#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவெள்ளக்குளம் (திருநாங்கூர்)
#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவெள்ளக்குளம் (திருநாங்கூர்)
திருவேங்கடத்தானுக்கு வெள்ளக்குளத்தான் அண்ணன் என்பது பக்தர்கள் நம்பிக்கை
186.#அருள்மிகு_அண்ணன்_பெருமாள்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : அண்ணன் பெருமாள், கண்ணன் நாராயணன்
உற்சவர் : சீனிவாசன், பூவார் திருமகள், பத்மாவதி
தாயார் : அலர்மேல் மங்கை
தல விருட்சம் : வில்வம், பரசு
தீர்த்தம் : வெள்ளக்குள தீர்த்தம்
புராண பெயர் : திருவெள்ளக்குளம்
ஊர் : திருவெள்ளக்குளம் (திருநாங்கூர்)
மாவட்டம் : மயிலாடுதுறை
ஸ்தல வரலாறு:
இக்ஷ்வாகு குலத்தில் உதித்த அரசன் துந்துமாரன். பக்தி சிரத்தை எல்லாம் கொண்ட அவனுக்கு நெடுநாட்களுக்குப் பின்னர் ஸ்வேதன் என்ற மகன் பிறந்தான். பிள்ளைச் செல்வம் என்று கொஞ்சி விளையாடி வருகையில், திடீரென ஒரு செய்தி அவனை நிலைகுலையச் செய்கிறது. ஸ்வேதனின் ஜாதகத்தை ஆராய்ந்த வசிஷ்ட முனிவர், ஸ்வேதன் அவனது ஒன்பதாவது வயதில் அகால மரணம் அடைவான் என்றார்.
அரசன் தன் மகனைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்று தாள் பணிந்தான். அவர், திருநாங்கூரில் உள்ள பொய்கையில் நீராடி அங்குள்ள பெருமாளை வேண்டி தவம் இருந்தால் நிச்சயம் தகுந்த பலன் கிடைக்கும் என்றார். ரிஷியின் வாக்கை சிரமேற்கொண்ட அரசன், வசிஷ்டரிடம் இருந்து கேட்டறிந்த நரஸிம்ஹ மிருத்யுஞ்சய மந்திரத்தை ஸ்வேதனுக்கு உபதேசித்து, அந்தப் பொய்கையில் நீராடி தவம் மேற்கொள்ளச் சொன்னான். இவ்வாறு ஸ்ரீனிவாசப் பெருமாளின் முன்பாக ஒரு மாத காலம் மந்திரத்தைக் கூறிவந்தான் ஸ்வேதன். ஸ்வேதனின் தவத்துக்கு மனம் இரங்கிய பெருமாள், ஸ்வேதா நரசிம்ம மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரித்ததால், நீ சிரஞ்சீவித்துவம் அடைவாய். மேலும், எவனொருவன் இங்கே ஒருமுகப்பட்டு எட்டாயிரம் முறை இந்த மந்திரத்தைக் கூறுகிறானோ அவனுக்கு எம பயம் இருக்காது” என்று வாக்களித்தார். இவ்வாறு ஸ்வேதன் என்ற மன்னனுக்கு அருள் புரிந்த தலம் இது. இவ்வகையில், வைணவத் தலங்களில் எம பயம் நீக்கும் தலமாக இது திகழ்கிறது. ஸ்வேதம் என்றால் வெளுப்பு என்று பொருள். ஸ்வேத மன்னனின் பெயரை வைத்து இந்தத் திருத்தலத்துக்கு திருவெள்ளக் குளம் என்று பெயர் ஏற்பட்டது.
சோழமண்டலத்தில் தென்திசைக்குத் திலகமாய்த் திகழும் திருநாங்கூர் பதினோரு திவ்ய தேசங்களில் சிறப்பு பெற்றுத் திகழும் இந்தத் தலத்தை திருமங்கை ஆழ்வார் திருவெள்ளக்குளத்துள் அண்ணா’ என்றும் திருவெள்ளக் குளத்துள் எந்தாய்’ என்றும், பூவார் திருமாமகள் புல்கிய மார்பா, தேவா திருவெள்ளக்குளத்துறைவானே’ என்றும் பலவாறு போற்றிப் பாடியுள்ளார்.
இந்தத் தலத்துக்கு உள்ள சிறப்பு, திருமங்கையாழ்வாரை மிகச் சிறந்த வைணவராகவும் ஆழ்வாராகவும் உருப்பெறச் செய்த குமுதவல்லி அவதரித்த தலம் இது என்பதே.
