#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் எண்கண்
மூலவர் : பிரம்மபுரீஸ்வரர்
உற்சவர் : சுப்ரமணியசுவாமி
அம்மன் : பெரியநாயகி
தல விருட்சம் : வன்னிமரம்
புராண பெயர் : சமீவனம்
ஊர் : எண்கண்
மாவட்டம் : திருவாரூர்
ஸ்தல வரலாறு :
ஒரு சமயம், பிரணவ மந்திரத்தின் பொருள் குறித்து விளக்கம் அளிக்க பிரம்மதேவரிடம் கேட்டார் முருகப் பெருமான். பிரம்மதேவரால் தெளிவான விளக்கம் அளிக்க இயலாததால், சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, பிரம்மதேவர் செய்து வந்த படைப்புத் தொழிலை, முருகப் பெருமான் தொடர்ந்தார். மிகவும் வருத்தத்தில் இருந்த பிரம்மதேவர், சிவபெருமானை நோக்கி தவமிருந்தார். தனது எட்டு கண்களால், அவரை அர்ச்சித்தார். பிரம்மதேவரின் தவம் மற்றும் அர்ச்சனையில் மகிழ்ந்த சிவபெருமான், அவருக்கு காட்சிகொடுத்தார். பிரம்மதேவர் அவரிடம் நடந்தவற்றைக் கூறி, தனது படைத்தல் தொழிலை திரும்பப் பெற்றுத் தருமாறு வேண்டினார். உடனே சிவபெருமான், முருகப் பெருமானை அழைத்து, படைத்தல் தொழிலை பிரம்மதேவரிடமே ஒப்படைக்கப் பணிக்கிறார்.
பிரணவ மந்திரத்தின் உட்பொருளைக் கூட அறியாத பிரம்மதேவர், படைத்தல் தொழிலைப் புரிவது முறையல்ல என்று கூறி, முருகப் பெருமான் சிவபெருமானின் வேண்டுகோளை ஏற்க மறுக்கிறார். முருகப் பெருமானை சமாதானப்படுத்த எண்ணிய சிவபெருமான், முன்பு தனக்கு பிரணவ மந்திர உபதேசம் செய்தது போல் பிரம்மதேவருக்கும் உபதேசம் செய்ய வேண்டுகிறார். அப்படியே படைத்தல் தொழிலையும் பிரம்மதேவரிடமே ஒப்படைக்கும்படி கூறுகிறார்.
முருகப் பெருமானும் சிவபெருமானின் வேண்டுகோளை ஏற்று, தெற்கு முகமாக அமர்ந்து கொண்டு, பிரம்மதேவருக்கு பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கிறார். பின்னர் படைப்புத் தொழிலையும் பிரம்மதேவரிடமே ஒப்படைக்கிறார் முருகப் பெருமான்.
பிரம்மதேவர் தனது எட்டுக் கண்களால் (எண்கண்) சிவபெருமானை பூஜித்ததால், இத்தலம் பிரம்மபுரம் என்று வழங்கப்படுகிறது.
சிற்பி ஒருவர், சிக்கலில் ஆறுமுகனின் சிலையை வடித்தார். அதன் அழகைக் கண்டு ரசித்த சோழ மன்னர், அவரது கட்டை விரலை வெட்டிவிடுகிறார். கட்டை விரலை இழந்த சிற்பி, மற்றொரு சிலையை எட்டுக்குடியில் வடிக்கிறார். இதைக் கண்டு பொறுக்காத சோழ மன்னர், அவரது இரு கண்களைப் பறித்து விடுகிறார். கட்டை விரல், இரு கண்கள் ஆகியவற்றை இழந்த சிற்பி, ஒரு சிறுமியின் உதவியுடன் வன்னிமரங்கள் சூழ்ந்த வனத்தில் (சமீவனம்) முருகப் பெருமான் சிலையை வடிக்க எண்ணினார்.
