#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தாளக்கரை

July 25, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தாளக்கரை
தாயினும் சாலப்பரிந்து தாங்கும் சிறப்பு பெற்றவர் தாளக்கரை நரசிம்மர்
181.#அருள்மிகு_லட்சுமி_நரசிம்மர்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : லட்சுமி நரசிம்மர்
தல விருட்சம் : ஈஞ்சமரம்
தீர்த்தம் : தெப்பம்
புராண பெயர் : தாவாய்பட்டினம்
ஊர் : தாளக்கரை
மாவட்டம் : கோயம்புத்தூர்
ஸ்தல வரலாறு:
ஒரு பச்சிளம் பாலகனைக் காக்க திருஅவதாரம் எடுத்த நரசிம்மமாகத் தோன்றியிருந்தாலும், அவன் தானே மூவுலகங்களையும்காக்கும் கடவுள் அதனால் தான். தான் வந்த பணியான இரணிய வதத்தை அரங்கேற்றியபின் தன் கோபத்தை விடுத்து கோடி சூரியப் பிரகாசனாய் அன்பர்களுக்கு அருளும் கருணாமூர்த்தியாய்- மகா சாந்த சொரூபியாய்- தன்மார்பில் நித்திய வாசம் செய்யும் திரு மகளுடன் லட்சுமி நரசிம்மராய் அருள்பாலித்தார்.
இத்தகைய லட்சுமி நரசிம்மர் கோவில்கள் இந்தியா முழுவதும் பல இடங்களில் அமைந்துள்ளன. பிரசித்தி பெற்ற பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் ..பாடல் பெற்ற சிவ ஸ்தலமான அவிநாசிக்கு அருகில் உள்ளது தாளக்கரை என்னும் திருத்தலம்.
இரணியன் என்னும் அசுரனை அழிப்பதற்காக திருமால் எடுத்த அவதாரமே நரசிம்மர். பக்த பிரகலாதனின் தந்தையான இரண்யன், தான் யாராலும் அழிக்க முடியாதபடி வித்தியாசமான வரம் பெற்றிருந்தான். திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து அவனை அழித்தார். அப்போது அவர் மிக உக்கிரமாக இருந்தார். உக்கிரம் தணிக்க மகாலட்சுமி, அவரது மடியில் அமர்ந்தார். நரசிம்மர் சாந்தமானார்.இதன் அடிப்படையில் லட்சுமி நரசிம்மர் கோயில்களில் சுவாமியின் மடியில், மகாலட்சுமி அமர்ந்திருப்பாள். ஆனால், இத்தலத்தில் மகாலட்சுமி, சுவாமிக்கு இடதுபுறம் தனியே இருக்கிறாள். நரசிம்மர், மகாலட்சுமியை இத்தகைய கோலத்தில் காண்பது அரிது.
கோயில் சிறப்புகள்:
•மூலஸ்தானத்தில் நரசிம்மர் கையில் சங்கு, சக்கரத்துடன் சாந்த மூர்த்தியாக சந்திர விமானத்தின் கீழ் அருளுகிறார்.
•நின்ற கோலத்தில் லட்சுமி. மகாலட்சுமியின் சகோதரனான சந்திரனே இங்கு சுவாமிக்கு விமானமாக இருந்து காப்பதாக ஐதீகம்.எனவே மூலவரின் மேல் உள்ள விமானம் சந்திர விமானம் எனப்படுகிறது.
•மூலஸ்தானத்தில் சுவாமி, மகாலட்சுமி இருவருமே நின்ற கோலத்தில் இருப்பது விசேஷமான அமைப்பு.
•நரசிம்மர் பீடத்தில் ஸ்ரீசக்ரம் உள்ளது. அர்த்த மண்டபத்தில் சாளக்ராமம் இருக்கிறது. இந்த சாளக்ராமமே, முதலில் நரசிம்மராக வழிபடப்பட்டுள்ளது. எனவே இதனை “ஆதிமூர்த்தி” என்கிறார்கள்.
•தாயாருடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் நரசிம்மரின்அமைப்பு மிக அரிய காட்சியாகும். (இத்தகைய நின்ற கோலத்தில் உள்ள சிறப்பானஅமைப்பு ஆந்திராவில் உள்ள யாதகிரி குட்டாவில் காணலாம்)
•லட்சுமி நரசிம்மர் கோயில்களில் சுவாமியின் மடியில், மகாலட்சுமி அமர்ந்திருப்பாள். ஆனால், இத்தலத்தில் மகாலட்சுமி, சுவாமிக்கு இடதுபுறம் தனியே இருக்கிறாள். நரசிம்மர், மகாலட்சுமியை இத்தகைய கோலத்தில் காண்பது அரிது.
•கருவறையில் காட்சி தரும் கருணாமூர்த்தியைக் கைகூப்பிய வண்ணம் சேவித்து நிற்கிறார் கருடாழ்வார். கம்பீரமும் அழகும் இணைந்த கருடாழ்வார் பணிவுடன் பகவானை வணங்கி நிற்கும் காட்சி, செல்வத்தாலும் கல்வியாலும் உயர்ந்த எவ்வளவு பெரிய மனிதரும் இறைவன் திருவடியைச் சரணடைய பணிவும் அடக்கமும் தேவை என்ற தத்துவத்தை உணர்த்துவதுபோல் அமைந்துள்ளது.
•வேறெங்கும் காணமுடியாத கோலத்தில் சர்ப்பத்துடன்காட்சியளிக்கிறார். சர்ப்பம் விநாயகருக்குக் குடையாக நிற்பதால் இவர் சர்ப்ப விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
•பெருமாள் தலங்களில் சுவாமி, ஆதிசேஷன் மீது அமர்ந்த கோலத்தில் இருப்பார். சுவாமி நின்ற கோலத்தில் இருக்கும் தலங்களில், ஆதிசேஷன் அவருக்கு குடையாக தலைக்கு மேலே காட்சி தருவார். இங்கு பிரகாரத்தில் ஒரு விநாயகர் இருக்கிறார். இவரது தலைக்கு மேலே, ஒரு தலையுடன் ஆதிசேஷன் குடையாக காட்சி தருகிறார். இவரை, “சர்ப்ப விநாயகர்’ என்று அழைக்கிறார்கள்.பெருமாளுக் கான கோயில் என்பதால் இவர் ஆதிசேஷனுடன் காட்சி தருவதாக சொல்கிறார்கள்
•ஒரே கோவிலில் வைணவ அம்சமானநரசிம்மரையும் சைவ அம்சமான விநாயகரையும் காண்பது சிறப்பானது.
•இங்குள்ள வில்வ மரம் மூன்று கிளைகளாகப் பிரிந்து விஷ்ணுவின் நாமம்போல்காட்சியளித்து நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.
•ராமபக்த அனுமன் பக்தர்களோடு பக்தராக நின்று காட்சியளிக்கிறார்.
•சொர்க்கவாசல் வழியாக (பரமபதம்) பக்தர்கள் வருவது போல் இக் கோவில் அமைய பெற்று உள்ளது. பக்தர்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கிறது.
•இந்த கோவிலுக்கு முன்புறம் ஓடை உள்ளது. முற்காலத்தில் எப்போதும் வற்றாத ஜீவ நதியாக இந்த ஓடை திகழ்ந்துள்ளது. தாளம் என்றால் ஓடை என்ற பொருள் உண்டு. எனவே இத் தலம் தாளக்கரை என்று அழைக்கப்படுகிறது.
•சாமியின் ஈசாணி மூலையில் தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்தில் இன்று வரை நீர் வற்றியதில்லை.
திருவிழா:
நரசிம்மர் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை மற்றும் சுவாதி நட்சத்திரத்தில் சிறப்பு பூஜை.
திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 1 மணி வரை,
மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு லட்சுமி நரசிம்மர் கோயில்,
தாளக்கரை – 641 654.
அவிநாசி தாலுகா,
கோயம்புத்தூர் மாவட்டம்.
போன்:
+91-4296 – 288 254, 99422 75502.
அமைவிடம்:
கோவையில் இருந்து 40 கி.மீ., தூரத்தில் அவிநாசி சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்தில் சேவூர் செல்ல வேண்டும். சேவூரிலிருந்து சத்தி செல்லும் ரோட்டில் 4 கி.மீ., தூரத்தில் தண்டுக்காரன்பாளையம் என்ற ஊரில் இறங்கி, சுமார் 3 கி.மீ., தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 11 =