#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஆண்டார்குப்பம்
#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஆண்டார்குப்பம்
அதிகாரத் தோரணையில் முருகப் பெருமான் காட்சி தரும் கோயில் இது…
169.#அருள்மிகு_பாலசுப்பிரமணியசுவாமி_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : பால சுப்பிரமணியர்
உற்சவர் : சுப்பிரமணியர்
அம்மன் : விசாலாட்சி
தீர்த்தம் : வேலாயுத தீர்த்தம்
ஊர் : ஆண்டார்குப்பம்
மாவட்டம் : திருவள்ளூர்
ஸ்தல வரலாறு:
ஒரு சமயம், சிவபெருமானை தரிசிக்க கைலாய மலை சென்ற பிரம்மதேவர், அங்கிருந்த முருகப் பெருமானை கவனிக்காமல் சென்றார். உடனே, பிரம்மதேவரை அழைத்த முருகப் பெருமான், “நீங்கள் யார்?” என்று கேட்டார். “நான்தான் படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மா” என்று பிரம்மதேவர் ஆணவத்துடன் கூறினார். அவரது அகந்தையை அழிக்க நினைத்த முருகப் பெருமான் அவரை நோக்கி, “எதன் அடிப்படையில் நீங்கள் உங்கள் படைப்புத் தொழிலைச் செய்கிறீர்கள்? நான் கேட்கும் கேள்விக்கு பதில் கூறுங்கள் பார்ப்போம். ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை எனக்கு தெரிவிக்கவும்” என்றார். முருகப் பெருமானின் கேள்விக்கு விடை தெரியாமல் தவித்தார் பிரம்மதேவர். இதைத் தொடர்ந்து பிரம்மதேவர் சிறை வைக்கப்பட்டார்.
பிறரிடம் கேள்வி கேட்பவர்கள், உயர்ந்த பொறுப்பில் உள்ளவராகவோ அல்லது அவரை விட வயதில் பெரியவராகவோ இருப்பது வழக்கம். ஆனால், இங்கு பிரணவத்தின் வடிவமான முருகப் பெருமான், பிரம்மதேவரை விட உயர்ந்தவராக இருக்கிறார். அதனால் அதிகாரத் தோரணையுடன், தனது இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு பிரம்மதேவரை கேள்வி கேட்டுள்ளார் முருகப் பெருமான். இதை அமைப்பிலேயே இத்தலத்தில் முருகப் பெருமான் அருள்பாலிக்கிறார். இத்தகைய வடிவத்தில் முருகப் பெருமானின் தரிசனம் கிடைப்பது மிகவும் அபூர்வமாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, பிற்காலத்தில் பலர் வந்து இத்தல முருகப் பெருமானை தரிசித்து வந்தனர்.
ஒரு சமயம் துறவிகள் சிலர் இத்தலத்துக்கு வந்து முருகப் பெருமானை தரிசித்து வந்தனர். அப்போது தலயாத்திரை வந்த பக்தர் ஒருவர் இங்கு வந்தார். மாலையில் நீராடிவிட்டு முருகப் பெருமானை தரிசிக்க எண்ணிய பக்தர், நீராடுவதற்கு எங்கு செல்ல வேண்டும் என்று துறவிகளை வினவினார். அப்படி நீராடுவதற்காக தீர்த்தம் ஏதும் இங்கு இல்லை என்று துறவிகள் கூறினர். இதைத் தொடர்ந்து அங்கு ஆண்டிக் கோலத்தில் வந்த சிறுவன் ஒருவன், பக்தரிடம் நீராடும் இடத்துக்கு தான் அழைத்துச் செல்வதாகக் கூறி, தன்னுடைய வேலால் ஓரிடத்தில் குத்தினான். அங்கிருந்து நீர் பொங்கியது. பக்தருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அதில் நீராடிய பக்தருக்கு சிறுவன், முருகப் பெருமானாகக் காட்சி அளித்தார். இவரே இத்தலத்தில் பாலசுப்பிரமணியராக அருள்பாலிப்பதாக ஐதீகம்.
ஆண்டிக் கோல சிறுவனாக வந்து முருகப் பெருமான் அருள்பாலித்த தலம் என்பதால் இவ்வூர் ‘ஆண்டியர் குப்பம்’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் ‘ஆண்டார் குப்பம்’ என்று மருவியதாகக் கூறப்படுகிறது. ஆளும் கோலத்தில் முருகப் பெருமான் இருப்பதாலும் இப்பெயர் ஏற்பட்டதாகவும் கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன. பால பருவத்தில் உலகைச் சுற்றி வந்த முருகப் பெருமான், கருணையாலும் வீரத்தாலும் உலகை ஆண்டு, இவ்வூரில் குடிகொண்டதால் ஆண்டார் குப்பம் என்ற பெயர் இவ்வூருக்குக் கிட்டியதாகவும் கூறப்படுகிறது.
