#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவல்லிக்கேணி

July 10, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவல்லிக்கேணி
அன்று கீதை அருளிய பரந் தாமன், இன்று கடற்கரை ஓரம் திருவல்லிக்கேணி க்ஷேத்திரத்தில் பார்த்தனுக்கு சாரதியாக (தேரோட்டி) கோலத்தில் காட்சி தருகிறார்.
164.#திருவல்லிக்கேணி_பார்த்தசாரதி_கோயில்_வரலாறு
மூலவர் : பார்த்தசாரதி
உற்சவர் : வேங்கடகிருஷ்ணன், ஸ்ரீ தேவிபூதேவி
தாயார் : ருக்மிணி
தல விருட்சம் : மகிழம்
தீர்த்தம் : கைரவிணி புஷ்கரிணி
புராண பெயர் : பிருந்தாரண்ய க்ஷேத்ரம்
ஊர் : திருவல்லிக்கேணி
மாவட்டம் : சென்னை
ஸ்தல வரலாறு:
பதினெட்டு நாட்கள் நடந்த மகாபாரதப் போரில் வில் வீரன் அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக வந்த பகவான் கண்ணபிரான் உபதேசித்த பகவத் கீதை, உலகப் பிரசித்தி பெற்றது. தனி ஒரு மனிதன் மனப் போராட்டத்தில் இருந்து விடுபட்டு, மனத் தெளிவு பெறுவதற்கு இந்த கீதை தரும் அறிவுரைகள் ஏராளம். வாழ்வியல் நெறிக்கு இன்றைக்கும் உதாரணம் காட்டிப் பேசப்படும் கீதை, சுமார் ஐயா யிரம் வருடங்களுக்கு முன்- துவாபர யுகத்தின் முடிவில் அருளப்பட்டது வீரர்கள் நிறைந்த களத்தில் அன்று கீதை அருளிய பரந் தாமன், இன்று கடற்கரை ஓரம்- திருவல்லிக்கேணி க்ஷேத்திரத்தில்
சுமதிராஜன் என்ற மன்னர் திருமால் பக்தராக இருந்தார். அவருக்கு குருஷேத்ர போரில் பார்த்தனுக்கு சாரதியாக (தேரோட்டி) இருந்த கிருஷ்ணரை தரிசிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. தனது விருப்பத்தை திருமாலிடம் தெரிவிக்க, திருமாலும் அவ்வண்ணமே காட்சி கொடுத்து அருள்பாலித்தார். தான் விரும்பிய கோலத்தில் கிருஷ்ணரைக் கண்டு மகிழ்ந்த மன்னர், அதே கோலத்தில் இத்தலத்தில் கோயில் கொள்ள வேண்டும் என்று விரும்பினார்.
போரில் பார்த்தனுக்கு சாரதியாக இருந்தபோது, கிருஷ்ணர் கையில் எந்த ஆயுதமும் இல்லை. அதேபோல இத்தலத்திலும், ஒரு கையில் சங்கு மட்டுமே ஏந்தி அருள்பாலிக்கிறார். பார்த்தன் மீது பீஷ்மர் தொடுத்த அம்புகள் அனைத்தையும் தானே முன்னின்று ஏற்றுக்கொண்டு, அவனுக்கு வெற்றியைத் தேடித் தந்தார் கிருஷ்ணர். அப்போது கிருஷ்ணரின் முகத்தில் அம்பு பட்ட வடுக்கள் இருக்கும். இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பார்த்தசாரதியின் முகத்திலும் வடுக்கள் காணப்படுகின்றன. தருமத்தை நிலைநாட்ட வேண்டி நிகழ்ந்த மகாபாரதப் போரில் பீஷ்மர் எய்த அம்புகளை பார்த்தனுக்குத் தேரோட்டியாக நின்று தாமே தாங்கியதால் ஏற்பட்ட வடுக்களை உற்சவர் திருமுகத்தில் இன்றும் தரிசிக்கலாம். இந்த ஐதீகத்தின் அடிப்படையில் பெருமாள் ஸ்ரீ பார்த்தசாரதி என்றழைக்கப்படுகிறார். ஆலயமும் அப்பெயரில் அழைக்கப்படுகிறது. காயங்களுடன் இருப்பதால் இவருக்கான நைவேத்யத்தில், நெய் அதிகம் சேர்க்கப்படுகிறது. மிளகாய் போன்ற காரமான பொருட்கள் சேர்ப்பதில்லை. அழகாக பிறக்கவில்லையே என வருந்துபவர்கள், திருமாலின் இந்த கோலத்தை தரிசித்தால் அழகு அழியும் தன்மையுடையது என்ற தத்துவத்தை உணர்வர்.
