#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவிசநல்லூர்

September 1, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவிசநல்லூர்

217.#அருள்மிகு_யோகநந்தீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு

மூலவர் : யோகநந்தீஸ்வரர், சிவயோகிநாதர

அம்மன் : சவுந்தரநாயகி, சாந்த நாயகி

தல விருட்சம் : வில்வம்

புராண பெயர் : பண்டாரவாடை திருவியலூர்

ஊர் : திருவிசநல்லூர்

மாவட்டம் : தஞ்சாவூர்

ஸ்தல வரலாறு:

படைப்புக்கடவுளான பிரம்மதேவர் விஷ்ணு சர்மா என்பவருக்கு புத்திரனாகப்பிறந்தார். இவர் தன்னுடன் பிறந்த ஆறு யோகிகளுடன் சிவனை வேண்டி தவம் புரிந்தார். சிவராத்திரி தினத்தில் சிவன் தரிசனம் கொடுத்து இவர்களை ஏழு ஜோதியாக்கி தன்னுடன் ஐக்கியப்படுத்தினார். எனவே இத்தல இறைவன் சிவயோகிநாதர் ஆனார். இந்த வரலாற்றை விளக்கும் விதத்தில் சிவலிங்க திருமேனியில் ஏழு முடிக்கற்றைகள் இன்றும் இருக்கின்றன.

ஒரு காலத்தில், ஏராளமான பாவம் செய்த ஒருவன், தன் கடைசி காலத்தில் இத்தல இறைவனை அழைத்தான். அப்போது சிவன் நந்தியிடம்,””அழைப்பது யார்?”என கேட்க, நந்தி திரும்பி பார்த்தது. அவன் அப்படி அழைத்தது “பிரதோஷ தினம்’ ஆகும். நந்தியின் பார்வையால் அவனது பாவம் தொலைந்தது. அக்கணத்தில் அவனுக்கு விதி முடிய இருந்தது. எமன் அங்கு வந்தான். நந்தி அவனைத் தடுத்தார். எமனுக்கும் நந்திக்கும் சண்டை ஏற்பட்டது. நந்தி எமனை வென்று கோயில் கொடிமரத்திற்கு வெளியே அனுப்பியது. வழக்கமாக கொடிமரத்தின் உள்ளே நந்தி இருக்கும். ஆனால், இத்தலத்தில் கொடிமரத்தின் வெளியே நந்தி இருப்பதை இன்றும் காணலாம்.

கோயில் சிறப்புகள்:

•இத்தல இறைவன் கிழக்கு நோக்கிய சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார்.

•இத்தலம் நான்கு யுகம் கண்டு தலமாக புராணம் கூறுகிறது. கிருதயுகத்தில் புராதனேஸ்வரர், திரேதாயுகத்தில் வில்வாரண்யேஸ்வரர், துவாபரயுகத்தில் யோகநந்தீஸ்வரர், கலியுகத்தில் சிவயோகிநாதர் என இறைவன் வணங்கப்படுகிறார்.

•கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது.

•கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால், நாம் காண்பது முதலில் நந்தி, பின் கொடிமரம், பலிபீடம் உள்ளது. சிவாலயங்களில் முதலில் கொடிமரமும் அதன் பலிபீடம், நந்தி இருப்பது வழக்கம். இங்கு நந்தி முதலில் உள்ளது. வெளிப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதும் இல்லை.

•சித்திரை 1, 2, 3 தேதிகளில், சூரிய ஒளிக் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது விழுகின்றன.

•கருவறை தேவ கோஷ்டங்களில் நர்த்தன கணபதி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறை மேற்குச் சுற்றில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சந்நிதி உள்ளது. பஞ்சலிங்கங்கள், ஸ்தல விநாயகர் சந்நிதி ஆகியவையும் உள்ளன.

•எட்டு தீர்த்தங்களும், எட்டு தல விருட்சங்களும் உடையது இத்தலம்.

•சுவாமி சந்நிதிக்கு தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமிநாராயணப் பெருமாள் சந்நிதியும் இத்தலத்தில் மிகவும் விசேஷமானது. இங்கே மகாவிஷ்ணு, லட்சுமியை தன் மடியில் அமர வைத்துக்கொண்டு லட்சுமிநாரயணனாக அருள்பாலிக்கிறார்

•இத்தலத்திலுள்ள சதுர்கால பைரவர் சந்நிதியும் மிக விசேஷமானது. யுகத்துக்கு ஒரு பைரவராக நான்கு பைரவர் காட்சி தருகின்றனர்.

