#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கண்ணபுரம்

September 11, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கண்ணபுரம்
இந்த கோயிலில் சுவாமி எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாக கையில் முழுவதும் திரும்பிய பிரயோகச் சக்கரத்துடன் அருளுகிறார்.
227.#அருள்மிகு_சவுரிராஜப்பெருமாள்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : நீலமேகப்பெருமாள்
உற்சவர் : சவுரிராஜப்பெருமாள்
தாயார் : கண்ணபுரநாயகி
தீர்த்தம் : நித்யபுஷ்கரிணி
புராண பெயர் : கிருஷ்ணபுரம்
ஊர் : திருக்கண்ணபுரம்
மாவட்டம் : நாகப்பட்டினம்
ஸ்தல வரலாறு:
பொதுவாக கோயில்களை நிர்மாணிப்பதும் நிர்வாகம் செய்ய இறையிலியாக நிலங்களை மானியமாய் அளித்து செலவினங்களுக்கான வருவாய்க்கு வழிசெய்வதும் மன்னர்கள் தங்கள் கடமையாகக் கொண்டிருந்தனர். இதற்கு நன்றியாக இறைவனுக்கு அடுத்த நிலையில் மன்னர்களை மதித்து மரியாதை செய்துவந்தனர் கோயில் நிர்வாகிகள். இறைவனுக்கு அணிவித்த மாலையை மன்னனுக்களித்து மரியாதை செய்வர். கோயில் அர்ச்சகர் வழக்கம்போல் ஒரு நாள் உற்சவருக்கு அணிவித்த மாலையை மன்னரிடம் கொண்டுபோய்க் கொடுக்க அதில் ஒரு தலைமுடியைக் கண்டு அர்ச்சகரிடம் அது பற்றிக் கேட்ட போது, மன்னர் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்பதற்காக ‘தலைமுடி இறைவனுடைய முடிதான்’ என்று கூறிவிட்டார்.
மன்னன் இதை நம்ப மறுத்து நேராகக் கோயிலுக்குச் சென்றான். உற்சவருடைய தலையிலிருந்த நீண்ட குழற்கற்றையைக் கண்டான். அது உண்மையான முடியா என்றறிய தலையிலிருந்து ஒரு முடியை எடுத்துக் காண்பிக்குமாறு அர்ச்சகரைக் கேட்டான். அவரும் ஒரு முடியைப் பிடித்திழுக்க அந்த இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டுத் தெறித்தது. அஞ்சி நடுங்கிய மன்னன் தன் தவறை உணர்ந்தான்.
திருக்கடவூரில் அபிராம பட்டருக்கு அமாவாசையை பௌர்ணமியாகத் திகழச் செய்த இறைவனின் அருளுக்கு ஒப்ப, இங்கும் அர்ச்சகர் இயலாமைக்கு இரக்கப்பட்டு திருமால் சவுரி முடியுடன் காட்சி தந்தார். அன்று முதல் உற்சவருக்கு தலையலங்காரம் சவுரிமுடியுடன் தான், பெயரும் சவுரிராஜப் பெருமாள் என்று வழங்கப்படலாயிற்று.
கோயில் சிறப்புகள்:
•பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 17-வது திவ்ய தேசமான திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் பூலோக வைகுந்தம்,
•முக்தி தரும் தலங்களில் முதன்மை தலம்,
•பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்று என்று அடுக்கடுக்கான பெருமைகளைப் பெற்ற தலம் ஆகும்.
•108 வைணவ தலங்களில் வடக்கே திருவேங்கடம் என்றும், தெற்கே திருமாலிருஞ்சோலைமலை என்றும், திருவரங்கம் மேலை வீடு என்றும் திருக்கண்ணபுரம் கீழை வீடு என்றும் அழைக்கப்படுகிறது.
•நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் இத்தலத்தை மங்களா சாசனம் செய்துள்ளனர்.
