#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவித்துவக்கோடு

September 16, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவித்துவக்கோடு
231.#அருள்மிகு_உய்யவந்தபெருமாள்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : உய்யவந்த பெருமாள்(அபயப்ரதன்)
தாயார் : வித்துவக்கோட்டு வல்லி (பத்மாஸனி நாச்சியார்)
தீர்த்தம் : சக்கரதீர்த்தம்
புராண பெயர் : திருமிற்றக்கோடு
ஊர் : திருவித்துவக்கோடு
மாவட்டம் : பாலக்காடு
மாநிலம் : கேரளா
ஸ்தல வரலாறு:
பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டபோது, தென்னிந்திய பகுதியில் நீளா நதிக்கரையோரம் வந்தனர். அந்த இடத்தின் அழகு, தெய்வீகம் கலந்த அமைதி அவர்களைக் கவர்ந்ததால், அங்கேயே சில காலம் தங்க முடிவு செய்தனர். அப்போது தினமும் பூஜை செய்வதற்காக கோயில் கட்டி அதில் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்தனர். முதலில் அர்ஜுனன் திருமால் சிலையை அமைத்தார். அதுவே இத்தலத்தின் மூலஸ்தானமாக கருதப்படுகிறது. அர்ஜுனனைத் தொடர்ந்து தர்மர், நகுல – சகாதேவன், பீமன் ஆகியோர் தனித்தனியாக பெருமாளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தனர்.
கணபதி, தட்சிணாமூர்த்தி, சாஸ்தா, நாகர், பகவதி தேவி ஆகியோருக்கும் தனி சந்நிதிகள் உள்ளன. பாண்டவர்கள் பெரும்பாலான நாட்கள் இங்கேயே தங்கியிருந்து வழிபாடுகள் செய்ததாகக் கூறப்படுகிறது. வெகுகாலத்துக்குப் பிறகு பாண்டிய மன்னர் ஒருவரால் சுற்றுமதில் கட்டப்பட்டது. ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியைச் சேர்ந்த முனிவர், காசிக்கு பயணம் மேற்கொண்டு அங்கேயே தங்கியிருந்தார். அவரது தாயார் உடல்நலம் குன்றியிருப்பதாக தகவல் அறிந்ததும், காசியில் இருந்து புறப்பட்டார். பக்தன் மீது கொண்ட அன்பால், காசி விஸ்வநாதர் அவரது குடையில் யார் கண்களுக்கும் தெரியாதபடி மறைந்து கொண்டார். முனிவர் வரும்வழியில் இக்கோயிலைக் கண்டதும், தனது குடையை கோயில் பலிபீடத்தில் வைத்துவிட்டு, நீராடச் சென்றார். முனிவர் வந்து திரும்பிப் பார்க்கும்போது, அவரது குடை மறைந்து விட்டது பலிபீடம் இருந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் இருப்பதைக் காண்கிறார். காசி விஸ்வநாதரே, பஞ்ச பாண்டவர்கள் பிரதிஷ்டை செய்த கோயிலுக்கு வந்து விட்டதாகவும், இதற்கு முனிவர் காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
பெருமாள் கோயிலுக்குச் செல்வதற்கு முன்னர், சிவபெருமானை தரிசித்துவிட்டுச் செல்ல வேண்டும் என்பதால், இத்தலம் சைவ – வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஐந்து பெருமாள்கள் இருந்து அருள்பாலிப்பதால் இத்தலம் ‘ஐந்து மூர்த்தி தலம்’ என்று அழைக்கப்படுகிறது. தற்போது சிவலிங்கத்தைச் சுற்றி தனி கோயில் எழுப்பப்பட்டுள்ளது.
கோயில் சிறப்புகள்:
•108 வைணவ திவ்ய தேசங்களில், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள திருவித்துவக்காடு உய்யவந்த பெருமாள் கோயில் 77-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.
•திருமிற்றக்கோடு, திருவீக்கோடு, ஐந்து மூர்த்தி கோயில் என்று அழைக்கப்படும் இத்தலத்தை குலசேகராழ்வார் 10 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
•தத்வகாஞ்சன விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் மூலவர் உய்யவந்த பெருமாள் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அம்பரீஷன் இத்தல பெருமாளை தரிசித்துள்ளார். அவருக்காகவே பெருமாள் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளதாகக் கூறப்படுகிறது.
•இக்கோவிலில் அர்ச்சுனன் நிறுவிய விஷ்ணு மூலவராக இருக்கிறார். தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் இருக்கும் இந்த விஷ்ணுவை, சமஸ்கிருதத்தில் ‘அபயப்பிரதான்’ என்றும், தமிழில் ‘உய்ய வந்த பெருமாள் என்றும் அழைக்கின்றனர். இச்சன்னிதிக்கு வலதுபுறம், தருமர் நிறுவிய விஷ்ணு சிலையுடனான சன்னிதி, நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரால் நிறுவப்பட்ட விஷ்ணு சிலையுடனான சன்னிதி என்று இரண்டு சன்னிதிகள் அமைந்திருக்கின்றன. இடதுபுறம் சிறிது பின்புறமாக, பீமன் நிறுவிய விஷ்ணு சிலையுடைய சன்னிதி இருக்கிறது.
