கடிதம் – 31 – ரங்கநாதனும் ஆண்டாளும்
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!
வாழ்க வளமுடன்
அனைவருக்கும் வணக்கம்…
எங்கே தன் மருத்துமனையில் ஒருவர் இறந்து விட்டால் தனக்கு கெட்ட பெயர் வந்துவிடும் என்று எண்ணி என் தந்தையை அவசரகதியாக வெளியே தள்ளி விட்ட மருத்துவரின் மருத்துவமனையில் என் தந்தை இறப்பதற்கு முதல் நாள் இரவே, அவர் என்னிடம், இந்த மருத்துவமனையில் எனக்கு சிகிச்சை செய்தால் பணம் அதிகமாக செலவாகும். நீயே இப்போது தான் கஷ்டப்பட்டு உன் திருமண செலவையே சமாளித்திருக்கிறாய். எனவே என்னை அரசாங்க மருத்துவமனையில் சேர்த்துவிடு. என் மருத்தவ செலவிற்கான பணத்திற்கு நீ என்ன செய்வாய் என்று என்னை கேட்டு விட்டு, கேட்டவர் அதை மட்டும் நினைத்து தூங்கி இருப்பார் என நினைக்கின்றேன். அந்த தூக்கத்திலேயே அவருடைய நிரந்தர தூக்கம் தான் என் எதிர் காலத்திற்கு நல்லது என்று தன்னை முடித்து கொள்ள முடிவெடுத்து இருப்பார் என கருதுகின்றேன்.
உயிரின் முக்கியத்துவத்தை உணர்ந்து, நொடி கூட தாமதிக்க விரும்பாமல், யாரும் யாரையும் தாமதிக்க விடாமல் ஓடி, பறந்து உயிர் காக்க போராடிய மருத்துவர்கள் எனக்கு அந்த நேரத்தில் கிடைத்திருந்தாலும் இன்று வரை நின்று, நின்றபின் சென்று விட்ட மூச்சை பிடித்து வந்து மனித உடலில் அடைக்கும் அளவிற்கு மருத்துவம் வளரவில்லை என்பது தானே நிதர்சன உண்மையாக இருக்கின்றது. இந்த உண்மை அந்த நொடியில் உணர்ச்சி இல்லாமல் என்னை ஆக்கிருந்தாலும், உண்மையாக போராடிய அவசரகால மூத்த மருத்துவருக்கு நன்றி சொல்லிவிட்டு, அவரிடமே என் அப்பா உடம்பை நன்கு பதப்படுத்தி கொடுத்து விடுங்கள் ஒரு உதவியாக என்பதையும் ஒரு வேண்டுகோளாக வைத்து விட்டு பின் அங்கிருந்த செவிலியரிடம் சென்று பில் கேட்டேன், அவரும் உடனே உள்ளே இருந்த மூத்த மருத்துவரிடம் கேட்டு வருவதற்காக உள் சென்று வெளி வந்து பின் சொன்னார்.
“சார், ரூ.153/- மட்டும் கொடுத்து விட்டு போங்கள் எங்கள் மருத்துவமனை மருந்தகத்தில். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எனக்கு தெரிந்த அளவிற்கு குறைந்தது ரூ.20,000/- வது பில் தொகையாக கேட்க வேண்டிய இடத்தில் வெறும் ரூ.153/- மட்டுமே கேட்கிறீர்களே, பில் எதுவும் விட்டு விட்டீர்களா மேடம் என்று நான் கேட்டதற்கு எனக்கு அளிக்கப்பட்ட பதிலை கேட்டு அழுவதா? சிரிப்பதா என்று தெரியவில்லை இன்று வரை.
அவர் அளித்த அந்த பதில்:-
சார், உங்களை எங்கள் அவசரகால சிகிச்சை செய்த மருத்துவருக்கு மிகவும் பிடித்து விட்டது. அதுவும் இவ்வளவு கஷ்டத்திலும் உங்கள் தந்தையின் கண்களை தானமாக கொடுத்த விஷயம் குறித்து ரொம்ப சந்தோஷமாக எங்களுடன் கருத்து பரிமாறிவிட்டு In patient ஆக உங்கள் தந்தையை நாங்கள் சேர்த்து கொண்டால் கண்டிப்பாக ரூ.20,000/- மேல் தான் பில் வரும். ஆனால் ஏனோ தெரியவில்லை அவர் உங்களை Out Patient ஆக சிகிச்சை கொடுத்தது போல் எழுத சொல்லிவிட்டார். அதனால் மருந்தகத்தில் மருந்துக்காக வாங்கிய ரூ.153/- ஐ மட்டும் தான் நீங்கள் கொடுக்க வேண்டும் என்று கூறி சென்று விட்டார்.
ஒரு வேளை விஜயா மருத்துவமனை ரூ.20,000/- தான் பில் தொகை என்று சொல்லி என்னை அந்த தொகையை கட்ட சொல்லி இருந்தால் அன்றிருந்த நிலைமைக்கு கண்டிப்பாக மிகவும் கஷ்டப்பட்டிருப்பேன் அந்த தொகையை கட்டுவதற்கு. என் அப்பா என்றோ ஒரு முறை எங்கள் உறவுகார பெண்ணின் ஒன்பது வயது இறந்து போன குழந்தையின் கண்கள் தானமாக கொடுக்கப்பட்டதைப் பற்றி கூறிவிட்டு, தன் கண்ணும் தானமாக கொடுக்க பட வேண்டும் என்று எதேச்சையாக கூறி இருந்த விஷயத்தை எதையும் எதிர்பாராமல் நான் உண்மையாக்கிய போது, இறந்தும் எனக்கு கஷ்டம் கொடுக்காமல் போய்விட்டார் என் அப்பா என்று தான் கூறுவேன்.
தவறான சிகிச்சை, தவறான வாகனம், அஜாக்கிரதை மருத்துவ நிர்வாகம், சுயநலம் மட்டும் நிறைந்து சாலையில் அன்று எங்களுக்கு இடம் தராமல் ஆக்கிரமித்து சென்ற மக்கள், உயிரை காக்க உண்மையான மருத்துவர்கள் போராடியது, விஜயா மருத்துவமனை மருத்துவரின் உயர்ந்த குணம் என இவை அனைத்துமே 45 நிமிடத்தில் ஒரு குறும்படம் போல் தொடங்கியதை ஞாபகத்திற்கு கொண்டு வருவதற்கு முன்பாகவே முடிந்து விட்டது.
கஷ்டத்தை தவிர வேறு எதையும் அறிந்திடாத என் அப்பா தன் மரணத்திலும் யாருக்கும் கஷ்டம் தராமல் தனக்கு மிகவும் பிடித்த என்னைத் தவிர வேறு யார் முகத்தையும் பார்க்காமல் Ambulance – ல் செல்லும் போது இரண்டு கண்களையும் மூடியவர், இறந்த பின் தன் கண்களையும் கொடுத்து 2 முகம் தெரியாத நபர்களை என் தந்தையால் பார்க்க முடியாத உலகத்தை பார்க்க செய்த புண்ணியம் ஒன்று தான் இன்று இவ்வுலகில் பலரை என்னை நோக்கி பார்க்க செய்திருக்கின்றது என்பதை நான் 100% நம்புகின்றேன்.
ஆக கொடுத்தால் நல்லது.
அதுவும் நினைத்த உடனே கொடுப்பது மிக நல்லது.
கொடுப்பவர்கள் (கொடுத்த உடனே) தாங்கள் கொடுத்ததை மறந்து விடுவது மிக, மிக நல்லது.
எதையும் எதிர்பாராமல் கொடுப்பது மிக, மிக, மிக நல்லது.
பெற்ற தாய், தந்தையரை போற்றி பத்திரமாக பாதுகாத்து அவர்களுக்கு எப்போதும் அன்பை மட்டும் கொடுப்பது மேல் சொன்ன எல்லாவற்றையும் விட மிகப் பெரிய நல்லது.
இந்த உண்மை கதை மூலம் வாழ்க்கையில் நினைத்ததை அடைய / விரும்புவதை பெற கொடுக்க முடிவெடுங்கள்.
கிடைக்க போவதை பெற தயாராகுங்கள்.
வெற்றி நமதே….
இதெல்லாம் சரி…. ஏன் இந்த கடிதத்திற்கு சம்பந்தமே இல்லாமல் ரங்கநாதனும், ஆண்டாளும் என்ற தலைப்பை வைத்தேன் என்று நீங்கள் கேட்க கூடும். அதற்கான ஆச்சரிய பதில்
- என் அப்பா இறந்த பிறகு அவர் உடலை எடுத்து சென்ற வாகனத்தை ஓட்டியவர் பெயர் ரங்கநாதன்
- மருத்துவமனையை விட்டு கிளம்பும் போது எங்கள் எதிரில் வந்த லாரியில் எழுதியிருந்த பெயர் ஸ்ரீஆண்டாள்
ஆச்சரிய எடுத்துக்காட்டுகளுடன் அடுத்த கடிதத்தில் அடுத்த விஷயத்துடன் உங்களை சந்திக்கிறேன்.
எல்லா புகழும் ஆண்டாளுக்கே
வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்