•இத்தலத்தில் உள்ள உற்சவர் ‘சவுரிராஜப் பெருமாள்’ என்ற பெயருடன், தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும். ‘சவுரி’ என்ற சொல்லுக்கு ‘முடி’ என்றும், ‘அழகு’ என்றும் பொருள்கள் உண்டு.
•7 அடுக்குகளைக் கொண்டது சவுரிராஜப் பெருமாள் கோயிலின் ராஜ கோபுரம். கருவறை மூலவர் ‘நீலமேகப் பெருமாள் ‘ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். தாயார் ‘கண்ணபுர நாயகி‘ தனிச் சந்நிதியில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கின்றாள்.
•கிருஷ்ணாபுரம் அன்று அழைக்கப்பட்ட இவ்வூரானது பின்னர் திருக்கண்ணபுரம் என்ற பெயர் பெற்று விளங்குகிறது.
•திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், திருக்கவித்தலம் மற்றும் திருக்கோவலூர் ஆகிய ஐந்து தலங்களும் பஞ்ச கிருஷ்ணாரண்ய க்ஷேத்ரங்கள் என்றே போற்றப்படுகின்றன.
•க்ஷேத்ரம், வனம், நதி, கடல், நகரம், தீர்த்தம், விமானம் என ஏழும் இங்கு சேர்ந்திருப்பது மிகவும் அரிதானது.
•ராவண வதம் முடிந்தபின் அயோத்தி திரும்பும் ராமபிரானைப் பிரிய மனமில்லாது வருந்திய விபீஷணனுக்கு ராமபிரான் தன் நடை அழகைக்காட்டி அருள் செய்த தலம் இத்திருக்கண்ணபுரம் . இதை உணர்த்துவது போல் இக்கோயிலில் விபீஷணனுக்கென்றே தனியாக ஒரு சந்நிதி உள்ளது. ராமானுஜருக்கும் தனிக்கோயில் உள்ளது.
•அரக்கர் தொல்லையிலிருந்து தங்களைக் காத்தருளுமாறு வேண்டிக் கொண்ட முனிவர்களுக்காக பெருமாள் தன் சக்ராயுதத்தைப் பிரயோகித்து’வீகடாக்ஷன்’ என்ற அசுரனை அழித்த தலம் என்பதால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தன் வலக்கரத்தை நீட்டி சக்ராயுதத்தை வீசுவதுபோல் காட்சி தருவது மற்றொரு விசேஷம்.
•முனையதரையன் என்ற பக்தன் ஒருவன் இரவு தான் உண்ணக் கையில் எடுத்த பொங்கலின் நறுமணத்தை வியந்து, இது இறைவன் சுவைக்க வேண்டிய பொங்கல் என்று எண்ணிய மாத்திரத்தில் மானசீகமாக அவனால் அது இறைவனுக்கு நிவேதனம் ஆயிற்று. அடுத்த நாள் காலையில் இறைவன் மேனியில் முந்தைய நாளின் மானசீகமாய் நிவேதனமான பொங்கல் நெய்யோடு வழிந்திருப்பது கண்டு மக்கள் திகைத்ததுடன் அன்று முதல் தினமும் அர்த்தசாம பூஜையின் போது இந்த பக்தன் செய்து தரும் பொங்கலையே நிவேதனம் செய்ய ஏற்பாடாயிற்று.
•தமிழ்க் குடும்பங்களில் குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டு பாடும் தாய்மார்கள் குலசேகர ஆழ்வார் பாடிய தாலாட்டைத்தான் பாடுவார்கள் ‘மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே‘ என்று தொடங்கி 10 பாசுரம் பாடியுள்ள குலசேகர ஆழ்வார் இத்திருத்தலத்து பெருமாளைத்தான் தாலாட்டிப் பாடியுள்ளார். சிலைவலவா சேவகனே என்றும், ஏ மருவும் சிலை வலவா என்றும் ஏ வரி வெஞ்சிலை வலவா என்றும் ராமபிரான் வில்லாற்றலைத்தான் புகழ்ந்து பாடுகிறார்.
