#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் குமரகோட்டம்

June 18, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் குமரகோட்டம்

144.#அருள்மிகு_குமரக்கோட்டம்_முருகன்_திருக்கோயில்_வரலாறு

மூலவர் : முருகன்

புராண பெயர் : கச்சி

ஊர் : காஞ்சிபுரம்

மாவட்டம் : காஞ்சிபுரம்

ஸ்தல வரலாறு :

படைப்பில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்க நினைத்த பிரம்மதேவர், சிவபெருமானை தரிசித்து ஆலோசனை கேட்பதற்காக கயிலைக்கு வந்தார். அவசரமான காரியம் என்பதால், விரைந்து சென்ற அவர், முருகப்பெருமான் இருந்ததைக் கவனிக்காமல் கடந்து சென்றார். லீலைகள் செய்வதில் விருப்பம்கொண்ட பாலமுருகன் நான்முகனை வழிமறித்தார். விரைந்து செல்லும் காரணம் கேட்டார். அப்படியே பேச்சு நீள, பிரணவத்தைக்கொண்டே தாம் படைப்புத் தொழிலைச் செய்வதாக பிரம்மன் கூறினார். பிரணவத்தின் பொருளை முருகன் கேட்க, நான்முகன் விழித்தார். பொருள் தெரியாமல் தலைகுனிந்தார். சுட்டிக் குழந்தையான முருகன், படைக்கும் கடவுளான பிரம்மன் தலையில் குட்டி, அவரைச் சிறையில் அடைத்தார். அதுமட்டுமா? தானே படைக்கும் தொழிலையும் மேற்கொண்டார்.
நான்முகனின் இந்த நிலையை தேவர்களின் வழியே அறிந்துகொண்ட சிவபெருமான் முருகனைக் கண்டித்து, நான்முகனை சிறையிலிருந்து மீட்டார்.

பிரணவத்தின் பொருளை மண்டியிட்டு முருகப்பெருமானிடமிருந்து ஈசனும் கேட்டுக்கொண்டார். என்னதான் திருவிளையாடல் என்றாலும், குருவின் அம்சமான ஈசனையே சீடனாகக்கொண்டது வினை என்று அன்னை சக்தியின் மூலம் அறிந்தார் முருகப்பெருமான். தனக்கேற்பட்ட வினை நீங்குவதற்காக, நகரங்களில் சிறந்ததும் புண்ணியம் மிகுந்ததுமான காஞ்சி நகருக்கு வந்தார். அங்கே ஒரு மாமரத்தடியில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். முருகர் வழிபட்ட ஈசன் ‘சேனாபதீஸ்வரர்’ என்று போற்றப்பட்டார். அந்தத் தலமும் ‘சேனாபதீஸ்வரம்’ என்று உருவானது. மாமரத்தடியில் வழிபட்ட குமரக்கோட்டம் முருகன் ‘மாவடி கந்தன்’ எனப் பெயர் பெற்றார்.

கோயில் சிறப்புகள் :

நாக வழிபாடு மிகவும் தொன்மையானது. இந்த வழிபாடு அனைத்து சமயங்களிலும் பரவிக்கிடக்கிறது. பொதுவாக பெருமாளுக்கு தான் ஐந்துதலை நாகம் குடை பிடிப்பதை பார்த்திருப்போம். இங்கே முருகனுக்கு ஐந்துதலை நாகம் குடைபிடிக்கிறது.

வள்ளி தெய்வானைக்கு மூன்று தலை நாகமும் குடை பிடிக்கிறது.

முருகன் தலங்களில் இது முக்தி தலமாகும்

முக்தி தரும் தலங்கள் ஏழினுள் முக்கியமானதும், புராண, சரித்திரப் பெருமைகள் நிறைந்ததும், கோயில் நகரமானதுமான காஞ்சியில் அமைந்தது தான் குமரக்கோட்டம்.

கந்தபுராணம் இத்தலத்தில் அரங்கேறியது.

குமரக்கோட்டத்து முருகன் கோயில் காஞ்சியில் காமாட்சி அம்மன் கோயிலுக்கும், ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும் நடுவில் சோமாஸ்கந்தர் அமைப்பில் அமைந்துள்ளது. காஞ்சிக்கு செல்பவர்கள் காமாட்சியையும், ஏகாம்பரேஸ்வரரையும் தரிசித்து விட்டு குமரக்கோட்டத்து குமரனையும் தரிசிக்க வேண்டும்.

புராணங்களுள் மிகவும் புகழுடையது கந்த புராணம். இந்த புராணம் குமரக்கோட்டத்தில் எழுந்ததே. இத்தல முருகனே, “திகட சக்கரம்’ என அடியெடுத்துக் கொடுத்து தனக்கு பூஜை செய்யும் கச்சியப்ப சிவாச்சாரியாரைக் கொண்டு “கந்தபுராணம்’ எழுதுமாறு செய்தான். கந்தபுராணம் அரங்கேறிய போது ஏற்பட்ட ஐயத்தையும், இத்தல முருகனே புலவர் வடிவத்தில் வந்து தீர்த்து வைத்தான். கி.பி. 11ம் நூற்றாண்டில் கந்தபுராணம் அரங்கேறிய மண்டபம் இங்குள்ளது.