•கோயிலின் தென்புற மதில் சுவர் அருகே சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட சூரிய ஒளி கடிகாரம் அமைந்துள்ளது. காலையில் சூரியன் உதிப்பதிலிருந்து மாலையில் சூரியன் மறையும் வரை சூரியன் செல்லும் பாதையைக் கணக்கிட்டு இந்தக் கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது. அரைவட்ட கோளம் அமைக்கப்பட்டு, அதைச் சுற்றிலும் காலை 6 முதல் மாலை 6 மணிவரை எண்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதன் நடுவே பித்தளையால் ஆன ஆணி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. சூரியனின் ஒளி இந்த ஆணியில் பட்டு, அதன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுவே அப்போதைய நேரம் ஆகும். தமிழர்கள் வானவியல் அறிவியல் வல்லுநர்களாக திகழ்ந்தார்கள் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.

•இத்தலத்தில், சிவயோகி முனிவருக்கும் அவரது சகோதரர்களுக்கும் இறைவன் அடைக்கலம் கொடுத்ததால் (சிவலிங்க மூர்த்தியில் எழுவரும் பிரவேசித்தமையால்), இத்தல இறைவன் சிவயோகிநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். இறைவனது திருமேனியில் ஏழு சடைகள் இருப்பதைக் காணலாம். இத்தல இறைவனை வணங்குவதால் குருவின் அருள் கிடைக்கும்.

•திருவுந்தியார் எனும் சித்தாந்த சாஸ்திர நூலைப்பாடிய உய்யவந்த தேவநாயனார் இத்தலத்தில் அவதரித்தவர்.

•சிவராத்திரி தோறும் அகத்தியர் இத்தலத்தில் பூஜை செய்வதாக ஐதீகம் உள்ளது.

•சடாயு வழிபட்டு பேறு பெற்றத் தலம்.

•வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “ஓவில் மயல் ஊர் மனம் போல் வயலில் கயல் ஊர் வியலூர் சிவானந்த வெற்பே” என்று போற்றி உள்ளார்.

•தன் வீட்டுக் கிணற்றில் கங்கையை பெருகிவரச் செய்த ஸ்ரீதர அய்யாவாள் பிறந்த தலம் என்ற பெருமையுடையது திருவிசநல்லூர் திருத்தலம். ஒவ்வொரு வருடமும், கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று ஸ்ரீதர அய்யாவாள் வீட்டுக் கிணற்றில் கங்கா ஸ்நானம் செய்ய ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள்.

•திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம், முதலாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. நீர்வளம்மிக்க வியலூர் என்று தனது பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

திருவிழா:
சித்திரை 1,2,3 தேதிகளில் சூரிய ஒளி பூஜை சிறப்பானது. ஐப்பசி கடைசி நாள் பஞ்சமூர்த்தி புறப்பாடு. காவிரியில் தீர்த்தவாரி. மகாசிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், பிரதோஷம். திருக்கார்த்திகை. கார்த்திகை சோமவாரம்.

திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,
மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:
அருள்மிகு யோகநந்தீஸ்வரர் திருக்கோயில்,
திருவிசநல்லூர்- 612 105.
தஞ்சாவூர் மாவட்டம்.

போன்:
+91- 435-200 0679, 94447 47142

அமைவிடம்:
திருவிடைமருதூர் – வேப்பத்தூர் சாலையில் சென்றால் கோயிலை அடையலாம். கும்பகோணத்திலிருந்தும் செல்லலாம்; நகரப் பேருந்துகள் உள்ளன. கும்பகோணத்திலிருந்து (8 கி.மீ.)

#templesofsouthindia #templesoftamilnadu #templeshistory #templesofhindus #temple #ஸ்தலம் #தலவரலாறு #ஆலயம்அறிவோம் #கோயில்கள் #ஆன்மீகம் #கோவில்வரலாறு #templepost #templesecrets #FamousTemples #DrAndalPChockalingam #SABP #sivayoganathar, #Yoganandheswarar #Vilvaaranyeswarar #Puraathaneswarar #திருவிசநல்லூர் #யோகநந்தீஸ்வரர் #சிவயோகிநாதர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + three =