•பஞ்சபாண்டவர்கள் நிறுவிய நான்கு விஷ்ணு சிலைகளும் நின்ற கோலத்தில், சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரையைக் கொண்ட நான்கு கைகளுடன் அமைந்திருக்கின்றன.
•இங்கு தாயாருக்குத் தனிச் சன்னிதியோ, சிலையோ இல்லை. இங்குள்ள இறைவன் உய்யவந்த பெருமாள் மார்பில், தாயார் இருப்பதாக நம்பிக்கை இருக்கிறது. இந்தத் தாயார் நாச்சிவல்லி, பத்மபாணி நாச்சியார் என்று இரு பெயர்களால் அழைக்கப் பெறுகிறார்.
•பத்து நதிகள் ஒன்றாக இணையும் பாரதப்புழா நதிக்கரையில் கோயில் அமைந்துள்ளதாலும், காசி விஸ்வநாதரே இங்கு எழுந்தருளியிருப்பதாலும், இத்தலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு.
•கோயில் சுவர்களில் சுதைச் சிற்பங்கள், சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. அர்ஜுனன் தவம் செய்த காட்சி, கிருஷ்ண லீலா காட்சிகள் பக்தர்களை பெரிதும் கவர்ந்துள்ளன.
•நபாகணன் என்ற மன்னனின் மகனான அம்பரீஷன் முக்தி பெறுவதற்காக, மகாவிஷ்ணுவை நோக்கிக் கடுந்தவம் செய்தான். அவனைச் சோதித்துப் பார்க்க விரும்பிய விஷ்ணு, அவன் முன்பாகத் தேவேந்திரன் வடிவில் தோன்றினார். அதனைக் கண்ட அம்பரீஷன், “நான் தேவேந்திரனைக் காண இத்தவத்தைச் செய்யவில்லை, மகாவிஷ்ணுவைக் காணும் என் முயற்சிக்கு இடையூறு செய்ய வேண்டாம்” என்று பணிவோடு சொன்னான். அவனுடைய உண்மையான பக்தியில் மகிழ்ந்த மகாவிஷ்ணு, அவனுக்குத் தனது உண்மையான தோற்றத்தைக் காண்பித்தருளினார். அம்பரீஷன் அவரிடம், தனக்கு எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும், மகாவிஷ்ணுவே தெரிந்திட வேண்டுமென்று வேண்டினான். விஷ்ணுவும் அவன் விரும்பியபடி, வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன் எனும் நான்கு தோற்றங்களில் தனது வியூகத் தோற்றத்தைக் காட்டியருளி, அவனுக்கு முக்தியும் அளித்தார்.
•இக்கோவில் மூலவர் பக்தர்களுக்கு ஏற்படும் துயரங்கள் அனைத்தையும் களைந்து, அவர்களுக்கு அபயமளிப்பவராகவும் இருப்பதால், அபயப்பிரதான் (தமிழில் உய்ய வந்த பெருமாள்) என்று அழைக்கப்படுகின்றார்.
•காசிக்குச் செல்ல முடியாதவர்கள் இக்கோவிலில் இருக்கும் காசி விசுவநாதரை வழிபட்டு, அதற்கான பலன்களை அடையலாம்
•இக்கோவில் சைவம், வைணவம் என்று இரு பிரிவினரும் வழிபடும் கோவில்களில் ஒன்றாக இருக்கிறது.
திருவிழா:
வைகுண்ட ஏகாதசி, திருவோணம்
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 10.30 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு உய்யவந்தபெருமாள் திருக்கோயில்,
திருவித்துவக்கோடு (திருவிச்சிக்கோடு) – 679 303
பாலக்காடு மாவட்டம்,
கேரளா மாநிலம்
போன்:
+91- 98954 03524
அமைவிடம்:
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் ஷோரனூர் கள்ளிக்கோட்டைக்கு இடையில் அமைந்திருக்கும் பட்டாம்பி என்னும் இடத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் திருவித்துவக்கோடு (திருமித்தக்கோடு) எனும் ஊரில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல, ஷோரனூர் மற்றும் பட்டாம்பி ஆகிய இடங்களில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
#templesofsouthindia #templesoftamilnadu #templeshistory #templesofhindus #temple #ஸ்தலம் #தலவரலாறு #ஆலயம்அறிவோம் #கோயில்கள் #ஆன்மீகம் #கோவில்வரலாறு #templepost #templesecrets #FamousTemples #DrAndalPChockalingam #SABP #Thirumittakode #anchumoorthitemple #pithrutharppana #திருவித்துவக்கோடு #உய்யவந்தபெருமாள் #அபயப்ரதன் #வித்துவக்கோட்டுவல்லி #ஐந்துமூர்த்திகோயில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 17 =