பாம்பன் சுவாமிகள் குமரக்கோட்டத்திற்கு வழி தெரியாமல் செல்ல, முருகனே சிறுவன் வடிவில் வந்து வழிகாட்டி அழைத்து வந்து தரிசனம் கொடுத்த தலம்.

குமரக்கோட்டம் வந்த திருமால், தன்னுடைய மருமகனுடன் ‘உருகும் உள்ளத்தான்’ என்றத் திருநாமத்தில் தனிச் சன்னிதியில் எழுந்தருளினார். ஆம்! குமரக்கோட்டத்தில் ‘உருகும் உள்ளப் பெருமாள்’ என்ற திருநாமத்தில் தனிச்சன்னிதியில் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார் மகாவிஷ்ணு.

முருகப்பெருமான் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் திருக்கோலத்தில் அருளும் திருத்தலமே குமரக்கோட்டம். இங்கு முருகப்பெருமான் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் ‘பிரம்ம சாஸ்தா’ வடிவில் அருள்கிறார். முருகர் மான் தோலை இடுப்பிலும், தர்ப்பையால் ஆன அரைஞாண் கொடியும் அணிந்துள்ளார். கீழ் வலது திருக்கரத்தில் அபயம் வழங்கும் திருக்கோலம், மேல் வலது திருக்கரத்தில் ருத்திராட்ச மாலை, கீழ் இடக்கரத்தை மடி மீது பொருத்தி, மேல் இடக்கரத்தில் கமண்டலத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

ஈசனை, தவ வேடத்தில் முருகப்பெருமான் வழிபட்டதால் இங்கு வள்ளி, தெய்வயானை சந்நிதிகள் தனியே உள்ளன. முருகப்பெருமானும் நான்கு கரங்களுடன் ஜபமாலை, கமண்டலம் ஏந்தி தவக்கோல மூர்த்தியாகக் காட்சிதருகிறார். குமரக்கோட்ட முருகப்பெருமான் முக்திதரும் மூர்த்தியாக இங்கு அருள்பாலிக்கிறார்.

இங்குள்ள `அனந்த சுப்ரமண்யர்’ என்ற உலா மூர்த்தி வடிவம் மிகச் சிறப்பானது. இவருக்கு ஐந்து தலை நாகம் ஒன்று குடை பிடித்தபடி இருக்கிறது

காஞ்சிபுரத்தின் நடுநாயகத் தலமாக விளங்கும் குமரக்கோட்டம் அருணகிரிநாதர், வள்ளலார் என்று பல ஞானியர்கள் தொழுது, பாடிப் பணிந்த புண்ணியத் தலம். முருகப்பெருமானே இங்கு ஞானியின் வடிவில் அமர்ந்து அருள் புரிகிறார்.

காஞ்சிபுரத்தை நகரேஷு காஞ்சி என்று போற்றுகிறது புராணம். நகரேஷு காஞ்சி என்றால் நகரங்களில் சிறந்த காஞ்சிபுரம் என்று அர்த்தம்.

திருவிழா:
கந்தசஷ்டி திருவிழாவின் போது இந்தக் கோயிலை 108 முறை சுற்றி தங்கள் கோரிக்கைக்காக பக்தர்கள் வேண்டுவார்கள். வைகாசி விசாகப் பெருவிழாவும், திருக்கார்த்திகையும் இங்கு சிறப்பு.

திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 11.30 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். ஆறுகால பூஜை நடக்கிறது.

முகவரி:
அருள்மிகு குமரக்கோட்டம் முருகன் கோயில்,
காஞ்சிபுரம் – 631 502,
காஞ்சிபுரம் மாவட்டம்.

போன்:
+91- 44 – 2722 2049

அமைவிடம்:
காஞ்சிபுரம் ராஜ வீதியில் இத்தலம் அமைந்துள்ளது. ஊரின் நடுவே கோயில் அமைந்துள்ளதால் கோயிலுக்கு செல்வது எளிது.

#templesofsouthindia #templesoftamilnadu #templeshistory #templesofhindus #temple #ஸ்தலம் #தலவரலாறு #ஆலயம்அறிவோம் #கோயில்கள் #ஆன்மீகம் #கோவில்வரலாறு #templepost #templesecrets #famoustemples #குமரகோட்டம் #முருகன்கோயில் #குமரகோட்டம்முருகன் #காஞ்சிபுரம் #Kumarakottam #kumarakottammurugan #SriAandalVastu #DrAndalPChockalingam #kovilvastu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 19 =