கோயில் சிறப்புகள்:
•ஏகதள விமானத்தின் கீழ் அதிகார முருகனாக பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
•பாலசுப்பிரமணியர் வேல், வஜ்ரம், சக்தி என்று எவ்வித ஆயுதமும் இல்லாமல் அருள்பாலிக்கிறார். இவருக்கு அருகில் இரண்டு யானை வாகனங்கள் உள்ளன.
•காலையில் இவர் குழந்தையாகவும், உச்சி வேளையில் இளைஞர், மாலையில் முதியவர் போலவும் தோற்றமளிப்பது வித்தியாசமான தரிசனம். ஆண்டிக்கோல சிறுவனாக வந்து முருகன் அருள்புரிந்த தலமென்பதால் ஊர், ‘ஆண்டியர்குப்பம்’ என்றழைக்கப்பட்டு, ‘ஆண்டார்குப்பம்’ என மருவியது. ஆளும் கோலத்தில் முருகன் இருப்பதாலும் இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர்.
•அதிகாரத் தோரணையில் முருகப் பெருமான் இருப்பதால் ‘அதிகார முருகன்’ என்று அழைக்கப்படுகிறார்.
•பாலசுப்பிரமணியர் சந்நிதிக்கு இடது மற்றும் வலது புறத்தில் வள்ளி, தெய்வானை ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன.
•இத்தல விநாயகர் வரசித்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். முன்மண்டபத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, நடராஜர் சந்நிதிகள் அமைந்துள்ளன.
•தலவிருட்சமாக சரக்கொன்றை மரம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
•அறுபடை வீடுகளில் சுவாமிமலை, திருத்தணி உள்ளிட்ட தலங்களில் முருகப் பெருமான் யானை வாகனத்துடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் மயில் மற்றும் சிம்ம வாகனத்துடன் முருகப் பெருமான் உள்ளார். தாய்க்குரிய (அம்பிகை) வாகனத்துடன் இங்கு முருகப் பெருமான் அருள்கிறார். சிம்மம் மயிலைத் தாங்கியபடி இருப்பது குறிப்பிடத்தக்கது.
•சம்வர்த்தனர் என்ற பக்தருக்காக இக்கோயிலில் முருகப் பெருமான் எழுந்தருளியதாகவும், அவருக்காகவே பாலநதி என்ற தீர்த்தத்தை இங்கு ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
•அருணகிரி நாதர், கிருபானந்த வாரியார் சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் ஆகியோரும் இத்தல முருகப் பெருமானைப் போற்றி வழிபட்டுள்ளனர்.
•அருணகிரிநாதர் இத்தல முருகப் பெருமானை போற்றி திருப்புகழ் பாடியுள்ளார்.
திருவிழா:
சித்திரையில் பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம், ஆடிகிருத்திகை, கார்த்திகையில் குமார சஷ்டி, கந்தசஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,
ஆண்டார்குப்பம் – 601 204.
திருவள்ளூர் மாவட்டம்.
போன்:
+91- 44 – 2797 4193, 99629 60112.
அமைவிடம்:
திருவள்ளூர் மாவட்டம், ஆண்டார்குப்பத்தில் அமைந்துள்ளது இந்த முருகன் கோவில். வடமதுரை, கண்ணிகைபேர், ஜெகநாதபுரம் வழியாக சுமார் 30 கிலோ மீட்டர் பயணித்தால் இத்தலத்தை அடையலாம். சென்னையில் இருந்து சென்னை – விஜயவாடா தேசிய செநடுஞ்சாலையில் படியநல்லூர், சோழவரம் வழியாகவும் இக்கோவிடிலை சென்றடையலாம். ஆவடி, கும்மிடிப்பூண்டி, சென்னை, திருவள்ளூர் எனச் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆண்டார்குப்பம் வர பேருந்து வசதிகள் உள்ளது.
#templesofsouthindia #templesoftamilnadu #templeshistory #templesofhindus #temple #ஸ்தலம் #தலவரலாறு #ஆலயம்அறிவோம் #கோயில்கள் #ஆன்மீகம் #கோவில்வரலாறு #templepost #templesecrets #famoustemples #ஆண்டார்குப்பம் #AndarkuppamMurugan #balasubramanyaswamy #பாலசுப்பிரமணியர் #சுப்பிரமணியர் #விசாலாட்சி #திருவள்ளூர் #DrAndalPChockalingam