#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் நீடூர்
#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் நீடூர்
ஊழிக் காலத்திலும் இக்கோவில் அழியாமல் நீடித்திருக்கும் ஆகையால் நீடூர் என்று பெயர் பெற்றது.
165.#அருள்மிகு_சோமநாதர்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : சோமநாதர், அருள் சோமநாதேஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்மன் : வேயுறுதோளியம்மை, ஆதித்ய அபய ப்ரதாம்பிகை
தல விருட்சம் : மகிழம்
புராண பெயர் : திருநீடூர்
ஊர் : நீடூர்
மாவட்டம் : நாகப்பட்டினம்
ஸ்தல வரலாறு:
தன்மசுதன் எனும் அசுரன் முன்வினைப்பயனால் அடுத்த பிறவியில் நண்டாக பிறந்தான். அவன் தன் பாவங்களுக்கு விமோசனம் பெற நாரதரிடம் ஆலோசனை கேட்டான். அவர் இத்தலத்தில் சிவனை வழிபட விமோசனம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி தன்மசுதன் இங்கு வந்து காவிரி ஆற்றில் நீராடி சிவனை வழிபட்டான். சிவன் அவனுக்கு காட்சி கொடுத்து தனக்குள் ஐக்கியமாவதற்கு வசதியாக லிங்கத்தில் துளையை ஏற்படுத்திக் கொடுத்தார். நண்டு வடிவில் இருந்த அசுரன் லிங்கத்திற்குள்ளே சென்று ஐக்கியமானான். நண்டு சென்ற துளை தற்போதும் லிங்கத்தில் இருக்கிறது. ஆடி மாத பவுர்ணமி தினத்தில் இங்கு சிவனுக்கு கற்கடக பூஜை நடக்கிறது.
ஒருசமயம் இந்திரன் பூலோகத்திற்கு வந்தபோது சிவபூஜை செய்ய விரும்பினான். அருகில் லிங்கத்தை தேடியும் கிடைக்கவில்லை. எனவே காவிரி ஆற்றின் மணலை அள்ளி லிங்கமாக பிடித்து பூஜை செய்தான். பின் சிவனது நடன தரிசனம் வேண்டி ஒரு பாடலை பாடினான். மகிழ்ந்த சிவன் அவனுக்கு நடனக்காட்சி அருளினார். எனவே இவருக்கு கானநர்த்தன சங்கரன் என்றும் பெயர் உண்டு. பாடலுக்கு இறங்கி ஆடிய தேவர் என்பது இதன் பொருள். பூஜை முடிந்தபின்பு இந்திரன் லிங்கத்தை அப்படியே விட்டு சென்றுவிட்டான். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. லிங்கத்தில் இந்திரனின் விரல் தடம் இருப்பதை இப்போதும் காணலாம். கிருத யுகத்தில் இந்திரனும் திரேதா யுகத்தில் சூரியனும் துவாபர யுகத்தில் பத்திரகாளியும் கலியுகத்தில் நண்டும் பூசித்து பேறு பெற்றுள்ளனர்,
முனையடுவார் நாயனார் நாயன்மார்களில் ஒருவர். சோழநாட்டில் திருநீடூரில் வேளாள குலத்தில் தோன்றியவர். “அறைகொண்டவேல் நம்பி முனையடுவார்க்கு அடியேன்” என்று திருத்தொண்டத் தொகை இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
சிவபெருமான் திருவடியில் நிறைந்த பேரன்புடையவர்; பகைவர்களைப் போர்முனையில் வென்று பெற்ற பெருநிதியங்களைச் சிவனடியார்க்கு மாறாது அளிக்கும் வாய்மை உடையவர். போரில் பகைவர்களுக்குத் தோற்றவர்கள் தம்மிடம் வந்து துணை வேண்டினால் நடுவு நிலையில் நின்று அவர்களோடு ஆள்வினையால் கூலி பேசிக்கொண்டு அவர்களுக்காகப் போர்செய்து பொருள் ஈட்டிச் சிவனடியார்களுக்குச் சொன்னபடியே நிறையக் கொடுத்து அவர்களை அறுசுவைக்கறிகளுடன் திருவமுது செய்வித்துக் கொண்டிருந்தார். முனையடுவார் நாயனார் நெடுங்காலம் ஈசனடியார்களுக்கான திருப்பணி புரிந்து இருந்து உமையொருபாகர் திருவருளால் சிவலோகத்துப் பிரியாது உறையும் பெருவாழ்வு பெற்றார்.
கோயில் சிறப்புகள்:
•சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 21 வது தேவாரத்தலம் திருநீடூர்.
•மூலவர் சோமநாதர், அருள்சோமநாதேஸ்வரர், நிருத்தகானப்பிரியர், கானநிர்த்தனசங்கரர், பத்ரகாளீஸ்வரர், கற்கடேசுவரர். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
•ஆவணி மாதத்தில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது.