•கண்ணனைக் குழந்தையாகவும் தன்னை யசோதையாகவும் பாவித்து கண்ணனை சீராட்டி, நீராட்டி தாலாட்டிப் பெரியாழ்வார் பாடும் பாசுரங்கள்தாம் பிற்காலப் பிள்ளைத் தமிழ் என்னும் சிற்றிலக்கியத்துக்கு வித்திட்டது. பிள்ளைத்தமிழில் கூறப்படும் 10 பருவங்களில் செங்கீரைப் பருவம் தவழ்ந்துவரும் குழந்தை தலை நிமிர்த்தி முன்னும் பின்னும் ஆடும் அழகைப் பாடுவதாகும். பெரியாழ்வாரும் இத்தலத்து இறைவனை அழைத்து, கண்ணபுரத்தமுதே ஆடுக செங்கீரை ஏழுலகும் உடையாய் ஆடுக ஆடுகவே என்று பாடுகிறார்.
•திருமால் இத்தலத்தில் எட்டு அக்ஷரங்களிலும் உருக்கொண்டு உறையும் தலமாதலால் ‘அக்ஷ்டாக்ஷர மகா மந்திர ஸித்தி ஷேத்திரம்‘ என்று பேசப்படுகிறது. பூலோக வைகுந்தம் என்பதால் இங்கு சொர்க்க வாசல் தனியாகக் கிடையாது.
•இங்கு சுவாமி எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாக கையில் முழுவதும் திரும்பிய பிரயோகச் சக்கரத்துடன் அருளுகிறார். அருகிலேயே கருடன் வணங்கிய கோலத்தில் இருக்கிறார்.
•வைகாசி பிரம்மோற்ஸவத்தின் போது சுவாமி அதிகாலையில் சிவன், மாலையில் பிரம்மா, இரவில் விஷ்ணு என மும்மூர்த்திகளாக காட்சி தருகிறார். விஷ்ணுவின் இந்த மும்மூர்த்தி தரிசனம் விசேஷ பலன்களைத் தரக்கூடியது.
•விபீஷ்ணனை தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமபிரான், அவனுக்கு இத்தலத்தில் பெருமாளாக நடந்து காட்சி தந்தார்.அமாவாசைதோறும் உச்சிகால பூஜையில் பெருமாள் விபீஷணனுக்கு நடந்து காட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.
•உற்சவ மூர்த்தியின் திருமேனியில் வலப்புருவத்திற்கு மேல் சிறு தழும்பும் இன்றும் காணலாம். முன் காலத்தில் அந்நியர் திருமதில்களை இடித்து வந்தபோது திருக்கண்ணபுரத்து அரையர், மனம் புழுங்கி, “பெருமானே பொருவரை முன்போர் தொலைத்த பொன்னழி மற்றொரு கை என்றது பொய்த்ததோ’ என்று கையிலிருந்த தாளத்தை வீசி எறிந்தார். அது பெருமானது புருவத்தில் பட்டது.
•”ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தின் முடிவு நிகழ்ந்த இடம் இது. அஷ்டாச்சர சொரூபி மந்திர உபதேசம் பெற்ற தலம். இந்த ஊரில் கால் பட்டாலே வைகுந்தம் கிடைக்கும் என்பதால் இந்த பெருமாள் தலத்தில் சொர்க்க வாசல் கிடையாது.
•மற்ற தலங்களில் அபய காட்சியோடு பெருமாள் இருப்பார்.இங்குள்ள பெருமாள் தானம் வாங்கிக் கொள்தல் போல காட்சியில் இருப்பார். இதன் பொருள் நம் கஷ்டங்களை பெருமாள் வாங்கிக் கொள்ளுதல் போல ஐதீகம்.