பிருகு மகரிஷி திருமாலை தனது மருமகனை அடைய வேண்டும் என்று விருப்பம் கொண்டு திருவல்லிக்கேணியில் தவம் இயற்றினார். அப்போது அங்கிருந்த புஷ்கரிணியில் மலர்ந்த அல்லி மலரில் தாயார் தோன்றினார். பிருகு முனிவர் குழந்தைக்கு வேதவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். தக்க வயதில் திருமால் ரங்கநாதராக இத்தலத்துக்கு வந்திருந்து வேதவல்லித் தாயாரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருக்கல்யாண வைபவம் மாசிமாதம் வளர்பிறை துவாதசி நாளில் நடக்கிறது. வேதவல்லித் தாயார் தனிசந்நிதியில் அருள்பாலிக்கிறார். தாயார் கோயிலை விட்டு வீதியுலா வருவதில்லை. வெள்ளிக்கிழமைகள் மற்றும் உத்திர நட்சத்திர தினங்களில் கோயில் வளாகத்துக்குள் புறப்பாடாகி ஊஞ்சல் சேவை அருள்வார்.
கோயில் சிறப்புகள்:
•108 வைணவ திவ்ய தேசங்களில், சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில், 60-வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது.
•9 அடி உயர மூலவர், சாரதிக்குரிய மீசையோடு இருத்தல் இத்தலத்தில் மட்டுமே என்பது தனிச்சிறப்பு.
•பேயாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஸ்ரீ ராமானுஜர் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.
•இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பார்த்தசாரதியின் முகத்திலும் வடுக்கள் காணப்படுகின்றன. திருமாலின் இந்த கோலத்தை தரிசித்தால் அழகு அழியும் தன்மை கொண்டது என்ற தத்துவத்தை அனைவரும் உணர்வதுண்டு. மூலவர் வேங்கடகிருஷ்ணராக இருந்தாலும் உற்சவர் பார்த்தசாரதி பெயரிலேயே இக்கோயில் அழைக்கப்படுகிறது.
•மனிதர்கள் குடும்பத்தினருடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும்விதமாக இக்கோவிலில் பெருமாள் அருள்கிறார். மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர் அருகில் ருக்மணி தாயார், மார்பில் மகாலட்சுமி ஆகியோர் உள்ளனர். இந்தப் பெருமாள், அர்ஜுனனுக்கு உதவியாக வந்த கிருஷ்ணாவதாரம் என்பதால், அருகில் ருக்மிணி தாயார் இருக்கிறாள். வலப்புறத்தில் அண்ணன் பலராமர், இடதுபுறத்தில் தம்பி சாத்யகி, மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் ஆகியோரும் இருக்கின்றனர். தனிசன்னதியில் இருக்கும் ராமபிரானுடன் சீதை, லட்சுணர், பரதன், சத்ருக்கனன், ஆஞ்சநேயர் ஆகியோர் உள்ளனர்.
•பிரகாரத்தில் ஆண்டாள், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ராமானுஜர், மணவாள மாமுனிகள், வேதாந்த தேசிகர், சக்கரத்தாழ்வார் ஆகியோர் சந்நிதிகளும் உள்ளன.
•பெருமாளின் பஞ்சாயுதங்களில் சங்கும், சக்கரமும் பிரதானமானவை. ஆனால், இக்கோவிலில் சுவாமியிடம் சக்கரம் இல்லை. மகாபாரத போரின்போது பாண்டவர்களுக்கு உதவிய கிருஷ்ண பரமாத்மா, போர் முடியும் வரையில் ஆயுதம் எடுப்பதில்லை என உறுதி எடுத்திருந்தார். எனவே, இவர் இத்தலத்தில் ஆயுதம் இல்லாமல் காட்சி தருகிறார். போரை அறிவிக்கும் சங்கு மட்டும் வைத்திருக்கிறார். பெருமாளை இத்தகைய கோலத்தில் தரிசிப்பது அபூர்வம். பொதுவாக நான்கு கரங்களுடன் காட்சி தரும் பெருமாள், இங்கே கிருஷ்ணனாகிய மானிட வடிவில் இருப்பதால் இரண்டு கரங்களே உள்ளன.
•வழக்கமாக மீசையுடன் தோன்றும் மூலவர், வைகுண்ட ஏகாதசி திருவிழா, பகல்பத்து ஆறாம் நாளில் இருந்து பத்தாம் நாள் வரையில் 5 நாட்கள் மட்டும் மீசையில்லாமல் அருள்பாலிக்கிறார். வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்போது, உற்சவர் மீசையுடன் அருள்பாலிக்கிறார்.
•பிரதான மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர், முன்மண்டபத்தில் ரங்கநாதர் மற்றும் ராமபிரான், பிரகாரத்தில் கஜேந்திர வரதர் மற்றும் யோக நரசிம்மர் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். அதனால் இத்தலம் ஐந்து மூலவர் ஸ்தலம் அல்லது பஞ்ச மூர்த்தி ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.
•ரங்கநாதர் சந்நிதியில் சுவாமியின் தலைக்கு அருகில் வராகரும், கால் அருகில் நரசிம்மரும் உள்ளனர்.
•ஒரே சன்னதிக்குள் பெருமாளின் மூன்று கோலங்களையும் இங்கு தரிசிக்க முடியும். திருமணத்திற்கு வந்த ரங்கநாதரை, தாயார் என்னவரே!’ என்ற பொருளில், ஸ்ரீமன்நாதா! என்றழைத்தார். எனவே இவருக்கு “ஸ்ரீமன்நாதர்’ என்ற பெயரும் உண்டு.கிழக்கு நோக்கிய மூலவர் வேங்கட கிருஷ்ணன், மேற்கு நோக்கிய யோக நரசிம்மர் என இருவருக்கும் இரு திசைகளிலும் இரண்டு கொடி மரங்களும், வாசல்களும் உள்ளன.