•அம்பாள் ஆதித்ய அபயப்ரதாம்பிகை, வேதநாயகி, ஆலாலசுந்தரநாயகி, வேயுறுதோளியம்மை. அம்பாள் வேயுறு தோளியம்மையை சூரியன் வழிபட்டுள்ளார். எனவே இவளுக்கு ஆதித்ய அபயவராதம்பிகை என்ற பெயர் ஏற்பட்டது.
•தீர்த்தம் செங்கழு நீரோடை, பத்திரகாளி தீர்த்தம், பருதிகுண்டம், வருண தீர்த்தம் உட்பட 9 தீர்த்தங்கள் உள்ளது. மூலவருக்கு மேல் உள்ள விமானம் இருதளம் எனப்படுகிறது.
•ஊழிக் காலத்திலும் இக்கோவில் அழியாமல் நீடித்திருக்கும் ஆகையால் நீடூர் என்று பெயர் பெற்றது.
•இவ்வாலயத்திற்கு ராஜகோபுரமில்லை. கிழக்கு திசையில் ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயில் மேற்புறத்தில் ரிஷபாரூடனர், முருகர், விநாயகர் ஆகியோரின் வண்ண சுதையாலான திருமேனிகள் உள்ளது. வாயிலைக் கடந்தவுடன் தலமரம் மகிழம் உள்ளது. நந்தி, பலிபீடம் மற்றும் கொடிமரம் உள்ளது. இந்த ஆலயம் இரண்டு பிரகாரங்களைக் கொண்டுள்ளது.
•இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது.
•கோயிலுக்கு வெளியே பத்ரகாளியம்மன் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் இத்தலத்தில் சிவனை வழிபட்டுள்ளார்.
•இத்தலத்தில் விநாயகரே பெரியவர் பழையவர் புனிதமானவர் என்ற 3 நிலைகளில் இருக்கிறார். இந்த வடிவங்களை சிந்தாமணி விநாயகர் செல்வமகா விநாயகர் சிவானந்த விநாயகர் என்றழைக்கப்படுகிறார். இத்தலவிநாயகர் சித்தி விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.
•கிருத யுகத்தில் இந்திரனும், திரேதா யுகத்தில் சூரியனும், துவாபர யுகத்தில் பத்திரகாளியும், கலியுகத்தில் நண்டும் பூசித்து பேறு பெற்றுள்ளனர்.
•இந்திரன் காவிரி மணலைப் பிடித்து வைத்துப் பூசித்த லிங்கம் – இதுவே இறுகி வெள்ளையாக மாறியது. பின்னால் நண்டு பூசித்ததும்; அதன் கால் சுவடு இலிங்கத்தில் பதிந்துள்ளது. வழிபட்ட இந்திரனுக்கு அம்பாள் அருள் புரிந்ததாகத் தலவரலாறு சொல்லப்படுகிறது.
•திருநாவுக்கரசரால் திருப்புன்கூர் சிவலோகநாத சுவாமியுடன் இணைத்துப் போற்றிப் பரவப்பட்டது. மேலும் பொதுத் திருத்தாண்டகத்திலும், திருப்புறம்பயம், திருப்பள்ளியின்முக்கூடல் திருத்தாண்டகங்களிலும் போற்றப்பட்ட பெருமைக்குறியது.
•திருஞானசம்பந்தர் திருநின்றியூரிலிருந்து திருப்புன்கூர் செல்லும் வழியில் “நாடு சீர் நீடூர் வணங்கிச் சென்ற வரலாறு சேக்கிழார் பெருந்தகையரால் குறிக்கப்பட்டுள்ளது.
•தன் தொழில் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு ஈசன் அடியார்கட்கு உதவியும் பல்சுவை விருந்தளித்தும் மன்னும் அன்பின் நெறிபிறழா வழித்தொண்டாற்றிய முனையடுவார் நாயனாரின் அவதாரத் தலம்; அவர் தொண்டு செய்து முத்தி பெற்ற தலம். முனையடுவார் நாயனாரின் கைகூப்பியவாறு உள்ள திருமேனி உள்ளது.
•வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “உருப் பொலிந்தே ஈடு ஊர் இலாது உயர்ந்த ஏதுவினால் ஓங்கு திரு நீடூர் இலங்கு நிழல் தருவே” என்று போற்றி உள்ளார்.
திருவிழா:
பங்குனியில் 10 நாள் பிரம்மோற்ஸவம், சிவராத்திரி, திருவாதிரை.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 10 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயில்
நீடூர் – 609 203.
நாகப்பட்டினம் மாவட்டம்.
போன்:
+91- 4364 – 250 424, 250 142, 99436 68084.
அமைவிடம்:
மயிலாடுதுறையில் இருந்து 5 கி.மீ., தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. பஸ்வசதி உண்டு.