கோயில் சிறப்புகள்:
•திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 38-வது திவ்ய தேசம் திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோயில்.
•திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளில் இதுவும் ஒன்று.
•திருவெள்ளக்குளம் என்ற சொல் இத்தலத்தின் முன்புறம் அமைந்துள்ள ஸ்வேத புஷ்கரணி தீர்த்தத்தால் உண்டாயிற்று. வடமொழியில் ஸ்வேதம் என்றால் வெண்மை. எனவே ஸ்வேத புஷ்கரணி வெள்ளைக்குளமாகி, வெள்ளக்குளமாயிற்று
•இத்தலத்தில் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
•இங்கு மூலவர் சந்நிதியின் மேல் உள்ள விமானம் தத்வத் யோதக விமானம் எனப்படும்.
•ருத்ரர், ஸ்வேதராஜன் ஆகியோர் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளனர்.
•மணவாள மாமுனிவருக்கு பெருமாள் காட்சி கொடுத்த தலம் இதுவாகும்.
•ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார், திருப்பதி பெருமாளையும், இத்தல பெருமாளையும் ‘அண்ணா’ என்று விளித்து பாடியுள்ளார். இதன் காரணமாக, இத்தல பெருமாள் திருப்பதி ஏழுமலையானுக்கு அண்ணனாகிறார். எனவே இங்குள்ள சீனிவாசப் பெருமாள், அண்ணன் பெருமாள் என்றே அழைக்கப்படுகிறார்.
•திருமங்கையாழ்வார் இத்தலத்தை பூலோக வைகுண்டம் என்று பாடியுள்ளார்.
•திருமங்கையாழ்வார் மணந்த குமுதவல்லியின் அவதாரத் தலமும் நீலன் என்ற பெயரில் படைத்தளபதியாக விளங்கிய திருமங்கையாழ்வாரை ஆழ்வாராக மாற்றிய தலம் இதுவாகும். ஒரு மங்கையால் ஆழ்வாராக மாறினமையால் மங்கையாழ்வாராகி திருமங்கை ஆழ்வாரானார்.
•இத்தலத்தில் உள்ள குளத்தில் குமுத மலர்கள் நிறைந்து காணப்படும். அம்மலர்களைப் பறிக்க தேவ மாதர்கள் வருவது வழக்கம். அவ்வாறு வந்தவர்களுள் குமுதவல்லி என்பவள், மானிடனின் பார்வை பட்டதால், தேவலோகம் செல்லும் சக்தியை இழக்கிறாள். இதை அறிந்த படைத்தளபதி நீலன், குமுதவல்லியை மணக்க விரும்புகிறார். குமுதவல்லி விதித்த நிபந்தனைகள் அனைத்தையும் நிறைவேற்றினார் நீலன். நிறைவாக வைணவ அடியார்களுக்கு அன்னம்பாலிக்கும் செயலில் ஈடுபடும்போது, பெருமாள் நீலனுக்கு காட்சி கொடுத்து ‘திரு’ மந்திரத்தை உபதேசித்து ஆழ்வாராக மாற்றினார். குமுதவல்லி நாச்சியாரும் இத்தலத்தில் தனி சந்நிதியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
•திருவேங்கடத்தானுக்கு வெள்ளக்குளத்தான் அண்ணன் என்பது நம்பிக்கையாதலால் திருப்பதிக்கு வேண்டிக் கொண்ட வேண்டுதலை இங்கே செலுத்துவது ஒரு மரபாகவே விளங்கி வருகிறது. எனவே இதைத் தென்திருப்பதி என்றும் அழைப்பர்.
திருவிழா:
திருப்பதியைப்போல் இத்தலத்திலும் புரட்டாசியில் பிரமோற்ஸவம்.
வைகாசி முதல் ஐந்து தேதிகளில் வசந்த உற்சவம்.
ஆடிமாதம் கடைசி வெள்ளி திருக்கல்யாணம்.
திறக்கும் நேரம்:
காலை 7 முதல் இரவு 8 மணிவரை நடை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சீனிவாசப்பெருமாள் (அண்ணன் பெருமாள்) திருக்கோயில்,
திருவெள்ளக்குளம் (திருநாங்கூர்)- 609 106
மயிலாடுதுறை மாவட்டம்.
போன்:
+91- 4364 – 266 534 ,94898 56554
அமைவிடம்:
சீர்காழி – தரங்கம்பாடிச் சாலையில் சீர்காழியிலிருந்து சுமார் 8 கிமீ. தொலைவில் உள்ளது.