#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்காட்டுப்பள்ளி

June 29, 2023 0 Comments

மூலவர் : ஆரண்யேஸ்வரர் (ஆரண்யசுந்தரர்)
அம்மன் : அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம் : பன்னீர் மரம்
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம்
புராண பெயர் : கீழைத்திருக்காட்டுப்பள்ளி
ஊர் : திருக்காட்டுப்பள்ளி
மாவட்டம் : நாகப்பட்டினம்
ஸ்தல வரலாறு:
பிரம்மாவிடம் வரம் பெற்ற விருத்தாசுரன் என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தங்களை காக்கும்படி தேவர்கள் இந்திரனிடம் முறையிட்டனர். ததீசி முனிவரின் முதுகுத் தண்டை ஆயுதமாகப் பெற்ற இந்திரன் விருத்திராசுரன் அசுரனை அழித்தான். இதனால் அவனுக்கு தோஷம் உண்டானது. தேவலோக தலைவன் பதவியும் பறிபோனது. தனக்கு மீண்டும் தேவதலைவன் பதவி கிடைக்க குருவிடம் ஆலோசனை செய்தான். பூலோகத்தில் சிவனை வணங்கிட விமோசனம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி பூலோகத்தில் பல தலங்களுக்குச் சென்ற இந்திரன் இத்தலம் வந்தான். அடர்ந்த வனத்தின் மத்தியில் சிவன் சுயம்பு மூர்த்தியாக இருப்பதைக்கண்ட அவன் சிவபூஜை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன் அருள் செய்தார். இவரே இங்கு ஆரண்யேஸ்வரராக காட்சி தருகிறார்.
இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் பிரம்மேசர், முனியீசர் என்ற பெயரில் இரு சிவலிங்கங்கள் உள்ளன. சுப்பிரமணியர், பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. கருவறைச் சுவரில் வெளிப்புறத்தில் ஓரிடத்தில் மன்னன் ஒருவன் சிவலிங்கத்தை வழிபடுவது போன்ற சிற்பமுள்ளது. பிரகார வலம் முடித்து வாயில் நுழைந்தால் மண்டபத்தில் மேற்கு நோக்கிய சுவாமி சந்நிதியும் இடதுபுறம் அம்பாள் சந்நிதியும் ஒரு சேரத் தரிசிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளனர். சுவாமி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி ஆறு சீடர்களுடன் வீற்றிருக்கிறார். பொதுவாக சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நால்வருடன் மட்டும் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி ஆறு பேருடன் காட்சி தருகிறார். இவர் ராஜயோக தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.
கோயில் சிறப்புகள்:
•தென்திருமுல்லைவாயில் சென்ற சம்பந்தர், அருகிலிருந்த தலங்களையும் சென்று தரிசனம் செய்தததாக பெரியபுராணம் குறிப்பிடும் தலங்களில் இந்த தலமும் ஒன்று.
•இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
•இக்கோயிலுள் பிரம்மேசர், முனியீசர் என்ற பெயரில் இரு சிவலிங்கங்கள் உள்ளன.
•மூலஸ்தானத்தில் சுவாமி சதுர பீடத்தில் மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.
•வனத்தின் மத்தியில் இருந்தவர் என்பதால் இவர் ஆரண்யேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். காட்டழகர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.
•மூலவர் மேல் உள்ள விமானம் துவைதளம் என்று அழைக்கப்படுகிறது.
•பிரகாரத்தில் தசலிங்கம் சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியில் ஏழு லிங்கங்கள் இருக்கிறது. இதில் ஒரே லிங்கத்தில் இரண்டு பாணங்கள் உள்ளது. இந்த அமைப்பை திருஞானசம்பந்தர் தன்னருகே தசலிங்கம் கொண்ட உடையார் என பாடியிருக்கின்றார்.
•இங்கு சுவாமியே பிரதானம் என்பதால் நவக்கிரக சன்னதி கிடையாது.
•இந்தக் கோயிலில் உள்ள ஸ்ரீபிரம்மேஸ்வர லிங்கத்தை வழி படுவோர் 100 அஸ்வமேத யாகங்கள் செய்த பலனைப் பெறுவார்கள் என்று புராண வரலாறு சொல்கிறது.
•ஒரு சாபத்தால் நண்டு வடிவம் எடுத்த கந்தர்வனால் வழிபடப்பட்ட இத்தலத்திலுள்ள விநாயகர் நண்டு விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த விநாயகரின் பீடத்தில் நண்டு இருக்கின்றது. பொதுவாக விநாயகருக்கு இருக்க வேண்டிய மூசிக வாகனம் இங்கு இல்லை. நண்டு இவருக்கு வாகனமாக இருப்பதால் மூசிக வாகனம் இல்லை.
•ஆரண்ய முனிவர் வழிபட்ட தலம் இது. அவரது பெயரால் சுவாமி ஆரண்யேஸ்வரர் என்று அழைக்கப்படுவதாவும் வரலாறு உள்ளது.
•கோஷ்டத்தில் மகாகாளர் சிவ வழிபாட்டிற்காக சங்கு ஊதிக் கொண்டிருக்க ஆரண்ய முனிவர் சிவனை பூஜை செய்யும் சிற்பம் இருக்கிறது.
திருவிழா:
சிவராத்திரி, கந்தசஷ்டி, ஆருத்ரா தரிசனம், விநாயகர் சதுர்த்தி.
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 11 மணி வரை,
மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோயில்,
கீழைத்திருக்காட்டுப்பள்ளி,
நாகப்பட்டினம் மாவட்டம்.
போன்:
+91- 4364 – 256 273, 94439 85770, 98425 93244
அமைவிடம்:
இத்தலம் சீர்காழி – தரங்கம்பாடி சாலையில் அல்லிவிளாகம் என்னுமிடத்தில் திருவெண்காட்டிற்குப் பிரியும் சாலையில் வந்து இலையமுதுகுளபுரம் தாண்டி, இத்தலத்தை அடையலாம். திருவெண்காட்டிலிருந்து இலையமுதுகுளபுரம் செல்லும் சாலையில் 1-1/2 கி.மீ.-ல் இத்தலம் உள்ளது.
மயிலாடுதுறையில் இருந்து 25 கி.மீ., சீர்காழியில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் இத்தலம் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =