#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஊதியூர்

July 4, 2023 0 Comments

மூலவர் : உத்தண்ட வேலாயுத சுவாமி
ஊர் : ஊதியூர்
மாவட்டம் : திருப்பூர்
ஸ்தல வரலாறு:
கொங்கு நாட்டில் கந்தப் பெருமான் கோயில் கொண்ட மலைகளுள் ஒன்றாக இருப்பதால் இது தனிச்சிறப்பு பெற்றதாகப் போற்றப்படுகிறது. தமிழகத்தில் தோன்றிய சித்தர்களுள் மிகவும் முக்கியத்துவம் பெறுபவர் அகத்திய முனிவர். இவரது சீடர்களான போகர், தேரையர், கொங்கணர் ஆகியோர் தங்களின் யோக ஆற்றலைப் பயன்படுத்தி பசியால் வாடிய மக்களின் குறைகளைத் தீர்த்து வந்தனர்.
ஒருசமயம், காங்கய நாட்டில் மக்கள் பசியால் வாடுவதை அறிந்து இவர்கள் அங்கு சென்றனர். ஊர் மக்களை ஒன்று திரட்டி, மூலிகைகள் கொண்ட இம்மலைக்கு தீவைத்து புகை மூட்டி ஊதினர். அப்போது முருகப் பெருமான் அங்கு எழுந்தருளி, மக்களுக்கு யாது வேண்டும் என்று கேட்டார். அவர்களும் அவர்கள் குறைகளைத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து முருகப் பெருமான் அவர்களின் வறுமையை நீக்கி, அவர்கள் வாழ்வில் வளமை பொங்கச் செய்தார். இதனால் இந்த மலைக்கு ஊதிமலை என்ற பெயர் பெற்றது.
இன்றும் சித்தர்கள் ஒளிவடிவம் கொண்டு இரவு நேரங்களில் இங்கு வந்து முருகப் பெருமானை வணங்கிச் செல்வதாகக் கூறப்படுகிறது. மலை அடிவாரத்தில் மலைப்பாதை தொடங்கும் இடத்தில் சுதை சிற்பங்களைக் கொண்ட கோபுரத்துடன் மயில் மண்டபம் உள்ளது. இதில் கலை நயமிக்க 4 கல் தூண் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் பாத விநாயகர் சந்நிதியைக் கடந்து படிப்பாதையில் மேலே சென்றால் இடும்பன் சந்நிதியை அடையலாம். இங்கு சக்திகிரி, சிவகிரியை காவடியில் வைத்து சுமந்த கோலத்தில் இடும்பக் குமரன் அருள்பாலிக்கிறார். அருகே உள்ள ஆஞ்சநேயர் சந்நிதியைக் கடந்து மலைக் கோயிலுக்குச் செல்ல வேண்டும். ஏறத்தாழ 300 அடி உயரத்தில் உள்ளது இம்மலை. 156 படிகளை ஏறிச் சென்றால் மலைக் கோயிலை அடையலாம். நுழைவு வாயில் தெற்கு நோக்கி உள்ளது. ராஜகோபுரத்துக்கு முன் தீபஸ்தம்பம் உள்ளது. ராஜ கோபுரத்தைக் கடந்து சென்றால் குறட்டு வாசல். கிழக்கு நோக்கிய வகையில் கோயில் அமைந்துள்ளது. கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் வாத்திய மண்டபம் என 4 பகுதிகளைக் கொண்டுள்ளது இக்கோயில்.
கோயில் சி்றப்புகள்:
•ராம லக்ஷ்மனனுக்காக அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துவந்த போது அதன் ஒரு பகுதி கொங்குநாட்டில் விழுந்தது. அந்த மலையை ஊதியூர் மலை என்று அழைக்கப்படுகிறது.
•கருவறையில் தண்டம் ஏந்தி இடது கையை இடுப்பில் வைத்து வெற்றி வேலுடன் நின்ற கோலத்தில் மலர் அலங்காரத்தில் வேலாயுத சுவாமி அருள்பாலிப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு.
•இந்த மலையில் உத்தண்டவர் என்ற பெயரில் முருகரை கொங்கண சித்தர் பிரதிஷ்டை செய்துள்ளார். அருகில் கொங்கன சித்தர் தவம் புரிந்த குகையும் அதில் அவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கமும் உள்ளது. இந்த குகைக்கு உள்ளே செல்வதற்கு ஒரு வழி வெளியே வருவதற்கு வேறு வழி உள்ளது. வெளியே வர படுத்து தவழ்ந்து தான் வரமுடியும்.
•கொங்கணவர் உருவாக்கிய உத்தண்ட வேலாயுத ஸ்வாமி சிலையே தங்கத்தால் ஆனவர் என்று நினைத்த சிலரால் முருகப்பெருமானின் திருப்பாதங்கள் பின்னப்படுத்தப்பட்டது. அது தங்கமில்லை என்று அறிந்ததும் அந்தச் சிலையை காட்டுக்குள் வீசிவிட்டனர். முருகன் சிலை பின்னமானதும் அந்த ஊரே பாழ்பட்டுப் போனது. பிறகு சித்தரின் சீடர்கள் அறிவுரையால் அதே சிலையை காட்டில் இருந்து கொண்டு வந்து பாதங்களை மறைக்கும் அளவுக்கு மண்ணால் புதைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.
•கருவறையில் உத்தண்ட வேலாயுத சுவாமி, கிழக்கு நோக்கி ஐந்தடி உயரத்தில் அருள்பாலிக்கிறார். இவரது கோலம் மேற்கு நோக்கிய பழநி ஆண்டவரை தரிசித்தவாறு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
•பலருக்கு உத்தண்ட வேலாயுத சுவாமி குலதெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் விளங்குகிறார். அதனால் இங்கு சுவாமி உத்தரவு கேட்கும் வழக்கம் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த மக்கள், தங்கள் வீட்டில் எந்த நிகழ்ச்சியை நடத்தினாலும் அதற்கு முன்பாக வேலாயுத சுவாமியின் உத்தரவு கேட்டுத்தான் செயல்படுவர். தங்கள் செயல்பாடுகளில் எந்தத் தடையும் ஏற்படாமல் இருக்கவும், வெற்றி எளிதில் கிட்டவும் இங்கு பிரார்த்தனை செய்வர்.
•அரிய மூலிகைகள் கொண்ட மலையாக இருப்பதால், பல நோய்களுக்குத் தீர்வாக இம்மலை உள்ளது. மேலைக் கொங்கு நாட்டை ஆட்சி புரிந்த உதியர்களின் குலச்சின்னமாக உதி மரம் விளங்கியது. இம்மரம் ஒதி மரம் என்றும் ஓதி மரம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இம்மரத்தில் பூக்கும் பூக்கள் பொன் நிறத்தில் மின்னும். மலை முழுவதும் இம்மரங்களே நிறைந்திருந்து எங்கு திரும்பினாலும் இப்பூக்களே தென்படுவதால், இம்மலைக்கு ‘பொன் ஊதிமலை’ என்ற பெயர் வந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
•மலைக்கு மேலே கடல் மட்டத்தில் இருந்து 1,080 மீட்டர் உயரத்தில் உச்சிப் பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. அதற்கும் மேலே சென்றால் சொர்ணலிங்கேஸ்வரர் மலையின் உச்சியில் சிவபெருமான் சித்தருக்கு காட்சி கொடுத்த இடம், சிவலிங்கம் ஆகியன உள்ளன. இம்மலை மீது ஏறுவது மிகவும் கடினமானது. வெள்ளியங்கிரி மலையைப் போலவே 7 குன்றுகளையும், 3 பாறைகளுக்கு மத்தியில் சிவபெருமான் காட்சி அருள்வதாகவும் அமைந்துள்ளது. இதற்கு சின்ன வெள்ளியங்கிரி என்றும் பெயர் உண்டு.
•பௌர்ணமி தினத்தில் மலைப் பாறைகளில் சந்திரகாந்தக் கல்லின் படிமங்கள் பிரதிபலிக்கும், இந்த சக்தியால் அனைத்து நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். பௌர்ணமி தினத்தில் பக்தர்கள் இந்தப் பாறைகளில் படுப்பது வழக்கம். இந்த மலையில் இருந்து மூலிகை இலைகள் கொண்டு வரப்பட்டு, அதில் இருந்து தயாரிக்கப்பட்ட கஷாயம் பக்தர்களுக்கு வழங்கப்படும்.
•கொங்கு மண்டல சதகம் என்ற நூலில் ஊதியூர் மலைகளின் பெருமைகளைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
•அருணகிரிநாதரும் இத்தல முருகப் பெருமானைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார்.
•கொங்கணச் சித்தர் தவம் செய்து நெருப்பு ஊதி பொன் தயாரித்ததால் பொன் ஊதிமலை என்றும் அனுமன் எடுத்துச் சென்ற சஞ்சீவி மலையின் ஒரு பகுதி இது என்று கருதப்படுவதால் சஞ்சீவி மலை என்றும் பல பெயர்களில் இம்மலை அழைக்கப்படுவதாக தலபுராணம் கூறுகிறது.
திருவிழா:
ஆடி விசாகம், கந்தசஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திர விழாக்கள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
பங்குனி உத்திர தினத்தில் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்துவர்.
கந்த சஷ்டி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி 6-ம் நாள் தேரோட்டம் 7-ம் நாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
ஆடி விசாக தினத்தில் கொண்டாடப்படும் படிபூஜை மிகவும் சிறப்பு பெற்றதாகக் கூறப்படுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில்
ஊதியூர்,
திருப்பூர்.
அமைவிடம்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்தில் காங்கேயம்-பழனி வழித்தடத்தில் காங்கேயத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும், பழனியில் இருந்து 52 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் இருந்து, வட்டமலை ஐந்து கிலோமீட்டர், சிவன்மலை 18 கிலோமீட்டர், சென்னிமலை 35 கிலோமீட்டர் என சில பழமையான ஆலயங்களும் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 6 =