•இத்தலத்தில் பெருமாள் சக்கரம் பிரயோகச் சக்கரம் வதம் பண்ணுவதாய் உள்ளது.
•உற்சவ பெருமாளுக்கு சவுரி முடி வளர்ந்ததால் சவுரி ராஜ பெருமாள் என்று பெயர்.
•சவுரிராஜப் பெருமாளிடம் திருமங்கை ஆழ்வார் மந்திர உபதேசம் பெற்ற தலம் இது.
•திருமங்கை ஆழ்வார் 100 பாசுரம் இத்தலம் குறித்து பாடியுள்ளார்.
•குலசேகர ஆழ்வார் சவுரிராஜப் பெருமாளை இராமனாக நினைத்துக் கொண்டு தாலேலோ (ராத்திரி தூங்க வைக்கப் பாடும் பாசுரம்)பாடிய திவ்ய தேசம் திருக்கண்ணபுரம் மட்டுமே.
•நம்மாழ்வார் 11 பாசுரம் பாடியுள்ளார்.
•கருட தண்டக மகரிஷிக்கு பெருமாள் காட்சி தந்த தலம்.
•கிருஷ்ணாரண்ய ஷேத்திரம் என்று திருக்கண்ணபுரம் , திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, கபிஸ்தலம், திருக்கோயிலூர் என்று இந்த ஐந்தும் கிருஷ்ணன் வாழ்ந்து உறைந்த இடம்.
•திருப்புற்குழியில் வறுத்த பயிறு, திருப்பதியில் லட்டு, ஸ்ரீரங்கத்தில் அரவணை (பாயாசம்) கும்பகோணத்தில் தோசை(பால் பாயாசம்) அதுபோல் இங்கு முனியோதரன் பொங்கல் பிரசித்தம்.
திருவிழா:
15 கிமீ தூரத்திலுள்ள திருமலைராயன்பட்டினக் கடற்கரையில் மாசி மாத பௌர்ணமி தினத்தில் பெருமாளைத் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளச் செய்து தீர்த்தவாரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசிமாதத்தில் பிரம்மோதற்சவமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
மாதப் பிறப்பு, ஏகாதசி மாதத்தில் இரண்டு நாட்களில் திருமஞ்சனமும் உற்சவர் புறப்பாடும் உண்டு.
இத்தலத்து அமாவாசை உற்சவம் குறிப்பிடத்தக்க ஒன்று. விபீஷணனுக்கு பெருமாள் தன் நடை அழகைக் காட்டி அருள் செய்தது ஒரு அமாவாசை நாளில் என்பதை நினைவுகூரும் விதத்தில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் திருமஞ்சனம் செய்து சவுரிமுடி அணிவித்து உற்சவர் புறப்பாடு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில்,
திருக்கண்ணபுரம் – 609 704.
நாகப்பட்டினம் மாவட்டம்.
போன்:
+91- 4366 – 270 557, 270 718, 99426 – 56580.
அமைவிடம்:
மயிலாடுதுறையில் இருந்து (30 கி.மீ.,) மயிலாடுதுறையில் இருந்து திருப்புகலூருக்கு சென்று அங்குள்ள ஆற்றைக் கடந்து 1.5 கிமீ தூரம் நடந்து இத்தலத்துக்குச் செல்ல வேண்டும்.
#templesofsouthindia #templesoftamilnadu #templeshistory #templesofhindus #temple #ஸ்தலம் #தலவரலாறு #ஆலயம்அறிவோம் #கோயில்கள் #ஆன்மீகம் #கோவில்வரலாறு #templepost #templesecrets #FamousTemples #DrAndalPChockalingam #SABP #திருக்கண்ணபுரம் #நீலமேகப்பெருமாள் #சவுரிராஜப்பெருமாள் #கண்ணபுரநாயகி #sowrirajaperumal #thirukannapuram #divyadesam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =