#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் நாச்சியார்கோயில்
#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் நாச்சியார்கோயில்
216.#அருள்மிகு_திருநறையூர்_நாச்சியார்_கோயில்_வரலாறு
மூலவர் : திருநறையூர் நம்பி
உற்சவர் : இடர்கடுத்த திருவாளன்
தாயார் : வஞ்சுளவல்லி
தல விருட்சம் : வகுளம் (மகிழம்)
புராண பெயர் : சுகந்தகிரி க்ஷேத்ரம்
ஊர் : நாச்சியார்கோயில்
மாவட்டம் : தஞ்சாவூர்
ஸ்தல வரலாறு:
திருமால் மீது தீவிர பக்தி கொண்ட மேதாவி மகரிஷி, திருமாலை தனது மருமகனாக அடைய விரும்பினார். இதற்காக மகாலட்சுமியை மகளாக அடைய வேண்டும் என்று வஞ்சுள மரத்தடியில் அமர்ந்து தவம் இயற்றினார். முனிவரின் தவத்தில் மகாலட்சுமி மகிழ்ந்து, ஒரு பங்குனி மாத உத்திர நட்சத்திர தினத்தில், அவர் தவம் செய்த மரத்தடியில் குழந்தையாகத் தோன்றினார். குழந்தையின் அழுகுரல் கேட்டு, கண் திறந்த முனிவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, வஞ்சுளவல்லி என்று பெயரிட்டார். தன் ஆசிரமத்திலேயே குழந்தையை வளர்த்து வந்தார்.
வஞ்சுளவல்லி தந்தையின் ஆசிரமத்தில் பல சேவைகள் செய்துக் கொண்டு வளர்ந்து வந்தார். மகாலட்சுமியை திருமணம் செய்வதற்காக திருமால் 5 வடிவங்கள் (சங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருத்தன், புருஷோத்தமன், வாசுதேவன்) எடுத்து, ஒவ்வொரு திசையாகச் சென்று அவரைத் தேடி வந்தார். திருமாலுடன் வந்த கருடாழ்வார், பிராட்டி இருக்கும் இடம் அறிந்து அதுகுறித்து திருமாலிடம் தெரிவித்தார்.
திருமாலும், மேதாவி மகரிஷியின் ஆசிரமம் சென்று, வஞ்சுளவல்லியை மணக்க விரும்புவதாகத் தெரிவித்தார். தன் மகள் சொல் கேட்டு நடப்பதாக இருந்தால் (பிராட்டியை முன்னிலைப்படுத்துதல்) அவளை மணமுடித்துத் தருவதாக, முனிவர் திருமாலிடம் கூறுகிறார்.
திருமாலுக்கும் வஞ்சுளவல்லிக்கும் கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடைபெறுகிறது. அப்போது திருமால், தான் இத்தலத்தில் மனைவி சொல் கேட்டு நடப்பவராக இருப்பதால், கருடாழ்வாரே முன்னின்று பக்தர்களுக்கு அருள வேண்டும் என்று அவரிடம் கூறுகிறார். அதை ஏற்ற கருடாழ்வார், இத்தலத்தில் பிரதான மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பிராட்டி பெயரால், இத்தலம் ‘நாச்சியார் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது.
கோயில் சிறப்புகள்:
•108 வைணவ திவ்ய தேசங்களில், தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவிலில் 14-வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது.
•இத்தலத்தில் உள்ள தாயார், பெருமாளைவிட சற்று முன்புறம் நின்றவாறு உள்ளார். தாயார், கையில் கிளி, இடுப்பில் சாவிக் கொத்து வைத்திருப்பது, அனைத்தையும் அவரே நிர்வாகம் செய்கிறார் என்பதை உணர்த்துகிறது.
•திருமங்கையாழ்வார் இக்கோயிலை மங்களாசாசனம் செய்துள்ளார்.
•மேதாவி முனிவருக்கு வாக்களித்தபடி, திருமால், இத்தலத்தில் தாயாருக்கே முன்னுரிமை அளித்து அருள்பாலிக்கிறார். அதன்படி தாயரை மையப்படுத்தியே கருவறை அமைக்கப்பட்டுள்ளது.
•பெருமாளைவிட சற்று முன்புறம் தாயார் நின்ற கோலத்தில் அருள்கிறார். வீதியுலா செல்லும்போதும் தாயாருக்குப் பின்னரே பெருமாள் எழுந்தருள்கிறார், தாயாருக்கே முதலில் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
•நாச்சியார் கோவிலில் கருடாழ்வார் தனி சந்நிதியில் உடலில் 9 நாகங்களைக் கொண்டு அருள்பாலிக்கிறார், இவருக்கு ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. வீதியுலா செல்லும்போது மூலவரான கல்கருடன் (4 டன் எடை) மீதே சுவாமி எழுந்தருள்கிறார். கல்கருடனை கருவறையில் இருந்து வெளியே எடுத்துச் செல்லும்போது முதலில் 4 பேர் இவரை சுமந்து வருவர். பின்னர் 8, 16, 32 என்று அதிகரித்து 128 பேர் வரை சுமக்கிறார்கள். அதேபோல புறப்பாடு முடிந்து, கல்கருடனை கருவறையில் வைக்க வரும்போது 128 பேர் தொடங்கி 64, 32, 16, 8 என்று குறைந்து நிறைவாக 4 பேர் சுமப்பது இன்றும் நடைபெறுகிறது.
•63 நாயன்மார்களில் ஒருவரான கோச்செங்கணார் கனவில் தோன்றிய திருமால், தனக்கு கோயில் கட்டும்படி பணித்தார், அதன்படி சிவன் கோயில் அமைப்பில் யாளிகளுடன், மாடக்கோயில் அமைப்பில் அவர் இக்கோயிலைக் கட்டினார்.
•நீலன் என்ற குறுநில மன்னர், திருமால் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். தான் வைத்திருந்த பணம் அனைத்தையும் இறைபணிக்கே செலவு செய்தார். வைணவர் இல்லை என்ற காரணத்தால், அவரை யாரும் ஏற்கவில்லை. இதுகுறித்து திருமாலிடம் தெரிவித்தார் நீலன். திருமாலும் மனம் உவந்து, வைணவ ஆச்சாரியராக வந்திருந்து நீலனுக்கு முத்ராதானம் செய்து வைத்தார். (ஒருவரை பரிபூரண வைணவராக ஏற்றுக் கொள்வதற்காக அவரது கரங்களில் சங்கு, சக்கரம் அச்சு இடப்படுவதே முத்ராதானம் எனப்படும்). ஆச்சாரியராக வந்திருந்ததால் இத்தலத்து சீனிவாச பெருமாள், 2 கைகளுடன் உள்ளார். சங்கும், சக்கரமும் முத்ராதானம் செய்த கோலத்தில் முன்புறம் தள்ளியும், சங்கு திரும்பிய நிலையிலும் காணப்படுகிறது .
•தனக்கு வைணவர் என்று அங்கீகாரம் கொடுத்த இத்தல பெருமாள் மீது நூற்றுக்கும் மேற்பட்ட பாசுரங்கள் பாடி, நம்பி (பரிபூரண நற்குணங்கள் நிரம்பியவர்) என்று அழைத்து மங்களாசாசனம் செய்தார். இத்தலத்தில் மட்டுமே திருமால் ஆச்சாரியராக வந்திருந்து, முத்ராதானம் செய்துவைத்துள்ளார்.
•இக்கோவில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் எழுபத்து ஐந்து அடி உயரமுள்ள ஐந்து நிலையான ராஜகோபுரத்தையும் ஐந்து பிரகாரங்களையும் கொண்டதாகும்
•திருநறையூர் என்றால் தேன் நிறைந்த பூக்களும் மணம் கமிழும் பொய்கைகள் கலந்து மணம் வீசும் ஊர் என்று பொருள். ஸ்ரீநிவாசப்பெருமாள் நாச்சியாரைத் தேடிக்கொண்டு வந்து திருமணம் செய்து கொண்டதோடு இந்த ஊரிலேயே தங்கிவிட்டதால் இந்த கோவில் நாச்சியாருக்கு சிறப்பிடம் தரப்பட்டு ஊர்ப்பெயரும் நாச்சியார் கோவில் என்றாகிவிட்டது.
•இங்குள்ளமூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஹேம விமானம் எனப்படுகிறது.
•கருட சன்னதிக்கு அருகில் 108 திருப்பதிகளின் உற்சவர் சிலைகள் இருக்கிறது.
திருவிழா:
மார்கழி, பங்குனியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், இவ்விழாவின் போது கருடசேவை உற்சவம் நடக்கிறது.
திறக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு நறையூர் நம்பி திருக்கோயில்,
நாச்சியார்கோவில் – 612 602.
தஞ்சாவூர் மாவட்டம்.
போன்:
+91- 435 – 246 7017, 94435 – 97388.
அமைவிடம்:
கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் திருவாரூர் செல்லும் வழியில் கோயில் இருக்கிறது.
#templesofsouthindia #templesoftamilnadu #templeshistory #templesofhindus #temple #ஸ்தலம் #தலவரலாறு #ஆலயம்அறிவோம் #கோயில்கள் #ஆன்மீகம் #கோவில்வரலாறு #templepost #templesecrets #FamousTemples #DrAndalPChockalingam #SABP #natchiyarkovil #ThirunaraiyurNambiTemple #திருநறையூர்நம்பி #இடர்கடுத்ததிருவாளன் #நாச்சியார்கோயில் #வஞ்சுளவல்லி #தஞ்சாவூர்