#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தோவாளை
#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தோவாளை
திருமலை அமரர் பதிகாத்த நயினார்
174.#அருள்மிகு_சுப்பிரமணியசாமி_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : சுப்பிரமணிய சாமி
ஊர் : தோவாளை
மாவட்டம் : கன்னியாகுமரி
ஸ்தல வரலாறு:
இந்திரன் மும்மூர்த்தியை வழிபட சுசீந்திரம் வரும்போது தோவாளையிலுள்ள மலர்களின் வாசம் அவனைக் கவர்ந்தது என்றும், அம்மலர்களை அவன் தினமும் சுசீந்திரம் எடுத்துச் சென்று சிவவழிபாட்டிற்குப் பயன்படுத்தினான் என்றும், சாப விமோசனம் பெற்று விண்ணுலகம் சென்ற பிறகும் இங்குள்ள மலர்களையே அவன் வழிபாட்டிற்குப் பயன்படுத்தினான் என்றும் கூறப்படுகிறது.
விண்ணுலகிற்கு தினமும் மலர் அனுப்பி வைக்க தேவர்களை இந்திரன் தோவாளையில் குடியமர்த்தினான் என்பர். அவ்வாறு இந்திரனால் குடியமர்த்தப்பட்ட தேவர்கள் வாழ்ந்த ஊர், தேவர் வாழ்வினை என்றாகி, பின்னர் தோவாளை என்று மாறியது என்பது செவிவழிச் செய்தி.
இந்த ஊரில் மருமகன் பாலசுப்பிரமணியனாக குன்றின் உச்சியிலும், மாமன் பாலகிருஷ்ணனாக குன்றின் அடிவாரத்திலும் நின்று அருள் புரிகின்றனர். 108 படிகள் ஏறிச்சென்றால் குமரன் கோயிலை அடையலாம். இரண்டு பிராகாரங்களைக் கொண்ட சிறிய கோயிலில் குமரன் நான்கு கைகளுடன் மயில் மீது நின்றருளுகின்றான். கருவறையின் முன்னால் அமைந்துள்ள மண்டபத்தை தாங்கி நிற்கும் நான்கு தூண்களில் வீரமகேந்திரரும் விநாயகரும் ஆண்டிக்கோலத்தில் முருகனும் காட்சி தருகின்றனர். ராமபிரான், லக்குமணர், சீதாப்பிராட்டியார், அனுமன், பாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், மீனாட்சி, காமாட்சி ஆகியோரின் சிறிய புடைப்புச் சிற்பங்களை மண்டபத்தூண்களில் காணலாம்.
கோயில் சிறப்புகள்:
•இந்தக் கோயிலில் சுப்பிரமணிய சாமி (திருமலை அமரர் பதிகாத்த நயினார்) மூலவராக காட்சி தருகிறார்.
•மருமகன் பாலசுப்பிரமணியனாக குன்றின் உச்சியிலும், மாமன் பாலகிருஷ்ணனாக குன்றின் அடிவாரத்திலும் நின்று அருள் புரிவது சிறப்பு.
•சஷ்டி விழாவின் போது முருகப் பெருமான், பாலமுருகன் வடிவத்திலும், சிவபெருமான் வடிவத்திலும், 2ஆவது மற்றும் 3ஆவது நாட்களில் அர்த்தநாரீஸ்வரர் வடிவத்திலும், 4ஆவது நாளில் சங்கர நாராயணன் தோற்றத்திலும், 5ஆவது நாளில் சக்தியின் தோற்றத்திலும், 6ஆவது நாளில் போர்க்கால முருகன் தோற்றத்திலும் அலங்காரம் செய்யப்படுவார்.
•இந்தக் கோயிலில் நின்று அருளும் முருகப் பெருமானுக்கு திருமலை அமரர் பதிகாத்த நயினார் என்ற பெயரும் உண்டு
•தோவாளை சுப்பிரமணிய சாமி கோயிலில் வடக்குப் பக்கத்தில் கல்வெட்டு ஒன்று உள்ளது. இந்த கோயில் கி.பி. 15 அல்லது 16ம் நூற்றாண்டில் தோன்றியிருக்க வேண்டும் என்றும், தோவாளைக்கு எதிர்வில்லி சோழபுரம் என்ற பெயரும், இங்குள்ள மலையில் நின்றருளும் முருகனுக்கு திருமலை அமரர் பதிகாத்த நயினார் என்ற பெயரும் இருந்தது என்றும் கல்வெட்டுச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
திருவிழா:
இக்கோயிலில் கந்த சஷ்டி விழாவும், சூரன் திருவிழா, ஆடிமாதம் கடைசி வெள்ளிக்கிழமை மலர் முழுக்கு விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சுப்பிரமணிய சாமி (திருமலை அமரர் பதிகாத்த நயினார்) திருக்கோயில்,
தோவாளை,
கன்னியாகுமரி மாவட்டம்.
அமைவிடம்:
திருநெல்வேலி – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது, தோவாளை.