அதன்படி கருங்கல்லில் ஆறுமுகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருப்பதுபோல் ஒரு சிலையை வடித்தார். முருகப் பெருமானுக்கு கண் திறக்கும் சமயத்தில், சிறுமியின் கையில் உளி பட்டு, குருதி பீறிட்டு, சிற்பியின் கண்களில் படுகிறது. குருதி கண்களில் பட்டதும் சிற்பி கண் பார்வை அருளப்படுகிறார். ‘என் கண்கள்’ கிடைத்துவிட்டன என்று அந்த சிற்பி மகிழ்ந்தார். இந்த சமீவனமே காலப்போக்கில் எண்கண் என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இரண்டாம் குலோத்துங்க மன்னன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இத்தலத்தில் பிரம்மபுரீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு சிவபெருமான் அருள்பாலிக்கிறார், இத்தலத்து விநாயகர் நர்த்தன கணபதி என்று அழைக்கப்படுகிறார். அம்பாள் பெரிய நாயகி என்ற பெயரால் போற்றப்படுகிறார்.
கோயில் சிறப்புகள் :
•தகப்பன் பேரில் ஆலயம். ஆனால் அங்கு தகப்பன்சாமியே பிரதானம். இந்தப் பெருமைக்கு உரியது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். இங்கு சுப்பிரமணிய சுவாமி என்ற திருநாமத்துடன் மயிலேறும் முருகனாக பக்தர்களுக்கு அருள்புரியும் இத்தலம் எண்கண் முருகன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
•சிக்கல், எட்டுக்குடி, எண்கண் ஆகிய மூன்று தலங்களிலும் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் முருகப் பெருமான் அருள்பாலிக்கிறார். இம்மூன்று சிலைகளையும் ஒரே சிற்பி வடித்தார் என்பது தனிச்சிறப்பு.
•இத்தலத்தைப் போற்றி அருணகிரிநாதர் திருப்புகழ் இயற்றியுள்ளார்.
•எண்கண் தலத்தில் கோயில் கொண்டிருக்கும் முருகப் பெருமான், தெற்கு முகமாக அருள்பாலிப்பது தனிச்சிறப்பு. மேலும், நடராஜர் அம்சத்துடன், முருகப் பெருமான் காட்சி அருள்வதால், இவர் இருக்கும் சந்நிதி, சபை என்றே அழைக்கப்படுகிறது.
•தென்திசைக் கடவுள் தட்சிணாமூர்த்தி வடிவத்தில் அதே திசை பார்த்து ஞானகாரகனாகவும், தென்திசையான எமதிசையை நோக்கி காலசம்ஹார மூர்த்தி போல் ஆயுள், ஆரோக்கியகாரகனாகவும் முருகப் பெருமான் அருள்பாலிக்கிறார். இதனால் அறிவு, ஆயுள், ஆரோக்கியம் போன்ற அரும்பேறுகளை அடியார்களுக்கும் பக்தர்களுக்கும் அளிப்பவராக முருகப் பெருமான் போற்றப்படுகிறார்.
•எண்கண் தலத்தில் மூலவர் முருகப் பெருமான் தனியாக மயில் வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் ஆறுமுகப் பெருமானாக அருள்பாலிக்கிறார். அவருக்கு இருபுறத்திலும் வள்ளி, தெய்வானை தனியாக உள்ளனர்.
•முன்புறம் 3, பின்புறம் 3 முகங்களும், பன்னிரு கரங்களில் வேல், அம்பு, கத்தி, சக்கரம், பாசம், சூலம், வில், கேடயம், சேவற்கொடி, அங்குசம் போன்ற ஆயுதங்களைக் கொண்டு ஆறுமுகப் பெருமான் காட்சியருள்கிறார். கை விரல்கள் தனித்தனியாக இடைவெளியுடன் செதுக்கப்பட்டுள்ளது. மேலும், முருகப் பெருமானின் எடை முழுவதையும் அவரைத் தாங்கி நிற்கும் மயிலின் இரண்டு கால்களே தாங்கிக் கொண்டிருக்கின்றன என்பது தனிச்சிறப்பு.
•தன் சிருஷ்டி தொழிலை முருகனிடமிருந்து மீண்டும் பெற பிரம்மா சிவனை நோக்கி எட்டுக் கண்களால் பூஜித்த ஊர் இது. எட்டுக் கண்கள் – எண்கண். தந்தையின் ஆலோசனையை முருகனும் ஒப்புக் கொண்டு பிரம்மாவிற்கு உபதேசம் செய்த ஊர் இது.
•பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் இத்திருக்கோயிலில் சூரிய ஒளி பிரம்மபுரீஸ்வரர் மீது விழுகிறது.
•கண்நோயுற்றவர்கள் வழிபட்டு கண்நோய் நீங்கி நலனை அடைகின்றனர்.
•தலத்தின் தெற்குப்புற வாயிலில் தனிக்கோயில் கொண்டுள்ளார் ஆதி நாராயணப் பெருமாள். கருடாழ்வாரின் மேல் அமர்ந்த அற்புதக் கோலத்தில் மூலக் கருவறையில் காட்சி தருகிறார்.
•ஓங்காரத்துள்ளே முருகன் திருவுருவம் காண வேண்டும் என்கிறது கந்தரலங்காரம். தோகை விரித்த மயிலின் தோற்றம் ஓங்காரத்தின் குறியீடு. பிரணவ அம்சத்தின் பின்னணியில் காட்சி தரும் முருகனின் அழகை இத்தலத்தில் காணக் கண் கோடி வேண்டும்.
•ஒருசமயம் பிருகு முனிவரின் சாபத்தால் சிம்மவர்ம மன்னனின் சிங்கமுகம் மனித முகமாக மாறிவிடுகிறது. தான் மீண்டும் சிங்கமுகத்தைப் பெற வேண்டி, சிம்மவர்ம மன்னன், தினசரி வொட்டாற்றில் (விருத்த காவிரி) நீராடி, எண்கண் முருகப் பெருமானை வழிபட்டு வந்தார். சிம்மவர்ம மன்னனின் வழிபாட்டில் மகிழ்ந்த முருகப் பெருமான், பௌர்ணமி திதியுடன் கூடிய தைப்பூச நட்சத்திர தினத்தில், மயில் மீது அமர்ந்த கோலத்தில் அவருக்கு காட்சிதந்து, சாப விமோசனம் அளித்தார். இதனால் இங்கு தைப்பூச தினம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
திருவிழா:
தைப்பூசத்தை முன்னிட்டு 14 நாட்களுக்கு இங்கே பிரம்மோற்சவ விழா, தேரோட்டத்துடன் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஐப்பசி கந்த சஷ்டி விழா (8 நாள்), ஆடி, கார்த்திகை, மாசி, தை மாத கார்த்திகை நட்சத்திர தினவிழா, மாசிமக விழா, பங்குனி உத்திர விழாக்கள் இங்கே சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
எண்கண்-612 603
திருவாரூர் மாவட்டம்.
போன்:
+91 -4366-278 531, 278 014, 94884 15137
அமைவிடம் :
தஞ்சை- திருவாரூர் பேருந்து சாலையில் முகந்தனூர் கிராமத்திற்கு வடக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் எண்கண் கோயில் உள்ளது. கும்பகோணம் மற்றும் திருவாரூரிலிருந்து இத்தலத்திற்கு பேருந்து வசதி உள்ளது. திருவாரூரில் இருந்து 13 கி.மீ தொலைவில் எண்கண் கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
#templesofsouthindia #templesoftamilnadu #templeshistory #templesofhindus #temple #ஸ்தலம் #தலவரலாறு #ஆலயம்அறிவோம் #கோயில்கள் #ஆன்மீகம் #கோவில்வரலாறு #templepost #templesecrets #famoustemples #எண்கண் #murugantemple #enkanmurugan #SubramanyaSwamy #பிரம்மபுரீஸ்வரர் #பெரியநாயகி #historyoftemples #templehistory #திருவாரூர் #எண்கண்முருகன் #முருகன்கோயில் #திருப்புகழ்கோயில் #SriAandalVastu #DrAndalPChockalingam