிரகாரத்தில் எழுந்தருள்கிறார்.
•அவதாரதினமாகிய சித்திரை மாத ரேவதியில் பூவராகன் எழுந்தருள்கிறார்.
•வைகாசி விசாகம் – உற்சவர் கருடவாகனம்
•ஆடிப்பூரம் – ஆண்டாள் உற்சவம்
•ஆவணி – பத்துநாள் ஸ்ரீ ஜெயந்தி, உறியடி
•புரட்டாசி – பெருமாள் தாயார் நவராத்திரி கொலு
•ஐப்பசி – தீபாவளி உற்சவம்
•கார்த்திகை – திருக்கார்த்திகை சொக்கப்பனை
•மார்கழி – பகல் பத்து, இராப்பத்து, ஆண்டாள் நீராட்டு வைகுண்ட ஏகாதசி – யக்ஞவராகன் வீதி உற்சவம், கருடசேவை தை சங்கராந்தி – யக்ஞவராகனுக்கும் ஆண்டாளுக்கும் திருக்கல்யாணம்
•மாட்டுப்பொங்கல் – பாரிவேட்டை
•தைப்பூசம் – தீர்த்த உற்சவம்
•பங்குனி உத்திரம் – பெருமாள் தாயார் திருக்கல்யாணம் – திரு ஊரல் உற்சவம்
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில்,
ஸ்ரீமுஷ்ணம்- 608 703
கடலூர் மாவட்டம்.
போன்:
+91-4144-245090
அமைவிடம் :
இந்த ஆலயம் திருமுட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் வட்டத்தில் அணைக்கரை – மீன்சுருட்டியில் இருந்து சேத்தியாத்தோப்பு வழியே வடலூர் செல்லும் சென்னை நெடுஞ்சாலையில் சோழதரம் என்றொரு ஊர் வரும். அங்கிருந்து சுமார் 12 கிலோமீட்டர் துரத்தில் விருத்தாசலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஊர் தான் ஸ்ரீ முஷ்ணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − thirteen =