•யோக நரசிம்மரே இத்தலத்தில் முதல் மூர்த்தியாவார். அத்ரி மகரிஷிக்கு காட்சியளித்த நரசிம்மரான இவருக்கே காலையில் முதல் பூஜை நடைபெறுகிறது. யோக நிலையில் இவர் இருப்பதால், இவரது சந்நிதிகளில் உள்ள மணிகளில் மட்டும் சப்தம் எழுப்பும் நாக்குகள் இல்லை.
•இத்தலத்தில், கஜேந்திரனுக்கு மோட்சம் அருளிய கஜேந்திர வரதர் (மூலவர்) கருடாழ்வார் மேல் நித்ய வாசம் செய்வதால், இத்தலத்தில் அனைத்து நாட்களும் கருடசேவை வைபவத்தைக் காண முடியும்.
•மற்ற தலங்களில் குறிப்பிட்ட நாளில் – குறிப்பிட்ட நேரத்தில்தான் கருடசேவை வைபவத்தைக் காண முடியும். ஆனால் இங்கே வருடம் 365 நாளுமே கருடசேவைதான்! காரணம், கஜேந்திரனுக்கு மோட்சம் அருளிய அந்தக் கஜேந்திர வரதர் (மூலவர்), கருடாழ்வார் மேல் நித்திய வாசம் செய்கிறார். திருவல்லிக்கேணியில் குடும்ப சமேதராக அருளாட்சி செலுத்தும் வேங்கடகிருஷ்ணரை தரிசித்தால், வினைகள் யாவும் தீரும்; வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
•இங்குள்ள மூலவர் திருமேனியே கீதையில் பகவானின் சொரூபம் என்று கருதப்படுகிறது. நின்றான் கோலத்துக்கு வேங்கடகிருஷ்ணர், அமர்ந்தான் கோலத்துக்கு தெள்ளியசிங்கர் என்றழைக்கப்படும் நரசிம்மர், கிடந்தான் கோலத்துக்கு மன்னாதர் என்றழைக்கப்படும் ரங்கநாதர் – இந்த மூன்று நிலைகளுமே வீரம், யோகம், போகம் ஆகியவற்றை பக்தர்களுக்கு அருள்வதாக அமைந்துள்ளன.
•தியாகபிரம்மம் முத்துசுவாமி தீட்சிதர், பாரதியார் ஆகியோர் இத்தலம் குறித்து பாடியுள்ளனர். குறிப்பாக பாரதியார் பாடிய கண்ணன் பாடல்கள் அனைத்தும் இப்பெருமாளைப் பற்றியது எனக் குறிப்பிடுவர். அனுதினமும் பார்த்தசாரதிப் பெருமாளை வழிபட்டிருக்கிறார். சங்கீத மேதை தியாகராஜ சுவாமிகள், தத்துவ மேதை விவேகானந்தர், கணித மேதை ராமானுஜம், ஆகியோர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டுள்ளனர்.
திருவிழா:
ஸ்ரீ பார்த்தசாரதி லட்சார்ச்சனை: பிப்ரவரி – 10 நாட்கள் திருவிழா
பிரம்மோற்ஸவம்: ஏப்ரல் – 10 நாட்கள் திருவிழா
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீஜயந்தி விழா யாதவர்களைப் போற்றும் விதமாக கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீஜயந்தி, அன்று இரவு மூலஸ்தானத்தில் இருந்து கண்ணன் சர்வ அலங்காரத்துடன், கைத்தலத்தில் மகாமண்டபத்துக்கு எழுந்தருளி சங்குப்பால் அமுது செய்து, பின்னர் பார்த்தசாரதி பெருமாளுடன் திருமஞ்சனம் கண்டருளுவார். மறுநாள், காலை கண்ணன் சேஷ வாகனத்தில் மாடவீதிகள் மற்றும் யாதவப்பெருமக்கள் இருக்கும் வீதிகளுக்கு செல்வார். அவர்கள் அன்புடன் தரும் பால், வெண்ணெய் மற்றும் பழங்கள் போன்றவற்றை ஏற்றுக்கொண்டு திருக்கோவிலுக்குள் எழுந்தருள்வார். இரவு புன்னை மர வாகனத்தில் பார்த்தசாரதி பெருமாளுடன் திருவீதிகளில் எழுந்தருளி, உறியடி உற்சவம் கண்டருளுவார்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில்,
திருவல்லிக்கேணி,
சென்னை-600 005
போன்:
+91- 44 – 2844 2462, 2844 2449.
அமைவிடம்:
சென்னையின் மிக முக்கிய பகுதி திருவல்லிக்கேணி என்பதால் பேருந்து வசதி நிறைய உள்ளது.மின்சார ரயில் வசதியும் திருவல்லிக்கேணிக்கு உண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =