#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வள்ளியூர்

June 3, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வள்ளியூர்
129.#வள்ளியூர்_சுப்பிரமணிய_சுவாமி_கோயில்_வரலாறு
மூலவர் : சுப்பிரமணிய சுவாமி
அம்மன் : வள்ளி, தெய்வானை
தீர்த்தம் : சரவணப் பொய்கை
ஊர் : வள்ளியூர்
மாவட்டம் : திருநெல்வேலி
#ஸ்தலவரலாறு :
திருத்தணியில் வள்ளியை மணம் முடித்த முருகப் பெருமான் மகேந்திர மலையின் கிழக்குப் புறத்தில் உள்ள இக்குன்றில் குடியேறியதால் இவ்வூர் ‘வள்ளியூர்’ என்று அழைக்கப்படுகிறது. சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த சமயத்தில் கிரவுஞ்ச மலையையும் தகர்த்து எறிந்தார். அந்த மலையின் துண்டுகள் விழுந்து உருவான மலையே #வள்ளியூர் என்று கூறப்படுகிறது.
முன்பொரு காலத்தில் கிரவுஞ்ச அரசன் மலை உருவில் இருந்தான். அகத்திய முனிவரின் சாபம் காரணமாக முருகப் பெருமானின் வேல் பட்டு கிரவுஞ்ச மலை 3 துண்டுகளாக சிதறியது. அசுரனின் தலைப்பாகம் தான் வள்ளியூர் குன்று என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தக் குன்றில் முருகப் பெருமான் வசித்ததாலும், அவரின் வேல் பட்டு ஒளிர்ந்த மலை என்பதாலும், பூரணகிரி என்று இக்குன்று அழைக்கப்படுகிறது. பூரணகிரி ‘ஓம்’ வடிவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பூரணகிரியில் வள்ளியுடன் முருகப் பெருமான் இருப்பதை அறிந்த அகத்திய முனிவர் இங்கு வந்து வணங்கினார். குரு ஸ்தானத்தில் இருந்து முருகப் பெருமான் அகத்திய முனிவருக்கு கிழக்கு முகமாக நின்று வேதப் பொருளை உரைத்து அருளினார். சீடராக இருந்து மேற்கு முகமாக நின்று வேதப் பொருள் குறித்து உபதேசம் பெற்ற அகத்திய முனிவர் பூரணகிரியை வலம் வந்தார். அப்போது தெய்வானை சோகத்துடன் நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அங்கு தெய்வானை நிற்பதற்கான காரணத்தை அகத்திய முனிவர் கேட்டதும், முருகப் பெருமானை, தான் காண்பதற்கு வள்ளி அனுமதி மறுத்தாகத் தெரிவிக்கிறாள் தெய்வானை. அகத்திய முனிவரும் தெய்வானையை வள்ளியிடம் அழைத்துச் சென்று, வள்ளி மற்றும் தெய்வானையின் முந்தைய பிறவி குறித்து எடுத்துரைக்கிறார். இருவரும் திருமாலின் கண்களில் இருந்து தோன்றிய அமிர்தவல்லி, சுந்தரவல்லி ஆகிய சகோதரிகள் என்பதை உணர்த்தினார். இருவரும் முற்பிறவியில் சகோதரிகள் என்பதை அறிந்து, ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்ளும் வெறுப்புணர்வைக் களைந்து முருகப் பெருமானின் இருபுறமும் நின்று அகத்திய முனிவருக்கு அருள்பாலித்தனர்.
கோயில் சிறப்புகள் :
•நெல்லை மாவட்டத்தில் பெரிய குகைக் கோயிலாக வள்ளியூர் கருதப்படுகிறது.
•மற்ற கோயில்களில் முருகப் பெருமான் குன்றின் மீது நின்று அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் இங்கு, குன்றுக்குள் இருந்து அருள்பாலிக்கிறார் என்பது தனிச்சிறப்பு.
•கோயிலின் கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
•தேவ வடிவத்தில் இருந்த முருகப் பெருமானை பிம்ப வடிவத்தில் இருக்க தேவேந்திரன் வேண்டினார். அதன்படி முருகப் பெருமானும் பிம்ப வடிவத்தில் இருந்து வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலித்தார். தேவேந்திரனும் ஆகம முறையில் பிம்ப பிரதிஷ்டை செய்து முருகப் பெருமானை வழிபட்டார். அன்றைய தினம் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையாக இருந்ததால், வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி தேவேந்திரனுக்கு காட்சி அருளினார். அதுவே இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
•இத்தல முருகப் பெருமான் திருச்செந்தூரில் உள்ள விக்கிரகத்தில் பிரதி உருவம் என்பது குறிப்பிடத்தக்கது. கருவறைக்கு அடுத்ததாக அர்த்த மண்டபம், மகா பண்டபம் அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்தில் வள்ளி – தெய்வானையுடன் ஆறுமுகப் பெருமான் அருள்பாலிக்கிறார்.
•அர்த்த மண்டபத்தை வலம் வருவதற்கு வசதியாக சிவபெருமான் சந்நிதி வரை குகைப் பாதை அமைக்க மலை தோண்டப்பட்டது. ‘ஜெயந்தீஸ்வரர்’ என்ற திருநாமத்துடன் சிவபெருமான் இக்கோயிலில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
•அகத்தியருக்குப் ‘பிரம்ம ஞான உபதேசம்’ அருளிய காரணத்தினால் வள்ளியூர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி, ‘ஞானஸ்கந்தன்’ என்றும் அழைக்கப்படுகிறார். அகத்தியர், இந்த அற்புதக் காட்சியை தரிசித்தது பங்குனி மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமை என்பது தலபுராணம் கூறும் செய்தி.
•நான்கு திருக்கரங்களில் வஜ்ஜிரம், சக்தி, மலரும் ஏந்தி, இடக் கரத்தை தொடையின் மீது வைத்த கோலத்தில் முருகப்பெருமான் அருள் தரும் காட்சி அலாதியானது. மேலும் வள்ளி, தெய்வானையும்கூட இந்தக் கோயிலில் அமிர்தவல்லி, சுந்தரவல்லியாகவே காட்சி தருகிறார்கள்.
•வள்ளிக்கு தனி சந்நிதி இருப்பது தனிச்சிறப்பு.
•திருக்குறுங்குடியில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வேட்டையாட வந்த பாண்டிய மன்னன் ஒருவனால் முதன் முதலில் இக்கோயில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு அவரது வம்சாவளியினரால் இக்கோயில் விரிவாக்கம் செய்து கட்டப்பட்டது.
•இத்தலத்தில் ஒரு குளம் அமைக்க வேண்டும் என்று வள்ளி வேண்டுகோள் விடுத்ததால், முருகப் பெருமான் தன் கை வேலை ஊன்றி ஒரு தீர்த்தத்தை உருவாக்கினார். அதுவே ‘சரவணப் பொய்கை’ என்றானது.
•ஒருசமயம் வள்ளியூரை அற்பகன் என்ற அரசர் ஆட்சி புரிந்து வந்தார். நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு இல்லாமல் அரசரும், மகாபாகை ராணியும் வருந்தினர். குழந்தை வரம் வேண்டி அரசர் மகேந்திரகிரியில் தவம் மேற்கொண்டார். அங்கு வந்த பரசுராமர், வல்லிக் கொடி ஒன்றை அரசரிடம் கொடுத்தார். அக்கொடி ஒரு பெண் குழந்தையாக மாறியது. மகிழ்ந்த அரசர், அக்குழந்தையை அரண்மனைக்குள் கொண்டு வந்து ‘வல்லி’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். வல்லி வளர்ந்ததும் வள்ளியூரை ஆண்டு வந்தார். வள்ளியின் அம்சமாக விளங்கும் இந்த வல்லி மணப் பருவம் அடைந்ததும் அரச முறைப்படி முருகப் பெருமான் வந்து அவரை மணம் புரிந்து கொண்டார். வல்லி ஆட்சி புரிந்ததால், வள்ளியூர் ‘வல்லி மாநகரம்’ என்று அழைக்கப்படுகிறது.
•இந்திரன், அகத்திய முனிவர், அருணகிரிநாதர், இடைக்காட்டு சித்தர் ஆகியோர் இங்கு வந்து நெடுங்காலம் தங்கி, ஸ்ரீசுப்ரமண்யரை வழிபட்டு, வரம் பெற்றுள்ளனர் என்கிறது ஸ்தல புராணம்.
•வண்ணச்சரபம் தண்டபாணி தேசிகர் சுவாமிகள், இங்கே உள்ள ஸ்ரீசுப்ரமண்யரின் அழகில், சொக்கிப் போய் மனமுருகி பல பாடல்கள் பாடி அருளியுள்ளார்.
•ஒரு காலத்தில் வள்ளியூரில் துர்லபன் என்ற வியாபாரி வசித்து வந்தான். பெரிய செல்வந்தனாக இருந்தாலும், யாருக்கும் எந்த உதவியோ, தானமோ செய்யாது இருந்தான். மேலும், யாருக்கும் தானம் தருவதில்லை என்ற முடிவுடன் இருப்பதாகவும் அறிவித்தான். அகத்திய முனிவராக இருந்தாலும், அரிசி முதலான தானியங்களை தன்னால் தானமாக தர இயலாது என்று ஆணவத்துடன் அவரிடமே கூறியதால், கோபம் கொண்ட முனிவர் அவனை சபித்து விடுகிறார். தன்னைப் போன்ற ஒருவருக்கு பயன்படாத அரிசி அனைத்தும் கல்லாக மாறட்டும் என்று சாபமிட்டதால், இந்த மலை உருவானதாக கிராமத்து வழக்கில் கூறப்படுகிறது.
திருவிழா :
சித்திரை மாதம் அசுவதி நட்சத்திரத்தில் கொடியேறி 10 நாட்கள் திருவிழா நடைபெறும். 9வது நாளில் தேரோட்டம் நடைபெறும். வைகாசி விசாகத்தின் வசந்தம் திருவிழா 10 நாட்களும், கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை தெப்பத்திருவிழாவும் நடைபெறும்.
திறக்கும் நேரம்:
காலை 5.30 மணி முதல் 12 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்
வள்ளியூர்
திருநெல்வேலி – 627 117.
போன்:
04637-222888, 97914 – 33020
அமைவிடம் :
திருநெல்வேலி – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நெல்லையில் இருந்து 42 கி.மீ தொலைவில் உள்ளது வள்ளியூர். ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. வள்ளியூர் ரயில் நிலையத்தின் மிக அருகில் இந்த கோயில் உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + twelve =